கடந்த மூன்று பகுதிகளில் தொடர்ந்து வங்கி பற்றிப்படித்து
களைத்திருப்பவர்கள் இளைப்பாற பயண இடைவேளையாக
எத்தனை முறை பார்த்தாலும் மலைக்க வைக்கும் சிலவற்றில் ரயிலும் ஓன்று.
அதை விட மலைக்கவும் திகைக்கவும் வைத்து அச்சுறுத்தியது ஒரு முறை
நிகழ்ந்த சீட்டில்லாப்பயணம். தொடரி நிலையத்துக்குள் நுழையும்போது வண்டி புறப்படும் நிலையில் நிற்க
, வண்டியிலேயே சீட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னதைக்கேட்டு உடன் வந்த இருவரும்
நானும் வண்டியில் ஏறி விட்டோம்.
அதிக அனுபவம் ,உலகறிவில்லாத மாணவப்பருவத்திலிருந்த நான் சீட்டு பரிசோதகரிடம் நேரே போய்
விபரம் சொல்ல, அவர் வண்டி புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை
மூன்று சீட்டுக்குரிய கட்டணமும் தண்டத் தொகையும் சேர்த்து ஒரு பெரிய தொகை கேட்க
அவ்வளவு பணம் இல்லையென்று நான் சொன்னவுடன் அப்படிஎன்றால் இறங்குமிடத்தில் காவல்
நிலையத்தில் உங்களை ஒப்படைக்க வேண்டும் என்று அச்சுறுத்தினார்.
கலக்கம், அச்சம் ,திகைப்பு,
மலைப்பு எல்லாம் கலந்த ஒரு குழம்பிய மன நிலை
உடனிருந்த பயணிகள் சொன்னபடி வழியில் ஒரு நிலையத்தில் வண்டி நிற்கையில்
இறங்கி மூன்று சீட்டு வாங்கிக்கொண்டு நிம்மதிப்பெருமூச்சோடு வண்டியில் ஏறிப்
பயணத்தைத் தொடர்ந்தேன்.
தப்புத்தான் ஆனால் அப்போதைக்கு வேறு வழி தெரியவில்லை
இறங்குமிடத்தில் காவல் நிலையம் அழைத்துச்செல்ல பரிசோதகர் நான் பயணம்
செய்த பெட்டி வாசலில் காத்திருந்தார். சீட்டைக் காண்பித்ததும் ஒன்றும் சொல்லாமல்
போய் விட்டார்.
ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சன்னலோர
இருக்கை.கிடைத்துவிட்டால்
வேகமாகத் தோன்றி மறையும் மின்கம்பங்கள், மரஞ்செடி கொடிகள்,
வயல்வெளிகள், ஆறு, குளம் குட்டைகள், சரசரவென்று கடந்து செல்லும் இன்னொரு தொடரி என
உலகமே நம் கண்ணுக்குள் வந்தது போல் ஒரு மகிழ்ச்சி ,உற்சாகம்.
இதெல்லாம் அசைபோடும் நினைவுகள் ஆகிப்போய்விட்டன.
அரிதாக பொதுப்பெட்டியில் பயணிக்கையில் சன்னலோர இருக்கையை பிடித்து
விடுவேன்
மற்றபடி குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கையில் சன்னலுக்கு வெளியே முழுதாகப்பார்க்க முடிவதில்லை
சன்னலோர இருக்கைகள் போல மிகப்பல நல்லவைகள் மாறிப் போய்விட்டன.
முன்பெல்லாம் ரயிலில் பயணிக்கையில் எந்த ஊரும் வருவதற்கு சற்று முன்
உயரத்தில் கேபின்கள் இருக்கும் .அந்தக் கேபின்களில் மிகப்பெரிதாக ஊர்ப்பெயர்
பளிரென்று தெரியும்படி மஞ்சள் நிற சுவரில் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும்..
கணினி மயமானபின் கேபின்கள் மாயமாகிப்போயின . .சின்னச்சின்ன வட்ட வடிவ
பலகைகளில் ஊர்ப்பெயர் சிறியதாக எழுதப்படுகிறது. .ஓடும் ரயிலில் அந்தப் பலகைகளை
படித்து ஊரை அறிவது மிக மிக சிரமம்..குளிர் பதனப்பெட்டி என்றால் இன்னும் சிரமம்
பெரிய பெயர்ப் பலகை
இருந்தாலும் அங்கு பளிச்சென்று வெளிச்சம் தரும் விளக்குகள் இருப்பதில்லை
ஒலிபெருக்கியில் பயணிகளின் கனிவான கவனத்துக்கு வண்டி எண் என்று துவங்கி மூன்று மொழியில்
அறிவிப்பு வந்து கொண்டேயிருக்கும். அதிலும் வண்டி நிற்பது எந்த ஊர் என்பதை
அறிவிப்பதில்லை
முன்பெல்லாம் இரவில் வண்டிகள் நிற்கும்போது அந்த இடத்தின் பெயரை
ரயில்வே ஊழியர்கள் உரக்கச்சொல்லுவார்களாம்
முன்பதிவு செய்த பயணிகள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பெட்டி
ஊழியர் நினைவூட்டுவார்
அடுத்து தண்ணீர் வசதி,.. ஒரு வண்டியில் பெரிய உயரமான பாத்திரங்களில்
தண்ணீர் வைத்துக்கொண்டு பணியாளர்கள் தள்ளிக்கொண்டு வந்து கேட்பவர்களுக்குத்
தண்ணீர் கொடுப்பார்கள் ,வண்டியை விட்டு இறங்காமலேயே தண்ணீர் குடிக்கலாம்,
பிடித்துக்கொள்ளலாம் இது ஒரு இலவச சேவை.. தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்காக
பாத்திரத்தைச் சுற்றி சணல் கயிறு பின்னப்பட்டிருக்கும்
பயணச்சீட்டு முறையில் மிகப்பல
மாறுதல்கள்
முன்பெல்லாம் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என
மூன்று வகையான பெட்டிகள் இருந்தன. முதல் வகுப்பில் நான்கு பேர் மட்டும் ஒரு
பெட்டியில் பயணிப்பார்,. இரண்டாம் வகுப்பில் ஆறு பேர் என நினைவு.
காலப்போக்கில் மூன்றாம் வகுப்பு நீக்கப்பட்டு இரண்டு வகுப்புக்கள்
ஆக்கப்பட்டது
தூங்கும் வகுப்பு என்று தனியாக உருவானது அண்மையில்தான். அதற்கு முன்பு
இரண்டாம் வகுப்பில் தூங்கும் வசதிக்கு கூடுதல் கட்டணம் பெறப்பட்டது அப்போது இரவு
ஒன்பது மணி முதல் காலை ஆறு வரைதான் தூங்கும் வசதி. அதில் இரண்டடுக்கு, மூன்றடுக்கு
என்று இருந்த்து .அதன் பின் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் வந்தன
இதில் என்ன பெரிய வசதி என்றால் ஒரு இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுடன்
பயணிகள் தயக்கமின்றி தூங்கும் வசதிக்கோ குளிர் வசதிக்கோ இடம்
இருப்பதைப்பொருத்து மாறி அமர்ந்து, அதற்குள்ள கூடுதல் கட்டணத்தை செலுத்தி விட்டுப்
பயணத்தைத் தொடரலாம் .
ஆனால் இப்போது அதெல்லாம் முடியாது. தூங்கும் வகுப்பு,. குளிர்
வகுப்பு இவற்றில் இரண்டு அடுக்கு, மூன்றடுக்கு, என்று
ஒவ்வொன்றும் தனித்தனி வகுப்பாகி விட்டது. அதற்குள்ள பயணச்சீட்டு இருந்தால்தான்
அந்தப் பெட்டியில் ஏறலாம் .. இல்லேயேல் சீட்டு இல்லாப்பயணம் போல் தண்டத்தொகை
செலுத்தத் வேண்டும்.
இவ்வளவு ஏன்? காத்திருப்பு பயணச்சீட்டு இருக்கிறதே என்று ஏறிவிட்டால்
அதற்கும் இதே நிலைதான்
இன்னொரு மாற்றம்-ஒரு எடுத்துக்காட்டோடு சொன்னால் எளிதில் விளங்கும்.
கடலூரில் இருந்து சென்னைக்குப் பயணிக்கும்போது இடையில் உள்ள கோடம்பாக்கத்தில்
இறங்க எண்ணினால் தாம்பரத்தில் இறங்கி புற நகர் தொடரியில் ஏற வேண்டும். சென்னை
எழும்பூர் வரை என்னிடம் சீட்டு இருந்தாலும் அது புற நகர் தொடரியில்
செல்லுபடியாகாதாம் தாம்பரத்தில் இறங்கி ,படியில் ஏறி இறங்கி வெளியே வந்து, நீண்ட வரிசையில் நின்று சீட்டு
வாங்கி மீண்டும் உள்ளே வந்து பயணிக்கவேண்டும். இது மிகச்சிரமமான் ,நேரம்
விரயமாகும் நடைமுறை .
நடை மேடையிலேயே சீட்டு வழங்கும் வசதி இருந்தால் இந்த நேர விரயத்தையும்
சிரமத்தையும் தவிர்க்கலாம்
இதற்கெல்லாம் மேல் இன்னொரு சிரமம் இருக்கிறது . மூன்றடுக்குத்
தூங்கும் பெட்டியில் உள்ள சிரமம். முன்பெல்லாம் இரவு ஒன்பது முதல் காலை ஆறு
வரைதான் தூங்கும் வசதி. இப்போது பெட்டியே தூங்கும் பெட்டி என்பதால் பயணம் முழுதும்
தூங்கும் உரிமை இருக்கிறது. இது உரிமையா கடமையா இரண்டும் இல்லையா என்பது ஒரு பெரிய
வினா,.
மீண்டும் கடலூர் சென்னைப் பயணத்தை வைத்தே பார்ப்போம். கடலூரில் மதியம்
ஒரு மணிக்குப்புறப்பட்டு மாலை ஐந்தரை மணியளவில் சென்னை வரும் சோழன் விரைவு
வண்டியில் நான் பயணிப்பது உண்டு. மூன்றடுக்கில் ஒரு பக்கம் உள்ள மூவரும்
ஒத்துப்போனால்தான் படுக்கவோ உட்காரவோ முடியும். . நடுப்படுக்கையை விரித்து
விட்டால் கீழ் இருக்கையில் யாரும் அமர முடியாது .. ஒருவர் நான் படுக்க மாட்டேன்
என்று அடம் பிடித்தால் மற்றவர்களும் படுக்க முடியாது. இது பல முறை நான் உணர்ந்த
சிரமம்.. பயணச்ச்கீட்டுப் பரிசோதகரிடம் இது பற்றிச்சொனால் அவர் கண்டு கொள்ளவே
மாட்டார்.
என் கருத்தில் மூன்றடுக்கு தூங்கும் வசதி என்பது மனித உரிமைக்கு
எதிரானது . முற்றிலுமாக நீக்கப்படவேண்டிய ஓன்று
என்ன எதோ தேர்வுக்கட்டுரை போல் போகிறதே என்று நீங்கள் உரக்க
சிந்திப்பது என் காதில் விழுகிறது. இதோ சில சுவையான தொடரிப்பயணங்கள்
சுவை என்றவுடன் தொடரிக் காபி நினைவுக்கு வருகிறது. என்னதான் வெந்நீர்
போல் இருந்தாலும் அந்தக் காப்பியைக் குடிக்காவிட்டால் பயணம் முழுமை பெறாது .
முன்பெல்லாம் பாட் காப்பி பாட் டீ என்று கொண்டு வருவார்கள். , பால்,
சீனி. டிக்காக்ஷன் எல்லாம் தனிததனி பீங்கான் குவளைகளில் இட்டு ஒரு தட்டில் வைத்து
கொண்டு வருவதே பார்க்க அழகாக இருக்கும். இந்த பாட் டீ காப்பி சாப்பிடவே பலரும்
ரயில்வே உணவகத்துக்கு வருவார்கள்
சில ஆண்டுகளுக்கு முன் எழும்பூர் நடை மேடையில் நல்ல காப்பி கிடைத்தது
.சுவையும் மணமும் சூடும் நெடு நேரம் நாவிலும் மனதிலும் நிலைத்து நிற்கும் . இப்போது பல நல்லவற்றைப்போல்
அதுவும் காணாமல் போய்விட்டது
எங்கள் வீட்டில் மகிழுந்து இருந்ததால் சிறிய வயதில் தொடரிப்பயணம்
அதிகம் போனதில்லை.Hill
man MSZ 7736. .பெரும்பாலும் அத்தா ஓட்ட எல்லோரும் அதில் பயணிப்பது தனி ஒரு மகிழ்வு
விழுப்புரத்தில் எங்கள் வீட்டுக்கு சற்று தொலைவில் தொடரிப்பாதை. அதைக்
கடந்துதான் பள்ளிக்கூடம் போகவேண்டும்
என் நினைவில் நிற்கும் முதல் தொடரிப்பயணம் பொள்ளாச்சியில் இருந்து
வேலூருக்கு பயணித்தது .கல்வி ஆண்டுக்கு இடையில் அத்தாவுக்கு பொள்ளாச்சியில்
இருந்து வேலூருக்குப் பணி மாறுதல். பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு
படித்துக்கொண்டிருந்த நான், பொள்ளாச்சியில் தங்கி அந்த ஆண்டுப்படிப்பை நிறைவு
செய்து விட்டு வேலூர் வந்தேன். தூங்கும் வசதி என நினவு. தவறுதலாகச் சென்னைக்கு
பயணச்சீட்டு வாங்கப்படடு. .பின் தொடரி வர்த்தகத்துறைக்கு எழுதி, கூடுதல் பணம்
திரும்ப வாங்கினேன்.
அடுத்து உடன்குடியில் பணியாற்றும்போது சனிக்கிழமை நெல்லை வந்து விட்டு
திங்கள் காலை நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள்
தொடரியில் நாசரேத் சென்று அங்கிருந்து பேருந்தில் உடன்குடி செல்வேன்.
அந்த வண்டியின் வேகம் பற்றிய கதையை (தண்டவாளத்தில் எருமை மாடு)
ஏற்கனவே உடன்குடி பகுதியில் எழுதியிருக்கிறேன்.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு அந்த நேரத்தில் அம்மா சுட்டுத்தரும்
தோசை கறிக்குழம்பை சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவேன். மிதி வண்டியில் தம்பி சகா
பின்னால உட்கார நான் ஒட்டிக்கொண்டு போவேன்...இந்தப்பயணம் ஒரு ஆண்டு காலம்
நீடித்தது . பின் நெல்லை நகர் கிளைக்கு மாற்றலாகி வந்து விட்டேன் ..
நெல்லையில் - நெல்லை சந்திப்பு, நெல்லை நகர், பேட்டை, மேலப்பாளையம.
பாளையங்கோட்டை என நிறைய தொடரி நிலையங்கள்
உண்டு.
அலுவலராகப் பதவி உயர்வு பெற்று நெல்லையிலிருந்து கேரளாவுக்கு மாறுதல்
. முதலில் நான் மட்டும் போனபபோது நெல்லையிலிருந்து கொல்லம் வரை ஒரு தொடரியில் போய்
அங்கிருந்து தொடர்பு வண்டிக்கு மிக நீண்ட
இடைவெளி இருந்தது. அந்த நேரத்தில் கொல்லம் கடற்கரையையும் அருகிலுள்ள மற்ற
இடங்களையும் சுற்றிப் பார்த்து வந்தேன்..
அதன் பிறகு கேரளா போவதற்கு திருச்சியிலிருந்து ஒரே தொடரியில் கேரளா
போய் விடுவோம். திருச்சியில் அந்த வண்டியில் ஏறியவுடனே மலையாள மணம் வீசும் .
அதேபோல் கேரளாவிலிருந்து தமிழ் நாட்டுக்கு வரும் அந்தப்பெட்டியில் உட்கார்ந்தவுடனே
தமிழ் நாட்டுக்கு வந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும்.
மேலாளராகப் பதவி உயர்வு பெற்று கல்கத்தா போய் சிவான்(பீகார் )
போனது ஒரு நீண்ட பயணம்
ஒரு முறை கல்கத்தாவில் இறங்கி சென்னை வண்டிக்காக நீண்ட நேரம்
காத்திருக்கையில் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு உணவு விடுதியில் மிருதுவான இட்லியும்
சுவையான தேங்காய் கெட்டிச் சட்னியும் (ஒயிட் சட்னி) சாப்பிட்டது ஒரு வியப்பான சுவை அனுபவம்,
அன்றே ஒரு தமிழர் சுங்கத்துறையில் தெரிந்தவர்கள் மூலம் மலிவான
விலையில் வெளிநாட்டு துணிகள், பொம்மை வாங்கித்தருவதாய் கல்கத்தா ஹவ்ரா நிலையத்தில்
இருந்து சியால்டா நிலையத்துக்கு அவர் செலவில் வாடகை மகிழுந்தில் அழைத்துச்சென்று
அங்கு என் பணத்தைப் பறிக்க முயற்சித்ததும்
இறைவன் அருளால் மயிரிழையில் பணத்தை மீட்டதும் ஒரு திகில் அனுபவம்
அலுவல் நிமித்தமாக ஒருமுறை சிவான் (பீகார்) கிளையில் இருந்து பாட்னா
சென்று வந்தேன். இரு வழிப் பயணமும் தொடரியில்தான். பாட்னாவில் இருந்து
திரும்பும்போது ஆயுத பூஜை என நினவு.
வழியில் இருக்கும் ஒவ்வொரு கோயிலிலும் தொடரியை நிறுத்தி, ஓட்டுனரும்
மற்ற ஊழியர்களும் இறங்கி வழிபாடு செய்து விட்டு திரும்பப் பயணத்தைத்
தொடர்ந்தனர்
குடும்பத்துடன் ஜலந்தர் பயணிக்கையில் பாரத் பந்தினால் டெல்லி நிலையத்தில்
ஒரு நாள் முழுதும் காத்திருந்து இரவில் புறப்பட்ட தொடரியில் வீட்டுச் சாமானகள் அனைத்தையும் ஏற்றி
பயணித்தோம். பயணச்சீட்டுப் பரிசோதகர் என்ன இவ்வளவு பொருட்களை பாயணிகள் பெட்டியில்
அடைத்து வைத்திருகிறீர்கள் . மற்ற பயணிகளுக்கு இடைஞ்சலாக இருக்குமே என்றார். ஒரு
சிறிய அன்பளிப்புக் கொடுத்ததும் நன்றியுடன் தேனீர் வாங்கிக்கொடுத்ததோடு ஜலந்தரில்
பொருட்களை இறக்கவும் உதவினார்
வாணியம்பாடியிலிருந்து சென்னைக்கு காலை ஆறு மணிக்கு ஒரு தொடரியில்
ஏறினால் பத்து மணிக்குள் சென்னை வந்து விடலாம். நீதிமன்றம் , அலுவலகப்பணிகளைப்
பார்த்து விட்டு மாலை நான்கு மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் அதே வண்டியைப்
பிடித்து இரவு வீட்டுக்கு வந்து விடலாம்.
இந்த வண்டியில் நிறைய காலை சிற்றுண்டிப் பொட்டலங்கள் விற்பனைக்கு
வரும்.. பயணிகள் பலரும் காலைக்கடன்கள் , சிற்றுண்டி எல்லாம் வண்டியிலேயே முடித்து
விட்டுத்தான் இறங்குவார்கள். சென்னையில் இறங்கி விட்டால் ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிக
விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
சதாப்தி வண்டியில் மைசூர் சென்னை பயணம் ஒரு இனிய அனுபவம்
பலமுறை ஊட்டி போயிருந்தாலும்
ஊட்டி மலை ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை
ஆராதனா படத்தில் வரும் சிம்லா ரயிலிலும் பயணிக்க ஆசை
சென்னை மெட்ரோ ரயிலில்வடபழனியிலிருந்து கோயம்பேடு பயணிக்கையில் நாம்
இருப்பது இந்தியாதானா என்றொரு ஐயம் தோன்றியது
அண்மையில் நூரக்கா பேத்தி அனிஷா திருமண வரவேற்பில் பங்கேற்க குடும்ப
உறுப்பினர் பலர் ஒரு குழுவாக தொடரியில் ராசபாளையம் சென்று திரும்பியது ஒரு
நினைவில் நிற்கும் பயணம் .
திகில் பயணத்தில் துவங்கிய இப்பகுதியை ஒரு திகில் பயணத்துடன் நிறைவு செய்கிறேன்,
மிகவும் உடல் நலமில்லாமல் இருந்த குப்பியை பார்க்க புதுக்கோட்டை
போயிருந்தோம். சென்னையில் மருத்துவ மனையில் காண்பிக்க குப்பி விரும்ப, தொடரியில் எளிதாக முன்பதிவு
கிடைக்க , குப்பி, நாங்கள் இருவர், மைத்துனர் என நால்வரும் பயணித்தோம்..குப்பியை
சக்கர நாற்காலியில் அமர்த்தி வண்டியில் ஏற்றினோம்.
நான் மேலே உள்ள படுக்கையில் ஏறிப் படுத்து நன்றாக உறங்கி, சென்னை
வரும்போதுதான் கண் விழித்தேன், .
மற்ற இருவரும் இரவு முழுதும் தூங்கவில்லை
தூங்க முடியவில்லை
.வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை யாரோ அழைப்பது போல்
இருக்கிறது என ஒரு வித அச்சுறுத்தல்.
.ரயில் என்ன ஒட்டக வண்டி போல் போகிறது என்ற அங்கலாய்ப்பு.
உடல் நலமில்லாமல் இருந்தவரை விட மற்ற இருவரும் மிகவும் சோர்வாகவும்
அச்சத்துடனும் காணப்பட்டார்கள்
ஒரு வழியாக சென்னையில் இறங்கி வீட்டுக்குப்போகாமல் நேரே வழக்கமாக்
காண்பிக்கும் மருத்துவமனை சென்றோம்
மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சொன்னது
She is
perfectly alright (God’s Grace)
-------OOOO ----
OOOO----
சென்ற பகுதி பற்றி கருத்துகளும் பாராட்டுகளும் தெரிவித்த ராஜா
சுப்பிரமணியன், சிராஜுதீன் , பாப்டி ஜோதியக்காவுக்கு நன்றி
CB retd
Raja Subramaniyan
I find every branch
has one or two difficult people who spoil the atmosphere giving head ache to
the manager. The CO will use the Branch manager as a human shield!
Sirajuddin
நடந்த நிகழ்வுகளை நேரில் காண்பது போல
இருக்கின்றது, தங்களின் எழுத்து நடை. 👏👏👏👏👏👏💐💐💐💐💐💐
Paapti
(தொலை பேசியில்)
மிக நன்றாக இருக்கிறது
Jothy Liakath
தம்பி. அஸ்ஸலாமு
அலைக்கம். வங்கி கதை பற்றி அபிப்பிராயம் உடனே எழுத முடியவில்லை. ரொம்ப லேட்டாகி
விட்டதால் உனக்கு எழுதுகிறேன். கதை நாயகர்கள் போலவே அனைத்து நபர்களின் குணம், நடவடிக்கைகள் சுவாரசியமாக உள்ளனர்.கதை களுக்கு
வைக்கப்படும் பொருத்தமான தலைப்புகள், அசத்து
கிறது.
பெரும்பாலும் குறைகளையும் எதிர்மறைக்கருத்துக்களையும் யாரும்
தெரிவிப்பதிலை
என் குறைகளை திருத்தி எழுத்து நடையை மேன்மைப்படுத்த குறைகளை எடுத்துச்
சொன்னால் உதவியாக இருக்கும்
இ(க)டைச்செருகல்
குறைந்த சுமை
பயணத்தில் நிறைந்த வசதி
இதுதான் காலங்காலமாக பயணிகளுக்கு தொடரித்த்துறை அறிவுறுத்தி வந்தது
இப்போது இதுவும் மாறி, குளிர்பதனப்பெட்டியில் பயணிப்பவர்களுக்கு இது
வரை வழங்கப்பட்ட போர்வை, விரிப்பு, தலையணை இனிமேல் கிடையாதாம்
நாமே வீட்டிலிருந்து சுமந்து செல்ல வேண்டும்.
இது தொலைக்கட்சியில் ஒளிபரப்பான செய்தி
இதற்கு சொல்லப் பட்ட காரணம் மிகவும் வேடிக்கையாகவும் வேதனைக்குரியதாகவும்
இருந்தது
படுக்கை விரிப்பு, த.உறை இவற்றைசுத்தம் செய்யும் ஊழியர்களிடம் சரியாக
வேலை வாங்க முடியவில்லையாம் .
மிக மென்மையாகச் சொன்னால் செருப்புக்கேற்றார் போல் காலை
வெட்டிக்கொள்கிறார்கள் நம்மையும் வெட்டச் சொல்கிறார்கள் (கையாலாகாத்தனம் என்று
சொன்னால் சற்றுக் கடுமையாக இருக்கும்)
இப்படியே மற்ற துறைகளும் சொல்லத் துவங்கினால் ?
மக்களே நீங்களே உங்கள் தெருக்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள் , என்பது
போன்ற அறிவிப்புக்கள் தொடராது என்பது என்ன நிச்சயம் ?
நிறைவாக ஒரு சிறிய செய்தி (பெரிய குறை)
ரயில் பெட்டி படிகளுக்கும்
நடை மேடைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி. கவனமின்றிக் காலை விட்டால்
இருப்புப்பாதையில் விழுந்து விடுவோம்.
இறைவன்
நாடினால்
மீண்டும்
சந்திப்போம்.
.வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment