Sunday, 23 December 2018

வண்ணச் சிதறல் 38 பழையன புகுதலும் ......



 

பழையன புகுதலும் ......


அழுத்தக் கலன் (Pressure Cooker)  எங்கள் வீட்டில் வாங்கி அரை நூற்றாண்டுக்கு மேல் இருக்கும் . அதோடு கொடுத்த அளக்கும் நெகிழிக் குவளை (Plastic measuring  Jar) இன்னும் என்னிடம் இருக்கிறது முகம் மழிக்க தண்ணீர் அதில் வைத்துப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன்...மழிப்பை விட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டன . இன்னும் குவளையை விடவில்லை .அப்படியே புதியது போல் இருக்கிறது




அப்போதெல்லாம்  அழுத்தக் கலனோடு  பெரிய சமையல் குறிப்பு நூல் , இடுக்கி, குவளை, கலனுக்கு உள்ளே வைக்கும் பாத்திரங்கள் எல்லாம் கொடுப்பார்கள் . சமையல் குறிப்பு நூலும் இன்னும் இருக்கிறது .கலன் என்ன ஆனது என்பது நினைவில் இல்லை

காரைக்குடிக்கு ஒரு விழாவில் கலந்து கொள்ளப் போயிருந்தேன். விழா முடிந்து ஊர் திரும்ப பல்லவன்  விரைவு வண்டியைப் பிடிக்க தொடரி நிலையம் போய்க்கொண்டிருந்தபொது  .ஒரு இடத்தில் ஓட்டுனர் “ சார் இந்த ரோடு போட்டு நூறு வருஷமாச்சு ‘வெள்ளக்காரன் காலத்தில் போட்டது . இன்னும் அப்படியே இருக்கிறது என்றார் “

அண்மையில் என் காதில் விழுந்த ஒரு தகவல்
காரைக்குடியில் மைய மின் வேதியியல் ஆராய்ச்சிக் கழகம் ( CERCRI என்று அழைக்கப்படும்(Central Electro Chemical Research Institute )  திறப்புவிழாவுக்கு தலைமை அமைச்சர் நேரு வந்தபோது அவருக்காக அவரது நண்பரும் செக்ரி வருவதற்கு முழு முதல் காரணமாய் இருந்தவருமான வள்ளல் அழகப்பச் செட்டியார் தன் சொந்தச்செலவில் ஒரு சாலை அமைத்தார் என்பது

இந்தச் சாலைதான் ஓட்டுனர் சொன்ன சாலை என்று வைத்துக்கொண்டாலும் எப்டியும் எழுபது ஆண்டு காலத்தைக் கடந்த ஒரு சாலை இன்னும் நல்ல நிலையில் இருப்பது பெருமைக்கும் வியப்புக்கும் உரிய செய்தி

இப்போது போடப்படும் சாலைகளில் எழுபது வாரங்கள் கடந்தாலே  நல்ல சாலைகளாகப் பேசப்படுகின்றன . போட்ட சில நாட்களிலேயே பல்லை இளிக்கும் சாலைகளும் பாலங்களும் உண்டு

ஆல்பம் எனப்படும் படத்தொகுப்பில் அத்தா அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவப்பருவத்தில் எடுத்த புகைப்படம் ஓன்று அண்மையில் பார்த்தேன் .எண்பது ஆண்டுக்கு முந்திய அந்தப்படம் நிறம் , புதுமை மாறாமல் அப்படியே இருக்கிறது

ஆல்பத்தில் பழைய கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்ப்பதில் ஒரு இனிமை, மகிழ்ச்சி .இன்று கைப்பேசியில் தினமும் நிறைய  படங்களை எடுத்துத் தள்ளுகிறோம். அவற்றைத் திரும்பப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருவதேயில்லை

கோவையில் ஒரு உணவு விடுதியில் உணவுப்பொருட்கள் வெளியே கொண்டு செல்ல  கண்டிப்பாக பாத்திரங்கள் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள் 
..
சாம்பார் சட்னி வாங்க பாத்திரம் , சாப்பாடு வாங்க பெரிய அடுக்குப் பாத்திரம் கொண்டு போன என் இளமைப்பருவம் நினைவுக்கு வருகிறது  ..

வட மாநிலங்களில் மண் பாத்திரங்கள்  பெரிதும் பயன்பாட்டில் இருக்கின்றன. . வங்காளத்தில் தேநீர் விடுதிகளில் மண் குவளையில்தான் தேநீர் கொடுக்கிறார்கள் .ஒரு முறை பயன்படுத்திவிட்டு உடைத்துப்போட்டு விடுகிறார்கள

தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவகங்களில் காபி செம்பு அல்லது பித்தளை குவளைகளில் தருகிறார்கள் .

இதுபோல் இன்னும் எத்தனையோ இடங்களில் பழமை மீண்டும் புகுந்து புதுமையை விலக்குகிறது

நாட்டு மாட்டுப்பால், லிட்டர் நூறே ரூபாய்

மண்பானை சமையலா விலை அதிகம் நட்சத்திர உணவகங்களில்

கருப்பட்டி கிலோ முன்னூரைத் தொடுகிறது

நாங்கள் விறகடுப்பில் சமைக்கிறோம் என்ற அறிவிப்பு பல  உணவகங்களில்.

பள்ளிக்கூடங்களில்  பிஸ்ஸா, பர்கர் தடை செய்யப்பட்டு சுண்டல் , வடை போன்ற பழைய  சிற்றுண்டிகள் மீண்டும் வந்து விட்டன 

பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி விலை அதிகம் .அதேபோல்தான் நாட்டுக்கோழி முட்டையும்

இதன் உச்சகட்டம்தான் உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா கரி இருக்கா என்னும் விளம்பரம் .உப்பு உமிக்கருக்கில் பல் விளக்கி நன்றாகத்தான் இருந்தார்கள் இப்போதே தெருவுக்கு தெரு பல் மருத்துவர்

இப்படி பல நல்ல பழையன புகுந்தது போக தேவையற்ற பல பழையனவும் புகுகின்றன பல முறை சொல்லிக்காட்டியதுதான் .மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை – தொலைக்காட்சித்தொடர்கள்-
அரைத்த மாவையே அரைத்தது போக புளித்துப்போன பழையமாவை தேடிப்பிடித்து அரைக்கிறார்கள் 

பில்லி சூனியம் , மண்சோறு , பரிகாரங்கள், தாலி , மாமியார், மருமகள் சதி வேலைகள் , பழி வாங்குதல் மூட நம்பிக்கைகள்  என்று எதிர் மறைக் கருத்துக்கள்   எல்லாத்தொலைக்காட்சிகளிலும் எல்லாத் தொடர்களிலும் மையக் கருத்து

அகப்பொருள் எது  புறப்பொருள் எது என்பது மறந்துபோகும் அளவுக்கு பேச்சுக்காட்சிகள், ஆட்டம் பாட்டம் .

தெருவில் உட்கார்ந்துகொண்டு துணைவிக்குப் பேன் பார்ப்பதை தொலைக்காட்சியில் பெருமையாகப் பேசுவாராம் ஆனால் அது அவர் பர்சனல்  மேட்டராம் . அது பற்றி யாரும் கேள்வி கேட்கக்கூடாதாம் 
  
கற்காலம் நோக்கி நடைபோடும் உடை அலங்காரம் 
இன்னொரு பழையன புகுதல் திரைப்படப் பெயர்களில்- 

பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, கர்ணன் திருவிளையாடல், காக்கிச்சட்டை போன்ற பழைய படங்களின் பெயர்களில் புதிய படங்கள்

மின்னணு வாக்குப்பெட்டிகள் வேண்டாம் பழைய பெட்டியே வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது தலைதூக்குகிறது

பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு என்றுதான் படித்திருக்கிறேன்.. மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்ற விதியில் மரபும் சக்கரச் சுழற்சியில் மேலும் கீழும் போகும்போலும்

இ(டை)ச்செருகல்.

 வாக்குப் பெட்டியை வடிவமைத்தவர் மிகப்பெரிய தீர்க்கதரிசி – உண்டியல் வடிவில் அமைத்துள்ளார் என எங்கோ படித்தேன்

மூளைக்கு வேலை 
::
சென்ற பகுதியில் கேட்ட எளிய வினாவுக்கு யாரும் இதுவரை விடை சொல்லவில்லை
எனவே அதையே திரும்பப் போடுகிறேன்
“திருக்குறளில் இடம்பெற்ற பழங்கள் எவை?”

 விடை அடுத்த பகுதியில்


இறைவன் நா

டினால்
                    மீண்டும்
                            சந்திப்போம்

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com


B/F/W        23122018 sun














No comments:

Post a Comment