Saturday, 17 February 2018

வண்ணச் சிதறல் 7


 


நெஞ்சு பொறுக்குதில்லையே


இந்தியத்திரு நாட்டில் - மைய அரசு, மாநில அரசு, தனியார் துறை என எல்லாவற்றிலும் எண்ணற்ற மிக உயர்ந்த பதவிகள் உள்ளன
குடியரசுத்தலைவர் , தலைமை அமைச்சர் ,உச்ச நீதி மன்ற நீதியரசர்கள்,, முப்படைத் தளபதிகள், மக்களவைத் தலைவர் , புலனாய்வு அமைப்புத் தலைவர், தலைமைச் செயலர் , உள்துறை செயலர் , தலைமைக் கணக்காயர் மாநில ஆளுநர், முதல் அமைச்சர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள்,, மாநிலத் தலைமை காவல் அதிகாரி, இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி அதிகாரிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம.
இந்த உயர் பதவிகள் எதற்குமே இல்லாத ஒரு சிறப்பு ,கல்வித்துறை பதவிகளுக்கு உண்டு
வேந்தர் என்ற பெயர்தான் அந்தச் சிறப்பு , கௌரவம்
பல்கலைக் கழக வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் என பல இருந்தாலும் எல்லோரும் அதிகம் அறிந்தது துணை வேந்தரைத்தான்
துணை வேந்தர் என்று சொன்னால் உடன் என் நினைவுக்கு வருவது
மரு .சர் ஆற்காடு லட்சுமான .சாமி முதலியார்தான்
தலைப்பாகை அணிந்த கம்பீரமான உருவம்
கால் நூற்றாண்டுக்கு மேல்( இருபத்தியேழு ஆண்டுகள்) சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராகப் பணியாற்றி அந்தப் பதவிக்கே பெருமை சேர்த்தவர்.
 இது இந்திய கல்வி வரலாறில் ஒரு சாதனை
அதோடு சென்னை மருத்தவக் கல்லூரியின் முதல்வராகவும் பணி புரிந்தார் .அவர் எழுதிய மகப்பேறு மருத்துவம் பற்றிய நூல் இன்றும் மருத்துவ மாணவர்களால் படிக்கப்படுகிறது
சட்டம் பயின்று அதில் பல சிறப்புகள் பெற்ற ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் ஒரே உருவமுடைய இரட்டையர்கள் .
.திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராய்  திரு ராமசாமி முதலியார் பணியாற்றி  இரட்டைத் துணை வேந்தர் என்ற பெருமையும் பெற்றனர் .
இருவருடைய ஆங்கிலப்புலமையும் சொல்வன்மையும் உலக அளவில் போற்றப்பட்டது

இந்த இரட்டையர்கள் பெயரில் கடலூரில்  ஏ ஆர் எல் எம் உயர்நிலைப்பள்ளி  சிறப்பாக இயங்கி வருகிறது .


அரை நூற்றாண்டுக்கு முன் திரு ஏ எல் முதலியார் அவர்களை பல்கலைக்கழகத்தில் அவர் அறையில் சந்தித்து முது நிலை வகுப்பு சேர்க்கை பற்றி பேசியிருக்கிறேன்
அத்தாவின் பதவி இட மாறுதலால் திரு முதலியார் கையொப்பமிட்ட பட்டச் சான்றிதல் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை
என்னுடைய பட்டச் சான்றிதழில் கையொப்பமிட்டவர் மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் முனைவர் தெ பொ மீனாட்சி சுந்தரம் அவர்கள் நல்ல தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர்

அடுத்து நான் கேள்விப்பட்ட நல்ல ஒரு து.வே பாண்டிச்சேரி நடுவன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய திரு டரீன் (.J. A. K. Tareen)
பல்கலைக் கழக மானியக்குழுவில் பணியாற்றிய இவர் அந்தத் தொடர்பை ஆக்க பூர்வமாக பயன் படுத்தி பாண்டி பல்கலைக்கழகம் ஒரு தரமான ஒன்றாக முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார் .
.
 சிறந்த செயல்பாட்டுக்காக குடியரசுத்தலைவர் விருது பாண்டி பல்கலைக்கழகம் பெற்றது   இவரது முயற்சிக்குக் கிடைத்த பரிசு
அண்மையில் செய்திதாள்களில் சில துணை வேந்தர்கள்   பற்றி மிகச்சிறப்பான செய்திகள் பார்த்தேன்

தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக   நியமிக்கப்பட்ட திரு வ.அய். சுப்ரமணியம் மிக எளிமையானவர் . அவருக்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்ட ஆடம்பரமான நாற்காலியை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு எளிமையான இருக்கையில் அமர்ந்து  சிறப்பாக 100% நேர்மையுடன் பணியாற்றினார்

அலுவலக ஊர்திகள் அலுவலகப்பணிக்கு மட்டுமே என்ற கொள்கையில் தப்பித்தவறி அவரோ அவர் குடும்பத்தினரோ வேறு பணிக்குப் பயன்படுத்தினால் அதற்குரிய கட்டணத்தை கணக்கிட்டுக் கட்டி விடுவார்

மதுரைப் பல்கலைக்கழகத்தில் துணை  வேந்தராகப்   பணியாற்றிய திரு வ சுப மாணிக்கம் ஒரு எளிமையான விடுதியில் தங்கியிருந்து , நடந்தே அலுவலகத்துக்கு வந்து விடுவாராம்

இப்படிப் பதவிக்குப் பெருமை சேர்த்து பீடு நடை போட்ட  துணை  வேந்தர்கள் இருந்த தமிழ்நாட்டில் இன்றைய நிலை – சொல்ல நா கூசுகிறது

வேந்தர்கள் பணத்தாசையால் தலை குப்புற வீழ்ந்து ஊழல் குட்டையில் மூழ்கி சேற்றை அப்பிக்கொண்ட அவலம்

இரண்டு து வே க்கள் .ஊழல் குற்றத்துக்காக  .சிறையில் அடைப்பு
.அடைக்கப்பட்டதை பல்கலைக்கழகமே இனிப்பு வழங்கிக் கொண்டாடுகிறது

கையூட்டுப் பணத்தை வாங்க அலுவலகம் விட்டு தன் இல்லத்துக்கு விரைகிறார் .

கையும் களவுமாய் பிடிபட்டவுடன் பணத்தை கழிவறையிலும்  உள்ளாடையில் மறைக்கும் அவலம்

நல்லவேளை கழிவறையை சாட்சியாகச் சேர்க்காமல் உள்ளாடையோடு நிறுத்திக்கொண்டார்கள்

குற்றவியல் படித்தது குற்றம் புரியத்தானோ

பொய்ச்சான்றிதழ் கொடுத்து  தகுதி அற்றவர்கள து வே பதவி பெற்ற இழிநிலை
பெரிய இடம் துணையிருக்கும் துணிச்சல்

பதவி நீக்கத்துக்கு தடை ஆணை பெற்ற  து வே ஊரெங்கும் பதாகை அமைத்து விழா கொண்டாடும் ஆடம்பரம்

ஐம்பது மகிழுந்துகளோடு அணிவகுத்து  வந்து து வே பதவி ஏற்கும் அரசியல் தனம்

இப்படி அடுக்கிக்கொண்டேபோகலாம்
 .
ஒரு வகையில் பார்த்தால் து வே க்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது .இது ஒரு கூட்டுக் கொள்ளை

பதவிக்குப் பல கோடி கொட்டிக்கொடுத்தவர்கள் அதை ஆதாயத்துடன் அறுவடை செய்ய எண்ணுவது இயல்புதானே 
,
ஐமபது கோடி வரை விலை போனதாய் அறிகிறோம்.

இப்படிக் கொட்டிகொடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஏது பணம் என்று அடுத்த வினா எழுந்து ஒரு நச்சு வட்டமாகச் சுழல்கிறது ஊழல் .

இதற்கெல்லாம் மேல் தகுதி இருந்தும் பணம் இல்லாதவர்களை விண்ணப்பிக்காமல் தடுக்கும் மிரட்டல்கள் இந்த நச்சுச் சுழலை மேலும் விரிவாக்கி ஒரு பன்னாட்டுப் பரிமாணத்துக்கு இட்டுச் செல்கின்றன 

ஒரு சேவை நிறுவனம் தொடர்ந்த பொது நல வழக்கில் நம் மாநில பல்கலைக் கழகங்களில் நடந்த இருபது ஊழல்கள் பட்டியலிடப்படுகின்றன . அனைவற்றிலும்பெரும்பங்கு து வே களுடையதுதான்

கல்வித்துறையே வெட்கித் தலை குனியும் நிகழ்வு பத்து து வேக்கள் எந்த அரசு பதவியிலும் இல்லாத ஒரு கட்சித் தலைவரை சந்தித்தது
.தலைவர் வழியில் இப்போது து வேக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறைக்கு

நாலை நாற்பதாகவும் ஆறை அறுபதாகவும் மதிப்பெண் கூட்டிய அவல நாடகம் அம்பலத்துக்கு வந்தது

இதற்கு மேல் (கீழ்) தரம் தாழ்ந்து போக முடியாது என்று சொல்லும் அளவுக்கு பயணப்படியிலும் ஊழல்

என்ன செய்ய முடியும் நம்மால் என்ற மன நிலை நம் போன்றவர்களிடம்  வளர்ந்து கொண்டே போகிறது

ஏன் நம் மாநிலம் மட்டும் இப்படி ?

ஒரு சமுதாயத்தை அழிக்க எளிய வழி கல்வியை தரம் கெட்டுப் போகச் செய்வதுதான்

பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலில் அண்ணாமலை எண்ணூறாவது இடம் . தமிழ் நாடு விவசாயப் ப. கழகம் இறுதியான ஆயிரமாவ்து இடத்தில் 
.
பழம் பெருமை மிகு சென்னை, , அண்ணா பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை

தரமான பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்கள் எதிலும் அண்மைக்காலமாக நம் மாநில பல்கலைக்கழக மாணவர்களின் கட்டுரைகள் ஏதும் வெளியாகாதது ஊழலின் நேரடி விளைவு என்று ஆதங்கப்படுகிறார் ஒரு கல்வியாளர்

தமிழன் யார் இந்தியன் யார்  யார் யாருக்குப் பிறந்தவர்கள் என்ற ஆராய்ச்சியை எல்லாம் சற்று ஒதுக்கி  வைத்து விட்டு ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல் படுவோம்.

நமக்கும் நம் சமுதாயத்துக்கும் நல்லது செய்ய முயற்சிப்போமே!

இ(க)டைச் செருகல்

 மரு. ஏ எல் முதலியாரின் மருத்துவ நுண்ணறிவு பற்றி இரு நிகழ்வுகள் கேள்விப்பட்டிருக்கிறேன்

முதலாவது
தன செல்வச் செழிப்பைப் பறை சாற்றும் வகையில்  . அங்கமெங்கும் தங்கம் வைரம் வைடூரியம் என நகைகள் மிளிரும் ஒரு பெண்மணி
நீண்ட காலமாக அவருக்குப் பொறுக்க முடியாத தலைவலி
,பார்க்காத மருத்துவம் இல்லை பயன்படுத்தாத உள் வெளி மருந்துகள் இல்லை . தலை வலி தீராத நோயாக அவரை வாட்டியது
அந்தப்பெண் திரு முதலியாரின் மருத்துவத்தில் மிக  எளிதாக உடனடியாக குணமடைந்தார்

அடுத்து
மேலும் சிக்கல்
நிறை சூலி ஒருவரின் வயிற்றில் கூரான துரட்டி (கத்தி) பட்டு வயிறு சிறிது கிழிந்து கருவில் இருக்கும் குழந்தையின் கை விரல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது .
மிகுந்த பதற்றத்துடன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் அந்தபெண்.
அங்கிருந்த இளைய மருத்துவர் இதற்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது .பெரிய மருத்துவர் வரும் வரை காத்திருங்கள் என்று சொல்லி விட்டு புகைக்கத் துவங்கி விட்டார்.
சற்று நேரத்தில் அங்கு வந்த திரு முதலியார் இதையும் மிக எளிதாக சரி செய்தார்

எப்படி என்பதற்கு விடை தெரிந்தவர்கள் எழுதலாம்

மற்றவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியதுதான்

இறைவன் நாடினால்
மீண்டும்
 சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com



No comments:

Post a Comment