Friday, 12 August 2016

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 23.மேட்டூர்


மேட்டூர் என்றதும்  புறாக்கள் மனதில் சிறகடித்துப் பறக்கின்றன .நிறைய புறாக்கள்--வெள்ளை நிறம், கருப்பு நிறம் சாம்பல் நிறம் என பல வண்ணங்களில் - வளர்த்தோம். ஏனோ தானோ என்றல்ல .தோட்டத்தில் பெரிய சிமின்ட் தளம் பதித்து ,உயரமான கம்பம் நட்டு அதன் மேல் புறாக்கூடுகள் அமைத்து தண்ணீருக்கு ஒரு சிறிய தொட்டி கட்டி  வளர்த்தோம்.
ஒரு சில புறாக்கள் வாங்கி விட்டது பல்கிப் பெருகி விட்டதாகச் சொல்வார்கள். இப்படி அருமை பெருமையாய் வளர்த்த புறாக்களை ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் விற்க வேண்டியதாயிற்று .ஏன் என்பதை பிறகு சொல்கிறேன்.
ஆம்பூரிலிருந்து அத்தாவுக்கு மேட்டூருக்கு மாறுதல். நகராட்சிக்குப் பதில் நகரியம் (டவுன்ஷிப்). ஆணையருக்குப்பதில்  செயல் அலுவலர் (எக்சிகியூட்டிவ் ஆபீசர்) அதில் நகராட்சி உறுப்பினர் தலைவர் என்ற அமைப்பு. . எல்லாம் கிடையாது என நினைவு. எனவே செயல் அலுவலருக்கு அதிக அதிகாரம், பொறுப்புகள்.
மிக அழகான விசாலமான வீடு. மிகப்பெரிய தோட்டம்.. தோட்டத்தில் பூங்காக்களில் உள்ளது போன்று ஒரு பெரிய வட்டப்பாத்தி நிறைய  மலர்ச்செடிகள் இருந்தன. மகிழுந்து செல்ல இடைஞ்சலாக இருந்த அந்தப்பாத்தி இடித்து அகற்றப்பட்டது
தோட்டத்தின் ஒரு பகுதியில் சிமின்ட் தளம் வைத்துக் கட்டப்பட்ட மாட்டுக்கொட்டகை .ஒன்றோ இரண்டோ பசு மாடுகள் இருந்த நினவு 
மகிழுந்து எண் MSZ 7736. ஹில்மேன் என்ற மேல்நாட்டு வண்டி. எல்லா ஊர்களுக்கும் அதில்தான் பயணம் செய்வோம் .ஓட்டுனர் இருந்தாலும் அத்தாவே பெரும்பாலும் வண்டி ஓட்டுவார்கள்..பள்ளிக்கூடம் போவது வருவது எப்போதும் நடந்துதான் .மதிய உணவுக்கும் வீட்டுக்கு வருவோம்.
பெட்ரோல் ஒரு காலன் ( ஐந்து லிட்டர் ) ஐந்து ரூபாய். பெட்ரோல் நி(ர)றப்பும் கருவி சற்று வித்தியாசமாக இருக்கும். கருவியின் உச்சியில் ஒரு பெரிய கண்ணாடிக் குடுவை இருக்கும். பெட்ரோல் அதில் நிற(ர)ம்பி, பின் வண்டியில் ஊற்றப்படும்
தோட்டத்தில் கொய்யாமரம், குண்டு மல்லிச் செடி போக பெரிய புல்வெளி.. தரையை விளையாட்டாகத் தோண்டினால் நெளியும் மண்புழுக்கள்..வேலியில் படர்ந்திருக்கும் கோவைக்காய் கொடி. அவ்வப்போது கண்ணில் படும் பச்சைப் பாம்பு
கோவைக்காயை சமைத்தும் கிடையாது மருந்தாகவும் பயன்படுத்தியதில்லை...கோவைக்காயை கரும்பலகை (சிலேட்டு) துடைக்கவும் அழகிய சிவப்பு நிறத்தில் இருக்கும் கோவைப்பழத்தை உதட்டைச் சிவப்பாக்கவும் விளையாட்டாகப் பயன் படுத்துவோம்..
அத்தா காமெரா வாங்கியது மேட்டூரில்தான் என நினைவு. நிறையப் புகைப்படங்கள் எடுக்கப்படும்..கோபமாக நான் நிற்கும் படம் கூட தொகுப்பில் (ஆல்பம்) பார்த்த நினைவு. ஷஹா (குழந்தை) தூங்கி எழுந்தவுடன் எடுத்த படமும் இருக்கிறது ( அந்த ஆல்பம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. கிடைத்தால் படங்களை வெளியிட முயற்சிக்கிறேன் )
மேட்டூர் அணை இருக்கும் பகுதியை அக்கரை என்று சொல்வார்கள். அடிககடி அங்கே போவோம். அணையின் கம்பீரமும் பூங்காவின் அழகும் மனதுக்கு உற்சாகமூட்டும். அணைப்பகுதியில் ராஜ் பவன் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய அறை இருக்கும்.
அணைக்குப் போகும் வழியில் மேட்டூர் சந்தன சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கும். அங்கே போனால் சந்தனக் கட்டையில் இருந்து சந்தன எண்ணெய் எடுக்கும் முறையைச் செய்து காண்பிப்பார்கள் (இப்போது அந்த சோப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை )
ஆண்டுக்கு ஒரு முறை சேலத்தில் பெரிய பொருட்காட்சி நடக்கும். வார விடுமுறையில் அங்கே போய் வருவோம். பெட்ரோல் இல்லாமல் மின் சேமக்கலன்களால் (பேட்டரி)  இயங்கும் மகிழுந்துப் பார்த்து வியந்தோம். நறுமண மிக்க பழச்சாறு குடிப்போம்.
சேலத்துக்கு மேல் மலையில் ஏற்காடு .ஏற்காட்டில் ரோசாப்பூக்கள் தாமரைப்பூ அளவுக்குப் பெரிதாகப் பூக்கும் .வாசம் இருக்காது. ஏரியில் படகில் பயணிப்போம்..
ஒருமுறை ஒகேனகல் சென்றோம். அப்போது இருந்த ஒரே விடுதியான அரசு தங்கும் விடுதில் அறை பாதுகாப்பின்றி இருந்ததால் தங்காமல் திரும்பி விட்டோம்.
.அக்காமார் நூர்,முத்து, ஜென்னத் மூவரும் ஒரே வகுப்பு. –பள்ளி இறுதி வகுப்பு. கிறித்தவப் பெண் துறவிகள் நடத்தும் அதே பள்ளியில் எல்லோரும் வேறு வேறு வகுப்புக்களில் படித்தோம். .அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையும் (மதர் சுப்பீரியர்) -பெயர் ஜேனத் மேரி என நினைவ – மற்ற ஆசிரியைகளும் அக்கா மாரிடம் தனிப்பட்ட அன்பும் கவனமும் செலுத்துவார்கள்., .பொதுவாக யார் வீட்டுக்கும் போகாத அந்தத் துறவிப்பெண்கள் எங்கள் வீட்டுக்கு வந்து போவர்கள் .
பள்ளியில் ஆரோக்கிய சாமி என்பவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். சங்கர் என்பவர் என்னிடம் அடிககடி வம்புச்சண்டைக்கு வருவார்., தமிழாசிரியர் கருத்த நிறமும்  வெள்ளை ஜிப்பாவுமாக கையில் பிரம்புடன் பயமுறுத்தும் தோற்றத்தில் இருப்பார்.
பள்ளியில் கைத்தொழில் வகுப்பில் பருத்திப்பஞ்சில் கொட்டைஎடுப்பது, பஞ்சை தூசு நீக்கி சுத்தம் செய்து  ஒரு திரிபோல் செய்வது  திரியை தக்ளியிலும் ராட்டினத்திலும் நூல் நூற்பது எல்லாம் செயல் முறையில் கற்றுக்கொடோம்.
பள்ளி வளாகத்தில் உள்ள கிறித்தவ ஆலயத்துக்கு தயக்கமின்றி போய் வருவோம்  .
கல்வி ஆண்டின் இடையில் அத்தாவுக்கு சிதம்பரத்திற்கு மாற்றல் வந்து விட்டது. பள்ளி இறுதி (எஸ் எஸ் எல் சீ – பதினோராம் வகுப்பு ) படித்த சகோதரிகளுக்கு படிப்பு தடைப்படாமல் இருக்க  துறவிகள் தங்கும் மடத்திலேயே தங்கிப் படிக்க சிறப்பு அனுமதி கொடுத்தார்கள்.
முத்தக்காவுக்கு பொதுத் தேர்வு நேரத்தில் உடல் சுகவீனம் ஏற்பட்டது. அதற்காக தேர்வு எழுதாமல் இருக்கவில்லை. தேர்வு நடக்கும் இடத்துக்கு ஒரு மருத்துவரை வரவழைத்து தேர்வு முடியும் வரை அவர் அங்கேயே இருக்க அத்தா ஏற்பாடு செய்தார்கள்.நல்ல மதிப்பெண்கள் பெற்ற  சகோதரிகளுக்கு பள்ளியில் புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார்கள
மும்தாஜ் அக்கா பள்ளி கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது.
பள்ளியில் கருமலைக்கூடல் என்ற ஊருக்கு எங்கள் வகுப்பை  சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். மலைப்பகுதியான அது பார்க்க மிக அழகாக இருந்தது . ஒரு துணிப்பையில் வாழைப்பழம்,கேக், பிஸ்கட், குப்பியில் தண்ணீர் எல்லாம் அம்மா வைத்துக்கொடுத்தது  தண்ணீர் குபபியால் பழம் நசுங்கி பை நசு நசுவென்று ஆகி விட்டது. கூட வந்த நண்பர் ஆரோக்கியசாமி பையைத் துவைத்துக் காய வைத்துக் கொடுத்தார் .
வீட்டு வேலைக்கு அமிர்தம் என்றொரு பெண் வருவார்.. சகாவைத் தூக்கி வைத்துக் கொஞ்சிகொண்டிருப்பார்.
நெய் விற்கும் பெண் வெண்ணெய் கொண்டு வந்து, அதைவீட்டு முற்றத்தில் அடுப்பில் காய்ச்சிக் கொடுப்பார்.. வெண்ணையை உருக்கும்போது, முருங்கைக்கீரையும் உப்பும் போடுவார்கள். நெய்யில் பொறித்த கீரை மொறுமொறுப்பாக நல்ல சுவையாக இருக்கும். அதற்குமேல் வெண்ணெய் உருக்கிய சட்டியில் சோற்றைப் போட்டுப் பிசைந்து உருண்டையாக உருட்டி அம்மா கொடுப்பது அப்படி ஒரு சுவை- சோறு, நெய் , உப்பு, கீரை எல்லாம் கலந்த ஒரு சுவை, இதுவும் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்காத ஒரு சுவை.
புறாக்கறி சமைத்து சுவைத்ததுண்டு. அத்தாவின் நண்பர் ஒருவர் மான்கறி கொடுத்து விட்டார். அதையும் சுவைத்ததுண்டு. இதிலெல்லாம் சிறப்பான சுவை ஒன்றும் எனக்குத் தெரியவில்லை.
அம்மா சமைக்கும் சிலோன் கறி என்பது ஒரு தனி சுவையாக இருக்கும். நல்ல பச்சை நிறத்தில் இருக்கும்.
சிறு வயதில் உறைப்பு எதுவும் சாப்பிடமாட்டேன். கால், தலை, குடல் , நுரையீரல் இதெல்லாம் அப்போதும் இப்போதும் தொடமாட்டேன். தலைக்கறிக் குழம்பு வைத்தால் எனக்கு மூளைக்குழம்பு அம்மா வைப்பார்கள்..
தேங்காய் சாம்பார் அம்மாவின் சிறப்பு உணவு . .மீன் குழம்பிலும் நிறைய தேங்காய்த் துண்டுகள் இருக்கும். அம்மா இட்லி தோசைக்கு வைக்கும் தக்காளிச் சட்னி ஒரு தனிச் சுவை.
ஒரு முறை தாசில்தார் பெரியத்தா குடும்பத்துடன் சேர்ந்து பெங்களூர் மைசூர் சுற்றுப்பயணம் சென்று வந்தோம். .
எம் பீ சச்சா(பெரிய முத்தக்கா) கிருஷ்ணகிரியில் பணியாற்றியபோது அங்கு சென்று வந்ததாய் ஒரு நினைவு
நவாப் ஜான் என்ற அத்தாவின் நண்பர் – நல்ல உயரம், அதற்கேற்ற பருமன், தடித்த ஊதாத் துணியில் தைத்த சட்டை போட்டிருப்பார். உரத்த குரலும் கலகலவென்ற சிரிப்பும் அவரது தனி அடையாளங்கள்
பக்கத்து வீட்டில் மூர்த்தி என்ற சிறுவனும் ஆனந்தி என்ற பெண்ணும் இருந்தனர் . அவர்கள் அம்மா (பெயர்  ரங்கநாயகி என நினைவு) ஒரு முறை சூடான மைசூர்பாகு செய்து கொடுத்தார்கள். அவர்கள் வீட்டிற்கு கார்த்திகை தீபம் அன்று போயிருந்தபோது சுராஜின் தலையில் சிறிது நெருப்புப் பட்டுவிட்டது .
ஒரு முறை மணலில் விளையாடிக்கொண்டிருக்கும்போது எதோ சண்டையில் ஒரு பெண் கட்டிய மணல் வீட்டை நான் கலைத்து விட்டேன். அந்தப்பெண் எரிச்சலில் என் வயிற்றில் கடித்து விட்டது வடு ஆற பல நாட்களானது .
மேட்டூரில் இருந்த திரைப்பட கொட்டகையில் சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்தோம். படத்திற்கு முன்னால் கேலிச்சித்திரைப்படம் (கார்டூன் படம்) போடுவார்கள் .மிக நன்றாக இருக்கும்.
குழந்தையாக இருந்த ஷஹா பேச ஆரம்பிக்கும் பருவம். அவன் பேச்செல்லாம் புறா ஒலி போல் இம்கும் இக்கும் என்று வந்தது . அதனால் புறாக்கூட்டம் ஒரே நாளில் (புறாக்) கூண்டோடு  விற்கப்பட்டது .
நிறைவாக, இதுவும் என் சிறிய வயது பற்றிய பகுதி. இதில் பிழைகள் இருந்தால் உடன் பிறப்புக்கள்  தெரிவிக்கலாம்..
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த இதயத்,பாப்டி  சகோதரிகள் மெஹராஜ் சுராஜுக்கு நன்றி .
மெஹராஜ் அக்கா :”மாயவரம் எனக்குப் பிடிக்காது .அங்கே அத்தாவுக்கு மிகவும் முடியாமல் இருந்ததனால்.
மேட்டுப்பாளையம் : பாக்கு மரங்கள் பழத்தோட்டம், குவியலாக உருளைக்கிழங்கு எல்லாம் நினைவிருகிறது. அம்மா உ.. கிழங்கை தீயில் சுட்டுக் கொடுக்கும். அதைபார்த்துத்தான் அத்தா முட்டையைத் தீயில் சுடச்சொன்னதோ !
பெரியகுளம் விட்டுக்கு எதிரில் நாலு கால் மண்டபம் அதன் கீழ் மணல்பரப்பு. அதில் நானும் ஜோதியும் விளையாடியது, பக்கத்து வீட்டுப்பெண் ஆனந்தி, ரஹீம் டிரான்ஸ்போர்ட்:மகள் மல்லிகா, டீச்சர் , பறங்கிக்காயைப் பறித்து என்று பாடிக்கொண்டே குதித்து விளையாடியது எல்லாம் நினைவிருக்கிறது
மூத்த சகோதரிகள் கலந்துகொண்டால் இன்னும் நிறைய செய்திகள் கிடைக்கும்   
சுராஜ்
மாயவரம் பயணக்கட்டுரை அருமை .அம்மாவின் வயிற்றில் இருந்தது கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கும் போலிருக்கிறது .
நான் பிறந்தது பெரியகுளம் என்று சொன்னாரகள் .அக்காமாரிடம் கேட்க வேண்டும்.
(இந்தகருத்துக்கள் வலை நூலில் பதிவாகவேண்டும். அதற்காகத்தான் இங்கே பதிவு செய்கிறேன் . கட்செவியில் சில நாட்களில் மறைந்து விடும்)
அக்காமார்களும் தங்கள் எண்ணங்களைப் பதியலாமே . சாஜித் (நூரககா) ஷேக் (முத்தக்கா, ஜென்னத்தக்கா) , ராஜா (மும்தாஜ் அக்கா) இதற்கு உதவி செய்யலாம்
இ(க)டைசசெருகல்  
புறாவில் துவங்கி புறாவிலே நிறைவுற்ற பகுதியில் புறா பற்றி சில செய்திகள்
புறாக்கள் கற்புடன் வாழும் பறவைகள்.
அவை தினமும் குளித்து விடும்.
புறாக்களுக்கு உள்ளுணர்வு கிடையாது
எவ்வளவு தொலைவு பறந்து சென்றாலும் தம் இடத்துக்குத் திரும்பி விடும்.
புறா பற்றி முத்தூரில் நான் அறிந்த செய்தி.
ஒரு விவசாயி குடும்ப சூழ்நிலையால் வீடு, வயலை விற்று விட்டு வேறு இடத்துக்குக் குடி போனார். அவர் வளர்த்த புறாக்கள் அவர் இடம் பெயர்வதற்கு சில நாட்கள் முன்பே புதிய வீட்டுக்குப் பறந்து போய் விட்டன மேட்டூரில் விற்ற புறாக்கள் ஏதும் திரும்பி வந்ததா என நினைவில்லை
இறைவன் அருளால்                                                                                                                                       
பயணம் தொடரும்

வலைநூல் முகவரி
கூகிள் தேடுதலில் sherfuddinp.blogspot.com





2 comments:

  1. We appreciate your writing which remembered (kuppayam etc etc)& our childhood life. Pls continue.
    Urs
    Ayub khan & Sarmatha Begam

    ReplyDelete
  2. We appreciate your writing which remembered (kuppayam etc etc)& our childhood life. Pls continue.
    Urs
    Ayub khan & Sarmatha Begam

    ReplyDelete