Tuesday, 15 August 2017

கதைப்பயணம் 5 சட்டம் ,ஒழுங்கு ???





 


இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதப்படாத சட்டம்(Unwritten constitution ) என்று சொல்வார்கள்
ஒரே ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலம் இதைத் தெளிவு படுத்தலாம்
 குடியரசுத்தலைவரின் கடமைகள் பொறுப்புகள எல்லாம் பற்றி  இந்திய  அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பிரித்தானிய அரசியோ அரசனோ அரசுத்தலைவர் என்பது எங்கும் எழுதப்படவில்லை . பின் எப்படி என்றால் மரபுகளைப் பின்பற்றி தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம் நடைமுறையில் எழுதப்படாத சட்டம் ஆகிறது.
இதுபோல் எழுதப்படாத சட்டங்கள் பல வங்கிகளிலும் பின்பற்றப்படுவது ஒரு வியப்பான ஆனால் உண்மையான செய்தி
குறிப்பாக வட மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் மிக அதிகம் .நான் கண்ட, கேள்விபட்ட சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக பெரும்பாலான வங்கிக்கிளைகளின் வேலை நேரம் காலை பத்து மணி துவங்கி மாலை ஐந்து வரை உணவு இடைவேளை இரண்டு மணி முதல் இரண்டரை வரை இருக்கும்
பத்தரை மணி முதல் ஐந்தரை மணி வரை என்பது வட மாநிலங்களில் பல இடங்களில் வங்கி வேலை நேரம்
இது ஒரு பேருக்குத்தான்.
பெரும்பாலான ஊழியர்கள் வரும் தொடரி எத்தனை மணிக்கு வருகிறதோ அதைப்பொருத்துத்தான் வங்கிப்பணிகள் துவங்கும். அதே போல் மாலை தொடரியைப்பிடிக்க ஏதுவாக பணி நேரத்தைக் குறைத்துக்கொள்வார்கள்
சில திருவிழா பண்டிகை நாட்களில் யாரிடமும் அனுமதி பெறாமல் விரைவில் வீட்டுக்குப் போய் விடுவார்கள்
வங்கிப்பணி நேரத்தில் வெளியே போய் முடி வெட்டிக்கொண்டு வந்த ஊழியரையும் அங்கு கண்டேன்.
நாட்காட்டி முகவராகப் பணியாற்றிய ஊழியர்  ஒருவர் அதற்குரிய பருவங்களில் வங்கி நேரத்திலேயே வெளியே போய் முகமைப்பணிகளை செவ்வனே முடித்து விடுவார்.
உணவு இடைவேளை முடிந்து காரம் போர்டு விளையாடி விட்டு நிதானமாக பணிக்கு வருவார்கள்
பணி நேரத்தில் பங்குச்சந்தையில் மணிக்கணக்கில்  தொடர்பில் இருப்பார்கள்
ஆய்வுப்பணிக்காக போயிருந்த ஒரு கிளையில் பெட்டகத்தில் இருந்து பணத்தை எடுத்து காசாளர் இருக்கைக்குக் கிளை மேளாலரே தூக்கிப்போய் வைத்துக்கொண்டிருந்தார்
இதெல்லாம் கடை நிலை ஊழியரின் பணிதானே நீங்கள் ஏன் அவரைச் செய்யச் சொல்லக்கூடாது என்று கேட்டேன். வேண்டாம் சார் தேவைஇல்லாத பிரச்சனை வரும் என்றார் .ஒரு வழியாக என் வற்புறுத்தலால் அந்தக் கடை நிலை ஊழியரை பணப்பெட்டியைத் தூக்குமாறு வேண்டிக்கொண்டார்.
திரைப்பட வில்லன் போல் இருந்தார் அவர் .வலது கையில் சிகரெட்டோடு இடது கையால் பணப்பெட்டியைத் தூக்கி வைத்து விட்டார் .
கிளை மேலாளர் என்னைப்பார்த்த பார்வையில் ஓராயிரம் செய்திகள், வினாக்கள்.
கோட்ட மேலாளர் ஒருவர் தன் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட கிளைக்கு அலுவல் நிமித்தமாய்ப் போயிருந்தார் . மாலையில் அவர் ஊழியர் கூட்டத்தில் உரையாற்றுகையில் எல்லோரும் நேர்மை , உண்மையுடன் உழைத்து வங்கி வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவர் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு ஊழியர் எழுந்து பேசத் துவங்கினார்.
“கோட்ட மேலாளருக்கு வணக்கம்
வெகு தொலைவில் உள்ள உங்கள் அலுவலகத்தில் இருந்து அலுவலகப்பணியாக எங்கள் கிளைக்கு வந்ததற்கு நன்றி மகிழ்ச்சி
.உங்கள் பணிக்காக வங்கி கொடுத்த மகிழுந்தில் வந்து வங்கியின் செலவில் விடுதியில் தங்கி உணவும் உட்கொள்கிறீர்கள் . இதெல்லாம் உங்கள் பதவிக்குரிய  உரிமைகள். .
ஆனால் உங்கள் துணைவியாரும் உங்களுடன் வந்திருக்கிறாரே  இது எந்த வகையில் நியாயம் நேர்மை? “
என்று கேட்க வாயடைத்துப்போய் அமர்ந்து விட்டார் கோட்ட மேலாளர் .
வங்கியின் மிக உயர் அதிகாரிகளையே பெயர் சொல்லி அழைப்பதும் அவர்களிடம் கடுகடுப்பதும் நிகழ்ந்தது உண்டு
மிகப்பெரிய கிளை ஒன்றில் ஊழியர்களின் காலம் தவறாமை பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு அலுவலர் அனுப்பப்பட்டார்..
மிக பந்தாவாக கிளைக்குள் நுழைந்த அவர் வருகைப்பதிவேட்டை எடுத்து வைத்துக்கொண்டார் ஊழியர்கள் வந்து வருகைப்பதிவேட்டில் கைஎழுத்துப்போடும் நேரத்தைக் குறித்துக்கொண்டார்
யார் யார் எவ்வளவு தாமதமாக வந்தார்கள் என்ற குறிப்புகளை ஒரு அறிக்கையாக உருவாக்கி கிளை மேலாளரிடம் அதில் கையெழுத்து வாங்கிகொண்டு புறப்படப் போகும் நேரத்தில் இரண்டு ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்
“ஒழுங்காக ஊர் போய் சேரும் எண்ணம் இருந்தால் அந்த அறிக்கையைக் கிழித்துப் போட்டு விட்டு விடுங்கள்
இல்லை நான் அறிக்கையை தலைமை அலுவலத்தில் சமர்ப்பித்தே தீருவேன் என்று அடம் பிடித்தால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்ல”
சுருக்கமான , தெளிவான சொற்கள்  
இதே போல் வேறொரு கிளையில் வருகைப்பதிவேட்டில் ஊழியர்கள் வரும் நேரத்தைக் குறிப்பிட்ட உதவி மேலாளர் உள்ளாடையோடு வங்கிக் கவுண்ட்டர் மேல் நிற்க வைக்கப்பட்ட ஒரு நிகழ்வும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆய்வுப்பணியில் ஒரு கிளைக்குப் போயிருக்கையில் அந்தக் கிளை மேலாளர் தனக்கு நிகழ்ந்தவற்றை கண்ணில் நீர் வராத குறையாக விவரித்தார்
ஒரு முறை மேலாளர் அறையில் ஒரு இடத்தில் அவர் கை வைத்தால் மின் அதிர்ச்சி அடையுமாறு மின் கம்பிகளை சொருகி மறைத்து வைத்திருந்தார்களாம். இறைவனருளால் மயிரிழையில் தப்பி விட்டார்.
இதைவிடக்கொடுமை அவர் அறையில் உள்ள கழிவறைத்தொட்டியில் தண்ணீர் போகாத அளவுக்கு கல்லைப்போட்டு பல நாட்கள் அடைத்து விட்டார்களாம்
ஒரு கிளையில் கணக்குப்பதிவேட்டில் பல இடங்களில் தொகையின் முன்னால் ஒரு ஓன்று போடப்பட்டிருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது
எடுத்துக்காட்டாக உங்கள் சேமிப்புக்கணக்கில் ரூபாய் பத்தாயிரம் இருந்தால் அதற்கு முன் ஓன்று போட்டால் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் என்று காண்பிக்கும்.
பொய்யான இடமாற்றல் ஆணை தயார் செய்த ஊழியர் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்,.
வட மாநிலத்தில் நல்லதே இல்லையா என்ற வினா உள்ளத்தில் எழுவது இயற்கை
.நிறைய , மிக நிறைய நல்ல செய்திகள் உண்டு..
 பொதுவாக நல்ல விசாலமான மனம், நட்பு பாராட்டும் குணம் உடையவர்கள். முதியவர்களைக் கண்டால் காலைத்தொட்டு வணங்குவது, அலுவலகத்தில் எல்லோரும் கைகுலுக்கி தழுவிக்கொள்ளுதல் என பல நல்ல பல பண்புகள் கொண்டவர்கள்.
அலுவலகத்தில் மதிய உணவு வேளையில் அனைவரும் கூடி உட்கார்ந்து எல்லோர் உணவையும் ஒன்றாகக்குவித்து எல்லோரும் பகிர்ந்து உண்பது ஒரு நினைவில் நிற்கும் நட்புணர்வுக்காட்சி.
சில மாதங்களே பணியாற்றிய ஒரு கிளையிலிருந்து நான் மாற்றலாகிப் போகையில் கிளை ஊழியர் அனைவரும் தொடரி நிலையம் வந்து, சுமைகளைஎல்லாம் தொடரிப்பெட்டியில் ஏற்றி வழியனுப்பி வைத்தது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நிற்கிறது
உணவுப்பண்டங்கள்,இனிப்புகள்,பால் பொருட்கள் எல்லாம் மிக மலிவாகவும் தரமாகவும் கிடைக்கும்.
நல்ல இயற்கை வளம் நிறைந்த பகுதிகள் பல வடமாநிலத்தில் உண்டு.
எனக்கு இருந்த சில நரைமுடிகள் கருப்பானது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
பஞ்சாபில் குடும்பத்துடன் இருந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தோம். . பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளியூர் போகவும் தங்கவும் நேரிடும். எந்த வித அச்சமும் இருந்ததில்லை .
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.. வட மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழர்களுக்கும் தென்னிந்தியந்தர்களுக்கும் ஒரு எளிதான சுகமான வாழ்க்கை முறை கிடைத்திருக்கிறது.
நாம் பள்ளியில்  வரலாற்றில் பாடமாக மட்டும் படித்த பலவற்றை வட மாநிலங்கள் நேரடியாக சந்தித்து அதன் வேதனை, துயரங்களை அனுபவித்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக அந்நிய நாடுகளின் படையெடுப்பு, உள்நாட்டு மன்னர்களின் ஆக்கிரமிப்பு, விடுதலைப்போராட்டம், நாட்டுப்பிரிவினை ,அதையொட்டிய மதக்கலவரங்கள், என்று சொல்லிகொண்டே போகலாம்.
இது போக வெள்ளம், புயல், என இயற்கைசீற்றங்கள், தட்ப வெப்ப நிலையில் கடுமையான மாறுபாடுகள் இவையெல்லாம் சேர்ந்து வட மாநிலத்தவர்களை இயல்பாகவே போராடும் குணம் கொண்டவர்களாக மாற்றி விட்டது என்பது என் கருத்து
அதற்கெல்லாம் மேல் நம்மூரில் இவர்கள் ஏன் பணி புரிய வருகிறார்கள் என்ற ஒரு போட்டி மனப்பான்மை
ஏற்கனவே நான் எழுதிய ஒரு சிறு நிகழ்வை மீண்டும்  குறிப்பிட்டு இந்தப்பகுதியை நிறைவு செய்கிறேன்
சிறு நிகழ்வுதான் ஆனால் அதன் தாக்கம் பெரிய அளவில் வட இந்தியர்கள் பற்றி ஓர் உயர்ந்த எண்ணத்தை என்னுள் உருவாக்கியது
கடும் குளிர்காலம்  முடிந்து இதமான வெய்யில் ..தொடர் விடுமுறையின் ஒரு நாளில் காலை உணவை முடித்து விட்டு நடந்து போகையில் ஒரு இடத்தில் விற்ற எலுமிச்சை தேனீரை வாங்கி குடித்து விட்டு காசு கொடுத்து விட்டு நடையைத் தொடர்ந்தேன் .
யாரோ பின்னால் தொடர்வது போல் தெரிய திரும்பிப் பார்த்து திடுக்கிட்டேன். தேநீர்க்காரர்-, இடையில் லங்கோடு மட்டும் அணிந்த நெடிதுயர்ந்த உருவம்- என்னைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் . ஒன்றும் புரியவில்லை
ஏதோ பெரிய தவறு செய்து விட்டோம் . இல்லாவிட்டால் தேநீருக்குக் காத்திருக்கும் கூட்டத்தை விட்டு விட்டு இவ்வளவு தூரம் நம்மைத் துரத்திக்கொண்டு வரமாட்டார். வங்கியும் தொடர் விடுமுறை, நமக்கு மொழியும் தெரியாது ஏதேனும் நிகழ்ந்தால் குடும்பத்துக்கு தகவல் சொல்லக்கூட யாரும் இல்லையே என்று எண்ண ஓட்டங்கள் .
இதற்கு மேல் ஓட முடியாது என்ற நிலையில் நான் நிற்க , அவர் வந்து பெரிதாக ஒரு கும்பிடு போட்டார் . பலி கடாவுக்கு மாலையோ என எண்ணம்..தோன்றியது
என் கையில் ஐம்பது பைசா நாணயத்தை வைத்து விட்டு வேகமாகத் திரும்பிப்போய்விட்டார்
திகைத்து நின்ற எனக்கு உண்மையை உணர சற்று நேரம் பிடித்தது .
தேநீரின் விலை ஐம்பது காசு. நான் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு வந்து விட்டேன்,. மீதம் ஐம்பது காசைக் கொடுக்க வெகு தூரம் என்னைத் தொடர்ந்து வந்திருக்கிறார்./
நெடிதுயர்ந்த அந்த மனிதர் இமயமாக உயர்ந்து இன்றும் என் நெஞ்சில் நிற்கிறார் .நன்றி சொல்லக்கூட வாய் வராத நான் கூனிக்குறுகிப் போனேன் ..
 ,
 சென்ற பகுதி பற்றி
கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த
கீதா, அஜ்மல், ஷிரீன் பாருக் , சிராஜுதீன் ,ஜோதி ,பாப்டி அனைவருக்கும் நன்றி
Geetha damodaran    Ajmal kha   Shreen farook
Like in FB

Sirajuddin
.வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை யாரோ அழைப்பது போல் இருக்கிறது என ஒரு வித அச்சுறுத்தல். .ரயில் என்ன ஒட்டக வண்டி போல் போகிறது என்ற அங்கலாய்ப்பு.....
......சென்னையில் இறங்கி வீட்டுக்குப்போகாமல் நேரே வழக்கமாக் காண்பிக்கும் மருத்துவமனை சென்றோம்
மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சொன்னது
She is perfectly alright (God’s Grace)....."
மேற்கண்ட பகுதிகள் எங்கள் பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் அம்மா அவர்களை 'பளிச்' என்று நினைவு படுத்தி மகிழ்வை அளித்தது.
மச்சான் அவர்களுக்கு மிக்க நன்றி.  
Jothy liakath
தம்பி.அஸ்ஸலாமு அலைக்கும். ரயில் பயணங்கள் பற்றிய உன் கட்டுரை மிகவும் சுவாரசியமாக ரயிலில் தொடர்ச்சியாக பயணம் செய்தது போலவே சுகமாக இருந்தது. அத்தாவிற்கு ஊர் மாற்றல் காரணமாக ஓர் ஊர் ஸ்டே ஷனில் இறங்கிய போது அத்தாவிற்கு மாலை எல்லாம் போட்டு தடபுடலாக வரவேற்றது தான் என் முதல் ரயில் பயணம் என்று நினைக்கிறேன். எந்த ஊர் என்பது ஞாபகமில்லை. அடுத்தாக சிதம்பரத்திலிருந்து உடம்பு சரியில்லாமல் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருந்த எஸ்.ஐ. மாமா வைப் பார்ப்பதற்காக மதுரைக்கு ரயிலில் , அத்தா, அம்மா, ெ மகராஜ், நான் , நீ , சுராஜ் எல் லோரும் பயண ப்பட்டது தான் நினைவு தெரிந்த ரயில் பயணம் .இப்போது சமீபகால வெளி யூர்திரமணங் களுக்காக அடிக்கடி ரயிலில் பயணித்தோம். இப்போது கொஞ்ச நாள் முன்பு மெகராஜுடன் மதுரையிலி ருந்து சென்னை வத்தோம். எனக்கென்னவோ, வழி நெடுக சின்ன சின்ன கிராமங்களைக் கடந்து வழியில் சாப்பிட்டு சந்தர்ப்பம் கிடைத்தால் ஊர்மக் களுடன் பேசிப் பழகும் கார் பயணம் தான் ரொம்பப் பிடிக்கும். அதிலும் கார் நடுவழியில் நின்று விட்டால் புளிய மரம், மாங்காய் மரம் என்று அனுபவம் இன்னும் ரசிக்கத்தக்க தாக இருக்கும். சமீபத்தில் நூர், ஷாஜித்துடன் நான் காரைக்குடிக்கு காரில் பயணம் போனது ரொம்ப நன்றாக இருந்தது. வருஷத்தில் குறைந்தது பத்து தடவையாவது பயணப்படும் மெகராசிடம் கேட் டால் ரயில் பயணம் பற்றிய அனுபவங்கள் நிறைய கிடைக்கும். இன்ஷா அல்லா மீண்டும் சந்திப்போம்.
பாப்டி (தொலைபேசியில்)
மிக நன்றாக இருந்தது   
இ(க)டைச் செருகல்
நேற்று விடுதலை நாள்
மனதில் தோன்றிய சிறு
வசன கவிதை
நள்ளிரவில் பெற்ற.
நாற்பத்தியேழில் இருந்து   
எழுபது ஆண்டுகளாய்
எதிர் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் விடியலை
 இலவு காத்த கிளி என

இறைவன் நாடினால்
 மீண்டும்
சந்திப்போம்  
வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com              

No comments:

Post a Comment