வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்
28.திருநெல்வேலி 3
(இந்தப்பகுதியோடு நெல்லை நிறைவுறுமா ???)
ரோசி ஹோம் –இதுதான் அத்தா பணி மூப்புப் பெற்றபின் பேட்டையில் நாங்கள்
குடியேறிய முதல் வீட்டின் பெயர். பெயருக்கேற்ப இளஞ்சிவப்பு நிற வண்ணம் பூசிய
சுவர். இரண்டு பகுதிகளாக இருந்த வீடு முழுதுமாக எடுத்துக்கொண்டோம்.
அரசுப்பணியில் வெளியூரில் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் குடும்பம்
சிறியது – அவரும் துணைவியாரும் மட்டும்தான் .அவருக்காக கட்டிய வீடு.
நெல்லை நகரிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பேட்டை நிறைய
இசுலாமியர்கள் வாழும் பகுதி. பெரிய பள்ளிவாசல் அதிலேயே அரபுப்பள்ளி . பள்ளிவாசல் சன்னதித்தெரு என்ற நீளமான தெரு.
அதிலிருந்து பிரிந்து செல்லும் பல தெருக்கள் இவை மிகப்பெரும்பாலும் இசுலாமியகள்
வாழும் பகுதி .
ரோசி ஹோம் சற்றுத்தள்ளி திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவில்
இருந்தது.
நகரிலிருந்து பேட்டை செல்லும் சாலையில் முதலில் ஒரு கல் மண்டபம்
வரும். அடுத்து ஒரு தர்கா பிறகு செக்கடி அதையடுத்து காவல் நிலையம் ..நேரே போனால்
வீரபாகு நகர் என்ற புதிய
குடியிருப்புப்பகுதி .அதையும் தாண்டி ம தி தா இந்துக்கல்லுரி அதற்கு முன் தொழில்
பேட்டை
பேட்டை வாழ்க்கையும் பல பகுதிகளை உள்ளடக்கியது. மூன்று வீடுகளில்
குடியிருந்தோம்
அத்தாவின் நடை உடையில் எத்தனை மாற்றங்கள் ! வெள்ளைகைலி, ஜிப்பா
தலையில் தொப்பி. முகத்தில் தாடி .அதை விட மிகப்பெரிய மாற்றம் பையை எடுத்துக்கொண்டு
கறி, மீன் வாங்கக்கிளம்பி விட்டது
பேட்டையில் அத்தாவுக்குக் கிடைத்த நல்ல நண்பர் ஜனாப் அஜீஸ் (தானா மூனா
மகன்) அவர்கள் .மிக நல்ல நேர்மையான மனிதர். பெரும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த
குடும்பத்தைச் சேர்ந்த அவர் மிக எளிமையான தோற்றத்தில் இருப்பார். இசுலாமிய
முறைப்படி முழங்காலுக்கு சற்றே கீழ இறங்கிய கைலி (நெல்லை மொழியில் சாரம் ) .
பள்ளிக்குப் போகையில் மட்டும் மேல் சட்டை..
அவருடைய நட்பு பணி மூப்புப்பெற்ற அத்தாவுக்கு உறுதுணையாக
இருந்தது..அத்தா கூடவே போவதும் வருவதுமாக இருப்பார்.
வேம்படிக் கண்டர் என்ற கோரை வணிகரிடம் அத்தாவுக்கு வணிகத் தொடர்பு
ஏற்படுத்திக் கொடுத்தார்
பேட்டையில் பாய் நெசவு பெரிய தொழிலாக இருந்தது, அடுத்து பீடித்தொழில்
.நல்ல செல்வம் படைத்த வீட்டுப் பெண்கள் கூட பொழுதை வீணாக்காமல் பீடி சுற்றுவார்கள்
,பாயின் ஓரத்தை முடிவார்கள்,
பாய் பிடிக்கும் பழக்கம் பேட்டையில் பின்பற்றப்பட்டது..பெண்கள் மாட்டு
வண்டியில் போகும்போது அதில் இரு பெண்கள் பாயுடன் வருவார்கள்.. வீடுகளில் வண்டி
வாசல் ஓன்று தனியாக இருக்கும். அந்த வாசலுக்கு நேராக வண்டியை நிறுத்தி பெண்கள்
வண்டியில் ஏறும்போதும் இறங்கும்போதும் வாசலுக்கும் வண்டிக்கும் இடையே உள்ள இடை
வெளியை மறைக்க இருபுறமும் பெண்கள் பாயை விரித்து திரை போல் பிடித்துக் கொள்வார்கள்
.நகராட்சிப் பெண்கள் பள்ளியிலும் வண்டி வாசல் தனியாக இருந்தது. அங்கும் பாய்
பிடிககபடும்
செட்டி நாடு போல் பெரிய வீடுகளைப் பார்க்கலாம் .
சகோதரிகள் நூர் ஜோதி, சுராஜ், ஷாஹ , நான் அத்தா அம்மா ரோசி ஹோமில்
இருந்தோம். நான் கல்லூரியில் பட்டப்படிப்பு, ஷஹா பள்ளிப்படிப்பு
ஷாஹுலும் வஹாபும் எங்கள் வீட்டில் இருந்தார்கள். பொதுவாக சாப்பாட்டை
சட்டை செய்யாமல் இருக்கும் வஹாப் ஷாஹுலோடு போட்டி போட்டுக்கொண்டு மிக விரைவாகச் சாப்பிடுவான்.
ஷாஹுலுக்கு அங்கு சுன்னத் செய்யப்பட்டது வஹாபுக்குமா என்பது
நினைவில்லை .
அத்தம்மா திருப்பத்தூரில் காலமானதாக ஒரு நாள் காலை தந்தி வந்தது.
அப்போது வீட்டில் அத்தாவும் நானும் மட்டும் இருந்த நினவு. அத்தாவின் கண்களில்
கண்ணீர் ..மிதி வண்டியில் பாளையங்கோட்டை போய் கருத்தக்கிளி அண்ணனிடம் இந்த
செய்தியை தெரிவித்து வந்தேன்.
அரிசி, பருப்பு, காய்கறி, மீன்,முட்டை எண்ணெய் என்று வீட்டுக்குத் தேவையான பொருட்கள்
அனைத்தும் தெருவில் விற்பனைக்கு வருவது பேட்டையின் சிறப்பு
ராஜாத்தி (மெஹராஜ்)க்கு மருந்து புகட்டுவது ஒரு வேடிக்கை விளையாட்டக
இருக்கும். அம்மா (மெஹராஜ்) கையில் மருந்து மாத்திரையை வைத்துக்கொண்டு
கூப்பிட்டால் வர மாட்டேன் என்று அடம் பிடித்து வீடு முழுக்க பந்து போல்உருண்டு ஓடும்.
பிடித்து மடியில் படுக்க வைத்தால் எந்த வித மறுப்புமின்றி மருந்து மாத்திரையை
விழுங்கி விடும் .
மணியம்மா – நகராட்சி மருத்துவ சேவை ஊழியர் – அவர்,கள் குடும்பம்
முழுதும் எங்கள் குடும்பத்துடன் மிக நட்பாகப் பழகுவார்கள் ( பதவி தாண்டிய நட்பு)
கணவர் தேவசகாயம் (சார் வாள்) நகராட்சிப் பள்ளி ஆசிரியர். மிக மெல்லிய தோற்றம்
.உடல் பொருத்தம் இல்லாவிட்டலும் மனமொத்த தம்பதி . .சார்வாள் ஷஹாவுக்கு ஆசிரியர்.
ஆங்கில வகுப்பு மிக சிறப்பாக நடத்துவாராம் ;இவர்கள் மகன் இன்பா –ஷஹாவுக்கு
நெருங்கிய நண்பன் , நல்ல பையன்.
பாப்டியின் திருமணத்திற்கு இவர்களைத் தேடிக் கண்டு பிடித்து அழைப்புக்
கொடுத்து வந்தோம்.. மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் விழாவில் இன்பா கலந்து கொண்டதாய் நினைவு .
ரோசி ஹோமின் உரிமையாளர் பணி மூப்புப் பெற்று வந்ததால் பள்ளிவாசல்
அருகில் வேறு வீட்டுக்குக் குடி போனோம்/ அந்த வீட்டின் கழிவறைப் பிரச்சனையால்
மற்றுமொரு வீட்டுக்குப் போனோம்.
பேட்டையில் இது மூன்றாவது வீடு. . 123 , சர்க்கரை விநாயகர் கோயில் தெரு வில் அமைந்த இந்த வீடு எங்கள் வாழ்வில்
மறக்க முடியாத ஒரு அங்கம்.
இதன் உரிமையாளர் ஜனாப் சபூர் ராவுத்தர் . ஜனாப் அஜீஸ் அவர்களின்
உடன்பிறப்பு .உருவம் உள்ளம் எல்லாம் மிகவும் மாறு பாடானவை. ஆண்டுக்கு ஒரு முறை .புனித இரவில் விடாமல் தொழுது வரும் அவர்
பள்ளிவாசல் தலைவரும் கூட.
மிகப்பெரிய வீட்டை குறைந்த வாடகைக்குக் கொடுத்தார் அந்த வீட்டின்
வாசல்படி நகராட்சி நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் நகராட்சி ஊழியர்கள்
வந்து படியை இடித்தார்கள் ..பிறகு வீட்டின் பெரும்பகுதியை அடைத்து விட்டு ஒரு
பகுதியைக் கொடுத்தார். அதுவே விசாலாமக போதுமானதாக இருந்தது
அத்தா பணி.மூப்புப் பெற்றபிறகு ஆயுள் காப்பீட்டு முகவராகி
மிகச்சிறப்பாகப் பணியாற்றி பல பரிசுகள் வென்றது. வளர்ச்சி அதிகாரி திரு
கணபதியப்பன் அடிககடி வீட்டுக்கு வருவார். சாப்பாட்டு வகைகள்- (பிரியாணி முதல் பழைய
கஞ்சி வரை) பற்றி சுவை படப் பேசுவார்.
அரசு நூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியிலும் அத்தா ஈடுபட்டது.
ஆயிரம் சொற்களுக்கு பத்து ரூபாய் ஊதியம் கொடுப்பார்கள்.
சங்கரன்கோயில் பள்ளிவாசல் தலைவர் பக்டோன் என்ற மூட்டைபூச்சி மருந்து
நிறுவன உரிமையாளர். அத்தா முன்பு சங்கரன்கோயிலில் நடந்த மீலாது விழாவில் கலந்து
கொண்டதில் பழக்கமானவர் . அவர் கேட்டுக்கொண்டதற்காக அத்தா அந்தப்பள்ளியின்
நிர்வாகத்தைகே கொஞ்ச நாள் கவனித்துக்கொண்டது
ஷிரீன் பிறந்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. பேறுகாலம் சிக்கலாக
இருக்கும் என்று பயமுறுத்திய மருத்துவர்கள், மேட்டுத்திடல் (ஹை கிரவுண்ட் )
அரசு மாவட்டத் தலைமை மருத்துவ மனைக்கு
கொண்டு போகச் சொன்னார்கள்.
அந்த மருத்தவமனை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்கூடம் போல் இருந்தது. மருத்துவர் முதல் பணியாளர்கள்
வரை அனைவரும் கடுவன் பூனை போல் சிடுசிடுத்த முகமாக இருப்பார்கள். நோயாளிளின்
அருகில் யாரும் இருக்க விடாமல் விரட்டுவார்கள் .ஆனால் நொடிக்கொருமுறை அதை வாங்கிவா
இதைக்கொண்டு என்று சொல்வார்கள் அதற்கெல்லாம் மேல் நோயாளிகளைத் திட்டியும்
அடித்தும் கொடுமைப் படுத்துவார்கள்
உடனடியாக பெதடின் ஊசி மருந்து வேண்டும் என்று சொன்னார்கள். அது
சந்திப்பில் உள்ள ஒரே கடையில்தான் கிடைக்கும் என்றும் அவர்களே சொன்னார்கள்.
மருத்துவ மனைக்கும் அந்தக்கடைக்கும்
ஏழு.எட்டு கி மி தொலைவு இருக்கும். நான் மிதிவண்டியில் போய் வாங்கி
வருவதற்குள் குழந்தை பிறந்து விட்டது.
வீட்டுக்கு வந்ததும் அத்தா .அரசுக்கு மருத்துவமனை பற்றி விரிவாக ஒரு
புகார் கடிதம் எழுதியது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பல சீர்திருத்தங்கள்
செய்யப்பட்டன ( ஆக்கபூர்வமாக இயங்கும் அரசு ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்தது ).
பேட்டை ம தி தா
இந்துகல்லூரியில் இரண்டு மூன்றாம் ஆண்டு
பட்டப் படிப்புப் படித்தேன்.;கல்லூரி கட்டமைப்பும் சரி, ஆசிரியர் குழுவும் சரி
பொள்ளாச்சிக்கு இணையாக இல்லை என்பது என் கருத்து.
கல்லூரி முதல்வர் திரு சோமசுந்தரம் அத்தாவின் நண்பர். அவர் மகன் திரு
கல்யாண சுந்தரம் வேதியல் துறையில் விரிவுரையாளர். .முதன்மைப்பாடமாக வேதியல்.
துணைப்பாடமாக இயற்பியலும் தாவரவியலும் எடுத்திருந்தேன். பேட்டை கல்லூரியில்
வேதியலுக்குத் துணைப்பாடமாக கணிதமும் இயற்பியலும் தான் இருந்தது . தாவரவியல்
இல்லை. எனவே விலங்கியல் மாணவர்களுக்கு நடக்கும் தாவரவியல் துணைப்பாட வகுப்பில்
கலந்து கொள்வேன்.
என்னுடைய பட்டச் சான்றிதழில் நான் படிக்காத கணிதத்தைத் துணைப்பாடமாகக்
குறிப்பிடபட்டிருக்கிறது.. இது பற்றி உடனே நான் ஒப்புகையுடன் கூடிய பதிவுக் கடிதம்
ஓன்றுமதுரை பல்கலைக் கழகத்துக்கு
அனுப்பினேன் .இன்றும் அந்த ஒப்புகைச் சான்று என்னிடம் இருக்கிறது (1969 ஆம்
ஆண்டு) .அங்கிருந்து மறுமொழி எதுவும் வரவில்லை . மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் அணி
பட்டதாரிகள் நாங்கள் (First
set of graduates) முதல்
கோணல் ?
வேலை கிடைக்க ஒரு ஆண்டு காத்திருந்தேன்.வரும் விளம்பரங்கள்
அனைத்துக்கும் எழுதிப் போடுவேன் (நூறுக்குப் பக்கம் இருக்கும்)
அத்தாவின் நண்பர் திரு பூமிநாதன்-(பூமி) அவருடைய சித்ரா ஸ்டுடியோ
அப்போது நெல்லையில் நல்ல பேருடன் இயங்கியது அவருய துணைவி நகராட்சி மருத்துவர் வள்ளி .
பூமிக்கு ஒளிப்படக்கலைஞர் என்ற முறையில் நல்ல செல்வாக்கு உண்டு. அவர்
நெல்லைக்கு அருகில் உள்ள குளோரின் வாயு உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனமான
தாரங்கதாரா கெமிகல்ஸ்ஸில் உயர் அதிகாரிகள் அனைவரும் தமக்குத் தெரிந்தவர்கள்
.வேதியல் படித்தவர்களுக்கு எளிதில் அங்கு வேலை கிடைக்கும் என்றார். அதை நம்பி
நானும் விடாமல் இருபது முறைக்குமேல் அவரது ஸ்டுடியோவுக்குப் போயிருக்கிறேன்..
ஒவ்வொரு முறையும் எதாவது சாக்குப்போககுச்சொல்வார்.. ஒரு முறை கூட அந்த
நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றதில்லை . அத்தாவிடம் சொன்னேன். இனிமேல் அவரிடம் போக
வேண்டாம் என்று சொல்லி விட்டது.
இதே நிறுவனத்தில் ஜாபர் அண்ணன்( ஐ பீ எஸ்) முயற்சியால்
சக்ரவர்த்திக்கு வேலை கிடைத்து, அதை அவர் உதறி விட்டு(உதறப்பட்டு) வந்து விட்டார்.
கனரா வங்கி நகர்க்கிளை மேலாளர் திரு நரசிங்க ராவ் அத்தாவின் நல்ல
நண்பர் . அவர் மூலம் கனரா வங்கி எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தேன்.
சந்திப்புக் கிளையில் எழுத்துத் தேர்வு எழுதினேன். இதற்கிடையே
காரைக்குடி செக்ரியில் பணியில் சேர்ந்து விட்டேன் கனரா வங்கி பெங்களூர் தலைமை
அலுவலகத்துக்கு நேர்முகத்துக்கு வருமாறு அழைப்புக் கடிதம் வந்தது. அப்போது அத்தா
அம்மாவும் வெளியூர் போயிருந்தார்கள் அவர்கள் திரும்பி வருவதற்குள் நேர்முக நாள்
கடந்து விட்டது.
அத்தா திரும்பி வந்தவுடன் வங்கி அலுவலகத்துக்கு நடந்ததை ஒரு தந்தி
மூலம் தெரிவித்த்து . விளக்கத்தை ஏற்றுக்கொண்டு வேறு நாளில் நேர்முகத்துக்கு
வரும்படி அறிவித்தார்கள்
காரைக்குடியில் இருந்து பெங்களூர் போய் நேர்முகத்தில் கலந்துகொண்டு
வேலையும் கிடைத்து சந்திப்புக் கிளையில் பணி கிடைத்தது அதுதான் இந்தத் தொடரின்
துவக்கம.
வங்கிப்பணியில் சேரும்போதும் அத்தா அம்மா ஊரில் இல்லை. ரஹீம் அண்ணன்
,மும்தாஜ் அக்கா பேட்டையில் இருந்தார்கள்
சந்திப்புக் கிளை நிறைய அலுவலர்களுடன் கூடிய பெரிய கிளை. எங்கு
பார்த்தாலும் தூசியும் குப்பையுமாக இருக்கும். என்னைப்போல் புதிதாகச் சேர்ந்த
இருவர் – ஜாய்சிங், ஜனார்த்தனன் –இருந்தனர். மேலாளர் திரு வெங்கட்ராமனுக்கு இரவு
ஒன்பது மணிக்கு முன் வீட்டுக்குப் போக மனசு வராது. அதுவரை புதியவர்கள் மூவரும்
வேலை இல்லாவிட்டாலும் உட்காந்திருக்க
வேண்டும்..மேலாளரும் அதிகாரி திரு மகாதேவனும் மூக்குப்பொடி போடுவார்கள்.
மொத்தத்தில் இந்தக்கிளை எனக்குப் பிடிக்கவில்லை .ஜனாப் சிக்கந்தர்
(திருப்பத்தூர் ஜனாப் கான் ராவுத்தர் மகன்)வங்கி சேவைக்காக அங்கு வந்தவர் நான்
அங்கு இருப்பது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.
ஜனாப் பானா தா மீரான் அத்தாவின் இன்னொரு நண்பர் .கம்பீரமான தோற்றம்,
குரல், பள்ளிவாசலுக்கு மிக அருகில் வீடு. அடிக்கடி வந்து அத்தாவிடம்
பேசிக்கொண்டிருப்பார், பேட்டை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு அருணாச்சல
முதலியார், மற்றொரு நண்பர் . எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் குடியிருந்த திரு
நாராயணசாமி குறுகிய காலப் பழக்கத்தில் மிக நெருககமாகிவிடார்.. அவர் மகளின் திருமண
விருந்து எங்கள் வீட்டில் நடந்தது .மிக அழகாகப் பேசும் அவர் ஏனோ தன்னைத் தானே
மாய்த்துக்கொண்டார் .மருத்துவர் கபீர் ,தமிழ்ப்பேராசிரியர் தியாகராசன்,(ராஜகுமாரி)
இன்னும் பல நண்பர்கள்
நண்பர்களுடன் குற்றாலத்துக்குக் குளிக்கப்போயிருந்த சுல்தான்
மாமாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கண்ணொளி மங்கி, நடமாட்டம் குறைந்து
படுத்த படுக்கையாய் இருந்து மறைந்து விட்டது
அத்தா பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ஒரு பொறுப்பில் இருந்தது .
சங்கத்தில் நல்ல பச்சை அரிசி போட்டால் உடனே அன்று` எங்கள் வீட்டில் பிரியாணி –
இதயத்துல்லா எங்கள் வீட்டில் இருந்தான், வயதுக்கு மீறிய பேச்சு, நல்ல
சொல் வளம்.
இப்ரு அழகிய தோற்றம் உதட்டுச்சாயம் பூசியது போன்ற உதடுகள் .என்றும்
இதயக்கனிதான் இப்ரு ஒரு தடவை மாடியின் திறந்த வெளியில் (மொட்டை மாடியில்) இருந்து
பக்கத்து வீட்டுக்குள் விழுந்து விட்டான் . மிக உயரத்தில் இருந்து விழுந்தும் இறைவன்
அருளால் அடி, காயம் எதுவில்லாமல் தப்பித்தான் .
சிட்டு –எழுத்தும் படங்களும் மிக அழகாக இருக்கும். நவ்ஷாத்தின்
அமைதியான நிதானமான குறும்புத்தனம் ரசிக்கும்படி இருக்கும்.
ஒருமுறை நான் வெளியூர் போனபோது பயணப்பெட்டியை மிக அழகாக பாப்பா
அடுக்கிக்கொடுத்து வியக்க வைத்தது
முத்தக்கா மெஹராஜ் அக்காவின் புடவையைக் கட்டிப்பார்க்க,
கைக்குழந்தையாக இருந்த இப்ராஹீம் உற்று உற்றுப் பார்த்த பார்வை தாங்க முடியாமல்
முத்தக்கா உடனே புடவையை மாற்றி விட்டது (நோக்கு வர்மம்?)
மொ.மாடியில்தான் நான் இரவில் படுத்துத் தூங்குவேன். கட்டையில் விரிப்ப
மாட்டிய கட்டில் தொட்டிபோல் சுகமாக இருக்கும். கொசுத்தொல்லை அப்போது இல்லையா
அல்லது தெரியவில்லையா என்பது புரியவில்லை
வீட்டுக்கு அடுத்த ஓட்டுக் கட்டிடத்தின் சாய்வான பகுதி எங்கள் வீட்டு
மாடியை ஒட்டி இருக்கும். இரவில் அதில் சாய்ந்து கொண்டு வானத்தின் அழகை ரசித்தபடி
கைவானொலியில் மெல்லிய ஓசையில் திரைப்படப் பாடல்களைகேட்டு மெய்மறப்பது எனக்கு
மிகவும் பிடித்த பொழுது போக்கு
கல்செக்கு நல்லெண்ணெய் பேட்டையின் சிறப்புக்களில் ஓன்று .செக்கு
எண்ணெய் கொண்டு வரும் செட்டியார், அவர் மகள், முட்டைகாரம்மா அவல் விற்கும் பெண், ஓமத்திராவகம் விற்கும் பாய்
தெருவில் வடை, சமோசா விற்பவர் இவர்களெல்லாம் எங்கள் வீட்டின் ரெகுலர் விசிட்டர்ஸ்.
லட்சுமி, செல்லம்மாள்,இன்னொரு லட்சுமி இவர்கள் எங்கள் வீட்டில் வேறு
வேறு காலங்களில் பணிப்பெண்கள்
கனரா வங்கி சந்திப்புக்கிளையில் சில மாதங்கள் பணி.பிறகு
உடன்குடிக்கிளைக்கு இடமாற்றம் .அங்கு சரியாக ஒரு ஆண்டு . பின் நெல்லை நகர் கிளை –
ஐந்து ஆண்டுகள்
சந்திப்புக் கிளைக்கும் நகர்க்கிளைக்கும் நிறைய வேறுபாடுகள்..சுத்தம்,
நல்ல பணிச்சூழல் .நாற்பது ஆண்டு வங்கி வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தது உடன்குடி, நெல்லை நகர்
கிளைகள்தான்.. குறிப்பாக நகர்க்கிளையில்தான் . வங்கிச் சேவையின் எல்லாப்
பரிமாணங்களையும் நன்கு கற்றுகொண்டது
மேலாளராக இருந்த திரு
கோபாலன், அதிகாரி திரு நாராயணன் இருவரும் நல்ல அறிவும் ஆற்றலும் கொண்ட நேர்மையான வங்கியாளர்கள்
அந்தக்கிளையில் என்னோடு பணியாற்றிய பலரில் சிவராமகிருஷ்ணன் ,
சுந்தரம்,கே.சுந்தரம் ராகவன் இவர்கள் மிக
நெருங்கிய நண்பர்கள் .சுந்தரம் என் கல்லூரித் தோழர் ..சிவராமக் கிஷ்ணன் , சுந்தரம்
இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள்
எங்கள் வங்கியில் துணைப்பொது மேலாளராக பதவி உயர்வு பெற்ற முதல்
தமிழரான திரு வெங்கட்ராமன் நெல்லை வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அத்தா உரையாற்றியது. கம்ப ராமாயணம் பற்றி
அத்தா பேசியதை திரு வெங்கட்ராமன் மிகப் புகழ்ந்து பேசினார்
நான் அதிகமாகத் திரைப்படங்கள் பார்த்தது நெல்லையில் வங்கிப்பணியில்
இருந்தபோதுதான். வெளியாகும் எல்லாப்படங்களையும் பார்த்து விடுவோம்.
திருமணம், இரண்டு பிள்ளைகள் பிறந்ததும் நெல்லை பேட்டை வாழ்வில்தான்
.திருப்பத்தூரில் திருமணம் .பேட்டை வீட்டில் வரவேற்பு, பிறகு வங்கி ஊழியர்கள்
கேட்டதால் ஒரு நாள் வீட்டில் பிரியாணி விருந்து வைத்தோம். வங்கி
ஊழியர்கள்,,உள்ளூர் உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் எல்லாம் சேர்த்து ஐம்பது
பேருக்குக் குறையாமல் இருக்கும்.
அவ்வளவு பேருக்கும் அம்மாவே சமைத்தாய் நினைவு,.இவ்வளவு சுவையான
பிரியாணியை இதுவரை கண்டதில்லை உண்டதில்லை என்று வயிறாரச் சாப்பிட்டார்கள் வீட்டில்
அம்மா செய்த ஊறுகாயின் சுவையை வானளாவப்
புகழ்ந்தார்கள்
சமையல் எரிவாயு அப்போது அறிமுகமானது அது வேண்டாம் என்று அம்மா
வன்மையாக மறுத்து விட்டது
பேட்டையில் அத்தாக்கண்ணு கார் மிகவும் பிரபலமான ஓன்று. மோட்டார்
சுந்தரம் பிள்ளை கார் போல் இருக்கும். பெட்ரோலும் மண் எண்ணெயும் கலந்து ஊற்றி அத்தாக்கண்ணு
ஓட்டுவர்..கலவை விகிதம் அவருக்கு மட்டும்தான் தெரியும். அவர் மட்டும்தான் அதை ஓட்ட
முடியும் .அந்த வண்டியில் கரிக்காத்தோப்பு. என்ற பகுதிக்கு ஜனாப் மஸ்தான் மகள்
திருமணத்திற்கு அத்தா அம்மா ஜோதி போனார்கள். (சுல்தான் மாமா மகன் மைதீன் மாமனார்
மஸ்தான்.) அந்த வண்டியில் போனது ஒரு மகிழ்ச்சியான் பதிவாக மனதில் நிற்பதாக ஜோதி
சொன்னது
வங்கியில் பதவி உயர்வுக்கான தேர்வில் எங்கள் கிளையில் நான் உட்பட
எழுதிய மூவரும் தேறி, திருவனந்தபுரத்தில் நேர்முகத்திலும் வெற்றி பெற்று ,பதவி
உயர்வு பெற்றோம். எனக்கு கேரளம் மலப்புர மாவட்டம் கல்பகஞ்சேரி கிளைக்கு மாறுதல்
ஆனது
அங்கு போய் அருகிலுள்ள திரூரில் வீடு பார்த்து அத்தா அம்மா
எல்லோரையும் அழைத்து வர விடுப்பில் நெல்லை வந்தேன்..வீட்டுப் பொருட்கள் எல்லாம்
திரூர் கொண்டு செல்ல டி வீ எஸ் சுமையுந்து அலுவலகம் போய்விட்டது.
அப்போதுதான் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஹை கிரவுண்ட்
மருத்துவ மனையில் சேர்த்திருந்தது
மே மாதம் பதிமூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை மாலை பைசல் பாப்டி ஜோதியோடு
மருத்துவ மனை செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றேன் . மணிக்கணக்கில்
காத்திருந்தும் பேருந்து கிடைக்காததால் வீடு திரும்பினோம்.
சற்று நேரத்தில் அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்தது
அம்மாவின் மறைவு பற்றி விரிவாக எழுத முடியும் ஆனால் முடியாது .
என் அறுபத்தி ஆறு ஆண்டு வாழ்வில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோகம்
இதுதான்
அந்த துக்கமான சூழ்நிலையிலும் நடந்த சண்டை சச்சரவுகள், சிலரைக்குறி
வைத்து தாக்க, அவமானப்படுத்த ஏவப்பட்ட
சொல்லம்புகள் என்னை மிக மிக பாதித்தன ,
நாற்பது ஆண்டுகள் கழித்து இந்தப் பகுதியை எழுதும்போதுதான் ஒரு தெளிவு
பிறந்தது . மணிக்கணக்கில் காத்திருந்த நாங்கள் பேருந்தில் ஏறி மருத்துவ மனை
போயிருந்தால் ? இறைவனுக்கு நன்றி
ஒரு வழியாக நெல்லை பகுதியை நிறைவில்லாமல்(too many
loose ends) நிறைவு செய்கிறேன்..
சென்ற பகுதி பற்றி கருத்துகள் பாராட்டுகள் தெரிவித்த அஜ்மல்,(ரொம்ப ஓவர் ) சகோதரி ஜோதி சுராஜுக்கு நன்றி
. Ajmal
குறுக்குதுறை வீடு வர்ணனை பொன்னியின் செல்வனில் கல்கியின் காவிரி ஆற்றுக்கரை வர்ணனையை நினைவூட்டுகிறது.
குறுக்குதுறை வீடு வர்ணனை பொன்னியின் செல்வனில் கல்கியின் காவிரி ஆற்றுக்கரை வர்ணனையை நினைவூட்டுகிறது.
சுராஜ் –குற்றால அருவிபோல் கொட்டும் நினைவுகள்
ஜோதி – பல நிகழ்ச்சிகளை நினவு கூர்ந்தது.- அம்மாவின் கைஎலும்பு
முறிவு, மணியம்மாவின் உண்மையான அன்பு, அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது
அங்கிருந்த அத்தாவுக்கு கறிக்குழம்பு, மாங்காய்த்தொக்கு செய்து கொண்டு போனது ,
அம்மாவின் மறைவுக்கு எஸ் எம் எழுதிய கவிதை
இன்னும் பலப்பல
இ(க)டைச்செருகல்
பாய் பிடிக்கும் பழக்கம் போல்
பேட்டையில் இன்னொரு வழக்கம் ஊர் அழைப்பவர்
என்று சிலரை நியமித்திருப்பது. இசுலாமியர் இல்லத் திருமணம் போன்ற விழாக்களுக்கு
அழைக்கவேண்டியவர்கள் பட்டியலை விழா நடத்துபவர்கள் இவர்களிடம் கொடுத்து
விடுவார்கள். இவர்கள் வந்து அழைத்தால் விழா நடத்துபவர்கள் நேரில் வந்து
அழைத்ததாகக் கருதப்படும்
அது போக, விழாவில் அழைக்கப்பட்டவர்கள் வந்து விட்டார்களா என்பது
பட்டியலில் குறிக்கப்படும் (வருகைப் பதிவேடு போல). யாரவது வராமல் இருந்தால்
அவர்களைத் திரும்பத் திரும்ப அழைக்கும் வழக்கமும் உண்டு
இறைவன்
அருளால்
பயணம்
தொடரும்
(எப்போதுதான் பயணம் நிறைவுறும் என சிலர் உரக்கசிந்திப்பது காதில்
விழுகிறது . இறைவன் நாடினால் இந்த ஆண்டுக்குள் நிறைவுறும் )
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
.
..
No comments:
Post a Comment