Sunday, 2 December 2018

அத்தாவின் எழுத்துக்கள் 2 கம்பன் காட்டும் இலக்கியச் சுவை 2




கம்பன் காட்டும்  இலக்கியச் சுவை 2

(நிறைவுப்பகுதி )


(சென்ற பகுதியின் தொடர்ச்சி)
சீதை பாடு என்ன ! இதுவரை அவளுக்கு இடையில்லையோ என்று சந்தேகித்தவர்ரகளுக்கெல்லாம் அந்த சந்தேகம் தீர்ந்து விட்டது
அவள் காதல் சுரத்தில் விம்மலால் விம்மிய கொங்கைகளைக் கண்டதும் கண்டிப்பாக இடுப்பு இருந்துதான் தீர வேண்டுமென்று ஐயம் நீங்கினர் 
இல்லையே நுசுப்பு என்பார்
உண்டு உண்டு என்னவும்
மெல்லியல் முலைகள்
விம்ம விம்முவாள்”

தோழியைக் கூப்பிட்டாள் சீதை “தோழி இங்கு கள்வனல்லவா புகுந்து விட்டான் “ என்றாள்
“யாரம்மா அது!”
“அவன்தான் மண்வழி நடந்து அடிவருந்தப் போனானே அந்தத் தாமரைக்கண்ணன் “
“ஐயோ! அவன் எங்கே மேலே வந்தான் திருடுவதற்கு “
“அந்தப்பொல்லாத திருடன் என் கண்வழியே புகுந்துவிட்டானே “
“ஓகோ அந்தத் திருடனா! அப்படியானால் திருடப்பட்டது உள்ளம்தானே “
“அது மட்டுமில்லையடிபெண்வழி நலன், பிறந்த நாணம் ,என் அறிவு எல்லாவறையும் திருடிக்கொண்டு போய்விட்டானே அந்த மாயக்களவன்”
பாட்டைக் கேளுங்கள்
“பெண் வழி நலனோடும்பிறந்த நாணொடும்
என் வழி அறிவையும் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்தடி வருந்தப் போந்தவன்
கண்வழிப் புகுந்ததோர் கள்வனோ கொலாம் “

இப்படிக் காமத்தீ அவளைத் தகிக்கிறது. இந்தக் காமாக்னி தன்னைச் சுடுமென்று பயந்து நடுங்கி ஒடுங்கி ஒருவன் ஓடோடியும் சென்று தொப்பென்று அராபிக்கடலில் குதித்து விட்டானாம் .
அவன் யார்? வேறு யாருமல்ல ! உலகத்துக்கெல்லாம் வெப்பத்தைக் கொடுக்கும் சூரியன்தான் .இந்த வெப்பத்துக்குப் பயந்து கடலில் குதித்து விட்டானாம் . அதாவது பொழுது மறைந்தது
“அன்னமென நடையினாட்கு அமைந்த காமத்தீ
தன்னையும் சுடுமெனத் தருக்கிலாமையால்
நன்னெடுங்கரங்களை நடுக்கி ஓடிப்போய்
முன்னை வெங்கதிரவன் கடலில் மூழ்கினான் “

மாலை நேரம்! மந்த மாருதம் வீசுகிரது குளிர்ந்த தாமரைத்!தடாகங்களில் தோய்ந்த புது மலர்களின் மணத்தோடு ஜில்லென்று வருகிறது தென்றல் .இது சீதையைத் தழுவுகிறது அவளுக்கு எப்படி இருக்கிறது?
தடாகங்களில் எல்லாம் இரும்பைக் காய்ச்சி வைத்திருக்கிறார்களா? அவற்றில் தோய்ந்து வருகிறதா இந்தத் தென்றல் ! பூக்களின் மணமெல்லாம் விஷமாகிவிட்டனவா! இந்த அக்கினிப் பிழம்பில் விஷத்தையும் பூசிக்கொண்டு என்நெஞ்சில் பாய்கிறதே இந்தத் தென்றல் ! ஏற்கனவே மன்மதன் எய்து புண்பட்ட என் இதயத்தில் இந்த விடம் தோய்ந்த நெருப்புத் தென்றல் பட்டு என்னைக் கொல்லவல்லவா போகிறது . கூற்று என்பது இப்படி மாலை நேரமாகத்தான் வடிவெடுத்து வருமா எனப் புலம்புகிறாள்

“கயங்கள் என்றும் கனல்தோய்ந்து கடி நாண் மலரின் விடம் பூசி
இயங்கும் தென்றல் மன்மதவேள் எய்த புண்ணின் இடை நுழைய
உயங்கும் உற்றும் நல்லறிவும் ஓய்ந்து தேய்வாள் உயிருண்ண
மயங்கும் மாலை வரக்கண்டு இதுவோ கூற்றின் வடிவென்பாள் “

இராமன் பாடு என்ன! காமநோய் அவன் உயிரைச் சித்ரவதை செய்கிறது .அவன் அதையும் நகைச்சுவை பட நினைத்து உருகுகிறான்..எமன் என்றால் இப்படித்தான் இருப்பானா! தேர்போன்ற கடிதடம் ! வாள் போன்ற இரு நீண்ட விழிகள் .கதை இரு தனங்கள் .இதற்கு மேல் புன்சிரிப்பு .இத்தனைச் சிறப்புக்களா வேண்டும் எமனுக்கு என எண்ணித் தூக்கத்தை மறந்தான்

“வன்ன மாமலர் தெரொண்டு வாணெடுங்
கண்ணிரண்டு கதிமுலை தானிரண்டு
உன்னிவந்த நகையுமொன்றுண்டு
என்னில் கூற்றுக்கு இத்தனை வேண்டுமோ !”

இனி உலாவியல் படலத்தில் இராமனைப்பார்க்க பெண்கள் மான் போன்றும் மயில் போன்றும் மின் போன்றும் சிலம்புகள் புலம்பி ஏங்க பொம்மென மொய்க்கின்றனர் இதிலே ஒரு கற்பனை
பெண்கள் தன் கரிய விழிகளால் ராமனை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் . இதனால் கம்பனுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது
இப்படிப்பார்ப்பதால் இராமனது கருநிறம் அவர்கள் கண்களில் புகுந்து விட்டதா, அல்லது இவர்கள் கரிய விழிகளின் பார்வைகள் பட்டுத்தான் இராமன் கருப்பாகி விட்டானா, என சந்தேகம் வந்து விட்டது

“பஞ்சணி விரலின் மாதர் படை நெடுங்கண்களெல்லாம்
கெஞ்சவே ஐயன் மெய்யின் கருமையை அடைந்ததையோ
மஞ்சள் மேனியாளின் மணி நிறம் மாதர் தங்கள்
அஞ்சனை நோக்கம் பாய்ந்து இருண்டதோ அறிகிலேம் யாம் “
என்று கூறுகிறான் கவி

ஒரு பெண் நிற்கும் நிலையைச் சித்தரிக்கின்றான்
இராமனது அழகிலே ஈடுபட்டுச் சிலைபோல் நிற்கிறாள் . ஒரே ஒரு மென் துகில் தவிர வேறு ஒன்றும் அவள் உடலில் இல்லை . அவள் இலக்குமியை நிகர்த்த அழகுடையவள் அவள் நிற்கும் நிலை எப்படி இருக்கின்றதென்றால் ,காமச்சுவையை உருவாக்கி வைத்தது போல இருக்கிறதாம் . காமச்சுவை சொல்லில் கட்டுப்படாது . இந்தக் காம நலம் தெரிந்த ஒரு கைதேர்ந்த சிற்பி அந்தச் சுவையைஒரு உருவமாக்கினால் எப்படி இருக்குமோ அப்படி சிறு உடை மட்டும் உடுத்திக் கொண்டு சிலையாக நின்றாள் அம்மங்கை

“சொன்னலாம் கடந்த காமச்சுவையை ஓர் உருவாக்கி
இன்னலம் தெரியவல்லான் எழுதியதென்ன நின்றான் !
பொன்னையும் பொருத நேராள் புனைந்தான் அனைத்தும் நீத்தாள்
தன்னையும் தாங்கலாதாள் துகிலோன்றே தாங்கி நின்றாள்

அடுத்த பகுதி அடுத்த மாதம்

02122018 B F T
  .

.





No comments:

Post a Comment