Friday, 23 September 2016

திரூர்(கேரளா) 29. வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்



“சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடன் -----“
என்று பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி
கடவுளின் சொந்த நாடு (God’s own country ) என்று சிறப்பாகப் பேசப்படும் கேரளாவுக்கு பாரதியார் போனதாய் நான் படித்ததில்லை .
பாரதிக்குக் கிடைக்காத கேரள வாழ்க்கை எனக்கு வாய்த்தது
திருநெல்வேலி நகர்க்கிளையிலிருந்து பதவி உயர்வு. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் கல்பகஞ்சேரி கிளைக்கு மாறுதல்
நெல்லையிலிருந்து தொடரியில் கொல்லம் போய் அங்கிருந்து இன்னொரு தொடரியில் திரூர் போய்ச் சேர்த்தேன்..அங்கொரு விடுதியில் தங்கி கல்பகஞ்சேரி கிளைக்குப் போனேன்.
கிளைக்குப் போய்ச் சேர்ந்த சில நாட்களில் மேலாளர் விடுப்பில் போனதால் பொறுப்பு மேலாளராகப் பணி புரிந்தேன்., வெளி நாட்டிலிருந்து திரும்பிய வாடிக்கையாளர் ஒருவர் ஒரு செய்தித்தாளில் பொதிந்த ஒரு பெரிய பொட்டலத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். உள்ளே வெளி நாட்டுத்துணி, புடவை, நறுமணம், ஜம் ஜம் நீர் என பல பொருட்கள் . ஜம்  ஜம் நீர் தவிர மற்றவற்றை அவரிடமே திருப்பிக்கொடுத்து விட்டேன்,
கேரளாவுக்கே உரிய இயற்கை எழில், அழகிய பெண்கள் போக மலப்புரப் பகுதிக்கு இன்னும் சில சிறப்புக்கள உண்டு. நிறைய வெளி நாடு வாழ் மக்கள். ,கல்வியறிவு சற்றுக்குறைவு, மாப்பிளா முசுலிம்கள். விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் பங்கு  இவை அடிப்படைச் சிறப்புக்கள் 
கிளைக்கு அருகில் வீடு பார்க்கத் துவங்கினேன் . சில பல வீடுகளைப் போய்ப் பார்த்தேன். பெரும்பாலும் தோட்ட வீடுகள். ஆயிரம் தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு வீடு இருக்கும். கழிப்பறை இருக்காது. மேலும் மிக உயரமான ,ஆழமான மேடு பள்ளங்கள் நிறைந்திருக்கும் சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகத் தோன்றவில்லை , மேலும் பைசலை பள்ளியில் சேர்க்க வேண்டிய வயது வந்து விட்டது
எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து திரூரில் வீடு பார்க்க முயற்சித்தேன். இதற்கிடையில் குருவாயூர் அருகில் உள்ள எடப்பால் என்ற கிளையில் மேலாளர் விடுப்பில் போவதால் அங்கு போய் பொறுப்பு ஏற்கும்படி பணிக்கப்பட்டேன், ஒரு மாத காலத்திற்கு மேல் திரூர் விடுதியில் தங்கி  அங்கு போய்வந்தேன்.
திரூரில் கே என் எஸ் ஹாஜியார் என்ற ஒரு பெரிய நிறுவனம் கயிறு விற்பனையில் ஈடு பட்டிருந்தது .அதன் உரிமையாளர், பெரும்பாலான பணியாளர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். .திரூரில் இருந்த இரண்டாண்டு காலமும் மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள்.
அவர்கள் மூலம் ஒரு வீடு பார்த்தேன் .நல்ல வீடு, வாழப்புள்ளி ஹவுஸ் என்று பெயர், பூக்கொயில் பசார் என்ற பகுதியில் வீடு. வீட்டுக்குள் கழிவறை, தண்ணீர் மோட்டார், எல்லாம் இருந்தது .ஒரு அறையை உரிமையாளர் பூட்டி வைத்திருந்தார். அவர் அருகிலுள்ள ஊரில் அஞ்சலக அதிகாரியாக இருந்தார் .வீடு பிடித்ததும் விடுப்பு எடுத்துக்கொண்டு நெல்லை பேட்டை போனேன்..எதிர்பாராத அம்மா மறைவு. பின் எல்லோரும் திருப்பத்தூர் போனோம் .அங்கிருந்து திரூர் பயணம்
அத்தா எங்களுடன் திரூர் வந்தது . பேட்டையில் எங்கள் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த லக்ஷ்மி, மைத்துனர் சம்சு இவர்களும் வந்தார்கள்
வீட்டு உரிமையாளருக்கு இவ்வளவு பேர் வந்தது பிடிக்கவில்லை. வீடு பார்க்க அழகாக இருந்தாலும் மிகவும்  வலுவற்றதாக இருந்தது. சற்று வேகமாக நடந்தால் தரை அமுங்குவது போல் இருக்கும்..ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறை உரிமையாளர் வீட்டுக்குள் நுழைவார் .அவர் தொல்லை பொறுக்காமல் வேறு வீடு பார்க்க வேண்டியதாயிற்று
அந்த வீட்டுக்கு எதிரில் இருந்த பாப்பு குடும்பம் முழுதும் மிகவும் தோழமையுடன் பழகுவார்கள். நிறைய பிள்ளைகள் பெற்ற பாப்புவின் மனைவியின் உடலமைப்பு ஒரு இளம்பெண் போல் இருக்கும். முகத்தைப் பார்த்தால்தான் வயது தெரியும்.
பாப்புவின் மகள் பானு ஜோதியின் நெருங்கிய தோழி. ஜோதிக்கு மலையாளம் தெரியாது பானுவுக்கு தமிழ் தெரியாது. இருவரும் மிக இயல்பாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள் பாப்புவின் பிள்ளைகள் எல்லாம் மிக அழகாக இருப்பார்கள், பாப்புவின் மகன் கரீம் அவர்கள் வீட்டில் எந்த வேலையும் செய்யமாட்டன். நாங்கள் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வான்
வீடு மாறிய பின்பும் இந்த நட்பு தொடர்ந்தது நாங்கள் போன இரண்டாவது வீடு முக்ரி வீடு.. முகரி- பள்ளி வாசல் மோதினார் ) இது சற்றுப் பழைய வீடு. இங்கிருக்கும்போதுதான் அம்மாவின் முதல் ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது .பலரும் வெளியூர்களில் இருந்து வந்திருந்தார்கள்.. சமையலுக்கு ஒரே ஒருவர் வந்து மிகச் சுவையான பிரியாணி செய்து பரிமாறி விட்டும் போனார்..பெரிய தொகை எதுவும் கேட்கவில்லை. காய்கறி வாங்க கருத்தக்கிளி அண்ணன் இன்னும் சிலரோடு நான் போயிருந்தேன். காய்கறிக்கூடையை வீட்டுக்குக் கொண்டுவர சுமை தூக்கிகள் கேட்ட கூலி காய்கறி விலைக்குமேல் இருந்ததால் நாங்களே தூக்கிகொண்டு வந்தோம். முக்ரி வீட்டில் கிணறு வற்றிவிட்டதால் முசலியார் வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். (முசலியார்- அசரத்)
வீட்டைச்சுற்றி பாக்கு மரங்கள் இருக்கும். வெற்றிலைக்கொடிகள் பாக்கு மரத்தில் படர்ந்து வளரும்.,மரத்திலிருந்து பறித்த பச்சைபாக்கை வாயில் போட்டால் ஒருவித மயக்கம் உண்டாகும்.
பைசல் அங்குதான் பள்ளியில் சேர்ந்தான் ஒரு கிறித்தவபெண் துறவிகள் நடத்தும் பள்ளி. எப்போது நாங்கள் பள்ளிக்குப் போனாலும் விருந்தினர் போல் அன்பாக உபசரிப்பார்கள். நான் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருந்தேன். அத்தாவும் மைத்துனர் சக்ரவர்த்தியும் பைசலை பள்ளியில் சேர்க்கப்போனர்கள . பள்ளியில் சேர்த்து விட்டு ஐயாவைப்பார்த்து பேரன் அழுக, பேரனைப்பார்த்து ஐயா கண்கலங்க ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார்கள்
தினமும் பைசலை பள்ளிக்கு அழைத்துச்சென்று. கூட்டிக்கொண்டு வருவது பணிப்பெண் லக்ஷ்மி..
பள்ளியில் ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு பரிசும் வாங்கினான் பைசல் . இசுலாமியர்கள் நிறைந்த பகுதி என்பதால் பள்ளியில் சிறுநீர் கழிக்கும் இடம் கூட நிறையத் தண்ணீருடன் சுத்தமாக இருக்கும்.
சிறு குழந்தையாக இருந்த பாப்டி எப்போதும் தரையில் உட்காராது, ஏதாவது உயரத்தில்தான் உட்காரும். பூனையைக் காண்பித்தால்தான் ஒழுங்காக சாப்பிடும்.
பலமாநிலங்களைச் சேர்ந்த பல இடங்களில் வாழ்ந்து, பணியாற்றிய எனக்கு கேரளக் கலாச்சாரம் மிகவும் மறுபட்டதாகத் தெரிந்தது.
குறிப்பாகத் திருமணம். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பெண்ணுக்கு இரண்டு முறை திருமணம் முடிந்து முறிந்தது அறிந்து  அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன்.
திருமணமாகி உடனே பிள்ளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் ஓரிரு ஆண்டுகள் டேட்டிங் போல் சேர்ந்து வாழ்வார்கள். மனம் ஒத்துப்போகாவிட்டால்  உடனே மண முறிவு.
மண முறிவு என்பது பெரும்பாலும் பெண் தரப்பில் இருந்துதான் ஏற்படுகிறது
ஆண்கள் வெளிநாடு போய்விடுவதால் பெண்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். வெளியில் போகும்போது புடவை , வீட்டில் கைலி .மாலை ,இரவில் வெளியே போவது இல்லை
கல்வியறிவு அதிகம் இல்லாததால் வெளி நாடுகளில் பெரும்பாலும் கூலித் தொழிலாளி போன்ற பணிகளுக்குத்தான் ஆண்கள் போகின்றார்கள். ஒரு மாத விடுமுறையில் வந்து சில நாட்களில் பெண் தேடத்துவங்கி பெண் கிடைத்து திருமணம் முடிந்து சில நாட்களில் விடுமுறை முடிந்து விடும். திரும்ப வெளி நாடு போகவேண்டும் இதனால் நிறைய கலாச்சார சீர்கேடுக்ள, ஒழுக்கக்கேடுகள்
விமானப்போக்குவரத்து பம்பாயிலிருந்துதான். அங்கிருந்து தொடரியில் கள்ளிக்கோட்டை வந்து அங்கிருந்து வாடகை மகிழுந்தில் பந்தாவாக ஊருக்கு வருவார்கள். குடும்பத்துடன் விலை உயர்ந்த உணவு விடுதிகளுக்குப் போவார்கள். நோய் எதுவுமே இல்லாவிட்டாலும் மருத்துவரிடம் போய் வருவார்கள்.
இப்படி தாராளமாக செலவழித்து விட்டு, விடுமுறை முடிந்து விமானத்தைபிடிக்க பம்பாய் போவதற்கு கையில் பணம் இருக்காது .கைகடிகாரம், மோதிரம் எதையாவது விற்று, அடகு வைத்துப் பணம் புரட்டுவார்கள
ஜூன் பிறந்துவிட்டால் குழாயைத் திறந்து விட்டது போல் மழை. கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டே இருக்கும்.  மழை சிறிது நேரம் நின்றால் தண்ணீர் எங்கும் தேங்கி நிற்காமல் வடிந்து விடும்
பத்ரி என்பது அந்தபகுதியின் சிறப்பு உணவு..அரிசி மாவில் எண்ணெய் சிறிதும் இல்லாமல் வரையோட்டில்(மண் பானையின் உடைந்த பகுதி) வைத்துச் சுடுவார்கள். எட்டு முழ வேட்டி அளவுக்கு மெலிதாக இருக்கும். இதற்கு பக்க உணவு கோழிக்குழம்பு .நல்ல பசியில் இருந்தால் பதினைந்து இருபது பத்ரி எளிதாகச் சாப்பிடலாம்
உணவு விடுதிகளில் சீரகத் தண்ணீர் குடிக்கக் கொடுப்பார்கள்
அந்தப்பகுதியில் நடக்கும் திருமணம் போன்ற எல்லா விழாக்களுக்கும் எங்களை வற்புறுத்தி விருந்துக்கு அழைத்துச் செல்வார்கள். நெய்ச்சோறு, பிரியாணி மிக்ச்சுவையாக இருக்கும் . மாட்டுக்கறி என்று தெரிந்தால் தவிர்த்து விடுவோம்.
பொருளாதார நிலைக்கு ஏற்ப ஆடு  கோழி, மாடு சமைப்பார்கள்.  சில விழாக்களில் மூன்றுமே சமைத்து வரும் விருந்தினரின் தகுதிக்கேற்ப பரிமாறும் இழி செயலும் நடக்கும்
திருமண அழைப்பிதல் அடிக்கும் பழக்கம் இல்லை. நேரில் போய் சொல்வது மட்டுமே. திருமணத்தில் பெண் யார், மணமகன் யார் திருமணம் எப்போது  என்றெல்லாம் பார்க்கும் வழக்கம் இல்லை. வந்தோமா  சாப்பிட்டோமா போனோமா என்றிருப்பார்கள். . மணமகன் வீட்டில் இருந்து மொத்தம் ஒரு பத்துப் பேருக்குமேல் வரமாட்டார்கள் . மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே மண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்     
மத்தி மீன் மிகப்புதிதாகக் கிடைக்கும். தினமும் காலையில் பணிபெண் சொல்லாமலே வாங்கி வரும் ஒரு ரூபாய்க்கு பத்துப்பதினைந்து கிடைக்கும். நல்ல சுவையாக இருக்கும். உடல் நலத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு மிகவும் உகந்தது என்பார்கள்
மீன் கிடைக்கும் அளவுக்கு புதிய காய்கறிகள் கிடைக்காது. கீரை முதல் முருங்கைகாய் வரை எல்லாம் கிலோ கணக்கில்தான் விற்பார்கள். பேரம் பேசும் பழக்கம் கிடையாது கடைக்கு யாரும் பை கொண்டு போக மாட்டார்கள் . எது வாங்கினாலும் செய்தித்தாளில் பொதிந்து கொடுப்பார்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடக்கும்,அத்தா  சம்சு ,நான் மூவரும் போவோம். .விலை குறைத்துக் கேட்ட்டால் உடனே “நீங்கள் பாண்டி நாடா ?” என்று கேட்பார்கள் .
பழக்கமில்லாததால் மாட்டுக்கறிக் கடையைப் பார்த்தாலே வயிற்றைப் புரட்டும். அதிலும் எருமை மாடு – பார்க்கவே அச்சமாக இருக்கும்.  அங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு அதுதான் உடலுக்கு நல்லது என்கிறார்கள். அது போல் ஒலைப்பாய்தான் படுக்கப் பயன்படுத்துவார்கள் . கோரைப்பாய் வாதம் உண்டாக்கும் என்று தவிர்த்து விடுவார்கள்
சந்தையில் ஓடுடன் கூடிய புளியங்காய் கிடைக்கும் .அதை மீன் குழம்புக்குப் பயன்படுத்துவார்கள். நமக்குக் காய்கறி போல அவர்களுக்கு மீன். சற்றுப் பழையதாய் இருந்தாலும் வாங்கி விடுவார்கள்.
சுத்தத்தை மிகவும் பேணுவார்கள். வீட்டில் ஒரு தூசு தும்பு இல்லாமல் பளிச்சென்று இருக்கும். காலைகழுவாமல் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள். நின்று கொண்டுகுனிந்த நிலையில் பாத்திரம் கழுவுவார்கள், துணி துவைப்பார்கள் , மீன் சுத்தம் செய்வார்கள். பார்க்கும் நமக்கு முதுகு வலிப்பது போல் இருக்கும். மிகக்குறைந்த நீரைப்பயன்படுத்தி பளீரென்று சுத்தமாக்கி விடுவார்கள்
மீனை முதலில் அவித்துப் பிறகு பொறிப்பார்கள்.. ஜோதி அவிக்காமல் பொறிப்பதைப் பார்த்து வியப்படைந்து “ பெரிய பணக்காரர்கள்தான் இப்படி நிறைய எண்ணெய் ஊற்றிப் பொரிப்பார்கள் என்று சொல்வார்கள்.
பாலிலிருந்து தயிர் வரும் என்பது அவர்களுக்கு புதிய செய்தி. அவர்களுக்குத் தயிர் என்றால் தகரப் பெட்டியில் வரும் ஊத்துக்குளி புளித்த தயிர்தான் .
மிக்சியை காட்சிப்பொருளாகப் பார்த்து வியப்பார்கள்.  
திருட்டுப்பயம் இல்லையென்றே சொல்லலாம். தப்பித்தவறி திருட்டு நடந்தால் அது  தனியே அவற்கொரு குணம் உண்டு என்று பாடல்பெற்ற   நம் இனத்தவரின் வேலயாயத்தான் இருக்கும். .வெள்ளிகிழமைகளில் பிச்சை கேட்டு வருவபர்களும் நல்ல தமிழ் பேசுவார்கள்.
மலைப்பாங்கான் பூமி என்பதால் வீடு கட்ட அடிக்கல் பெரிதாகப் போட மாட்டார்கள். சில வீடுகளைப்பார்க்க   அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருப்பது போல் தோன்றும்.
மிகப்பள்ளமான இடங்களில் அமைந்திருக்கும்  வீடுகளில் இருந்து மேலே மிக எளிதாக ஏறி வருவார்கள்.
செக்கிழுக்கும் செம்ம்மல்களை நிறையக்காணலாம் திரூரில்.வீடுகளில் இருக்கும் செக்கில்  தேங்காயைப்போட்டு இரண்டு பெண்கள் சுற்றி எண்ணெய் எடுப்பார்கள் .
முசுலிம்கள் நிறைந்த பகுதி என்றாலும் பெருநாளெல்லாம் சிறப்பாகக் கொண்டாட மாட்டார்கள் . வெளி நாட்டில் இருப்பவர் எப்பபோது  விடுப்பில் வருகிறாரோ அன்றுதான் எல்லாப பெருநாளும்
வங்கியில் ஒரு வாடிக்கையாளர் குடையை தோளில் மாட்டிக்கொண்டு வருவார். ஒவ்வொரு முறையும் மறக்காமல் கேட்கும் கேள்வி நீங்கள்தானே மேனேஜர் .  நிறையப்பணம் போடும் அவர் வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தை உறுதியாக இருக்கிறதா என்று  தட்டிப் பார்ப்பார் .
வங்கிக்கு அருகில் கூரை வேய்ந்த  ஒரு சிறிய தேநீர்க்கடை இருக்கும். அங்கு தேநீர் அருந்தி பீடி புகைக்கும் ஒருவர் சிறிது நேரத்தில் வங்கிக்கு ஒரு பெருந்தொகையுடன் வருவது முதலில் வியப்பாக இருந்தது. போகப்போக பழகி விட்டது.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வேட்டியுடன்தான் வருவார்கள்.மேலாளர் அறைக்குள் வரும்போது காலணியைக் கழற்றி விட்டு வருவார்கள்  .வங்கியில் புதிதாகச் சேரும் எழுத்தர்கள் தகுதிகாண் பருவம் முடியும்வரை வேட்டியில் வருவார்கள். வேலை உறுதியானவுடன் கால்ச்சட்டைக்கு மாறுவார்கள்
திரூர் போன புதிதில்  சஹா வந்து ஒரு சில நாட்கள் தங்கிப்போனான்.
எம் பீ சசசாவும் அஜுமலும் ஒருமுறை வந்து போனார்கள் அஜ்மலுடன் மூன்று முடிச்சு படம் பார்த்தேன். எப்போதாவது தமிழ் படம் போடுவார்கள் .திரைஅரங்கில் இடைவேளை விட்டவுடன் சிகரட் லைட்டரால் பீடி பற்ற வைப்பது ஒளியும் ஒலியுமாகத் தோன்றும்
எம் பீ சச்சாவுடன் அத்தா வால்பாறை (இந்தியன் வங்கி சக்கரவர்த்தி, அமீதா) போய் வந்தது
தாவன்னாப் பெரியாத்தா ஓரிரு நாட்கள் வந்து தங்கினார்கள் . இந்த்க்காட்டுக்குள் எப்படி வழியறிந்து நடமாடுகறார்கள் என்று வியப்புத் தெரிவித்தார்கள்   
பேச்சுத்திறனாலும் கைரேகை பார்ப்பதாலும் அத்தாவுக்கு நிறைய நண்பர்கள். .மலையாளமொழியைக் கற்று தேர்ந்த அத்தா ஒரு கூட்டத்தில் மலையாளத்தில் உரையாற்றி சாதனை புரிந்தது
கே என் எஸ்இல்  அடிக்கடி விருந்து நடக்கும் ..உணவு சுவையாக இருக்கும் .உணவுக்குமுன் பசியைத்தூண்ட ஒரு கருப்புத்தேநீர் கொடுப்பார்கள் .அதுவும் நல்ல மணமாகவும் பசியைத்தூண்டுவதாகவும் இருக்கும். அத்தா வாரவாரம் ஜும்மாத் தொழுகைக்குப் பின் அங்கு சாப்பிடப்போகும்
திரூர் போன புதிதில் ஒரு மாதம் சென்னையில் வங்கி அலுவலர் பயிற்சி .மவுண்ட் சாலையில் மினர்வா விடுதியில் தங்கினேன். அருகில் உள்ள மினர்வா திரை அரங்கில் பதினாறு வயதினிலே படம் ஓடிக்கொண்டிருந்தது. போ ய்ப்பார்த்தேன் .  
 ஷஹா திருமணம் திருப்பத்தூரில் நடந்தது..அதற்காக விடுமுறையில் எல்லோரும் அங்கு போனோம். பணிப்பெண் லட்சுமியை திரூரில் விட்டுப்போனோம்.
. ஷஹா திருமணம் முடிந்த சில நாட்களில் எனக்கு திருச்சிக்கு மாறுதல் ஆகியிருப்பதாய்  தந்தி வந்தது.
அத்தாவும் நானும் மட்டும்  வீட்டைக்காலி செய்ய திரூர் போனோம். அங்கு பணிப்பெண் சற்று மாறுபட்ட மனநிலையில் இருந்தது..மிகவும் சிரமப்பட்டோம். பிறகு கே என் எஸ்ஸில் பணியாற்றும் ஒருவர் திருநெல்வேலிக்காரர் –அவரிடம் பணிப்பெண்ணின் இரண்டு ஆண்டு ஊதியமும் வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்து திருநல்வேலியில் கொண்டு ஒப்படைக்கச்சொன்னோம். மிகவும் சிரமப்பட்டு பேட்டையில் கொண்டு போய் ஒப்டைததாய்ச் சொன்னார்.
வீட்டுச்சாமன்களை சிப்பம் கட்டி சுமையுந்தில் ஏற்றுவதிலும் கே என் எஸ் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள்
சாமான்களை திருச்சி இப்ராஹீம் ஸ்டோர்ஸ் கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தோம். பிறகு அத்தாவும் நானும் திருச்சி போனோம் .
இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.
சென்ற பகுதி பற்றி கருத்துக்கள் பாராட்டுகள் தெரிவித்த பாப்டி, சாகுல் சாஜித்,நஸ் ரீன்  ,சகா சகோதரிகள் மெஹராஜ் ஜோதி சுராஜ் அனைவருக்கும் நன்றி
மெஹராஜ்
திருநெல்வேலி நினைவுகள் மிகவும் அருமை .கம்ப்யூட்டரில் ஸ்டோர் பண்ணி வைத்தது போன்ற உன் அடுக்கடுக்கான நினைவுகள் ஆச்கரியம் கொடுக்கிறது (மாஷா அல்லாஹ்). ஷாகுல், வஹாப், ராஜாத்தி,இப்ராஹீம் எல்லோருடைய செயல்களையும் ஞாபகமாக எழுதியது ஆச்சரியம் .அம்மாவின் மறைவு பற்றி விரிவாக எழுத முடியும் ஆனால் முடியவில்லை என்ற வரிகள் மனதைக்கலங்க வைத்தது .
அத்தம்மா நல்ல ரசனையோடு சாப்பிடும். காலையில் புரோட்டா குழம்பு. மதியம் நெய் இல்லாமல் சாப்பிடாது .கோ;லா உருண்டையை வெயிலில் காய வைத்து பல நாட்கள் சாப்பிடும் . திருப்பத்தூர் முழுதும் நம் உறவினர்கள் .மிக நன்றாக இருக்கும்
நஸ் ரீன் :
சூப்பர் மாமா எதுக்கு முடியனும் எழுதுங்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம்
மெஹராஜ் (நெல்லை.2)
நன்றாக உள்ளது. .கோவைக்குப்பிறகு மற்ற ஊர்கள் அதிகம் தெரியாது .விருந்தாளியாக வருடம் ஒருமுறைதான். அம்மாவின் உபசரிப்பு சிறப்பாக இருக்கும் .முட்டைதோசை, பட்டர் டீ, நெஸ்காபி என எல்லாம் ஸ்பெஷல் .எல்லோருக்கும் பிறந்த எல்லாகுழந்தைகளுக்கும் பிறந்த பின் அம்மா செய்யும் கவனிப்பு வேறு யாரும் செய்ய முடியாது .ஹாஸ்பிடல் போகும் முன் குளிக்க வைத்து இரட்டைச்சடை,.குழந்தை பிறந்தபின் வெற்றிலையில் கோரோசனை, தேன்.. குழந்தைக்கு மண் கிண்ணத்தில் மோதிரம் உரசி தேன் பாங்கு சொல்லி ஊட்டப்படும்.. காலையில் டெட்டால் கலந்த வெந்நீர் குளியல், கருப்பட்டி காபி, இஞ்சிச்சாறு, அஞ்சு மருந்து .வாராவாரம் லேகியம் சூப், நாற்பது அன்று வீட்டுக்கூரை தவிர எல்லாம் கழுவப்படும் ,
சாகுல்
 என் இரண்டாம் வகுப்பு பாதி குறுக்குதுறை, பாதி பேட்டை
சகா
மணியம்மா கணவர் ஜான் அருமை தேவதாஸ் (JAD)    
ஜோதி
நெல்லை பற்றி எத்தனை வாரங்கள் எழுதினாலும் சுவாரசியம் குறைவதில்லை  அத்தம்மாவின் மறைவு சேதி- சட்டென்று சோகம்  உண்டானது அம்மாவின் மறைவு நிகழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் சிந்தனையை உறைய வைத்தது ,இப்ருவை இதயக்கனி என்று குறிப்பிட்டதில் மனம் நெகிழ்ந்து பாரமாகிவிட்டது
அத்தம்மா பற்றி ஜோதி நிறைய எழுதியுள்ளது .அதை இப்போது திருப்பத்தூர் ஜமாஅத் குழுவுக்கு அனுப்புகிறேன். பிறகு எப்போதாவது வலை நூலில் சேர்கிறேன் (நிறையக் கருத்துக்கள், )   
சுராஜ் ,
தொடர் பகுதி மிக அருமை .அம்மாவின் கடைசி நாட்கள் படித்து உடல் இயக்கமே பத்து நிமிடம் நின்று விட்டது .சிட்டு, நௌஷாத் மற்றும் எல்லாப்பிள்ளைகளின் குண நலன்களை இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்திருப்பது ஆச்சரியமாகவும் மகிழ்சியாகவும் இருக்கிறது 
இ(க)டைச்செருகல்
தகழி  சிவசங்கரன் பிள்ளை – புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் . இவரை நேர்முகம் கான ஊடகத்தினர் சிலர் வந்திருந்தனர். நல்ல உடையணிந்து நாற்காலியில் அமர்ந்திருந்தார் தகழி . பேச்சில், வினாக்களுக்கு விடை அளிப்பதில் ஒரு தயக்கம் , மயக்கம் . ஊடகத்தாருக்கு ஒன்றும் புரியவில்லை. நல்ல கலகலப்பாக உரையாடுபவர் .உடல் நிலை சரியில்லையோ என்ற ஐயம்
கொஞ்சம் பொறுங்கள் என்று சைகை காண்பித்து விட்டு உள்ளே சென்றார் எழுத்தாளர் .தான் போட்டிருந்த உடைகளைக் களைந்து விட்டு இடுப்பில் ஒரு துண்டு, மேலே ஒரு துண்டோடு வெளியே வந்தவர் தரையில் ஒரு பலகையில்  தூணில் சாய்ந்து அமர்ந்தார். இப்போது எந்த விதத் தடங்கலும் இல்லாமல் சரளமாகப் பேசினார்.
இறைவன் அருளால்
பயணம் தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்

sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment