“பொதிய ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சிச் சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு
சின்னகண்ணு நீயும்
வித்துப்போட்டு பணத்த
எண்ணு செல்லக்கண்ணு”
இந்தத் திரைப்படப்பாடல் வரிகள் என் தலைமுறையினர் எல்லோருக்கும் மனதில்
பதிந்திருக்கும். மக்களைபெற்ற மகராசி படத்தில் “மணப்பாற மாடு கட்டி “ என்ற பாடல்
வரிகள். பொள்ளாச்சிச் சந்தையின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன
தென்னித்தியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருந்த பொள்ளாச்சிச்
சந்தை பற்றி ஒரு கதை சொல்வார்கள்.
அருகாமையிலுள்ள சிற்றூர்களில் இருந்து பெண்கள் கடகம் (ஓலைப்பெட்டி)
எடுத்துக்கொண்டு சந்தைக்கு வருவார்கள். அரிசிக்கடைகளில் மாதிரி அரிசி வாங்கியே
ஓலைப்பெட்டி நிறைந்து விடும்.
இவவளவு செழிப்பாக இருந்த பொள்ளாச்சியில்தான் அரிசிப் பஞ்சத்தை நாங்கள்
உணர்ந்தது. காசு கொடுத்தாலும் நல்ல அரிசி கிடைக்காத ஒரு சூழ்நிலை பொள்ளாச்சியில்
மட்டும் அல்ல. தமிழ்நாடு முழுவதும். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரியஆட்சி
மாற்றத்திற்கு வழிவகுத்ததில் அரிசிப் பற்றாக்குறை மிகப்பெரும் பங்கு வகித்தது.
அரிசி கிடைக்காததை சரி செய்ய அம்மா சுடும் சோளமாவும் அரிசி மாவும் கலந்த
தோசை நல்ல மணமும் சுவையும் கொண்டிருக்கும்
அடுத்து இந்தி எதிர்ப்புப்போராட்டம்.. போராட்ட உச்ச கட்டத்தில் காவல்
துறை துப்பாக்கிச் சூட்டில் பல உயிகள் பலியாயின. ஒரு காவல் ஆய்வாளர் உயிருடன்
எரிக்கப்பட்டார்.
நான் படித்த சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்
கட்டிடம் வன்முறையாளர்களின் தீக்கு இரையாகியது.
இந்த வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் திரு
பொள்ளாச்சி மகாலிங்கத்தின் இல்லத்தில் அவரும் திரு சீ எஸ் (சீ .சுப்ரமணியன்)
அவர்களும் உண்ணா நோன்பு நோற்றனர ( சில நல்ல அரசியல் வாதிகள் மிச்சமிருந்த காலம்
அது.)
இந்தப்போராட்டமும் ஆட்சி மாற்றத்தில் பங்கு வகித்தது .காங்கிரஸ் ஆட்சி
முடிவுற்று அறிஞர் அண்ணா அரசு பதவி ஏற்றது,
நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன என்று தோற்ற முதல்வர் கருத்துத்
தெரிவித்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது
திருநெல்வேலியில் இருந்து அத்தாவுக்கு பொள்ளாச்சிக்கு மாறுதல் .பள்ளி
இறுதி (பதினோராம் )வகுப்பு, புகுமுக வகுப்பு, முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு
பொள்ளாச்சியில் படித்தேன்.. மனதில் சிந்தனைகள் குழப்பங்கள் நிறையத் தோன்றும்*(அடோலசென்ட்)
வயது
அக்காமார் முத்து ,ஜென்னத்,மும்தாஜ்,மெஹராஜுக்கு திருமணமாகிவிட்டது..நூரக்கா
உடுமலைப்பேட்டை விசாலாட்சி கல்லூரியில் பட்டப்படிப்பு..ஜோதி சுராஜ் பெண்கள்
உயர்நிலைப்பள்ளி ஷஹா துவக்கப்பள்ளி என
நினவு
பொள்ளாச்சிபள்ளி ,கல்லூரி வாழ்க்கை மறக்கமுடியாத அளவுக்கு மனதில்
பதிந்திருப்பது எனக்கு அமைந்த மிகச் சிறந்த ஆசிரியர்களால்தான். பள்ளியின் தலைமை
ஆசிரியர் திரு சீதாராமன், பஞ்ச கச்சம் கட்டிய ஆங்கில ஆசிரியர், தமிழாசிரியர்
எல்லாம் தாங்கள் பிறவி எடுத்ததே ஆசிரியராகப் பணியாற்றத்தான் என்பது போல் அப்படி
ஒரு அறிவு, உண்மையனா உழைப்பு (நகராட்சிப்பள்ளிதான் )
அதே போல் கல்லூரியிலும். முதல்வர் திரு ஆட்கொண்டான்,(வேதியல் துறை)
துணை முதல்வர் திரு நமசிவாயம் (கணிதம) சிற்பி பாலசுப்ரமணியம் (தமிழ்) எ.கே.ஜி.
நாயர் (ஆங்கிலம்) நம்பீசன் (ஆங்கிலம்) குண்டு ராவ் (இயற்பியல்) பொன்ராஜ் (தாவரவியல்) கேசவன் (தமிழ்)என்று மிகச்சிறந்த ஆசிரியர் குழு .
ஆங்கிலத்துறைத்தலைவர் திரு நாயரின் குரல் இன்றும் என் மனதில்
ஒலிக்கிறது – “Charles Lamb said of Malvolio that Malvolio
is not a ludicrous character but becomes one by accident “ என்று துவங்கி மடை திறந்த வெள்ளம் போல்
கையில் எந்த நூலும் குறிப்பும் இல்லாமல் பேசுவார். படிக்காமலே தேர்வு எழுதும்
அளவுக்கு மனதில் பதிந்து விடும்.
திரு கேசவன் நடத்திய பாடல்கள் இன்றும் நினைவில் நிற்கின்றன
“பார் சிறுத்தலின் படை பெருத்ததோ
படை பெருத்தலின் பார் சிறுத்ததோ
நேர்சிருத்தவற்கு அரிது
நிற்பிடம்
நெடு விசும்பலால் இடமுமில்லையே”
கலிங்கத்துப்பரணி
“புலி சேர்ந்து போகிய கல்லளை போலப
!ஈன்ற வயிறோ இதுவே
!ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே” புறநானூறு
திரு சிற்பி பாலசுப்ரமணியன் எளிய இனிய இயல்பான தமிழில்
உரையாற்றுவார்.. அண்ணாமலையில் மொழியியல் படித்ததையும் சிறார் பள்ளி நடத்தியதையும்
சுவை படச் சொல்வார்.
அவரின் கவிதைத்தொகுப்பான நிலவுப் பூக்கள் என்ற நூலை
கையெழுத்துப்போட்டு அத்தாவுக்குக்
கொடுத்தார்
இன்னொரு தமிழாசிரியர் திரு கருணாகரன் .ஆரம்பப்பள்ளி ஆசிரியராய்
இருந்து தன் உழைப்பால் கல்லூரியில் ஆசிரியர் பதவி பெற்று சில மாதங்களில் காலமாகிவிட்டார்.
இவ்வளவு சிறப்பான ஆசிரியர்கள் இருந்தும் நல்லமுத்து கவுண்டர்
மகாலிங்கம் (என் ஜி எம்) கல்லூரியில் தேர்வு விழுக்காடு பெரிய அளவில் இருக்காது .
பொள்ளாச்சி திரு மகாலிங்கம் வீடு இருந்த அதே தெருவில் நகராட்சி
ஆணையர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வட்ட அலுவலர், வன அலுவலர் போன்ற அரசு
அலுவலர்களுக்கு வரிசையாக வீடு கட்டி வாடகைக்கு (மாதம் ஐமபது ரூபாய் ) விட்டிருந்தார்.
நல்ல வசதியான விசாலமான பெரிய தனி வீடுகள் .வீடுகளுக்கு இடையில் நல்ல இடைவெளி.
முன்பகுதியில் தோட்டம், அதையடுத்து தாழ்வாரம் , பெரிய கூடம், அறைகள். பெரிய
முற்றம் அதற்குப்பின் அடுப்படி, குளியலறை.
பின்னால் பெரிய காலியிடம் .அதில் கழிவறை(கள்) மாட்டுக்கொட்டகை .
பொள்ளாச்சி மகாலிங்கம் என்பதை விட மகாலிங்கம் பொள்ளாச்சி என்பது
பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு பார்க்குமிடமெலாம் அவர் பெயர் பரவி நிற்கும்.
கல்லூரி அவர் பெயரில், பல்தொழில்நுட்பக்கல்லூரி (பாலிடெக்னிக்) அவர் தந்தை
பெயரில். மகாலிங்கம் நகர் என்று புதிதாக உருவான பிகப்பெரிய குடியருப்புப் பகுதி,
இரண்டு நாள் நடக்கும் வாரச்சந்தையில் ஓன்று அவரது இடத்தில் ,பேருந்துகள் அனைத்தும்
அவருக்குச் சொந்தமான ஏ பீ டி நிறுவணததைச் சேர்ந்தவை. இவ்வாளவு ஏன், பேருந்து
நிலையம் கூட அவருடையதுதான் .
அதை மாற்றி நகராட்சிப்பேருந்து நிலையமாக்கியது அத்தாவின் சாதனை..
பக்கத்து வீட்டில் காவல் துணை கண்காணிப்பாளர். பெரிய குடும்பம்.
பதவிக்குறிய அதிகாரம், ஆர்ப்பாட்டம் எல்லாம் உண்டு. என்னோடு புகுமுக வகுப்பில்
ரத்தினக்குமார், சுராஜோடு கலைச்செல்வி படித்தார்கள்.
அவர்கள் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு கலைச்செல்வியோடு போய்விட்டு
இரவில் வெகு நேரம் கழித்து வந்த சுராஜை அத்தா அம்மா கடுமையாகக் கண்டித்தார்கள் .
பாலு, ஜேசுதாஸ், இளங்கோ,,சாரங்கராஜன், வாத்திராஜன், அப்புசாமி,
உமாநாத் முத்துக்கிருஷ்ணன் எனப்பலர்
என்னோடு பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தார்கள்
முத்தக்கா மகள் பானு ஜென்னத் அக்கா மகள் பாப்பா , மும்தாஜ் அக்கா மகள்
சாலிஹா ,மெஹராஜ் அக்கா மகள் மீரா பொள்ளாச்சியில் பிறந்தார்கள் என நினவு. ராஜா
(மும்தாஜ் ) பாப்பாவை பொள்ளாச்சி என்று உச்சரிப்பு வராமல் பொன்டாச்சிப் பாப்பா
என்று சொல்வான்.
சாகுல் எங்கள் வீட்டில் இருந்தான் .பொள்ளாச்சிக்கு வந்த
அத்தம்மாவுக்கும் அவனுக்கும் தலைமுறை இடைவெளிக்குரிய கருத்து மோதல்கள் அவ்வப்போது நடக்கும்
அத்தம்மாவுக்கு அறிவு அதிகம், ஐயங்கள் மிக அதிகம். நூரக்கவிடம்
வேதியல் பாட நூலைப் படித்துப் பொருள் சொல்லச்சொல்லும். உங்களுக்குப் புரியாது
என்று சொன்னால் அது எப்படிப் புரியாமல் போகும் என வாதிடும் .
மாத்திரைகளின் பெயரையும் பார்முலாவையும் கேட்கும். சிவப்பு நிற
எழுத்துக்கள் இருந்தால் இது என்ன என்று கேட்கும்.நஞ்சு என்று போட்டிருக்கிறது
என்று சொல்லி விட்டால் அடுத்த கேள்வி என்னைக் கொல்லப்பார்க்கிறார்களா எனபதுதான்.
மாத்திரைகளை அம்மியில் வைத்து நசுக்கியும் ஆராய்ச்சி செய்யும்.
ஆயுர்வேதப் பெண் மருத்துவர் (விஜயலட்சுமி ) வீட்டுக்கு வந்து
அத்தம்மாவைப் பரிசோதித்து மருந்துகள் கொடுப்பார். நயம்(அல்லோபதி ) டாக்டரை
வரச்சொல்லு என்று மகனுக்குக் கட்டளையிடும் .
“அம்மா டாக்டர் வரப்போகிறார் . முடியாத மாதிரி படுத்துக்கொள்” என
அத்தா சொல்ல உடனே அத்தம்மா எழுந்து போய்ப் படுத்துக் கொள்ளும்.
மெய்வழிச்சாலை ஆண்டவர் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார்.. அத்தாவுடன்
அவரைப் பார்க்கப்போனேன். பளபளப்பான உடை,
செருப்பு, தலைப்பாகை அணிந்திருந்தார்..அரியாசனம் போன்ற இருக்கையில் அவர்
அமர்ந்திருக்க சீடர்கள் அவரைச்சுற்றி கும்மியடித்துப் பாட்டுப்பா.டினார்கள்.
செருப்புக்கடை வைத்திருப்பவர்
வீடு எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு. ரஹ்மத் என்ற அந்த வீட்டுப்பெண் நட்போடு
பழகுவார்கள் .அவர்கள் கடைக்கு தொலைபேசியில் பேசவேண்டியதிருக்க தொலைபேசி எண்
யாருக்கும் நினைவிலில்லை .அப்போது அம்மா போர் பய்வ் போரா என்று கேட்டுத்தன்
நினைவுத்திறனை வெளிக்காட்டியது வியப்பாக இருந்தது ..அம்மா சொன்னது சரியான எண்.
வீட்டுக்குள் நின்றபடி சன்னல் வழியே வேடிக்கை பார்த்து உலக
நடப்புக்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் அம்மாவுக்கு உண்டு
சிறுவனாக இருந்த சாகுல் அடம் பிடித்து அழ ஆரம்பித்தால் நிறுத்தவே
மாட்டான். சற்றுத் தொலைவில் உள்ள பூங்காவுக்குத் தூக்கிச் சென்றால் சிறிது
நேரத்தில் அழுகை அடங்கும்
சாகுலுக்கு முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். வீட்டில் உள்ள முற்றத்தில்
“ நான் சின்னப்பிள்ளை எனக்கு இறங்கத்தெரியாது “ என்று சொல்லி இறங்க மாட்டன். அவனை
விட இளையவனான ராஜா (பீர்) அந்த முற்றத்தில் ஒரே தாவலில் குதித்து விடுவான்.
திரையரங்கு உரிமையாளரான
கலைமகள் திரு ராமசாமி அத்தாவின் நெருங்கிய நண்பர் .அவருக்கு சொந்தமான கலைமகள்,,
நாராயணா என இரு திரையரங்குகள் எதிரெதிராக
அமைந்திருக்கும். புதுப்படங்கள் வெளியாகும்போது ஒரே படச்சுருளை வைத்து இரு
அரங்குகளிலும் காட்சி நடத்துவார்கள் .
ஒரு முறை திரு ராமசாமியை சந்திக்க அத்தா ,ரஹீம் அண்ணனுடன் திரையரங்குக்குப்
போயிருந்தோம். அன்று செல்வம் என்ற படம் வெளியாகி இருந்தது ..அதன்
இரண்டாம்(இறுதி)ப் பகுதியை முதலில் கலைமகள் அரங்கிலும் முதல் பகுதியை அடுத்து
நாராயணா அரங்கிலும் பார்த்தோம்..
இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்ச நிலையில் இருந்த போது பீரண்ணன்
மெஹராஜ் அக்கா பொள்ளாச்சி வந்திருந்தார்கள். அப்போது பீரண்ணன் திரைப்படம் பார்க்க
விரும்பியது.. பாதுகாப்புக்க்காக .ஒரு வாடகை மகிழுந்து கட்சிக்கொடியுடன் வரவழைத்து
அதில் போய் வந்தோம் .
கட்டடத்துப் பெரியம்மாவை
மஹாகவி காளிதாஸ் என்ற படம் பார்க்க அழைத்துச் சென்றோம். ஏனோ அந்தப் படம்
எனக்குப் பிடிக்கவே இல்லை.
அத்தம்மா திரைப்படம் பார்க்க மிக உற்சாகமாக (இயற்கை உபாதைகளையும
பொருட்படுத்தாமல்) கிளம்பும்
முத்தலிப் அண்ணன் ஜென்னத்
அக்காவுடன் அண்ணாவின் ஆசை திரைப்படம் பார்க்கப்போனேன் .அடுத்தநாள் புகுமுக வகுப்பு
பொதுத்தேர்வு .அதைபற்றி நான் உட்பட யாரும் பெரிதாக எடுதுக்கொள்ளவிலலை .
நல்ல மதிப்பெண் பெற்று புகுமுக வகுப்பில் தேறினேன். வயது மூன்று மாதம்
குறைவாக இருந்ததால் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியவில்லை .
கரீம் அண்ணன், மாமா குப்பி எல்லோரும் ஒன்றாக பொள்ளாச்சிக்கு தொடரியில்
பயணித்தார்கள் அப்போது திடீரென்று மாமா தன் மகனை அன்று பிறந்த குழந்தை போல் ஆக்கி விட்டது
பிறகுதான் தெரிந்தது பயணச்சீட்டு பரிசோதகர் வருகிறார் என்று. இந்த நிகழ்வை கரீம்
அண்ணன் பலமுறை நல்ல நகைச்சுவையோடு சொல்லிக் கேட்டிருக்கிறேன்
வீட்டில் காளிமுத்து , சுப்பிரமணி என இரு நகராட்சி ஊழியர்கள் பணி
செய்வார்கள் . சுப்பிரமணி மிகச் சுறுசுறுப்பான இளைஞர்...பிரான் மலை பயணம் போகையில்
அவரையும் அழைத்துச்சென்றோம்..மாடிப்படியில் ஏறுவது போல பலமுறை மலையில் ஏறி
இறங்கினார்
வீட்டுக்கு வரும் விருந்தினருக்காக ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய்
வைத்திருப்போம். அறையை சுத்தம் செய்ய வரும் பணியாளர் தினமும் அதை எடுத்துக் கொட்டி
விடுவார். கேட்டால் பார்க்கத் தண்ணீர் போல் இருந்தது அதனால் கொட்டிவிட்டேன்
என்பார்,.
பொள்ளாச்சியில் நகராட்சி வழங்கும் தண்ணீர் மட்டுமே நீர் ஆதாரம். கிணறோ
ஆழ் துளையோ கிடையாது..ஓரளவுக்கு நிறையவே தண்ணீர் வரும்.
விருந்தாளிகள் வந்தால் நகராட்சி பயணிகள் தங்கும் விடுதிக்குக்
குளிக்கப்போவோம். அறைகளில் பயணிகள் தங்கி இருந்தால் கூட, அவர்களிடம் சொல்லி விட்டு
விடுதிப் பணியாளர் நாங்கள் குளிக்க ஏற்பாடு செய்து கொடுப்பார். .
அத்தாவுக்கு வேலூருக்கு மாறுதல் ஆணை வந்த பிறகு ஒரு முறை அங்கு குளிக்கப்போனோம்.
பணியாளர் ஒரே பேச்சில் அறை காலி இல்லை என்று சொல்லி முகம் திரிந்து நோக்கினார்
இது போன்ற பல நிகழ்வுகளில் நான் நிறையப் படிப்பினைகள்
பெற்றுக்கொண்டேன். நகராட்சி ஆணையர் போல் சர்வ அதிகாரம் இல்லாவிட்டாலும் வங்கி கிளை
மேலாளர் என்பது ஓரளவு அதிகாரமான பதவிதான். குறிப்பாக யாருக்கும் இல்லாத கடன்
வழங்கும் அதிகாரம் வங்கி மேலாளருக்கு உண்டு. அதை எந்த அளவுக்கு நம் சொந்த
நலன்களுக்கு பயன்படுத்தலாம் பயன்படுத்தக்கூடது என்பதில் எனக்கு நானே ஒரு வரையறை அமைத்துக்கொள்ள
அத்தாவின் அனுபவங்கள் எனக்குப் பெரிதும் உதவின..
நீர் வழங்கல் நிறுத்தம் போன்ற அறிவிப்புகளை தண்டோரா போட்டு நகராட்சி
அறிவிக்கும் வழக்கம் பொள்ளாச்சியில் உண்டு..எங்கள் வீட்டுக்கு அருகில் மிக
உரக்கக்கத்தி அறிவிப்பர்.
எலி பிடிக்கும் நகராட்சி ஊழியர் ஒரு எலிக்கூண்டோடு வீடுகளுக்குப்
போவார். அங்கு எலிக்கூண்டில் சிக்கியிருக்கும் எலிகளை அவர் கொண்டு வந்த கூண்டுக்கு
மாற்றுவவார் .இரண்டு கூண்டுகளின் திறப்புகளையும் இணைத்து ஒரு குச்சியால் கூண்டு மேல்
கோடு போல் இழுப்பார். எலி அவரது கூண்டுக்கு ஒடி விடும். இது பார்க்க வேடிக்கையாக
இருக்கும். அந்த ஊழியரின் முகம் பார்க்க எலி போலவே இருக்கும்..
பொள்ளாச்சிக்கு மிக அருகில் கேரள மாநில எல்லை வந்து விடும் . அங்கு
வசிக்கும் ரகீம் அண்ணனின் நண்பர் ஒருவரைப்பார்க்க ரஹீம் அண்ணன் அங்கு போய் வரும்.
பொள்ளாச்சிக்கு அருகில் வால்பாறை, ஆனை மலை டாப் ஸ்லிப் போன்ற மலையில்
அமைந்த சுற்றுலாத்தலங்கள் உண்டு. விருந்தினர் வரும்போது அங்கெல்லாம் போய் வருவோம்.
திரு மகாலிங்கத்தின் நூற்பு ஆலைக்கும் போய் சுற்றிப்பார்ப்போம்.
இந்து செய்தித்தாள் முகவர் சாஸ்த்ரி என்ற முதியவர் எல்லோர்
வீட்டுக்கும் போய் கலகலவென்று பேசி வருவார். அவரைப்பார்த்தால் ஒடி ஒளிபவர்களும்
உண்டு ..
ரஹீம் அண்ணன் மும்தாஜ் பொள்ளாச்சி வந்திருக்கையில் சின்னபொட்டு அக்கா
ஒரு நாள் வந்தது.. என்ன இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறதே என்று அத்தா
உரக்க சிந்தித்கையில் ரஹ்மத்தலி அண்ணன் பின்னல்
வருவதை ரஹீம் அண்ணன் சுட்டிக்காட்டியது . சுராஜை ரஹ்மத்தலி அண்ணனுக்குப் பெண் கேட்க வந்திருந்தார்கள் பல சுற்றுப் பேச்சுக்குபிறகு நெல்லையில்
இருக்கையில்,திருமணம் நடை பெற்றது..
பொள்ளாச்சி தட்பவெப்பம் சற்றுக் குளிர்ச்சியாகவே இருக்கும். மாமா மகன்
சக்ரவர்த்தி எங்கள் வீட்டில் தங்கிப் படித்தார் . எப்போதும் உரக்கப் படிப்பார்.
என்ன படிக்கிறார் என்பது அவருக்கும் (எனக்கும்) மட்டும்தான் தெரியும் .
கரீம் அண்ணன் பொள்ளாச்சிக்கு வந்தபோது முத்தக்கா ஒரு புது கைத்தறி
புடவையைக்கட்டிகொண்டு நல்ல இருக்கா என்று கேட்டது .நல்லாத்தான் இருக்கு .அனால்
இந்தப்புடவையோடு நீ ஊருக்கு வந்தால் ஏன் முத்து நனிமாவைக் கூட்டிக்கொண்டு
வந்திருக்கிறாய் என்று என்னைக் கேட்பார்கள் என்று கரீம் அண்ணன் கிண்டலடித்தது
பொள்ளாச்சியில் நாங்கள் இருக்கும்போதுதான் திருவனந்தபுரம் சேகு மாமா
காலமானதாக நினைவு
வீட்டில் இருந்த வானொலிப்பெட்டி மிக அழகாக கம்பீரமாக இருக்கும்
,பியானோவில் இருப்பது போல் அலை வரிசை மாற்றும் குமிழ்கள் இருக்கும். அழகான
வானொலிக்கு ஒரு அழகான மரப்பேழை.கண்ணாடி பதித்த கதவுகளோடு .அதுவும் கம்பீரமாக
இருக்கும்.இலங்கை வானொலியில் மயில்வாகனன் , பி ஹெச் அப்துல் ஹமீது போன்றவர்கள்
குரலும் நிகழ்சிகளும் இனிமை ,சென்னை, இலங்கை வானொலியில் இரவு பத்து மணிக்குமேல் திரையிசை
கேட்பது மனதுக்கு இதம்
மாநிலச்செய்திகள் பத்மநாபன் வாசிப்பர். இலங்கையில் அப்பாவித்
தமிழர்கள் கொல்லப்படும் நிகழ்வு எனக்கு
நினைவு தெரிந்த நாளில் இருந்து காதில் விழுந்து கொண்டிருக்கிறது.. இலங்கை ஸ்ரீ
லங்கா வானதுதான் ஒரே மாற்றம்.
வெள்ளிகிழமை தொழுகைக்கு அத்தாவுடன் பளிவாசல் போவோம். அங்குள்ள
ஒலிபெருக்கியில் வானொலி ஓசையும் கலந்து வரும்.
நூரக்கா சில மாதங்கள் அரசு அலுவலகம் ஒன்றில் தற்காலிகப்பணிக்குச்
சென்று வந்தது. அது எழுதிய கவிதை ஓன்று பொள்ளாச்சி வாசி என்ற உள்ளூர் வார இதழில்
வெளியானது
.கல்வி ஆண்டின் இடையில் அத்தாவுக்கு வேலூருக்கு மாறுதல் வந்தது .ஷஹா
வேலூரில் பள்ளியில் சேர்ந்து விட்டான் அங்குள்ள கல்லூரியில் வேதியியல்
பட்டப்படிப்பு இல்லை.. எனக்குத் தங்க நகராட்சி வருவாய் ஆய்வாளர் திரு
சதாசிவத்துக்கு சொந்தமான விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது .சில நாட்கள் அவர்
வீட்டில் தங்கி விட்டுப் பின் விடுதிக்குச் சென்றேன். ஒரு நல்ல சைவ விடுதியில் உணவு.
சுராஜ் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து விட்ட நினைவு. ஜோதி அக்கா
பள்ளிப்படிப்பை முடித்து கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியில் படித்தது..அதன்
தாக்கம்தான் இப்போது கவிதை கட்டுரை கதை என்று வெளிப்படுகிறதோ?
விடுதியில் தங்கி இருக்கையில் ஒரு நாள் உடுமலைபேட்டை கல்லூரி சென்று
நூரக்காவைப் பார்த்து வந்தேன். அன்று கல்லூரி ஆண்டு விழா
. சின்ன சின்ன மூக்குத்தியாம் செகப்புகல்லு மூக்குத்தியாம் என்ற
திரைப்பாடலை இயற்றியவர் பொள்ளாச்சியைச சேர்ந்தவர். படம பெயர் நினைவிலில்லை .பாடல்
அடிக்கடி வானொலியில் ஒலிக்கும்
.சென்ற பகுதி பற்றி கருத்துகளும் பாராட்டும் தெரிவித்த பாப்டிக்கு நன்றி
இ(க)டைச்செருகல்
ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் பைசலுக்குப் பெண் பார்க்க பொள்ளாச்சி
சென்றோம். அந்தப்பெண் நான் படித்த என் ஜி எம் கல்லூரியில் படித்தவர் ..பெண் பற்றி
விசாரிக்கக் கல்லூரி சென்றோம். நான் அந்தக்கல்லூரியின் மிகப்பழைய மாணவன் என்று
சொன்னவுடன் முதல்வர் மிக அன்பாக வரவேற்று வேண்டிய விபரங்கள் கிடைக்கச் செய்தார்
அண்மையில் தங்கை சுராஜ் பொள்ளாச்சி சென்று நாங்கள் குடியிருந்த
வீட்டைப்பார்த்து,, உள்ளேயும் சென்று ஒளிப்படம் எடுத்து தன் மலரும் நினைவுகளைப்
பகிர்ந்து கொண்டது
சின்ன சின்ன மூக்குத்தியாம் பாடலை வலையில் தேடியபோது கிடைத்த சுவையான
செய்திகள்
பாடலாசிரியர் திரு கே சீ எஸ்
அருணாசலம்
பாடல் இடம்பெற்ற படம் பாதை தெரியtது பார் (1960)
பொது உடைமை சிந்தனையாளர்கள் பலர் கூட்டுச்சேர்ந்து தலைவர் ஜீவா
தலைமையில் எடுத்த இப்படக்கதை அரசியல்,
தொழில்சங்கம், பண வீக்கம் ,பங்குச்சந்தையில் சரிவு போன்ற பலவற்றை விமர்சிப்பது..
படம் ஓடவில்லை.ஆனால் சிறந்த தமிழ்படத்துக்கான குடியரசுத்தலைவர் பரிசு
பெற்றது. பாடல்கள் எல்லாம் இனிமை.
கவிஞர் வாலி இந்தப்படத்துக்காக
எழுதிய “கொடுத்தெல்லாம் கொடுத்தான்” என்ற பாடல் படக்குழுவால்
நிராகரிக்கப்பட்டது..பின்னர் இப்பாடல் படகோட்டி திரைப்படத்தில் இடம் பெற்றது .
எழுத்தாளர் ஜெயகாந்தன் இந்தப்படத்திற்கு ஒரு பாடல் இயற்றினார்,.
சென்ற பகுதியின் இறுதியில் ஒரு வினா கொடுத்திருந்தேன்
இசுலாமிய சமுதாயத்தில் முதலில் பிறந்தது யார் என்பது வினா
அந்தகுழந்தை பெயர் அப்துல்லாஹ் இப்னு ஜுபை.ர் (ரலி).
தாயார் அஸ்மா .
நபிகள் (ஸல்) அவர்கள் இந்தக்குழந்தைக்கு பெயர் சூட்டி முதலில் உணவளித்தார்கள்
இறைவன் அருளால் பயணம்
தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில் sherfuddinp.blogspot.com