Tuesday, 5 November 2019

வண்ணச் சிதறல் பார்த்தால் பசி தீரும்




பார்த்தால் பசி தீரும்




சமையல் ஒரு அற்புதமான கலை . சமைத்ததை பரிமாறுவது ஒரு அழகுக்கலை அதே போல் சாப்பிடுவதும் ஒரு நளினமான நுட்பமான கலை
சாப்பாடு நன்றாக இருந்தது என்று சொல்லுவதே ஒரு கலை உணர்வின் வெளிப்பாடுதான்
பழைய கஞ்சி, தேநீர் , சிறிய விலை பிஸ்கட் என எதையும் அணு அணுவாக சுவைத்து ரசித்து சாப்பிடுபவர்கள் சிலர் .
சுவையான விலை உயர்ந்த உணவையும் அது என்ன, அதன் சுவையென்ன என்பதை சிறிதும் உணராமல் கோழி தவிட்டை முழுங்குவது போல் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்
சோறை சிறிய குன்று போல் குவித்து அதன் உச்சியில் ஒரு சிறிய பள்ளம் பறித்து அதில் நிறைய குழம்பு ஊற்றி அது அப்படியே பரவி இறங்க விட்டு மெதுவாக சாப்பிடுவது ஒரு ரசனை .இது திருமண விருந்தில் மதிய உணவுக்காட்சி
அதே திருமணத்தில் காலை உணவில் இரண்டு மூன்று இட்டிலிகளை சிறு துண்டுகளாக்கி ,ஒரு சிறிய பாத்தி(அணை) போல் கட்டி அதன் நடுவில் சாம்பாரை ஊற்றி அதில் இட்லி, வடையை மிதக்க விட்டு ஊற வைத்து சாப்பிடுவது இன்னொரு சுவை .
பார்த்தாலே நமக்கு வயிறு நிரம்பும் இக்காட்சிகள் கடந்த காலமாகி விட்டன
விருந்தென்றாலே ஓன்று பிரியாணி அல்லது (பபே )தட்டேந்தி முறை.
சைவ விருந்துகளில் சாம்பார் சாதம் தயிர் சாதம் என்றுவைத்து விடுகிறார்கள் .இலை போட்டு  சோறு வைத்து குழம்பு ஊற்றி சாப்பிடுவது காணக்கிடைக்காத அருங்காட்சி ஆகி விட்டது
நாலைந்து பரோட்டாவை பிய்த்துப்போட்டு அதில் நிறைய குழம்பு ஊற்றி ஊற வைத்து சாப்பிடும் காட்சியை எங்கள் ஊர்ப்பக்கம் உள்ள உணவு விடுதிகளில் இன்றும் காணலாம் . பரிமாறுபவரே அழகாகப் பிய்த்துப்போட்டு விடுவார்
ஒரு தொடரிப் பயணத்தில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சாப்பிடும் காட்சியைப் பார்த்து நான் மிகவும் ரசித்தேன் .சாப்பிடுவதை விட மிகப் பொறுமையாக சாப்பிட ஆயத்தம் செய்தது மிக நன்றாக இருந்தது
முதலில் வெள்ளரிக்காய் போன்ற சுக்னி காயை ஒருவர் எடுத்தார் .ஒரு கைதேர்ந்த கலைஞர் போல் அதன் தோலை மிக அழகாக நளினமாக சீவினார்.
சிறிய அளவில் கூட தோல் இல்லாமல் அதே நேரத்தில் ஒரு துளி காய் கூட தோலோடு சேர்ந்து போய்விடாமல் மிகப் பொறுமையாய் சீவினார் .அதே பொறுமை நளினத்துடன் தோல் சீவிய காயை பொடிப்பொடியாக நறுக்கினார் அரவைப் பொறி (மிச்சி) கூட இவ்வளவு பொடியாக நறுக்கியிருக்காது
பிறகு ஒரு தக்காளி ஒரு பெரிய வெங்கா.யம் இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கி அந்தக்காயோடு சேர்த்தார் .சுக்னியின் வெளிறிய பச்சை நிறம் , தக்காளியின் சிவப்பு வெங்காய நிறம் மூன்றும் சேர்ந்து நாவுக்கு எப்படியோ கண்ணுக்கு மிக அழகாகத் தெரிந்தது
அந்தக்கலவையில் தயிரை ஊற்றி நன்றாகப் பிசைந்தார் .பிறகு ஒரு தட்டு நிறைய சோறு போட்டு அதில் ஒரு எலுமிச்சை சாறைப்பிழிந்தார் . அதன் மேல் மொச்சைக் குழம்பு போன்ற ஒன்றை நிறைய ஊற்றி நன்றாகப் பிசைந்து இருவர் சேர்ந்து நிதானமாக சுகனி காய் கலவையை தொட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள்
மிகச்சுவையான அறுசுவை விருந்து சாப்பிடுவது போல் உணவை அவர்கள் ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் பார்த்தாலே ஒரு நிறைவான உணவு உண்ட உணர்வு ஏற்பட்டது

இ(க)டைச் செருகல்

தொடரி துப்புரவுப்பணியில் இருக்கும் தனியார்துறை  ஊழியர்கள் அவர்கள் இருவரும். மிகக்குறைந்த ஊதியம் அதுவும் பணி புரியும் நாட்களில் மட்டும் .
ஆனால் அவர்கள் அன்று உணவை அனுபவித்து சாப்பிட்டது அவர்களை மிகப் பெரும் செல்வந்தர்களாய் உணர வைத்தது
பணம் வேறு செல்வம் வேறு என்பது மிகத்தெளிவாக விளங்கியது


இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்

sherfuddinp.blogspot.com

B F FT W          05112019 Tue






[1]

No comments:

Post a Comment