Wednesday, 26 December 2018

உடல் நலக் குறிப்புகள்





உடல் நலம் சார்ந்த அக்குபஞ்சர் , யோகா, வர்மா ,பஞ்சகர்மா , 
நினைவுத்திறன் வளர்ச்சி என பல துறைகளில் முதுநிலைப் பட்டம், பட்டயம் பெற்றிருக்கிறேன் . .இருந்தாலும் மருத்துவக்குறிப்புகள் எதுவும் நான் எழுதுவதில்லை
.ஊடகங்களில் மருத்துவக்குறிப்பு பதிவது கூடாது என்பது என் கருத்து . சரியான புரிதல் இல்லாதபோது தவறுகள் நிகழ வாய்ப்பு  உண்டு
இப்போது சில  உடல் நலம் பற்றிய சில மிக எளிதான குறிப்புகளை உங்கள் முன் வைக்க இருக்கிறேன்
இவற்றில் மருந்து, மாத்திரைகள் எதுவும் இருக்காது. எனக்கு மூத்த தலை முறை சொன்னது  அல்லது நான் படித்தவற்றில், காதில் விழுந்ததில்  மிக எளிதானது , நான் எனக்கு , என் குடும்பத்துக்கு செய்து பார்த்து பலன் கண்டது இவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்ககிறேன்                                                              ..
இறைவன் அருளால் முதல் பகுதி புத்தாண்டில்                           
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B/F/W            26122018 Wed




Sunday, 23 December 2018

வண்ணச் சிதறல் 38 பழையன புகுதலும் ......



 

பழையன புகுதலும் ......


அழுத்தக் கலன் (Pressure Cooker)  எங்கள் வீட்டில் வாங்கி அரை நூற்றாண்டுக்கு மேல் இருக்கும் . அதோடு கொடுத்த அளக்கும் நெகிழிக் குவளை (Plastic measuring  Jar) இன்னும் என்னிடம் இருக்கிறது முகம் மழிக்க தண்ணீர் அதில் வைத்துப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன்...மழிப்பை விட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன . இன்னும் குவளையை விடவில்லை .அப்படியே புதியது போல் இருக்கிறது




அப்போதெல்லாம்  அழுத்தக் கலனோடு  பெரிய சமையல் குறிப்பு நூல் , இடுக்கி, குவளை, கலனுக்கு உள்ளே வைக்கும் பாத்திரங்கள் எல்லாம் கொடுப்பார்கள் . சமையல் குறிப்பு நூலும் இன்னும் இருக்கிறது .கலன் என்ன ஆனது என்பது நினைவில் இல்லை

காரைக்குடிக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ளப் போயிருந்தேன். விழா முடிந்து ஊர் திரும்ப பல்லவன்  விரைவு வண்டியைப் பிடிக்க தொடரி நிலையம் போய்க்கொண்டிருந்தபொது  .ஒரு இடத்தில் ஓட்டுனர் “ சார் இந்த ரோடு போட்டு நூறு வருஷமாச்சு ‘வெள்ளக்காரன் காலத்தில் போட்டது . இன்னும் அப்படியே இருக்கிறது என்றார் “

அண்மையில் என் காதில் விழுந்த ஒரு தகவல்
காரைக்குடியில் மைய மின் வேதியியல் ஆராய்ச்சிக் கழகம் ( CERCRI என்று அழைக்கப்படும்(Central Electro Chemical Research Institute )  திறப்புவிழாவுக்கு தலைமை அமைச்சர் நேரு வந்தபோது அவருக்காக அவரது நண்பரும் செக்ரி வருவதற்கு முழு முதல் காரணமாய் இருந்தவருமான வள்ளல் அழகப்பச் செட்டியார் தன் சொந்தச்செலவில் ஒரு சாலை அமைத்தார் என்பது

இந்தச் சாலைதான் ஓட்டுனர் சொன்ன சாலை என்று வைத்துக்கொண்டாலும் எப்டியும் எழுபது ஆண்டு காலத்தைக் கடந்த ஒரு சாலை இன்னும் நல்ல நிலையில் இருப்பது பெருமைக்கும் வியப்புக்கும் உரிய செய்தி

இப்போது போடப்படும் சாலைகளில் எழுபது வாரங்கள் கடந்தாலே  நல்ல சாலைகளாகப் பேசப்படுகின்றன . போட்ட சில நாட்களிலேயே பல்லை இளிக்கும் சாலைகளும் பாலங்களும் உண்டு

ஆல்பம் எனப்படும் படத்தொகுப்பில் அத்தா அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவப்பருவத்தில் எடுத்த புகைப்படம் ஓன்று அண்மையில் பார்த்தேன் .எண்பது ஆண்டுக்கு முந்திய அந்தப்படம் நிறம் , புதுமை மாறாமல் அப்படியே இருக்கிறது

ஆல்பத்தில் பழைய கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்ப்பதில் ஒரு இனிமை, மகிழ்ச்சி .இன்று கைப்பேசியில் தினமும் நிறைய  படங்களை எடுத்துத் தள்ளுகிறோம். அவற்றைத் திரும்பப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருவதேயில்லை

கோவையில் ஒரு உணவு விடுதியில் உணவுப்பொருட்கள் வெளியே கொண்டு செல்ல  கண்டிப்பாக பாத்திரங்கள் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள் 
..
சாம்பார் சட்னி வாங்க பாத்திரம் , சாப்பாடு வாங்க பெரிய அடுக்குப் பாத்திரம் கொண்டு போன என் இளமைப்பருவம் நினைவுக்கு வருகிறது  ..

வட மாநிலங்களில் மண் பாத்திரங்கள்  பெரிதும் பயன்பாட்டில் இருக்கின்றன. . வங்காளத்தில் தேநீர் விடுதிகளில் மண் குவளையில்தான் தேநீர் கொடுக்கிறார்கள் .ஒரு முறை பயன்படுத்திவிட்டு உடைத்துப்போட்டு விடுகிறார்கள

தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவகங்களில் காபி செம்பு அல்லது பித்தளை குவளைகளில் தருகிறார்கள் .

இதுபோல் இன்னும் எத்தனையோ இடங்களில் பழமை மீண்டும் புகுந்து புதுமையை விலக்குகிறது

நாட்டு மாட்டுப்பால், லிட்டர் நூறே ரூபாய்

மண்பானை சமையலா விலை அதிகம் நட்சத்திர உணவகங்களில்

கருப்பட்டி கிலோ முன்னூரைத் தொடுகிறது

நாங்கள் விறகடுப்பில் சமைக்கிறோம் என்ற அறிவிப்பு பல  உணவகங்களில்.

பள்ளிக்கூடங்களில்  பிஸ்ஸா, பர்கர் தடை செய்யப்பட்டு சுண்டல் , வடை போன்ற பழைய  சிற்றுண்டிகள் மீண்டும் வந்து விட்டன 

பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி விலை அதிகம் .அதேபோல்தான் நாட்டுக்கோழி முட்டையும்

இதன் உச்சகட்டம்தான் உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா கரி இருக்கா என்னும் விளம்பரம் .உப்பு உமிக்கருக்கில் பல் விளக்கி நன்றாகத்தான் இருந்தார்கள் இப்போதே தெருவுக்கு தெரு பல் மருத்துவர்

இப்படி பல நல்ல பழையன புகுந்தது போக தேவையற்ற பல பழையனவும் புகுகின்றன பல முறை சொல்லிக்காட்டியதுதான் .மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை – தொலைக்காட்சித்தொடர்கள்-
அரைத்த மாவையே அரைத்தது போக புளித்துப்போன பழையமாவை தேடிப்பிடித்து அரைக்கிறார்கள் 

பில்லி சூனியம் , மண்சோறு , பரிகாரங்கள், தாலி , மாமியார், மருமகள் சதி வேலைகள் , பழி வாங்குதல் மூட நம்பிக்கைகள்  என்று எதிர் மறைக் கருத்துக்கள்   எல்லாத்தொலைக்காட்சிகளிலும் எல்லாத் தொடர்களிலும் மையக் கருத்து

அகப்பொருள் எது  புறப்பொருள் எது என்பது மறந்துபோகும் அளவுக்கு பேச்சுக்காட்சிகள், ஆட்டம் பாட்டம் .

தெருவில் உட்கார்ந்துகொண்டு துணைவிக்குப் பேன் பார்ப்பதை தொலைக்காட்சியில் பெருமையாகப் பேசுவாராம் ஆனால் அது அவர் பர்சனல்  மேட்டராம் . அது பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாதாம் 
  
கற்காலம் நோக்கி நடைபோடும் உடை அலங்காரம் 
இன்னொரு பழையன புகுதல் திரைப்படப் பெயர்களில்- 

பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, கர்ணன் திருவிளையாடல், காக்கிச்சட்டை போன்ற பழைய படங்களின் பெயர்களில் புதிய படங்கள்

மின்னணு வாக்குப்பெட்டிகள் வேண்டாம் பழைய பெட்டியே வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது தலைதூக்குகிறது

பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு என்றுதான் படித்திருக்கிறேன்.. மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்ற விதியில் மரபும் சக்கரச் சுழற்சியில் மேலும் கீழும் போகும்போலும்

இ(டை)ச்செருகல்.

 வாக்குப் பெட்டியை வடிவமைத்தவர் மிகப்பெரிய தீர்க்கதரிசி – உண்டியல் வடிவில் அமைத்துள்ளார் என எங்கோ படித்தேன்

மூளைக்கு வேலை 
::
சென்ற பகுதியில் கேட்ட எளிய வினாவுக்கு யாரும் இதுவரை விடை சொல்லவில்லை
எனவே அதையே திரும்பப் போடுகிறேன்
“திருக்குறளில் இடம்பெற்ற பழங்கள் எவை?”

 விடை அடுத்த பகுதியில்


இறைவன் நா

டினால்
                    மீண்டும்
                            சந்திப்போம்

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com


B/F/W        23122018 sun














Saturday, 15 December 2018


தமிழ் (மொழி) அறிவோம் 19
.தென் பாண்டிச் சீமையிலே
“ ஏலே இங்க வாலே”
என யாரோ யாரையோ விளிக்க நான் சற்று திடுக்கிட்டேன் . என்ன இவ்வளவு முரட்டுத்தனமாகப் பேசுகிறார்கள் எதோ சண்டை சச்சரவுக்கு முன்னுரையோ என எண்ணினேன்
பிறகுதான் தெரிந்தது இது ஒரு இயல்பான அன்பு கலந்த அழைப்பு என்று .
கோவையிலிருந்து அத்தாவுக்கு நெல்லைக்குப் பணி மாறுதல் . தமிழ் நாட்டுக்குள்தான் ஆனால் , பேச்சு, நடை உடை பாவனை, ஊரின் அமைப்பு, ஏன் பருவ நிலையில் கூட எவ்வளவு மாறுதல் !
பள்ளி மாணவர்கள், கடைப் பணியாளர்கள் எல்லாம் முழு கால்சராய் அணிவது கோவை வட்டார வழக்கம். ஆனால் நெல்லையிலோ வங்கி, அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் வேட்டியுடன்
கோவை மக்கள் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குப்போவதை டவுனுக்குப் போகிறேன் என்பார்கள.நெல்லையில் ஐந்து கிலோமீட்டரில் உள்ள பேட்டைக்குப் போவதை ஊருக்குப் போகிறேன் என்று சொல்வார்கள்
அதேபோல் சிறுவர்களைக்கூட கண்ணு வாங்க போங்க என்று சொல்லும் கோவையிலிருந்து நெல்லை வந்த எனக்கு வாலே போலே பேச்சு ஒரு திடுக்கத்தை உண்டாகிக்கியதில் வியப்பொன்றுமில்லை 
யாரிடமாவது பேசிக்கொண்டு வரும்போது அவர்கள் உச் உச் என்று சொல்வதைக்கேட்கும்போது நாம் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றும் . போகபோகத்தான் தெரிந்தது உச் என்பது ஆம் என்று சொல்வது என்று
எங்காவது போகும்போது தூரமா என்று கேட்டால் எங்கே போகிறீர்கள் என்று பொருளாம். இது புரியாமல் நான் பலமுறை இல்லை பக்கம்தான் என்று சொல்லியதுண்டு
நெல்லைக்கு உள்ள சிறப்புகள் சொல்லி மாளாது- எல்லோருக்கும் தெரிந்த அல்வா,,தாமிரபரணி ஆறு, சுலோச்சனா முதலியார் பாலம், ஈரடுக்கு மேம்பாலம், கல்தோசை, சொதி , உளுந்தங்களி , வத்தக்குழம்பு , வெண்ணிப் பழையது ,நெல்லையப்பர் கோயில். தேர், வெள்ளைக் கத்தரிக்காய்  என்று அடுக்கிகொண்டே போகலாம்.
இவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதலில் நிற்பது நெல்லைத்தமிழ்
அங்கு புழங்கும் சொற்களுக்கு ஒரு தனி அகராதியே போடலாம் , என் மனதில் நிற்கும் சிலவற்றை சொல்கிறேன்
வாரியல்- விளக்குமாறு
மேடை – மாடி
கோட்டிக்காரன் – மன நிலை சரியில்லாதவர்
சாரம்- கைலி
முடுக்கு- சந்து
குறுக்கு- இடுப்பு ,முதுகு
கட்டி- கருப்பட்டி
தூள்- காப்பித்தூள்
சார்வாள் , அண்ணாச்சி - மரியாதையான அழைப்பு
ஏட்டி- அடியே ,

இது போக உச்சரிப்பிலும் பலமாற்றங்கள்
என்ன சொல்லுத- என்ன சொல்கிறாய்
எப்ப வருதிய- எப்போது வருகிறீர்கள்
நிக்கான் – நிற்கிறான்
செய்யுத- செய்கிறாய்
 குளத்துமணி, நெல்லை நாயகம் , குத்தாலிங்கம் போன்ற பெயர்களைக் கேட்டாலே அவர்கள் நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி விடலாம்
அதுபோல் நெல்லை மக்கள் ஒரு சில சொற்கள் பேசினாலே அவர்களின் மொழி அவர்களை இனம் காட்டி விடும்
பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட தமிழ்த் தென்றல் நெல்லையில்தான் முதலில் மணம் பரப்பியது எனவே அதுதான் உண்மையான தமிழ் என்கிறார்கள்
காரைக்காலில் வாரியல், ( விளக்குமாறு ) மேடை (மாடி) போன்ற நெல்லைதமிழ் சொற்கள் புழக்கத்தில் உள்ளன
திருவாரூர் பேச்சிலும் நெல்லை மணம் பரவி நிற்கிறது.
இது பற்றி தமிழ் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்யலாம்  

மீண்டும் அடுத்த மாதம்  வேறொரு பதிவுடன்

Blog Address
B/F/த 16122018  sun







.
 

Wednesday, 12 December 2018

20+40+ ---


 Image result for retirement

20+40+ ---


The debate is endless

Retirement – a blessing or not

No simple one word answer is there.

It depends on so many factors the main of which is our own  mindset

The major blessing in retirement is – the certainty. I pretty well know  I cannot escape  my status changing from employee to ex employee once I attain the age of 60

Obviously it is my responsibility to make the exit process a smooth and pleasant one

Like many of us, I have spent a major portion of my life in Bank

Here I am to present the retired life in the form monthly postings

No tips, no suggestions no advices – only sharing of experiences. I will not follow any chronologic order . Otherwise it may look like an autobiography .

This is just an introduction

Let us meet next month in next part



Blog address

sherfuddinp.blogspot.com   

12122018 B/FB/R

Sunday, 9 December 2018

கதை நேரம் 11 Pound of Flesh



Pound of FleshImage result for a pound of flesh meaning



சரி , உனக்கு உரிய ஒரு பவுண்டை நீ எடுத்துக்கொள் .கடன் ஆவணம் இந்த உரிமையை உனக்குக் கொடுக்கிறது ஆனால் அப்படி எடுக்கும்போது ஒரு துளி குருதி சிந்தினால் கூட நீ கொலைக்குற்றத்துக்கு ஆளாவாய் . உன் சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்படும் “
வெனிஸ் வணிகன் (Merchant of Venice) ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்களில் ஓன்று .மிகப்பெரிய அந்தக் கதையை மிக மிக சுருக்கமாக தர முயற்சிக்கிறேன்

அந்தோணி - பசானியோ – மிக நெருக்கமான நண்பர்கள் ..பசானியோ போர்ஷியா என்ற செல்வந்தர் குலப்பெண்ணை மணம் புரிய விரும்புகிறான் .அந்தபெண்ணின் நன் மதிப்பை பெறுவதற்காக சில ஆடம்பரங்கள் செய்துகொள்ள பசானியோவுக்கு பணம் பெருமளவில் தேவைப்படுகிறது
வணிகத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அந்தோணி  பசானியோவுக்கு உதவ முடியாத சூழ்நிலை ..யாரவது பசானியோவுக்கு பணம் கொடுத்தால் தான் அதற்கு பிணையாக இருக்க அந்தோணி  முன் வர ,பசானியோ சைலாக் என்ற யூதரிடம் கடன் கேட்கிறான்

அந்தோணி சைலாக் இடையே ஒரு பகை உணர்ச்சி பல காலமாக  இருந்து வருகிறது ,கொடிய உள்ளம் கொண்ட சைலாக் இதை வைத்து அந்தோணியை பழி வாங்க எண்ணுகிறான்

கடனுக்கு வட்டி ஏதும் வேண்டாம் . ஆனால் குறிப்பிட்ட நாளில் கடன் திரும்ப செலுத்தப்படாவிட்டால் அந்தோணியின் மார்புப்பகுதியில் இருந்து ஒரு பவுண்ட் சதையை சைலாக் வெட்டி எடுத்துக்கொள்வான்

இதற்கு அந்தோணி ஒத்துக்கொள்ள , ஆவணத்தில் எழுதி வாங்கிக்கொண்டு சைலாக் பசானியோவுக்கு பணம் கொடுத்து விடுகிறான்

அந்தோணியின் வணிக கப்பல்கள் கடலில் மூழ்கி விட்டதாக செய்தி வருகிறது . குறிப்பிட்ட நாளில் கடனை கட்ட முடியாமல் போய்விட சைலாக் நீதிமன்றம் சென்று அந்தோணியை சிறையில் அடைத்து தனக்கு அந்தோணியின் ஒரு பவுண்ட் சதையை பெறவும் வாதிடுகிறான்

எல்லோரும் எவ்வளவோ சொல்லிப்பார்க்கிறார்கள. பிறகு பணம் கைக்கு வந்து விட  பசானியோ தன் நண்பனைக் காப்பாற்றுவதற்காக கடன் தொகையைப்போல் இரு மடங்கு, மும்மடங்கு என பத்து மடங்கு வரை கொடுக்க முன் வருகிறான்

கல்நெஞ்சம் கொண்ட சைலாக் தனக்கு ஒரு பவுண்ட் சதை கொடுத்து நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறான்

அப்போது அங்கு வந்த ஒரு வழக்கறிஞர் கூற்று வழக்கின் போக்கை தலைகீழாக மாற்றுகிறது

“சரி , உனக்கு உரிய ஒரு பவுண்டை நீ எடுத்துக்கொள் .கடன் ஆவணம் இந்த உரிமையை உனக்குக் கொடுக்கிறது ஆனால் அப்படி எடுக்கும்போது ஒரு துளி குருதி சிந்தினால் கூட நீ கொலைக்குற்றத்துக்கு ஆளாவாய் . உன் சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்படும்””

இதைஎதிர்பாரத சைலாக் முன்பு சொன்னபடி எனக்கு மூன்று பங்கு பணம் கொடுத்து விடுங்கள் ,நான் போய்விடுகிறேன் என்கிறான் . மூன்று பங்கென்ன  ஒரு பங்கு கூட உனக்குத் தரமுடியாது .மேலும் ஒரு கொலை முயற்சி செய்த குற்றதுக்காக உன் சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட நொறுங்கிப் போகிறான் சைலாக்

(சுருக்கமாக சொல்வதற்காக பல நிகழ்வுகளையும் சில கதா பாத்திரங்களையும் தவிர்த்து விட்டேன் )
இந்த நாடகம் பலவகைகளில் குரிப்பிடதக்கதாக அமைந்திருக்கிறது


மின்னுவதெல்லாம் பொன்னல்ல

சாத்தான் வேதம் ஓதுகிறது

Pound of flesh

போன்ற பல சொல்லடைகளை இந்த நாடகத்தில் ஆசிரியர் கொடுத்திருக்கிறார்

நீதி மன்றத்தில் சைலாக் தன் செயல்களை மிகவும் நல்லதாக நியாயப்படுத்த முயலும் உரையும் அதை எதிர்த்து வழக்கறிஞர் ஆற்றும் உரையும் மிகப் புகழ்பெற்ற இலக்கியப்பகுதிகள் என இன்றும் படிக்கப்படுகின்றன

சைலாக் என்ற கொடியவன் மூலம் அவன் இனத்தையே ஒரு கல் நெஞ்சம் கொண்ட, கடுமையாக வட்டி வாங்கும் இனமாக ஷேக்ஸ்பியர் சித்தரிக்க முயல்கிறார் என்று ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது 

பொதுவாக உலகெங்கும் யூதர்கள் வட்டித்தொழிலில் பெரும்பான்மையாக ஈடு படுகிறார்கள் அவர்கள் மதம் அதை அனுமதிக்கிறது என ஒரு கருத்து நிலவுகிறது .தென் மாநிலங்களில் யூதர்கள் வாழ்வது கேரளா மாநிலம் கொச்சியில் மட்டுமே ,அங்கும் அவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது

யூதர்கள் வட்டி வாங்குகிறார்களா என்பது பற்றி சொல்வது என் நோக்கம் அல்ல
ஆனால் அவர்கள் வேதம், மதம் வட்டி பற்றி என்ன சொல்கிறது என்பதை அறியலாம்

 வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
என்கிறது திருமறைக் குரான் (4:161)...

யூதர்களுக்கு ஏக இறைவன் வழங்கிய மறை நூலான டோரா (Torah)  வட்டி பற்றி மிகத்தெளிவாக , திட்டவட்டமாக பிறப்பித்த கட்டளை :

“என் மக்களில் ஏழைகளுக்கு நீங்கள் கொடுக்கும் கடன் கடனாகக் கருதப்படமாட்டது . அவர்களிடமிருந்து வட்டி வாங்கக்கூடாது . உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கு நீங்கள் கொடுத்த கடனுக்கு பிணையமாக அவருடைய உடையை வாங்கியிருந்தால் அந்தி சாய்வதற்குள் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இரவுத்தூக்கத்துக்கு கவசமாக விளங்கும் அந்த ஆடை இல்லாமல் அவர் எப்படித் தூங்குவார் ? அவர் என்னிடம் அழுது முறையிட்டால் நான் அவருக்கு கருணை காட்டுவேன் (எக்ஸ்சோடஸ் 22: 5-7)
இது போல் மறைநூல் டோராவில் பல இடங்களில் வட்டி தடை செய்யட்டது குறித்து வருகிறது


201. The Torah categorically lays down the injunction: 'And if you lend money to any of my people with you who is poor, you shall not be to him as a creditor, and you shall not exact interest from him. If ever you take your neighbour's garment in pledge, you shall restore it to him before the sun goes down; for that is his only covering, it is his mantle for his body; in what else shall he sleep? And if he cries to me, I will hear, for I am compassionate' (Exodus 22: 25-7). This is one of several passages of the Torah which embody the prohibition of interest.

வட்டி எப்படி ஒரு தனி மனிதனை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை சீரழிக்கிறது என்பது பற்றி பொருளாதார அறிஞர்கள் விரிவான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்

இசுலாம் வட்டியை மிகக்கடுமையாக சாடுகிறது .குர்ஆனில் பல வசனங்களும் நபிமொழிகள் பலவும் எந்த வகையிலும் வட்டி அனுமதிக்க்கப்படவில்லை என்று தெளிவு படுத்துகின்றன

இது பற்றி பின்பு சற்று விரிவாகப் பார்போம் .

மீண்டும் அடுத்த பகுதியில்

Blog Address
sherfuddinp.blogspot.com
B/F /w   09122018 sun


Sunday, 2 December 2018

அத்தாவின் எழுத்துக்கள் 2 கம்பன் காட்டும் இலக்கியச் சுவை 2




கம்பன் காட்டும்  இலக்கியச் சுவை 2

(நிறைவுப்பகுதி )


(சென்ற பகுதியின் தொடர்ச்சி)
சீதை பாடு என்ன ! இதுவரை அவளுக்கு இடையில்லையோ என்று சந்தேகித்தவர்ரகளுக்கெல்லாம் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டது
அவள் காதல் சுரத்தில் விம்மலால் விம்மிய கொங்கைகளைக் கண்டதும் கண்டிப்பாக இடுப்பு இருந்துதான் தீர வேண்டுமென்று ஐயம் நீங்கினர் 
இல்லையே நுசுப்பு என்பார்
உண்டு உண்டு என்னவும்
மெல்லியல் முலைகள்
விம்ம விம்முவாள்”

தோழியைக் கூப்பிட்டாள் சீதை “தோழி இங்கு கள்வனல்லவா புகுந்து விட்டான் “ என்றாள்
“யாரம்மா அது!”
“அவன்தான் மண்வழி நடந்து அடிவருந்தப் போனானே அந்தத் தாமரைக்கண்ணன் “
“ஐயோ! அவன் எங்கே மேலே வந்தான் திருடுவதற்கு “
“அந்தப்பொல்லாத திருடன் என் கண்வழியே புகுந்துவிட்டானே “
“ஓகோ அந்தத் திருடனா! அப்படியானால் திருடப்பட்டது உள்ளம்தானே “
“அது மட்டுமில்லையடிபெண்வழி நலன், பிறந்த நாணம் ,என் அறிவு எல்லாவறையும் திருடிக்கொண்டு போய்விட்டானே அந்த மாயக்களவன்”
பாட்டைக் கேளுங்கள்
“பெண் வழி நலனோடும்பிறந்த நாணொடும்
என் வழி அறிவையும் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்தடி வருந்தப் போந்தவன்
கண்வழிப் புகுந்ததோர் கள்வனோ கொலாம் “

இப்படிக் காமத்தீ அவளைத் தகிக்கிறது. இந்தக் காமாக்னி தன்னைச் சுடுமென்று பயந்து நடுங்கி ஒடுங்கி ஒருவன் ஓடோடியும் சென்று தொப்பென்று அராபிக்கடலில் குதித்து விட்டானாம் .
அவன் யார்? வேறு யாருமல்ல ! உலகத்துக்கெல்லாம் வெப்பத்தைக் கொடுக்கும் சூரியன்தான் .இந்த வெப்பத்துக்குப் பயந்து கடலில் குதித்து விட்டானாம் . அதாவது பொழுது மறைந்தது
“அன்னமென நடையினாட்கு அமைந்த காமத்தீ
தன்னையும் சுடுமெனத் தருக்கிலாமையால்
நன்னெடுங்கரங்களை நடுக்கி ஓடிப்போய்
முன்னை வெங்கதிரவன் கடலில் மூழ்கினான் “

மாலை நேரம்! மந்த மாருதம் வீசுகிரது குளிர்ந்த தாமரைத்!தடாகங்களில் தோய்ந்த புது மலர்களின் மணத்தோடு ஜில்லென்று வருகிறது தென்றல் .இது சீதையைத் தழுவுகிறது அவளுக்கு எப்படி இருக்கிறது?
தடாகங்களில் எல்லாம் இரும்பைக் காய்ச்சி வைத்திருக்கிறார்களா? அவற்றில் தோய்ந்து வருகிறதா இந்தத் தென்றல் ! பூக்களின் மணமெல்லாம் விஷமாகிவிட்டனவா! இந்த அக்கினிப் பிழம்பில் விஷத்தையும் பூசிக்கொண்டு என்நெஞ்சில் பாய்கிறதே இந்தத் தென்றல் ! ஏற்கனவே மன்மதன் எய்து புண்பட்ட என் இதயத்தில் இந்த விடம் தோய்ந்த நெருப்புத் தென்றல் பட்டு என்னைக் கொல்லவல்லவா போகிறது . கூற்று என்பது இப்படி மாலை நேரமாகத்தான் வடிவெடுத்து வருமா எனப் புலம்புகிறாள்

“கயங்கள் என்றும் கனல்தோய்ந்து கடி நாண் மலரின் விடம் பூசி
இயங்கும் தென்றல் மன்மதவேள் எய்த புண்ணின் இடை நுழைய
உயங்கும் உற்றும் நல்லறிவும் ஓய்ந்து தேய்வாள் உயிருண்ண
மயங்கும் மாலை வரக்கண்டு இதுவோ கூற்றின் வடிவென்பாள் “

இராமன் பாடு என்ன! காமநோய் அவன் உயிரைச் சித்ரவதை செய்கிறது .அவன் அதையும் நகைச்சுவை பட நினைத்து உருகுகிறான்..எமன் என்றால் இப்படித்தான் இருப்பானா! தேர்போன்ற கடிதடம் ! வாள் போன்ற இரு நீண்ட விழிகள் .கதை இரு தனங்கள் .இதற்கு மேல் புன்சிரிப்பு .இத்தனைச் சிறப்புக்களா வேண்டும் எமனுக்கு என எண்ணித் தூக்கத்தை மறந்தான்

“வன்ன மாமலர் தெரொண்டு வாணெடுங்
கண்ணிரண்டு கதிமுலை தானிரண்டு
உன்னிவந்த நகையுமொன்றுண்டு
என்னில் கூற்றுக்கு இத்தனை வேண்டுமோ !”

இனி உலாவியல் படலத்தில் இராமனைப்பார்க்க பெண்கள் மான் போன்றும் மயில் போன்றும் மின் போன்றும் சிலம்புகள் புலம்பி ஏங்க பொம்மென மொய்க்கின்றனர் இதிலே ஒரு கற்பனை
பெண்கள் தன் கரிய விழிகளால் ராமனை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் . இதனால் கம்பனுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது
இப்படிப்பார்ப்பதால் இராமனது கருநிறம் அவர்கள் கண்களில் புகுந்து விட்டதா, அல்லது இவர்கள் கரிய விழிகளின் பார்வைகள் பட்டுத்தான் இராமன் கருப்பாகி விட்டானா, என சந்தேகம் வந்து விட்டது

“பஞ்சணி விரலின் மாதர் படை நெடுங்கண்களெல்லாம்
கெஞ்சவே ஐயன் மெய்யின் கருமையை அடைந்ததையோ
மஞ்சள் மேனியாளின் மணி நிறம் மாதர் தங்கள்
அஞ்சனை நோக்கம் பாய்ந்து இருண்டதோ அறிகிலேம் யாம் “
என்று கூறுகிறான் கவி

ஒரு பெண் நிற்கும் நிலையைச் சித்தரிக்கின்றான்
இராமனது அழகிலே ஈடுபட்டுச் சிலைபோல் நிற்கிறாள் . ஒரே ஒரு மென் துகில் தவிர வேறு ஒன்றும் அவள் உடலில் இல்லை . அவள் இலக்குமியை நிகர்த்த அழகுடையவள் அவள் நிற்கும் நிலை எப்படி இருக்கின்றதென்றால் ,காமச்சுவையை உருவாக்கி வைத்தது போல இருக்கிறதாம் . காமச்சுவை சொல்லில் கட்டுப்படாது . இந்தக் காம நலம் தெரிந்த ஒரு கைதேர்ந்த சிற்பி அந்தச் சுவையைஒரு உருவமாக்கினால் எப்படி இருக்குமோ அப்படி சிறு உடை மட்டும் உடுத்திக் கொண்டு சிலையாக நின்றாள் அம்மங்கை

“சொன்னலாம் கடந்த காமச்சுவையை ஓர் உருவாக்கி
இன்னலம் தெரியவல்லான் எழுதியதென்ன நின்றான் !
பொன்னையும் பொருத நேராள் புனைந்தான் அனைத்தும் நீத்தாள்
தன்னையும் தாங்கலாதாள் துகிலோன்றே தாங்கி நின்றாள்

அடுத்த பகுதி அடுத்த மாதம்

02122018 B F T
  .

.