நாடு வீடு நான்
இந்தா அந்தா என்று ஏழு, எட்டு நாளுக்குமேல் ஓடி விட்டது
உலகமே பொழுது போகாமல் தவிக்கிறது (?)
தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை
அதிகாலையில் எழுதல் குளித்தல் ,இறைவணக்கம் தியானம் குரான் ஓதுதல், எழுதுதல்,
கண் பயிற்சி, நடைப்பயிற்சி படிப்பு
எழுத்து சமூக ஊடகங்கள் தொலை பேசி கொஞ்ச நேரம் தொலைக்காட்சி என்று இரவு வரை என் கால
அட்டவணையில் ஒன்றும் மாற்றம் இல்லை
காலையில் பள்ளிவாசலுக்கு நடந்தே போவது தடை பட்டு விட்டது .அதனால் தியான நேரத்தை
கொஞ்சம் கூட்டி விட்டேன் (துணைவி சற்றுப் பதறிப்போகிறார் பேச்சு மூச்சே காணோமே
என்று )
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் போவது ஒரு தனி உற்சாகம் . வண்டியை சுத்தம்
செய்து, காலணிகளைக் கழுவி, தாடியை ஒழுங்கு படுத்தி பெரும்பாலும் முதல் ஆளாகப்
பள்ளிக்குப் போய் விடுவேன் .அதுவும் இப்போது இல்லை
மிக அருகில் இருந்த உறவினர்
மறைவுக்குப் போக முடியாதது ஒரு வருத்தம்
குடும்பத்தினர் வீட்டிலேயே இருப்பது எப்போதாவது நிகழும் ஒரு மகிழ்ச்சி
. தானே புயலுக்கு அப்புறம் அது இப்போதுதான்
பேரனுக்குத்தான் பொழுது போவது சற்று சிரமமாக இருக்கிறது , எவ்வளவு
நேரம்தான் கைப்பேசியைப் பார்ப்பது .அவனுக்காக
நேரம் ஒதுக்க நான் என் அட்டவணையில்
சில மாற்றங்கள் செய்யவேண்டும் போலிருக்கிறது
சில திருமணங்கள் மிக எளிய முறையில் நடந்ததைக் கேள்விப்படுகிறேன்
மதுக்கடைகள் மூடப்பட்டது, மின் தடை இல்லாதது, இவையெல்லாம் தொடர்ந்தால்
நல்லது
போக்குவரத்து குறைந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது
இந்த ஒரு வார காலத்தில் வேண்டாத நிகழ்வுகள் பெரிதாக இல்லை . ஒரு
மதுக்கடை கொள்ளை தவிர
இனிமேலும் இதேபோல் இருக்குமா ?இருந்தால் நல்லது இருக்க வேண்டும்
ஆனால் போக்குவரத்து முழுதும் கட்டுப்படுத்தப்பட்டதால் ஒரு செயற்கை
பற்றாக்குறை வேகமாக உருவாகி வருகிறது தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை மளிகைச்
சாமான்கள் பற்றாக்குறை என்று செய்தி
வருகிறது
எரிகிற வீட்டில் யாரும் பிடுங்காமல் , குளிர்காயாமல் இருக்க வேண்டும்
முழு வீச்சில் மருத்துவர்கள், செவிலியர்கள் துப்புரவுப்பணியாளர்கள்
காவல் துறையினர் வங்கிப்பணியாளர்கள் ஒரு சமுதாய சேவை போல் அர்ப்பணிப்புடன் பணி புரிவது பாராட்டப் பட வேண்டிய ஓன்று
அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் இயங்குவதாய் அறிகிறோம்
ஆனால் சில நெருடல்கள்
பல்லாயிரக்கணக்கானோர் பேருந்து நிலையங்களில் கூடி ஒரு பேருந்தில் நூறு
பேருக்கு மேல் அடைக்கப்பட்டு நெடுந்தூரப் பயணம் செல்கையில் எனவாயிற்று சமுதாயத்
தீண்டாமை ?
சற்று சிந்தித்திருந்தால் தனியார், அரசு பேருந்துகளையும் தொடரிகளையும்
முழு வீச்சில் ஓட விட்டு அடிப்படை பரிசோதனை செய்து ஒரு பேருந்தில் ,இருபது பேர்,
ஒரு தொடரி பெட்டியில் முப்பது பேர் என்று ஏற்றி கும்பலாய்க் குவிப்பதை
தடுத்திருக்கலாம்
இந்த இந்த நேரங்களில் மக்கள் வெளியே வரலாம் என்ற அறிவிப்பு இது வரை
இல்லை
தனியார் கடையில் சமூகத் தீண்டாமை நடைமுறைப்படுத்தாதல் கடையை மூட ஆணை.
சரிதான்
ஆனால் அடுத்த நாளே அரசு மருத்துவ மனையில் மூலிகை மருந்து வாங்க
பெருங்கூட்டம்
தொலைக்காட்சியில் பார்க்கும் அணைத்து நிவாரணம் வழங்கும்
நிகழ்ச்சிகளிலும் மக்கள் கூட்டமாக நெருங்கித்தான் நிற்கிறார்கள்
அண்டை நாட்டில் பரவியவுடனே நம் நாட்டு விமான நிலையங்கள் ஏன் மூடப்படவில்லை.என்ற
பதிலேதும் இல்லாத கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது
வீட்டில் வந்து டோக்கன் வழங்கபடும் என்று ஒரு செய்தி
அடுத்த செய்தி வீட்டிலேயே பணமும்
பொருட்களும் வழங்கப்படும் என்று
ஆனால் இரண்டுமே நடக்கவில்லை ஏன் இந்தத்
தெளிவின்மை ?
மதச்சாயம் பூச முயற்சிக்கும் அவல அரசியல் நாடகம் ஊடகங்கள் துணையுடன் வெற்றிகரமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது -- எந்த விதமான ஆதாரமும் இல்லாமல்
பொய்யைத் திரும்ப திரும்ப
சொன்னால் அது உண்மைபோல் ஆகி விடும்
மக்களை பதற்றத்தில் அச்சத்தில் வைத்திருந்தால் பிரச்சனைகள்
மறந்துபோகும்
இவையெல்லாம் சில அரசியல் சித்தாந்தங்கள்
எது எப்படியோ வழுக்கி விழுந்து சறுக்கிக்கொண்டே போகும் குதிரைக்கு
சரியான வலுவான ஒரு சாக்கு கிடைத்து விட்டடது
சறுக்கினாலும் வழுக்கினாலும் எங்கள் குதிரைதான் உலகில் தலை சிறந்த
குதிரை என்று மார் தட்டி, தோள் தட்டி அறைகூவ ஒரு கூட்டம் காத்து நிற்கிறது .
மற்றவர்களையும் நம்ப வைக்க முயற்சிக்கிறது
பிறகென்ன நாமும் கரவொலி எழுப்பி ஒளி ஏற்றிப் பாராட்டுவோம் –
ஆடை அழகாக இருக்கிறது என்று
எவனாவது விவரம் இல்லாத சின்னப்பயல் கைகொட்டி சிரித்து கெக்கலித்து
வெட்கம் என்று கத்தும் வரை
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம் !
sherfuddinp.blogspot.com
bfw03042020fri
No comments:
Post a Comment