கேரளத்தில் இரண்டு ஆண்டு பணிக்குப்பின் தமிழ்நாடு .திருச்சி புத்தூர்
கிளையில் பணி.
திரூரிலிருந்து வீட்டுச் சாமான்களை திருச்சி இப்ராகிம் ஸ்டோர்சுக்கு
அனுப்பி விட்டு அத்தாவும் நானும் அங்கு போய் சில நாட்கள் தங்கினோம்.
குட்டை அம்பலம் என்று அழைக்கப்பட்ட முஹமதலி அண்ணன் அங்கு மேலாளர்.
இரண்டு பெஞ்சுகளை ஒன்றாகப்போட்டுத்தூங்குவார்.
தூங்கும்போது ஸ்டீரியோ போனிக் முறையில் பலத்த ஒலி வரும்.பெரிய குப்பி மகன்
சாகுல சேகு பெரியாத்த மகன் ஷேக் அப்துல்லா,அப்துல்
காதர் சச்சா மகன் பெரோஸ் கான் அங்கு
பணியில் இருந்தார்கள் ..
தரகர்கள் மூலம் வீடு பார்க்க்கத்துவங்கினேன். அதில் ஒரு புது அனுபவம்,
படிப்பினை. வீடு பார்த்து மனதுக்குப் பிடித்து வாடகை, முன்பணமெல்லாம் பேசி
முடித்தபின் பேர் கேட்பார்கள்..என் பெயரைச் சொன்னாவுடனே முகத்தில் அடித்தால் போல்
முசுலிம்களுக்கு வீடு கிடையாது என்று சொல்லி விடுவார்கள். அதற்குப்பின் நான் வீடு
பார்க்கப் போகும்போது முதலில் நான் முசுலிம் என்று சொல்லித்தான் பேசத்
துவங்குவேன்.
கண்டோன்மென்ட் பகுதியில் ஒரு வீடு பிடித்தேன். சிறிய வீடுதான்
ஆனால் தண்ணீர் , குடிநீர் எல்லாம் வசதியாக
இருந்தது . பேருந்து நிலையம்,,தொடரி சந்திப்பு, பேருந்து நிறுத்தம், வங்கி
எல்லாவற்றிற்கும் அருகில் இருந்தது
உரிமையாளர் அருகிலேயே குடியிருந்தார் .நவீன (உலர்?) சலவையகம்
வைத்திருந்தார். துணிகள் துவைப்பது வீட்டில்தான். வேவையாட்கள் வராவிட்டால் அவரே
வரிந்துகட்டிக்கொண்டு வேலையில் இறங்கி விடுவார். ஒரு மகன் இரண்டு மகள்கள்
எல்லோரும் நன்றாகப் பழகுவார்கள்
வீட்டிற்கு அருகிலேயே காம்பியன் என்ற புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியன்
பள்ளி இருந்தது. அங்கு சேர்க்கை முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள்.. காவல் துறை
அதிகாரி ஜனாப் ஜப்பார் (செல்வி) செவன்த்
டே அட்வெண்டிஸ் என்ற பள்ளியில் பைசல் பாப்டியை சேர்க்க உதவினார். மிக நல்ல பள்ளி .
இப்ராகிம் ஸ்டோர்சில் தங்கியிருக்கையில் ஜனாப் அபூபக்க்கர் (ஓட்டை
கிளாஸ்) வந்து அத்தவுடன் அடிக்கடி ஞானம் ,
தத்துவம் பேசிக்கொண்டிருப்பார். ஒரு நாள் அவரிடம் இது மாதிரியான பெச்சுக்களால்
என்ன பயன் என்று கேட்டேன். நீ சின்ன வயசு. இப்புப்ரியது. ஐம்பது அறுபது
வயதுக்குமேல் புரியும் என்றார். ஐம்பது அறுபது எல்லாம் கடந்து போய்விட்டது ஞானமும்
தத்துவமும் புரிந்ததா இல்லையா என்றே புரியவில்லை இது போன்ற ஒரு கருத்தைத்தான்
மைத்துனர் அஜ்மீர் அலியும் அத்தம்மாவைப்பற்றி எழுதும்போது அகமியம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்
வீடு பிடித்து, பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாகிவிட்டது..நல்ல
பணிபெண்ணும் வீட்டு வேலைக்குக் கிடைத்தது .
வங்கிக்கிளையில் பெண்கள் பலர் பணியாற்றினார். ஒரு அதிகாரி (சுந்தரி )
இரண்டு சிறப்பு உதவியாளர்கள் ,நான்கு எழுத்தர்கள் பெண்கள். எல்லோருமே மிக
இயல்பாகப் பழகுவார்கள் .சுந்தரி தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் என்னிடம்
கொட்டிவிடுவார் . மேலாளர் அவர் சொல்வதற்கெல்லாம்- சரியோ தவறோ மற்றவர்கள் குறிப்பாக
அதிகாரிகளான சுந்தரியும் நானும் அடங்கிப் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் .
அவருக்கும் எனக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படும்
தவ்லத் (ஷேக் அப்துல்லாவின் சகோதரி ), அமானுல்லா திருச்சிக்கு அருகில்
இருந்தார்கள் .அமானுல்லா தன்னை தவ்லத் புருஷன் என்ரூ அறிமுகம் செய்து கொள்வார்
.ஈனா உறவினர் வீட்டில் பெண் எடுத்ததில் மிகப்பெருமை கொள்வார்
திருச்சிக்கு நான் மாற்றலாகி வந்த நேரத்தில்தான் தில்லியில் ஆட்சி
மற்றம் ஏற்பட்டு , திரு மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
மந்திரம் போட்டது போல் சில மாற்றங்கள் நிகழ்ந்தன, குறிப்பாக சீனி. குடும்ப
அட்டைக்குத் தவிர வேறு எங்கும்
கிடைக்காமல் இருந்தது எல்லாக்கடைகளிலும் குடும்ப அட்டைக்கு கிடைக்கும் அதே
விலைக்கு தங்கு தடையின்றிக் கிடைத்தது .
இது போன்ற ஓரு நல்ல மாற்றம் அதற்குப்பின் நடந்த நினவு இல்லை. நல்லதுதான் நம்
நாட்டுக்கு ஒத்து வராதே. விரைவில் திரு மொரார்ஜி பதவியிறக்கம் செய்யப்பட்டார்
திருச்சி பொதுவாக வாழ்வதற்கு நல்ல ஊர். தமிழ் நாட்டின் மையப்பகுதியில்
அமைந்துள்ளது. எனவே தமிழ் நாட்டின் எந்தப்பகுதிக்கும் அண்டை மாநிலங்களுக்கும்
எளிதில் போய்விடலாம் ,
திரு எம் ஜி ஆர் முதல்வராய்
இருந்தபோது திருச்சியை மாநிலத்தலை நகராக்க ஒரு நல்ல முயற்சி செய்தார் . ஏனோ அது
நிறைவேறவில்லை.
திருச்சிக்கென்று சிறப்புகள் நிறைய உண்டு. மலைக்கோட்டை, மெயின் கார்ட்
கேட் பி ஹெச் ஈ எல், பாய்லர் தொழிற்சாலை,
பொன்மலை ரயில் தொழிற்சசாலை, வானொலி நிலையம
ஆர் ஈ சீ (இப்போது என் ஐ ஈ டி ) ஜமால்
முகமது கல்வி நிறுவனங்கள் , தூய ஜோசப் கல்லூரி, நத்தர்ஷா தர்கா , தெப்பக்குளம்
,ஸ்ரீரங்கம் உறையூர் ஜிகர்தண்டா, கூடையில்
விற்கும் நெய்பூந்தி இன்னும் பலப்பல
நாகரீக உடைகளையும் பாஷன்களையும் அறிமுகம் செய்வதில் திருச்சி
முன்னணியில் இருப்பதாய்ச் சொல்வார்கள்
அருகில் உள்ள முக்கொம்பு, கல்லணை நல்ல சிற்றுலாத்தலங்கள்..
எல்லா இடங்களுக்கும் நகரப்பேருந்துகள் நிறைய இருக்கும். எனவே
நகருக்குள் பயணம் எளிதாக இருக்கும்.
வீட்டுக்கு அருகில் இருந்த
மும்தாஜ் ஹோட்டல் என்னும் சிறிய உணவு விடுதியில் பிரியாணி, சமோசா ,பரோட்டா
குருமா எல்லாம் நல்ல சுவையாக இருக்கும். .மெயின் கார்ட் கேட் பகுதியில் மைகேல் ஐஸ்
கிரீம் மிகச்சுவையாகவும் விலை மலிவாகவும் இருக்கும்.
மிகச்சிறப்பாகப் பேசப்படும் குளத்தூரார்(அசைவ) உணவு விடுதியில் இருமுறை
சாப்பிட்டுப்பார்த்த்தேன். அப்படி ஒன்றும் சிறப்புத் தெரியவில்லை .பொதுவாக
திருச்சியில் நல்ல கறி கிடைக்கும். அதுவும் மாலையில்கூட கிடைக்கும்..
பிராய்லர் கோழி அப்போதுதான் அறிமுகமாகி பரவிக்கொண்டிருந்தது.
திருச்சி சந்திப்பில் ஒரு உணவு விடுதியில் விலைப்பட்டியலில் பீரங்கி
தோசை என்ற பேரைப் பார்த்து விட்டு நான்கு கொண்டு வரச்சொன்னேன். நல்லவேளை, உணவு
விடுதிப்பணியாளர் முதலில் ஓன்று கொண்டு வருகிறேன் அதை நான்கு பேரும் சாப்பிட்டு முடிப்பதே சிரமம். பிறகு அடுத்ததை
வாங்கிகொள்ளலாம் என்று சொல்லி ஒரு பீரங்கி தோசையையும் (வேறு யாருக்கோ கொண்டு போனது) காண்பித்தார்.
அவர் சொன்னது உண்மைதான். ஒரு ஐந்தாறு பேர் வயிறார சாப்பிடும் அளவுக்கு பெரிதாக
இருந்தது. .அதோடு பீரங்கி தோசை ஆ.சையை விட்டு விட்டோம்,
அத்தா திருப்பத்தூர் பள்ளிவாசல் தலைவராக இருந்து , மலேசியா சிங்கபூர்
,பாங்காக் பயணம் போய் பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக ஒரு நல்ல தொகை பெற்று வந்தது .
அந்தப்பயணம் போய் திரும்பி வந்து சில நாட்கள் திருச்சியில் தங்கிச் சென்றது
பள்ளிவாசல் பணம் அத்தாவின் பொறுப்பில் இருக்கும்போது உறவினர்கள்
பலரும் ஆயிரம் கொடு. ஐயாயிரம் கொடு என்று நச்சரித்தது எரிச்சலாக இருந்தது .
கரீம் அண்ணன் ஒரு நாள் மாலை வங்கிக்கு வந்தது. இரவு வீட்டுக்கு வந்து விட்டு
சென்னை போனது
ரஹீம் அண்ணன் அலுவல் வேலையாக திருச்சி வந்து ஒரு விடுத்யில் தங்கி
இருந்தது . ஒரு நாள் வீட்டுக்கு வந்து விட்டுப் போனது.
மெஹராஜ் அக்கா உறவினர் பலருடன் திருமண அழைப்ப கொடுக்க வந்தது. அப்போது
வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன்..
இப்ராஹீம் ஸ்டோர்ஸில் பணியாற்றிய சாகுல், பெரோஸ்கான் அவ்வப்போது வந்து
போவார்கள்.
ஒரு நாள் நாகூர் தர்காவுக்குப்போனோம்...நுழையும் இடத்தில் சிலர்
அமர்ந்திருந்தார்கள். நாகூர ஆண்டவருக்கு உங்கள் பெயரில் நூறு ரூபாய்
எழுதியிருக்கிறது பணத்தை எடுங்கள் என்றார்கள். அதென்ன கணக்கு நூறு ரூபாய்
யாரைக்கேட்டு எழுதினீர்கள் நான் நீங்கள் கேட்டதற்காக ஐந்து ரூபாய் தருகிறேன்
என்றேன். ஐந்து ரூபாஎல்லாம் வாங்குவது இல்லை என்றார்கள். சரி விட்டு விடுங்கள்
என்று அந்த இடத்திலிருந்து நகரப் போனேன். சரி உங்களை மனம் நோகச்செய்ய
விரும்பவில்லை என்று சொல்லி ஐந்து ரூபாயை பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டார்கள
தர்காவில் பல இடங்களில் நாகூர் ஆண்டவருக்கு படியில் ஒன்னேகால் ரூபாய்
வையுங்கள் என்பார்கள் .யாராவது ஏமாந்து வைத்தால் அவர்கள் தலையை மயிலிறகால் தடவி விட்டு பணத்தை எடுத்து சட்டைப்பையில்
போட்டுக்கொள்வார்கள்
இது போன்ற செயல்கள் தர்க்காவில் அடங்கியிருக்கும் அவுலியாக்களின்
கண்ணியத்தைக் குறைக்கின்றன .
கண்டோன்மெண்டில் இருக்கும்போதுதான் முதன் முதலில் மிக்சி வாங்கினோம்
கண்டோன்மென்ட் வீடு முழுக்க முழுக்க நகராட்சி வழங்கும் நீரை நம்பியே
இருந்ததால் தண்ணீர் பிரச்சனை உருவானது எனவே உறையூர் பகுதியில் ஒரு வீடு பார்த்துக்
குடியேறினோம்.
மாடியில் எங்கள் வீடு. கீழே உரிமையாளர் வீடு. உரிமையாளர்
ஷண்முகத்தேவர் , அவர் மனைவி நளாயினி பெண்மக்கள் ரமா ராஜி , ஆண்மக்கள் வேலாயுதம்,
பாஸ்கர் பாலு அனைவரும் நெருங்கிய உறவினர்
போல் மிக அன்பாகப் பழகுவார்கள்
அவர்கள் வீட்டில் என்ன சிறப்பு உணவு செய்தாலும் எங்களுக்குக்
கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். எங்களுக்காக ஹலால் கோழி, கறி வாங்குவார்கள்.
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள். அதற்கு ஈடு கட்டுவது
போல் புரட்டாசிக்கு முதல் நாள் அசைவத்தில் என்ன என்ன வகைகள் சமைக்க முடியுமோ
அவ்வவளவும் சமைத்து உண்பதொடு எங்களுக்கும் அவ்வளவும் கொடுத்து விடுவார்கள்.
கடல் மீன் சாப்பிட மாட்டார்கள். கூடிய மட்டும் உயிரோடு இருக்கும்
நாட்டு மீன் வாங்கி மண் சட்டியில் சமைத்து
அடுத்த நாள்தான் சாப்பிடுவார்கள்
ஒரு நாள் பிரியாணி செய்து அவர்களுகுக் கொடுத்து விட்டோம். ஜோதி அள்ளி
அள்ளி வைத்ததைப் பார்த்த பாப்டி “அம்மா நமக்கும் கொஞ்சம் இருக்கட்டும்” என்று
சொன்னது
தேவர் வீட்டில் இருக்கையில் ஷஹா அமீதா வந்து சில தினங்கள்
தங்கிப்போனார்கள். முக்கொம்பு, கல்லணை போய் வந்தோம்.
எஸ் ஐ எஸ் அண்ணன் ஒரு முறை வந்து எதோ ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு
விடுத்துச் சென்றார்.
அத்தாவுடன் தாவன்னாப்பெரியத்தா வந்து போனார்கள்
கண்டோன்மென்ட் வீடு போல் இந்த வீட்டில் பணிப்பெண் அமையவில்லை . ஒரு
பெண் மிக நன்றாக வேலை செய்தார். தரையை.த துடைத்தால் கண்ணாடி போல் பளபளக்கும் அவர் நகரசுத்தித் தொழிலாளி என்பதால் வீட்டு
உரிமையாளர் குடும்பம் அன்புடன்
எதிர்ப்புத் தெரிவித்தனால் நிறுத்தி விட்டோம்.
ரோசப்புப் போட்ட ஒரு அழகிய
உறுதியான சாப்பாட்டு மேசை தேவர் வீட்டில் இருக்கும்போது வாங்கினோம்.
இன்னும் கூட அது பயன்பாட்டில் இருக்கிறது.
பிள்ளைகளை வீட்டுக்கு அருகில் உள்ளா ஒரு பள்ளியில் சேர்த்தோம்.
அருகில் மதரசா இருந்ததால் ஓதவும் போய் வந்தார்கள்
திருச்சியில் பணியாற்றியபோது பணி நிமித்தம் பேரளம், பணிக்கம்பட்டி, தேவூர் தெடாவூர் வல்லம்
கிளைகளுக்குப போய் வந்தேன்
.தேவூர் கிளைக்கு அருகில் உள்ள நாகப்பட்டினத்தில் ஒரு விடுதியில்
தங்கி இருந்தேன். மதிய உணவுக்கு ஒரு விடுதிக்குப் போனேன். .மீன் குழம்பு, மீன்
பொறியல், ஒரு சின்னத்தட்டு நிறைய சிறிய இறால் பொறியல் எல்லாம் மிகக்குறைந்த
விலையில் சாப்பிட்டேன். பணம் குறைவாக வாங்கி விட்டார்களா என்ற ஐயத்தில் அடுத்த
நாளும் அதே உணவு விடுதிக்குப்போய் அதே உணவு சாப்பிட்டேன். அதே தொகைதான்
கேட்டார்கள் .
தெடாவூர். கிளை சேலம் ஆத்தூருக்கு அருகில் இருக்கிறது. அங்குள்ள
முசுலீம்கள் பலர் நெற்றியில் பொட்டு பச்சை குத்தியிருந்தது பார்த்து வியப்பாக
இருந்தது
திருச்சியில் வெள்ளிகிழமை கூட
தொழுகைக்குப் போன நினைவில்லை..நோன்பு விடாமல் வைப்போம்.
இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்,
சென்ற பகுதி பற்றி கருத்து, பாராட்டுத் தெரிவித்த பாப்டிக்கு நன்றி.
இணைய தளமும் , தரைவழித் தொலைபேசியும் ஒரு வாரமாக சரியாக இயங்கவில்லை.
எனவே வேறு யாரும் கருத்துக்கள் தெரிவித்தார்களா என்று தெரியவில்லை
.தெரிவித்திருந்தால் நன்றி
இ(க(டைச் செருகல் :
திருச்சி பற்றி இரு நினைவுகள்
நாங்கள் காரைக்குடியில் இருக்கும்போது ஜனாப் ஜாபர் அலி அண்ணன்
திருமணம் திருச்சியில் நடைபெற்றது. பீயன்னா மூனா மாமா எம் பீ சச்சாவுடன் நான்
முதல் நாளே போய் விட்டேன். இப்போது மிக முக்கியக் குடியிருப்பு /வணிகப் பகுதியாக
விளங்கும் தில்லை நகர் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்தது . திருப்பத்தூர் மக்கள்
பிரியாணி சுவைத்தது அந்தத் திருமணத்தில்தான் .மாவன்னாவாக இருக்குமோ என்று நக்கல்
பேச்சு. வேறு .
அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன் காத்தூன் அக்கா, சரிவு மாமாவின்
பேத்தி திருமணத்திற்காக ஜோதியும் நானும் திருச்சி போய் வங்கி விடுமுறை இல்லத்தில் தங்கினோம்.. ஆட்டோ ஓட்டுனர்களும் உணவு
விடுதியினரும் மிகக் கனிவாகப் பழகியது போல் தோன்றியது.
ஸ்ரீரங்கத்தில் கோயிலுக்கு மிக அருகில் உள்ள ஒரு தங்கும் விடுதியின்
ஐந்தாறு அறைகளை விடுமுறை இல்லமாக பகுத்திருந்தார்கள் .பொதுவாக வங்கி விடுமறை
இல்லத்தில் தங்கும்போது we
will feel totally at home . அதற்கு நேர் மாறாக இருந்தது இந்த இல்லம். எங்கு பார்த்தாலும் அறைகளில்
கூட சாமி படங்கள், வழிபாட்டு நேரம் பற்றிய
அறிவிப்புகள் ..அருகில் மசாலா ,பூண்டு வெங்காயம் சேர்க்காமல் சமைக்கும் உணவு
விடுதி . கோவிலுக்கு வருபவர்களுக்காகவே உருவாக்கியது போல் இருந்தது .மொத்தத்தில் we felt like odd man out
இறைவன் அருளால் பயணம்
தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blog.com
. . ,
No comments:
Post a Comment