தமிழ் (மொழி) அறிவோம் 19
.தென் பாண்டிச் சீமையிலே
“ ஏலே இங்க வாலே”
என யாரோ யாரையோ விளிக்க நான் சற்று திடுக்கிட்டேன் . என்ன இவ்வளவு முரட்டுத்தனமாகப் பேசுகிறார்கள் எதோ சண்டை சச்சரவுக்கு முன்னுரையோ என எண்ணினேன்
பிறகுதான் தெரிந்தது இது ஒரு இயல்பான அன்பு கலந்த அழைப்பு என்று .
கோவையிலிருந்து அத்தாவுக்கு நெல்லைக்குப் பணி மாறுதல் . தமிழ் நாட்டுக்குள்தான் ஆனால் , பேச்சு, நடை உடை பாவனை, ஊரின் அமைப்பு, ஏன் பருவ நிலையில் கூட எவ்வளவு மாறுதல் !
பள்ளி மாணவர்கள், கடைப் பணியாளர்கள் எல்லாம் முழு கால்சராய் அணிவது கோவை வட்டார வழக்கம். ஆனால் நெல்லையிலோ வங்கி, அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் வேட்டியுடன்
கோவை மக்கள் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்குப்போவதை டவுனுக்குப் போகிறேன் என்பார்கள.நெல்லையில் ஐந்து கிலோமீட்டரில் உள்ள பேட்டைக்குப் போவதை ஊருக்குப் போகிறேன் என்று சொல்வார்கள்
அதேபோல் சிறுவர்களைக்கூட கண்ணு வாங்க போங்க என்று சொல்லும் கோவையிலிருந்து நெல்லை வந்த எனக்கு வாலே போலே பேச்சு ஒரு திடுக்கத்தை உண்டாகிக்கியதில் வியப்பொன்றுமில்லை
யாரிடமாவது பேசிக்கொண்டு வரும்போது அவர்கள் உச் உச் என்று சொல்வதைக்கேட்கும்போது நாம் பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றும் . போகபோகத்தான் தெரிந்தது உச் என்பது ஆம் என்று சொல்வது என்று
எங்காவது போகும்போது தூரமா என்று கேட்டால் எங்கே போகிறீர்கள் என்று பொருளாம். இது புரியாமல் நான் பலமுறை இல்லை பக்கம்தான் என்று சொல்லியதுண்டு
நெல்லைக்கு உள்ள சிறப்புகள் சொல்லி மாளாது- எல்லோருக்கும் தெரிந்த அல்வா,,தாமிரபரணி ஆறு, சுலோச்சனா முதலியார் பாலம், ஈரடுக்கு மேம்பாலம், கல்தோசை, சொதி , உளுந்தங்களி , வத்தக்குழம்பு , வெண்ணிப் பழையது ,நெல்லையப்பர் கோயில். தேர், வெள்ளைக் கத்தரிக்காய் என்று அடுக்கிகொண்டே போகலாம்.
இவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளி முதலில் நிற்பது நெல்லைத்தமிழ்
அங்கு புழங்கும் சொற்களுக்கு ஒரு தனி அகராதியே போடலாம் , என் மனதில் நிற்கும் சிலவற்றை சொல்கிறேன்
வாரியல்- விளக்குமாறு
மேடை – மாடி
கோட்டிக்காரன் – மன நிலை சரியில்லாதவர்
சாரம்- கைலி
முடுக்கு- சந்து
குறுக்கு- இடுப்பு ,முதுகு
கட்டி- கருப்பட்டி
தூள்- காப்பித்தூள்
சார்வாள் , அண்ணாச்சி - மரியாதையான அழைப்பு
ஏட்டி- அடியே ,
இது போக உச்சரிப்பிலும் பலமாற்றங்கள்
என்ன சொல்லுத- என்ன சொல்கிறாய்
எப்ப வருதிய- எப்போது வருகிறீர்கள்
நிக்கான் – நிற்கிறான்
செய்யுத- செய்கிறாய்
குளத்துமணி, நெல்லை நாயகம் , குத்தாலிங்கம் போன்ற பெயர்களைக் கேட்டாலே அவர்கள் நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி விடலாம்
அதுபோல் நெல்லை மக்கள் ஒரு சில சொற்கள் பேசினாலே அவர்களின் மொழி அவர்களை இனம் காட்டி விடும்
பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட தமிழ்த் தென்றல் நெல்லையில்தான் முதலில் மணம் பரப்பியது எனவே அதுதான் உண்மையான தமிழ் என்கிறார்கள்
காரைக்காலில் வாரியல், ( விளக்குமாறு ) மேடை (மாடி) போன்ற நெல்லைதமிழ் சொற்கள் புழக்கத்தில் உள்ளன
திருவாரூர் பேச்சிலும் நெல்லை மணம் பரவி நிற்கிறது.
இது பற்றி தமிழ் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்யலாம்
மீண்டும் அடுத்த மாதம் வேறொரு பதிவுடன்
Blog Address
B/F/த 16122018 sun
.
No comments:
Post a Comment