Sunday, 13 January 2019

அத்தாவின் எழுத்துக்கள்




3.
தைப்பொங்கல் கம்பன் பார்வையில்






தைப்பிறக்கப்போகிறது.கம்பன்  கழனிகளைப் பார்க்கிறான் .கட்டிளங்காளையரும் கயற்கண் நங்கையரும் உற்சாகத்துடன் உழைக்கின்றனர் .வேலை வென்ற விளிச்சியர்  பருவ அங்கங்கள் ஆளை முனிகின்றன. பாளை தந்த மதுப்பருகி பருவாளை மீன்கள் மருங்கெல்லாம் மதர்க்கின்றன. .  
இத்தகைய உல்லாசச் சூழ்நிலையில் தாள் பழுத்துக்காய்ந்த கதிர்களை அறுத்துக்குவிக்கின்றனர். .சுமை சுமையாய்க் கட்டுகிறார்கள் .மருங்கசைய அழகு நடை போட்டு அரிச் சுமையை போரிற் சேர்க்கிறார்கள் .போர் வானளாவுகிறது    
“எறி தரும் அரியின் சும்மை சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் “
மாளாது தலையடிககும் செந்நெல் என்று மாடு கட்டிச் சூட்டிக்கிறார்கள்.. சுற்றிச்சுற்றி வரும் காளைகள் தன்பின் ஓட்டுபவனும் ஒரு கட்டிளங்காளையென உணர்ந்து அன்பு பூண்டு அவன் குறிப்பறிந்து வேலை செய்கின்றன
 “குறி கொளும் போத்து. “ என்கிறான்
மாளாத செந்நெல் மாளுகின்றது அந்தக்காளைகளின் கால் பட்டு..
 “ குரிகொளும் போத்தில் கொன்று “
 கொன்ற நெல்லை அம்பாரம் போடுகிறார்கள
“ கொன்ற நெல் குவைகள் செய்வார் “
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்றா அழைப்பார்கள் ? நெல் குவிந்துவிட்டால் ஏழைகள், பாடுவோர், வேதியர் ,காவலர், படிப்பிச்சை, மரக்கால் பிச்சை , வரிகள் வம்புகள் என்று எத்தனையோபேர் வருகிறார்கள் .அவர்களுக்கெல்லாம் நகைமுகம் காட்டி கரவாதளிக்கிறான் உழவன் .
வறியவர்க்குதவி மிகுந்ததை தைப்பொங்கலுக்கு வீட்டிற்கு கொண்டு செல்கிறான் .அங்கும் காலமெல்லாம் விருந்தோம்பி உண்ணுவதுதான் நோக்கம்
 ‘ மிக்க விருந்துண மனையிலுய்ப்பான் “
வண்டியில் ஏற்றுகிறான் .
எனினும் நெல் மணிகளின் செழிப்பால் பளு அதிகமாகி வண்டிச்சக்கரங்கள் பாதையில் புதைகின்றன. ஓட்டிச் செல்லும்போது மண் நெளிகிறது .அவ்வளவு உறுதியான நெல்மணிகள்
“எறிதரும் அரியின் சும்மை எடுத்துவான் இட்ட போர்கள்
குறிகோளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார்
வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பர்
நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார்.”
நெல் வந்து சேர்ந்து விட்டது .பொங்கல் விருந்திற்கு அது மட்டும் போதுமா! பருப்பு, காய் கனி கிழங்குகள் வேண்டும்..அறுசுவையோடு ஆக்கிப்படைக்கும் மங்கை நல்லாள் வார்குழலில் சூட மலர் வேண்டும் 
கதிர்படு வயலிலுள்ள நெல் வந்து விட்டது .இனி கடிகமழ் பொழிலுள்ள பூக்கள ,முதிர் பல மரத்திலுள்ள கனிகள் கொல்லைப்புறவிலுள்ள பலவகைப் பருப்புக்கள்,
 “முதிரைகள் பதித்து வளர்த்த கொடியிலுள்ள அவரை பரங்கி பூசணி பீர்க்கு, படிவளர் குழியில் மண்ணை அகழ்ந்து எடுக்கக்கூடிய மண் விளையுங் கிழங்குகள் இவற்றையெல்லாம் கொண்டு வந்து சேர்க்கிறான் உழவன்.
வண்டுகள் மணந்தரும் மலரினின்று எப்படி மலர் கசங்காது தேன் எடுக்க்கின்றனவோ அவ்வாறு உழவன் எடுத்து வருகிறான் பொங்கல் விருந்து சமைக்க
“கதிர்படு வயலின் உள்ள
கடிகமழ் பொழிலின் உள்ள
முதிர்பலம் மரத்தின் உள்ள
முதிரைகள் புறவின் உள்ள
பதிபடு கொடியின் உள்ள
படி வளர் குழியின் உள்ள
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என
மள்ளர் கொள்வர் “
விருந்துக்கு வேண்டிய யாவும் சேகரித்து பொங்கலும் சமைத்தாகி விட்டது .எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்று கம்பன் கூறுகிறான் ,உணவை உற்பத்தி செய்பவர்கள் எப்படி என்று பார்ப்பதிலும் அவர்களிடம் வாங்கி உண்போர்  எப்படி பொங்கல் விருந்து உண்ணுகிறார்கள் என்று காட்டி விட்டால் அப்புறம் உழவன் வீட்டுத் தைப்பொங்கல் அதிலும் பன்மடங்கு சிறப்பாகத்தானே இருக்கும் . எனவே அவர்கள் உண்டியை நமக்குக் காட்டுகிறான் கம்பன்
முக்கனிகள், பருப்பு, நெய், கட்டித்தயிர் ,கற்கண்டுச்சோறு இவையெல்லாம் சேர்த்து அமிழ்தை ஒத்த உணவை வீட்டிலிருந்து தன் சுற்றத்தோடும் விருந்தினரோடும் உண்ணும் ஆரவாரம் எங்கும் ஒலிக்கிறது

:முந்து முக் கனியின், நானா முதிரையின்,
   
முழுத்த நெய்யின்,
செந் தயிர்க் கண்டம், கண்டம்,
   
இடை இடை செறிந்த சோற்றின்,
தம் தம் இல் இருந்து, தாமும்,
   
விருந்தொடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி
   
அயிலுறும் அமலைந்து எங்கும்.”
வாங்கியுண்போர்  வீடே இவ்வளவு அமர்க்களப்பட்டால் விலைகொடுத்து வாங்கும்பிறர் உணவை உண்டாக்கும் உழவர் வீடுகளிலெல்லாம் தைப்பொங்கல் எப்படி இருக்கும் .அறுசுவையோடு இன்னமுது சமைத்து விருந்தினர் எங்கே எங்கே என்று எதிர்நோக்கி அவர்கள் முகங்கள் கண்டதும் அன்னவிழாவாகக்கொண்டாடுவார்கள் .
மேலும் “தைப்பிறந்தது வழி பிறந்தது” என திருமணங்கள் நடைபெறும். ”பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவர்”
இயலும் இசையும் சேர்ந்து ஆங்காங்கு நடக்கும் காலச்சேபங்களைக்கேட்டு அதன் பயனையும் அடைவார்கள்
 “பருந்தொடு நிழல் சென்றன்ன இயலிசைப்பயன் துய்ப்பாரும் “
தெருவெல்லாம் தமிழ் முழங்கும் .ஆங்காங்கே அறிஞர்கள் தித்திக்கும் செந்தமிழில் சொல் மாரி பொழிவார்கள் .அதைக்கண் மூடி வாய் திறந்து கேட்டு நிற்பர் .”மருந்தினும் இனிய கேள்வி செவியிடை மாந்துவர் “
 பொருந்திய மகளிரோடு வதுவையில்
   
பொருந்து வாரும்.
பருந்தொடுன் நிழல் சென்றன்ன
   
இயல் இசைப் பயன் துய்ப்பாரும்.
மருந்தினும் இனிய கேள்வி
   
செவி உற மாந்துவாரும்.
விருந்தினர் முகம் கண்டு. அன்ன
   
விழா அணி விரும்புவாரும். 

என்று பொங்கல் விழாவைக் கம்பன் காட்டுகிறான்

எழுத்தாக்கம்
ஹாஜி ஜனாப் கா பீர் முகமது
நகராட்சி ஆணையர் ஒய்வு
(எங்கள் அத்தா)

வலை நூல் முகவரி
sherfuddinp.blogspot.com

B/F/T W           13012019 sun




.      





No comments:

Post a Comment