Wednesday, 6 December 2017

கதைச் சிற்றுலா ஞாபகம் வருதே




ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே



திரைப்படமே பார்த்ததில்லை என்று சொல்லும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா ? எனக்குத் தெரிந்து அப்படி யாரும் இல்லை
ஆனால் நான் பார்த்தது போல் ஒரு திரைப்படம் பார்க்கும்  வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும் !!
இது முழுக்க முழுக்க ஒரு உள்ளூர் தயாரிப்பு  மேக் இந்தியா போல்
சொந்த ஊரான திருப்பத்தூரில்தான் இப்படி ஒரு படம் பார்த்தேன். மற்ற ஊர்களில்.இது போல் உண்டா  என்பது தெரியாது
பெரும்பாலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஒட்டி இது போன்ற படங்கள் திரை(?)யிடப்படும் .இதற்கு ஒரு வலுவான பொருளாதாரப் பின்னணி இருக்கிறது அது பற்றிப் பின்பு
படம் தயாரிக்க முதல் தேவை படச்சுருள் .ஆனால் இந்தப்படத்திற்கு நீளமான படச்சுருள் எல்லாம் தேவையில்லை . படத்துண்டுகள் இருந்தால் போதும் .அது எங்கே, எப்படி கிடைக்கும் எப்படி சேகரிப்பது என்பதுதான் படத் தயாரிப்பாளரின் தொழில் திறமை, தொழில்நுட்பம்
அதனால்  அதை  வெளியிட ஒரு சிறு தயக்கம்  
போதுமான அளவு படத்துண்டுகள் கிடைத்து விட்டால் அடுத்து தொகுப்பு –எடிட்டிங் என்று வைத்துக்கொள்ளலாம்  கிடைத்த துண்டுகளை வைத்து ஒரு கதை சொல்லும் அளவுக்கு முழுத்திறமையும் காண்பித்து தொகுக்க ஒரு பிறவிக் கலைஞனால்தான் முடியும்
தொகுத்த படங்களை திரையிடுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு துண்டுக்கும் அட்டையால் சட்டம் – பிரேம் அமைக்கவேண்டும்
தொகுத்து சட்டம் போட்டு வரிசையாக அடுக்கி விட்டால் அடுத்து படத்தை  வெளியிட  வேண்டியதுதான்
அதற்கு ஒரு திரையரங்கு வேண்டும். சற்றுப் பழுதடைந்த , யாரும் இல்லாத வீடுதான் சரியான தேர்வு கதவில் ஒரு ஓட்டை இருக்கவேண்டும். அல்லது எளிதில் ஒட்டைபோடும் அளவுக்கு பழைய கதவாக இருக்க வேண்டும்
இனி தேவையான பொருட்கள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி ,ஒரு உருப்பெருக்கி கண்ணாடி அவ்வளவுதான்
சூரிய ஒளி கண்ணாடியில் பட்டு பிரதிபலித்து கதவு ஓட்டை வழியே பாய்ந்து இருட்டாக உள்ள அறை சுவரில் விழவேண்டும்
கதவு ஓட்டையில் உருப்பெருக்கியை வைத்து , அதனருகில் படத்துண்டுகளை வைத்தால் படம் சுவரில் பெரிதாய்த் தெரியும் அந்தப்படத்துக்குப் பொருத்தமாக படத் தயாரிப்பாளர்  வாயினால்   ஒலிகளை எழுப்புவார்.
வணக்கம் என்ற படம் வந்தால் இலங்கை வானொலியில் பாடும் வணக்கம் எங்கள் வணக்கம் என்ற பாட்டு ஒலிக்கும்
குதிரை படம் வந்தால் டொக் டொக் என்று குளம்பொலி
சண்டைக்காட்சிகள வந்தால் வாளோசை
ஊர்திகள் வந்தால் அதற்கேற்ற ஓசை
படத் தயாரிப்பாளர் இயக்கம், இசை, ஒலி ஒளி படத்தொகுப்பு பட வெளியீடு அரங்கு ஏற்பாடு கட்டணப்பொறுப்பு எல்லாம் டி ஆர் போல் ஒருவரே
கட்டணம் எவ்வளவு,? அடுப்புக்கரித்துண்டுகள் பத்திலிருந்து இருபது வரை. தகுதி உள்ளோருக்கு முழு விலக்கும் உண்டு,,
இந்தக்கட்டணத்தில்தான் நான் குறிப்பிட்ட பொருளாதாரப் பின்னணி வருகிறது..திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு திறந்த வெளியில் – தெரு ஓரங்களில் மூன்று கல்லை அடுப்பாக வைத்து விறகு எரித்து அண்டாவில் சமையல் செய்வார்கள் 
சமையல் முடிந்து தண்ணீர் ஊற்றி அடுப்பை அணைத்தவுடன் அங்கு இருக்கும் கரியைப் பொறுக்கி எடுக்க சிறுவர்கள் பெரியவர்கள் எல்லோரும் முயற்சி செய்வார்கள் சிதறு தேங்காய் பொறுக்குவது போல் இதற்கும் தனித் திறமை வேண்டும்
ஒரு பாழடைந்த வீட்டின் இருட்டறையில் கூடி நின்று இது போல் படம் பார்ப்பது இன்றளவும் மனதில் நிற்கும் ஒரு திகில் அனுபவம் அதனால்தான் அறுபது ஆண்டுகள் கழித்தும் விவரித்து எழுத முடிகிறது
செல் பேசியில் உலகத்தையே அடக்கி கையில்  வைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு கிடைக்காத ,கிடைக்க முடியாத ஒரு இனிமை அது 

இறைவன் நாடினால் மீண்டும் எப்போதாவது சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

s



No comments:

Post a Comment