Friday, 2 September 2016

திருநெல்வேலி 1 வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 26.



நெல்லைச் சீமையைப் பற்றி என்ன எழுதுவது என்று குழப்பம் .ஒன்றா இரண்டா எத்தனை நிகழ்வுகள் நெல்லையில் .
அத்தா இருமுறை நகராட்சி ஆணையரகப் பணியாற்றியது,, பணி மூப்புப்பெற்றது, சகோதரிகள் நூர், ஜோதி, சுராஜ் திருமணம் , நான் பட்டப்படிப்பு முடித்தது , வேலை தேடி ஒரு ஆண்டு இருந்தது ,காரைக்குடி செக்ரியில் வேலை கிடைத்தது, பின் கனரா வங்கியில் வேலை,உடன்குடிக்கு மாறுதல் மீண்டும் திருநெல்வேலி ,முஸ்தபா அண்ணனுக்கு கனரா வங்கி கல்லிடைக்குறிச்சியில் வேலை என் திருமணம், இரு குழந்தைகள் பிறந்தது, பதவி உயர்வு,கேரளாவுக்கு மாறுதல்  சிரின் (நூர்) ஷேக், நிலோ  (முத்து ) வஹாப் (ஜென்னத்,) ராஜா,கதீஜா  (மும்தாஜ்) இதயதுல்லாஹ் , இப்ரு (ஜோதி) சிட்டு ,நௌசாத் ரபி (சுராஜ்) பிறந்தது சஹா  பள்ளி இறுதி, புகுமுக பகுப்பு முடித்து காரைக்குடி பொறியியல் கல்லூரியில்  சுல்தான் மாமா காலமானது எல்லாவற்றிற்கும் மேலாக அம்மா காலமானது எல்லாம் திருநெல்வேலியில்தான்
இன்னும் சொல்லப்போனால் வங்கியில் பணி மூப்பு வரை உள்ள அறுபது ஆண்டுகளில் நான் அதிக நாள் வாழ்ந்தது நெல்லையில் தான்
இவ்வளவு நிகழ்வுகளையும் எப்படித் தொகுத்து எழுதப்போகிறேன் என்று மலைப்பாக இருக்கிறது .வழக்கம் போல் இறைவன் மேல் பாரத்தைப்போட்டு விட்டு எழுதத்துவங்குகிறேன்..பிழைகள், விடுதல்கள் இருந்தால் உடன்பிறப்புகள் தெரிவிக்கவும்.
நெல்லைக்குஎன்று பல சிறப்புகள் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த அல்வா , தமிரபாணி ஆறு, நெல்லைத்தமிழ், வட்டார வழக்குச்சொற்கள் ,வத்தகுழம்பு, சுக்குக்காப்பி , வெண்ணிப் பழையது ,கல்தோசை சொதி,உளுந்தங்களி முடுக்குகள்  என்று அடுக்கிகொண்டே போகலாம் .இதற்கெல்லாம் மேல் சிக்கனம் – பேச்சில், வார்த்தைகளில், உடையில் (எளிமை) உணவில் என்று எல்லாவற்றிலுமே சிக்கனமாகத்தான் இருப்பார்கள் நெல்லை வாசிகள்.
கோவையில் இருந்து அத்தாவுக்கு நெல்லை நகராட்சி ஆணையராக இட மாறுதல். பிறகு நெல்லையிலிருந்து பொள்ளாச்சி, பொள்ளாச்சியிலிருந்து வேலூர் அங்கிருந்து மீண்டும் நெல்லை. 
கூலக்கடை பஜார், குறுக்குத்துறை, பேட்டையில் மூன்று வீடுகள் என்று பல வீடுகளில் வசித்ததும்  நெல்லையில்தான்.
எதற்கு இந்த நீண்ட முகவுரை என்றால் வரிசைகிரமமாக  அனைத்து செய்திகளையும் சொல்வது சிரமம். இந்தப் பின்னணியில் என்னால் முடிந்த அளவுக்கு ஒரு தொகுப்பாக எழுத முயற்சிக்கிறேன்,.எத்தனை பகுதிகள் வரும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். .
நான் சாப்ட்டர் உயர் நிலைப்பளியிலும் பின் பட்டப்படிப்பு இரண்டு மூன்றாம் ஆண்டு பேட்டை ம தி தா இந்துக் கல்லுரியிலும் படித்தேன், ஜோதி சுராஜ் நகராட்சிப் பெண்கள் பள்ளி கல்லணை என நினைவு. ஷஹா சி எஸ் ஐ , சாப்ட்டர் பள்ளியிலும் . பின் நகராட்சிப் பள்ளி பேட்டை, ம தி தா கல்லூரியில் புகுமுக வகுப்பு, பின் காரைக்குடி பொறியியல் படிப்பு .
முதலில் கூலக்கடை பஜாரிலிருந்து துவங்குகிறேன். அதென்ன கூலக்கடை?  கூலம்என்பது தானியம் என பொருள்படும். தானிய வணிகத்திற்கான இடம். என்று கேள்விபட்டேன் .
கோவையிலிருந்து அத்தாவுக்கு நெல்லைக்கு மாறுதல் வந்ததும் முதலில் சுல்தான் மாமா வீட்டில் போய் இறங்கியதாக நினைவு. நகராட்சி ஆணையரான மைத்துனர் வருகிறார் என்று மாமா காலுறைகள், கழுத்துச்சுருக்கு(சாக்ஸ், டை ) எல்லாம் வாங்கி வைத்திருந்தது .அங்கிருந்து நகராட்சி தங்கும்விடுதியில் சில நாட்கள் தங்கி விட்டு, கூலக்கடை பஜாரில் உள்ள திரு நைனார் மூப்பனார் என்பவரின் வீட்டுக்குபோனோம். ரத வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்து (நெல்லை மொழியில் முடுக்கு) . வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு பெரிய வாய்க்கால் – குளிக்க,பாத்திரம் பண்டம் கழுவ என பல பயன்பாடுகள் 
வீட்டை ஒட்டி ஒரு கோயில் . அதன் அருகில் வீட்டு உரிமையாளர் வீடு..அவர் மளிகைக்.கடை வைத்திருந்தார்.
நெல்லையப்பர் கோயிலை மையமாகக் கொண்டது நெல்லை நகர அமைப்பு. கோயிலைச்சுற்றி மாட வீதிகள் அடுத்து ரத வீதிகள் .ரத வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகள். ஒரு புறம் நெல்லை சந்திப்பு, மறுபுறம் சற்று தொலைவில் பேட்டை. .நெல்லை சந்திப்பில் இருந்து தாமிர பரணி ஆற்றைத்தாண்டி பாளையம்கோட்டை
வடக்கு ரத வீதியில் ஈனா கடை.. அருகிலுள்ள நைனார் குளம் தெருவில் சுல்தான் மாமா வீடு. பாளையங்கோட்டையில் கருத்தக்கிளி அண்ணன் மெஹரி அக்கா வீடு. கூலக்கடை வீட்டில் கழிவறை மாற்றம் செய்வதற்காக சில நாட்கள் பேட்டையில் ஜனாப் தானா மூனா வீட்டில் தங்கி  வந்தோம். தானா மூனா நெல்லையில் செல்வாக்கும் செல்வச்செழிப்பும் நிறைந்த குடும்பம் .நிறைய விவசாய நிலங்கள், பெரிய பாய்த்தொழிற்சாலை, நெல்லை சந்திப்பில் அந்தக்கால கட்டத்தின் மிகப்பெரிய வணிக வளாகம் எல்லாம் உண்டு.
நெல்லையிலிருந்து நாற்பது கிலோமீட்டரில் குற்றாலம். அடிக்கடி போய் வருவோம்..அருவியில் குளிக்கும் சுகமும் குளித்தபின் ஏற்படும் பசியும் உணர்ந்து உள்வாங்கி அனுபவிக்க வேண்டியவை
பெரும்பாலும் வீட்டில் இருந்து சாப்பாடு (புளிச்சோறு , கறிப்பொரியல்) கொண்டு போவோம். பெரிய அருவியில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஐந்தருவி பல  பிரிவுகளாக இருப்பதால் நெருக்கடி குறையும். பழைய அருவி கூட்டம் குறைவாக விசாலமாக் இருக்கும்.
ஜென்னத் அக்கா முத்தலிப் அண்ணன் , ஆயிஷா அக்கா , மம்மூ எல்லோரும் கூலக்கடை தெரு வீட்டில் வந்து சில நாட்கள் தங்கியதாய் நினைவு .
பீரண்ணன் உடன் பிறப்புகள் வந்து குற்றாலம் போய் வந்தார்கள்
ஒரு முறை குற்றாலத்தில் வழுக்கி விழுந்து முழங்காலில் அடிபட்டு குருதி பெருகியது. பல நாட்கள் மருததுவரிடம் போய்க் கட்டுப்போட்டு வந்தேன் மிதி வண்டி ஓட்ட முடியாமல் சில நாள் மகிழுந்தில் கல்லூரி போய் வந்தேன்.
பாபநாசம், மணிமுத்தார் அணைகள் மனதுக்கு இதமான சுற்றுலா இடங்கள். பாபநாசம் ஆற்றில் தண்ணீர் கண்ணாடிபோல் தெளிவாக இருக்கும். நிறைய மீன்கள் துள்ளி விளையாடும். பொறி கடலை போட்டால் கூட்டமாக மீன்கள் வந்து சாப்பிடுவது கண்கொள்ளாக்காட்சி  
சந்திப்பு செல்லும் பாதையில் நகராட்சி அலுவலகம் .அதை ஒட்டி நான் படித்த சாப்டர் உயர்நிலைப்பள்ளி . அங்கு பத்தாம் வகுப்புப் படித்தேன். முதன் முதலில் சீருடை அணிந்தது அங்குதான்.. பள்ளிக்குப் போக வர நெல்லையப்பர் கோயில் உள்ளே நுழைந்து போனால் தூரம் குறையும். செருப்பைக் கழட்டி புத்தகப்பையில் மறைத்து விட்டு நடப்பேன்.
குறுக்குதுறை வீட்டுக்குப் போன பிறகு, பள்ளிக்கு வயலில் இறங்கி குறுக்கு வழியில் நடப்பேன்..
குறுக்குத்துறை என்பது  தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதி. அங்கு நகராட்சிக் குடிநீர் வழங்கு நிலையம் அமைந்திருந்தது .ஏரிபோல் பரந்து விரிந்த நீர்த்தேக்கத் தொட்டிகள், வடிகட்டும் தொட்டிகள், சுத்தகரிப்பு நிலையம் என பல பிரிவுகளை உள்ளடக்கிய  ஒரு பெரிய அமைப்பு . அதை ஒட்டி அங்கு பணியாற்றுபவர்களுக்கான குடிஇருப்பு, காடு போல் இருக்கும். மேலும் இடுகாட்டுக்குப் போகும் வழி அது. எனவே யாரும் அங்கு குடி போகத்துணியவில்லை..அத்தாவின் துணிச்சலான முயற்சியால் அது விரிவாக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு ஆணையர் குடியிருப்பாக உருவானது .மகிழுந்துக்கொட்டகைக்காக தரையை சீரமைககும்போது நிறையப் பாம்புகள் காணப்பட்டதாம். 
அந்த வீட்டில் அத்தாவின் அலுவலக அறையில் அத்தா சுழல் இருக்கையில்  அமர்ந்திருக்கையில் அந்த இருக்கையின் காலில் ஒரு பாம்பு சுற்றி நின்றது. அறைக்கு வந்த யாரோ பார்த்துச் சொன்ன பிறகுதான் அத்தாவுக்குத் தெரியும்
ஆற்றின் அருகில் வீடு என்பதால் விடுமுறை நாட்களில் குளிக்க ஆற்றுக்குப் போவோம். நீச்சல் தெரியாத நான் ஒருமுறை நீரில் அடித்துச் செல்லப்பட்டேன் இறைஅருளால் அத்தாவின் முயற்சியால் உயிர் பிழைத்தேன்
ம தி தா இந்துக்கல்லூரியில் இரண்டு ,மூன்றாம் ஆண்டுப் பட்ட்டப்படிப்பு. கல்லூரி மட்டும் அல்ல பல்கலைக்கழகமே மாற்றம்.பொள்ளாச்சியில் முதலாம் ஆண்டு சென்னைப் பல்கலைககழகம். நெல்லைக்கல்லூரி மதுரைப் பல்கலைக்கழகம் நல்லவேளை, அந்த ஆண்டுதான் மதுரைப் பல்கலைககழகம் துவங்கப்பட்டதால் பாடத்திட்டத்திலோ பாட நூல்களிலோ மாற்றம் இல்லை
கல்லூரிக்கும் வீட்டுக்கும் ஏழு எட்டு கிலோமீட்டர் தொலைவு இருக்கும். மிதி வண்டியில் போய்வருவேன்.
நெல்லை, பாளயங்கோட்டையை தமிழ்நாட்டின் ஆக்ஸ்போர்ட் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கென்னவோ பள்ளியும் சரி கல்லூரியும் சரி நெல்லையை விட பொள்ளாச்சிதான் சிறப்பாய்த் தெரிந்தது
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஆர்தர் ஆசீர்வாதம் நல்ல உயரம் .மூன்று உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஒருவர் நெட்டையன் இன்னொருவர் கட்டையன் மூன்றாமவர் லப்பை (எல்லாம் காரணப்பெயர்கள்தான் ) உடற் பயிற்சி வகுப்பு விளையாட்டு எல்லாம் ஏனோ எனக்குப்பிடிக்கவே பிடிக்காது .பள்ளி வகுப்புகள் பத்து மணிக்குத்துவங்கும் ஒன்பது மணிக்கு படிக்கும் நேரம் .அதற்கே தாமதம் இல்லாமல் போய் விட வேண்டும். தினமும் காலை இறைவணக்கம் நடக்கும். ஒரு கிறித்தவ பாடல் பாடி, பிறகு பைபிள் வசனங்கள் சில படிப்பார்கள்.அதன் பிறகு வகுப்புக்குப் போக வேண்டும்.
பெரும்பாலும் நகராட்சிப் பள்ளிகளிலேயே படித்து வந்த எனக்கு இந்தகட்டுப்பாடுகள் சற்று புதுமையாகத் தோன்றின
சக்ரவர்த்தியும் அந்தப்பள்ளியில் படித்தார் .   
உடற்பயிற்சி வகுப்புக்கு பனியனோடு போக வேண்டும். பல மாணவர்கள் பனியனை பையில் வைத்துக்கொண்டு வந்து, உடற்பயிற்சி வகுப்புக்கு மட்டும் பயன்படுத்தி விட்டு உடனே கழற்றி பைக்குள் வைத்து விடுவார்கள் .பிற வகுப்புக்களில் இருந்து இரவல் வாங்கியும் அணிந்து கொள்வார்கள்  
பள்ளியில் மதிய உணவு அருகிலுள்ள நகராட்சி அலுவகலத்தில் அத்தா அறையில் வைத்து சாப்பிடுவேன்.
அத்தா அறையில் தொழுவதற்காக ஒரு பகுதி திரையிட்டுத் தடுக்கப்பட்டிருக்கும்..
திரையரங்குகள் நிறைய உண்டு நெல்லையில் .சென்றல் திரையரங்கு அழகாக குளிர் பதன வகுப்புடன் இருக்கும். இருக்கைகள் மிக விசாலமாக இருக்கும். குழந்தையுடன் வருபவர்களுக்காக தொட்டில்கள் இருக்கும்.
அடுத்து ரத்னா பார்வதி –எதிரும் புதிருமாக அமைந்த அரங்குகள. .ராயல் மிகப்பழைய அரங்கு. அம்கு ஹரிதாஸ் படம் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடியதாகச் சொல்வார்கள். சுவரில் பெரிதாக ஹரிதாஸ் என்று சிமி[ன்டால் எழுதபட்டிருக்கும். லக்ஷ்மி திரையரங்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும். பாப்புலர் , பாலஸ் அரங்குகள் மிகப் பழையதாய் பராமரிப்பின்றி இருக்கும். இது போக பேட்டையில் மீனாக்ஷி அரங்கு       
பள்ளி, கல்லூரியில் எனக்கு கிடைத்த நண்பர்கள் ராமகோபால்  கனகசபாபதி, சுந்தரம், அப்துல் காதர் ..அப்துல் காதரும் சுந்தரமும் கனரா வங்கியிலும் பணியாற்றினார்கள்.  
நாங்கள் நெல்லையில் இருந்த நாட்களில் துணிக்கடை, நகைக்கடை பாத்திரக்கடை திரை அரங்குகள்  எல்லாம் டவுன் எனப்படும் நகர்ப்பகுதியில்தான்
ஜங்ஷன் எனப்படும் சந்திப்புப் பகுதியில் தொடரி சந்திப்பு, பேருந்து நிலையம் இது போக சில நல்ல சைவ அசைவ உணவு விடுதிகள் மட்டும்தான்.தொடரி நிலையத்தில் உள்ள அசைவ விடுதியில் புரோட்டா குருமா சாபிடவே வெளியூரிலிருந்து மக்கள் வருவதாய்ச் சொல்வார்கள். ரச வடை,வெள்ளை அப்பம்,, கல்தோசை போன்ற சுவைகள் நெல்லை உணவு விடுதிகளின் சிறப்பு அம்சம். பொதுவாக சிறிய உணவு விடுதிகளில் கூட புரோட்டா குருமா சுவையாக இருக்கும்
திருநெல்வேலியில் மிகப்புகழ் பெற்ற அல்வாவைவிட சந்திப்பில் கிடைக்கும் பழைய கடை அல்வா சுவையானது, தின்னத் திகட்டாதது என்பது என் கருத்து
நெல்லை வத்தக்குழம்பு (வற்றல் குழம்பு)  பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகச் சொல்வார்கள்
சுக்குக்காப்பி பல உணவு விடுதிகளிலும் தெருவில் மிதி வண்டியில் வைத்தும் விற்கப்படும்
கல்லால் ஆன தோசைக்கல்லில் இட்லி அளவுக்கு கனமாக தோசை அளவுக்கு வட்டமாக மாவை ஊற்றி எண்ணெய் இல்லாமல் வெகு நேரம் சுட வைத்து எடுப்பார்கள். மெத்து மெத்தென்று பஞ்சு போல்  மெதுவாக இருக்கும் இதுதான் கல் தோசை. இதற்குத் தொட்டுக்கொள்ள பக்க உணவு சொதி.
வெந்நீர்ப் பழையது  நெல்லை வீட்டு சமையலின் தனிச்சிறப்பு. . சமைத்த சோறை மதியமும் இரவும் உண்டபின் மீதமிருப்பதில் நீர் ஊற்றி வைத்து அதை அடுத்த நாள் பழைய சோறு (கஞ்சி) ஆக உண்பது பொதுவான வழக்கம்.ஆனால் மதியம் சோறு சூடாக இருக்கும்போதே அதில் நீர் ஊற்றி  மதியம் இரவு அடுத்த நாள் காலை என்று உண்டால் அது வெந்நீர்ப் பழையது  பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில் இப்படி ஒரு நாளைக்கு ஒரு வேலை சமையல் என்ற வழக்கம் இருந்தது .
இசுலாமிய விருந்துகளில் பரிமாறும் நெய்ச்சோறு குருமா, தாளிச்சா ஒரு தனிச்சுவை
நெல்லைத்தமிழ் புதிதாக வருபவர்களுக்குப் புரிய சில காலம் பிடிக்கும் .ஆண்களை விளிக்க ஏலே,மரியாதையாக விளிக்க. சார்வாள் பெண்களுக்கு ஏட்டி உம் கொட்டுவதற்குப் பதில் உச்( நம்மீது ஏதும் சினமோ எனத்தோன்றும் அந்த உச் ஒலி கேட்கும்போது )
வட்டார வழக்கான சில சொற்கள் – வாரியல் (விளக்குமாறு) மேடை (மாடி) கட்டியும் தூளும் (கருப்புக்கட்டியும் காப்பிபொடியும்)இன்னும் பலப்பல
“தூரமா ?” என்றால் எங்கே போகிறாய் எனப்பொருள்..நெல்லை போன புதிதில் நான் பல முறை “ தூராமா ?” என்பவர்களுடம் இல்லை பக்கம்தான் என்று பதில் சொன்னது உண்டு.
அருகிலுள்ள பேட்டைக்குப் போய்வந்ததை “ஊருக்குப் போய்வந்தேன்” என்பார்கள்.  (பொள்ளாச்சியில் வேறு ஊரான கோவைக்குப் போய் வந்ததை “டவுனுக்குப் போய்வந்தேன் “ என்று சொல்வார்கள்)
இதற்கெல்லாம் மேல் நெல்லைச் சீமைக்கென்று ஒரு சிறப்பான உச்சரிப்பு.. ஒரு சில சொற்கள் பேசினாலே அவர்கள் நெல்லைத்தமிழர்கள் என்று எளிதில் இனம் கண்டு கொள்ளலாம்
கோவையில் கூலி வேலை செய்பவரகள கூட கால் சராய் (பேண்ட்) அணிவதைப் பார்த்த எனக்கு நெல்லையில்  அலுவலகப்பணியாளர்கள் வங்கிப்பணியாளர்கள் கல்லூரி மாணவர்கள் வேட்டி கட்டுவது வியப்பாக இருந்தது
நெல்லை நாயகம், நெல்லைப்பன், குத்தாலிங்கம் ,குளத்துமணி வள்ளி நாயகம் பூதத்தான், ஆழ்வான்  இவை நெல்லை வட்டாரத்துக்கான சிறப்புப்பெயர்கள்.
நெல்லை நகரிலிருந்து பேட்டை செல்லும் சாலையில் ஒரு வீட்டில்   Narambu Natha  Pillai  என்ற பெயர் பலகையைப் பார்த்து இது என்ன நரம்பு நாத பிள்ள கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று வியந்ததுண்டு. சிலரிடம் கேட்டால் அது நரம்பு இல்லை நாரம்பு என்றனர். அதுவும் எனக்குச் சரியானதாகத் தெரியவில்லை காலப்போக்கில் அதை நான் மறந்து விட்டேன். நெல்லை பற்றி இப்பகுதியை எழுதிகொண்டிருக்கும்போது செய்தித்தாளில் ஒரு கட்டுரை ஆசிரியர் பெயர் நாறும்பூ நாதன் என்பதைப் பார்த்ததும் ஐமபது ஆண்டு ஐயம் நீங்கி ஒரு தெளிவு பிறந்தது.
அந்த ஆசிரியருக்கு இந்த செய்தியை மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன்.
நன்றி சார்...வீரவநல்லூர் அருகில் உள்ள திருப்புடைமருதூர் கோவில் சிவன் பெயர் இது என்று பதில் அனுப்பினார்
திருநெல்வேலி சந்திப்பு, நகர், பேட்டை, பாளையங்கோட்டை மேலப்பாளையம் என்று பல தொடரி நிலையங்கள் உள்ளது ஒரு சிறப்பு
சந்திப்புத் தொடர் நிலையம் அருகில் ஒரு  லெவல் கிராசிங் இருக்கும் . போக்கு வரத்து நெரிசலான சாலையில் அமைந்துள்ள அது, அடிக்கடி மூடப்பட்டு நெரிசலை மேலும் அதிகப்படுத்தும்
இதைத் தவிர்க்க ஒரு இரட்டை அடுக்கு மேம்பாலம் பல எதிர்ப்புகளுக்கு இடையில்.(நெல்லை நகராட்சி மன்றக் கூட்டத்தில் இந்தப்பாலம் வேண்டம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது) கட்டி முடிக்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்று சொல்லப்படுகிறது
திருநெல்வலி என்ற பெயரில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் ஒரு ஊர் இருக்கிறது, எனவே குழப்பம் வரமால் இருக்க திருநெல்வேலித் தலைமை அஞ்சல் அலுவலகம் திருநெல்வேலி (இன்ட்) (ind) என்று குறிப்பிடப்படும்
பேட்டையும் மேலப்பாளையமும் இசுலாமியர்கள் நிறைய வாழும் பகுதி, மேலப்பாளையம் ஒரு காலத்தில் மிகச்செழிப்பாக இருந்த பகுதி. இப்போது பெரும்பாலும் பீடித தொழிலை நம்பியே அந்த ஊர் இருக்கிறது. அவர்கள் உடை –பெண்கள் கைலியும் நீளமான மேல்சட்டையும். .. பெரும்பாலும் புர்க்கா அணிவதில்லை.
பேட்டை வாழ் முசுலீம்கள் ஓரளவு வசதி படைத்தவர்கள்,.வெள்ளை துப்பட்டா அணிவார்கள். பேட்டை பற்றி பின் விரிவாக எழுதுகிறேன்
நகரப் பேருந்தகளில் ஊர்ப்பலகை தெளிவில்லாமல் இருக்கும். திருநெல்வேலி என்று பெரிதாக எழுதி ஓரத்தில் சிறிதாக ஜங்/ டவுன் என்று இருக்கும் .. அண்மையில் நான் நெல்லை சென்றபோது இது மாற்றப்பட்டு பெரிதாக் டவுன்/ ஜங்சன் என்று தெளிவாக எழுதப்படிருந்தது
சந்திப்புப் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எல்லாம் ஒலி எழுப்பும் எரிச்சலூட்டும் வழக்கத்தை ஒரு ஆட்சியர் வந்து மாற்றினார்,
.நெல்லை முதல் பகுதியை இத்துடன் நிறைவு செய்ய எண்ணுகிறேன்

சென்ற பகுதி பற்றி கருத்துக்கள் பாராட்டுகள தெரிவித்த அஜ்மல்; நெய்வேலி ராஜா இதயத் பாப்டி சாஜித் சகோதரிகள் மெஹராஜ் ஜோதி சுராஜுக்கு நன்றி ,
Ajmal Khan இளமை அனுபவங்கள் , இனிமையான வர்ணனை, மிகவும் ரசித்தேன்.
நெய்வேலி ராஜா simply amazing writing
.மெஹராஜ் அக்கா அத்தாவின் நகைச்சுவை உணர்வை (இடுக்கனிலும் நகைச்சவை ) நினவு கூர்ந்தது – பிள்ளை பெற்று அழைத்துச் செல்கையில் மாமியார்  கோழி அரிசிக்குப் பணம் கேட்டதற்கு அத்தா கோழிக்கு அரிசி கொடுக்கச்சொன்னது
ஜோதி அக்கா நம் பரம்பரையின் அறிவு மூலம் அத்தம்மா என்று கண்டறிந்து பெருமிதம் கொண்டது .
சுராஜுக்கு பொள்ளாச்சி வீட்டில் ஒரு நாளாவது தங்கி அந்த நிலவுகள் கூடி தரையில் வாழ்ந்த பொற்கால நினைவுகளை அசை போட ஆசை. எண்ணத்தில் உறுதியும் இறைவன் நாட்டமும் இருந்தால் எதுவும் நடக்கும் .ஆசைகள் நிறைவேற துவா,வும் வாழ்த்துக்களும்.
(ஷஹா)ஹமீதா :மிக நன்றாக இருந்தது . முத்து சின்னம்மாவுக்குப் படித்துக் காண்பித்தேன். மிகவும் ரசித்துக் கேட்டது 

இ(க)டைச்செருகல்
ஒரு சிறிய கதை .ஒரு ஊரில் ஒரு சின்ன சிக்கனமான குடும்பம் கணவன் மனைவி இரண்டே பேர். தினமும் மூன்று தோசை சுட்டு காலை சிற்றுண்டியை முடித்துக்கொள்வர்கள் .ஒருநாள் காலை உணவு நேரத்தில் ஒரு விருந்தாளி வந்து விட திகைத்துப்போனர்கள்..சிறிது சிந்தனை செய்த கணவன் சொன்னார் .” முதலில் எனக்கும் விருந்தாளிக்கும் ஆளுக்கு ஒரு தோசை வை..எனக்கு இரண்டாவது தோசை வைக்கவா என்று கேள் “
அதன்படி மனைவி கணவனிடம் இன்னொரு தோசை வேண்டுமா என்று கேட்க அவர் “ சே சே ஒரு தோசைக்கு மேல் மனுஷன் தின்பானா ? நான் என்ன மனுசனா மாடா அண்ணாச்சிக்குப் போடு “ என்றார் . விருந்தாளி அயய்யோ எனக்கு வேண்டம் வயிறு ரொம்பி விட்டது என்றவாறு எழுந்து விட்டார். மூன்றாவது தோசையை மனைவி சாப்பிட நிம்மதிப்பெருமூச்சு விட்டார்கள் கணவனும் மனைவியும்  
இறைவன் அருளால்
                     நெல்லைப் பயணம்
தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.bloogspot.com


No comments:

Post a Comment