Monday, 15 June 2020

கம்பன் கண்ட அனுமன் அத்தாவின் எழுத்துக்கள்



கம்பன் கண்ட அனுமன் (முதல் பகுதி)



இக்கட்டுரை எழுதும் எனக்கு அனுமன் மீதோ அது போன்ற தெய்வங்கள் மீதோ பக்தி இல்லை .எனினும் கம்பன் தனது சித்திரத்தின் விசித்திரத்தால் எப்படி அவற்றின் மீது ஈடுபடச் செய்து விடுகிறான் என்பதைக் காட்டவே இக்கடுரையை எழுதத் துணிந்தேன்

“.பெண்ணாய்ப் பிறந்த என்னையே சீதை இவ்விதம் கவர்ந்து விட்டாளே! ஆடவர்  கதி என்னாவது!” என்று சூர்ப்பனகை முதன்முதல் பார்த்தவுடன் தேவியின் அழகில் ஈடுபட்டுக் கூறுவதுபோல் எம்போன்றோற்கே இத்தகைய ஈடுபாடு என்றால் பக்தியோடு படிப்பவர்களை இந்த நயம் அனலிடை வெண்ணெயைப் போல் உருக்கி விடாதா!

சிற்பிகள் சிலைகளை உருவாக்கி தம் கைத்திறனால் தெய்வக் களையைப் புகுத்தி வணக்கத்துக்குரியவையாக ஆக்கி விடுகிறார்கள் அதுபோல் கவியரசன் கம்பன் இராமாயணம் என்னும் இலக்கியத்தைப் படைத்துத் தமிழ்த்தாய்க்கு அழியாத அழகுச் சிலையை ஆக்கியுள்ளான்
காவியங்களில் இறைவணக்கம் கூறுதல் மரபு . இதில் முழுமுதற்கடவுளை கலைமகளை இன்ன பிற தெய்வங்களை வணங்குதல் வழக்கம் . கம்பன் இவ்வணக்கத்துக்குரிய தெய்வமாக அனுமனை ஆக்கி அஞ்சு பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் மைந்தனை ஆஞ்சனை புதல்வனை வணங்குகிறான் . கதாநாயகனாகிய இராமபிரனுக்கு அடுத்து முதலிடம் அனுமனுக்கே கொடுத்துள்ளான் என்பது இதன் மூலம் தெரிகிறது

அனுமனை இவ்வாறு உயர்த்தியதில் மற்றோர் பெரிய உண்மையும் காண்கிறோம்
நல்லது கெட்டது தெரிந்து அறவழி நின்றால் விலங்குகளும் தேவதைகளே ! என்று வாலியிடம் கூறிய இராமன் கூற்றையும் இது மெய்ப்பிக்கிறது

முதலில் கிட்கிந்தையில்தான் நமக்கும் இராமனுக்கும் அனுமனை அறிமுகப்படுத்துகிறான் கம்பன் . அங்கு எடுதுதுக்காட்டப்படுவது பணிவும் சொல்நயமும் .. முன்பின் அறியாத இராம இலக்குவரை சீதையை இழந்து பரிதவிக்கும் அச்சகோதரரைப்பார்த்து சுக்ரீவன் அஞ்சி ஒதுங்க அனுமன் அவர்கள் முன் சென்று தங்கள் வரவு நல்வரவாகுக என வரவேற்கிறான்
’கவ்வை இன்றாக, நுங்கள் வரவு! என்பது கம்பன் சொல் அரசிளங்குமரர்கள் திகைக்கின்றனர். இக்காட்டில் நமக்கு நல்லவரவா! என்று எண்ணுகின்றனர்.

அரக்கியாகிய சூர்ப்பநகையை “தீதில் வரவாக திரு நின் வரவு சேயோய்!” என்று வரவேற்றதும் அதனால் விழைந்த துன்பங்களுக்கு இராமன் மனக்கண் முன் சுழன்றபோலும் .

மறையவன் உருவில் நின்ற அனுமனைப்பார்த்ததும் இக்காடு இவன் இருக்கும் இடமாக இராதென நினைக்கிறான். முதலில் யார் நீ என்று கேட்காமல் “எங்கிருந்து இங்கு வந்து சேர்ந்தாய்” என்று கேட்டுவிட்டு பின் “யாரப்பா நீ” என்று கருணை ததும்பும் உளத்தோடு கேட்கிறான். கருனையோனும் எவ்வழி நீங்கியோய் . நீ! யாரென” இராமன் கேட்க (அனுமன்) இயம்பலுற்றான்.
: தன்னை யாரென்று கூறிகொள்ளுமுன் அந்த அனுமனின் சொல்லோவியம் நம் சிந்தையையெல்லாம் அள்ளுகிறது 

இராமபிரானைக்கண்டதுமே அவன்பால் எவ்வளவு ஈடுபட்டுவிட்டான் என்று பாருங்கள். முதல்முதலாக இராமனது கண்களைச்சந்திக்கத் துணிவு கொண்டவள் சீதை

“கண்ணொடு கண்இணை கவ்வின ஒன்றை ஒன்று உண்டன”
இரண்டாவதாக சந்திக்கும் திறன் அனுமனுக்குதான் இருந்திருகிறது. உடலின் அழகை வியந்த அனுமன் உடனே கருனையோனின் கண்களில் தோள்களில் அழகில் ஈடுபடுகிறான். முனிவராகிய விசுவாமித்திரரே ஈடுபட்டுத்தானே
“ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்”
என்றார். அவ்வாறிருக்க பக்தனாகிய அனுமனைப் பற்றிக் கூறவா  வேண்டும். வாயாரக் கூறுகிறான்! மேகம்போல திரண்ட அழகிய மேனியனே!
“மஞ்செனத்  திரண்ட கோல மேனிய”
என்றான். 
நஞ்சொடு  அமுதம் சேர்த்த நயனங்கள்
 “மகளிர்க்கு எல்லாம்  நஞ்செனத் தகையவாகி”
தாமரை மலர் போல் அழகு கொழிக்கின்றன. ஆனால் தாமரை மலர் பனியைக் கண்டால் தேம்பும். இக்கண்கள் பனிக்கு தேம்பாவை.
“பனிக்குத்தேம்பாக் கஞ்சம் ஒத்து அலர்ந்த  செய்ய கண்ண!” என்று அழைக்கிறான் அனுமன்.

மஞ்செனத் திரண்ட கோல மேனியா மகளிர்க்கு எல்லாம்
நஞ்செனத்தகையவாகி நளிரிரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சமொத்தலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்

மேனியழகிலே ஈடு பட்டுப் பின்னர் கண்களை கல்வி கல்லாத ஞானத்தையும் பெற்று அன்னைக்குக் காதலையும் அவனுக்கு ஞானத்தையும் தந்த கண்களைப் புகழ்கிறான். அதன் பின் தான் யாரென்று கூறி சுக்ரிவனாகிய தன் அரசனிடமிருந்து வந்தது தான் என்பதையும்
 “எம்மலைக் குலமும் தாழ இசை சுமந்து  நின்ற தோள்களையுடைய ஆஞ்சனேயன் தெரிவிக்கிறான் அனுமனது இச்சொற்கள் நம்மையே கவரும் போது கருணாமூர்த்தியாகிய இராமனைக் கவர்ந்ததில் வியப்பில்லையல்லவா!

“சொல்லின் செல்வன் என்ற விருதளித்த இவன் சிவனோ பரமனோ என்று ஐயுறுகிரான். தன் கண்களைக்  கவர்ந்ததிலிருந்தே இவன் கல்லாத கலையும் வேதமும் இல்லை என்றமுடிவுக்கு வந்து விட்டான் இராமன்
“யார் கொல் இச்சொல்லின் செல்வன் விரிஞ்சனோ விடை வலானோ”
என்று வியக்கிறான்.

மேலும் அனுமன் பேசுகிறான் தான்யாரென்று கூறி விட்டான். யாரிடமிருந்து வருகிறான் என்பதையும் அறிவித்துவிட்டான். இனி அவர்கள் யாரென்று அறிய வேண்டும்; தன் தலைவனுக்கும் அறிவிக்க வேண்டு வேண்டுமல்லவா!
“யார் நீங்கள்”
என்று கேட்டு விடலாம்; அது பண்பாகாது. 

எப்படிகேட்கிறான் பாருங்கள்
வீரர்களே! என் தலைவனுக்குத் தங்களை யாரென்று அறிமுகம் செய்ய வேண்டுமென்று உத்திரவிடுங்கள்”
 “யாரென  விளம்புகேன் நான் எம் குலத் தலைவற் கும்மை வீர  நீர் பணித்திர் ” என்றான் மெய்ம்மையின் வேலிபோல்வான்
என்ன நயம் என்ன நாகரிகம் பார்த்திர்களா?
இது கம்பன் கண்ட அனுமனின் தோற்றுவாய் தான்.
 கம்பன் காவியத்தில் அனுமன் பெருமை எழுத்திலும் ஏட்டிலும் அடங்கா!
இலக்குவன் கூற , இராமன்தான் , அவனுடன் இருப்பவன் என அறிகிறான் அனுமன். உடனே சென்னி மண்ணுற வணங்குகிறான்.
 “கேட்டு நின்றவக்காலின்  மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் ”
இது என்ன! அந்தணன் இப்படிச சுத்ரியன் கால்களில் வீழ்கிறான்! என்று இராமன் பதைத்தான். மாருதி தான் குரங்கினத்தொருவன் என்று கூறித்தன் சுய உருவத்தை காட்டினான்.
அந்த உருவம் எப்படியிருந்தததாம்:-


மேருமலையே , அவன் புயத்துக்கூட உவம்மை கூறப் போதாதாம்.
“பொன்னுருக் கொண்டமேரு புயத்திற்கும் உவமை போதா”
வேதங்களும் சாத்திரங்களும் உருவெடுத்து வந்தாலும், அவையாவும் இந்த உருவிற்கு எம்மாத்திரம்.
“வேத நல்நூல் பின்னுருக் கொண்ட தென்னும் பெருமையாம் பொருளும் தாழ” நின்றானாம்.
தரும தேவதை இதுவரை தனக்கு நிகர் ஒருவரும் இல்லை என்று தனித்து நின்றது. இவ்வுருவம் வந்ததும் அதன் தனிமையும் தீர்ந்தது.இத்தகையை சிறப்புகள் வாய்ந்த ஒரு அற்புத உருவைக் கண்டு மின்னுருக் கொண்ட வில்லோர்களாகிய இராமலக்குவர் வியப்புற்றதில் வியப்பில்லையே!

“மின்னுருக் கொண்ட வில்லோர் வியப்புற வேத நன்நூல்
பின்னுருக் கொண்ட தென்னும் பெருமையாம் பொருளும் தாழப்
பொன்னுருக் கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதாத்
தன்னுருக் கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான்”

மூர்த்தி பார்த்தான். அவன் எப்படிப்பட்ட மூர்த்தி! விண்ணையும் மண்ணையும்  இரண்டு அடிகளால் அளத்த அந்தத் தாமரைக் கண்ணனாலேயே, அனுமனது விஸ்வரூபத்தின் முகத்தைக் காணமுடியவில்லை.
“கண்டிலன் உலகம் மூன்றும் காலினாற் கடந்து கொண்ட புண்டரீகக் கண்ணாழிப் புரவலன் பொலன்கொள் சோதிக் குண்டலவதனம்”

அந்த ஒளிமயமான குண்டலமணிந்த முகத்தை இராமன் கண்டிலன். உலகளந்து சக்கரத்தால் மண்ணுயிர் காக்கும் திருமாலின் அவதாரமான இராமனே!கண்டுகொள்ள முடியவில்லை என்றால், அந்த அனுமனுடைய படிவத்தை என்னவென்று கூற இயலும்!அந்த ஒரு அளவில் மட்டும் பெரிதல்ல;கல்வியிலும் பெரியது;சூரிய பகவானிடத்தே கல்வி கற்ற உருவம்

கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள்ஜோதி
குண்டலவதனம் என்றால் கூறலாம் தகைமைத்தொன்றோ
பண்டைநூல் கதிரோன் சொல்லப் படித்தான் படிவம் அம்மா!

இப் படிவத்தை எப்படிப் புகழ்வதென்றே தோன்ற வில்லை இராமனுக்கு.
தம்பியைப் பார்த்தான்.”அம்மம்மா!” என்று ஆர்ப்பரித்தான் கமலக்கண்ணன். கமலம் மூடிக்கொள்ளும் இது மூடாத;தாளிட்டுக்ககொள்ளாத,கமலம் அன்ன தடங்கனான்” தம்பிக்கு கூறுகிறான். “அம்மம்மா”! என்று அதிசயித்து
“இது என்ன அற்புதம் தம்பி! அழியாத வேதங்கள்,பாபமற்ற ஞானங்கள் எல்லாம் தேடி அடைய முடியாத, மோஷசாம்ராஜ்யமல்லவா இந்தக் குரங்குருவில் இருக்கிறது.

நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்
கோட்படாப்பதமே ஐய! குரங்குருக்கொண்டது
மேலும்,இது இம் மண்ணுலகத்தில்  இருக்கும் உருவயிருந்தாலும், ராஜச,தாமச,குணங்கள் அற்ற சத்வ குணா நிலையிலே நின்றல்லவோ,நித்யஜோதிமயமாகத் தோன்றுகிறது தம்பி!” என்று இளவலிடம் கூறுகிறான் .

தாட்படாக் கமலம் அன்ன தடங்கணான் தம்பிக்கம்மா!
கீட்படா நின்ற நீக்கி, கிளர்படாதாகி,என்றும்
நாட்படாமறைகளாலும்,நவைபடா ஞானத்தாலும்,
கோட்படாப்பதமே! ஐய! குரங்குருக் கொண்டத்தென்றான்.

இந்த ஒரு பாடலிலுள்ள ஆத்மீகக் கருத்துகளை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விரித்துக் கொண்டே போகலாம்

இனி அனுமனின் நாவண்மையை ஆராய்வோம் அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்

எழுத்தாக்கம்
எங்கள் தந்தை
ஹாஜி கா. பீர்முகமது பீ எஸ்சி
நகராட்சி ஆணையர் ஒய்வு

15062020mon

sherfuddinp.blogspot.com


No comments:

Post a Comment