ரங்கன் என்ன சொன்னான்!!
ரங்கனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது,
அழகான, வசதியான, படித்த , பணி
புரியும் பெண். .இருவருக்கும் மனம் ஒத்துப்போய்விட்டது.
திருமணத்தை மிக எளிய
முறையில் நடததும்படி கேட்டுக்கொண்டது, பணம்,சீர்வரிசை அன்பளிப்பு வண்டி எதுவும் வேண்டாம் என்று உறுதியாக
இருந்தது, பெண் வேலைக்குச்செல்ல வேண்டாம் என்றது இதெல்லாம் பெண் வீட்டார் மனதில் ரங்கனை ஒரு உயர் நிலையை அடைய வைத்தது
இவ்வளவுக்கும் ரங்கன் மிக
எளிய, ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவன் அப்பாவுக்கு சரியான வருமானம் இல்லை . ஐந்து
பெண்கள்,(அதனால் ஒன்றும் ஆண்டி ஆகவில்லை )ரங்கன் ஒரே பையன் .. நண்பர்கள்,
ஆசிரியர்கள் உதவியுடன்தான் பட்டப்படிப்பே படிக்க முடிந்தது . மதிய உணவு, ஏன்
பெரும்பாலும் உணவு என்பதே வகுப்புத் தோழர்கள் பகிர்ந்து அளிப்பதுதான்
பட்டத் தேர்வில் நல்ல மதிப்பெண் . இருந்தாலும் மேற்கொண்டு படிப்பது
எல்லாம் பகல் கனவுதான். அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கவோ காத்திருக்கவோ கூட முடியாத
சூழ்நிலை.
அப்பா தனக்குத் தெரிந்த ஒரு பாத்திரக்கடையில் வேலைக்குச் சேர்த்து
விட்டார்.. பெரிய அளவில் பாத்திரங்கள் உற்பத்தி செய்து மொத்தமாகவும் சில்லறையாகவும்
விற்பனை செய்யும் நிறுவனம்
சம்பளம் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் . அதாவது மாதம் நூற்றி ஐம்பது
ரூபாய் . தனியார் நிறுவனத்தில் இந்த சம்பளம் ஓரளவு சரிதான் ,ஆனால், சில
விதிமுறைகள் மிகக்கடுமையானவை , வார
விடுமுறை கிடையாது ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேர வேலை . காப்பி, தேநீர்
எதுவும் கிடையாது
இதற்கெல்லாம் மேல் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் சம்பளத்தில் பத்து
ரூபாய் ஆம்
ஐந்தல்ல பத்து ரூபாய் பிடிக்கப்படும்
வெள்ளிக்கிழமை சாமிக்குப் பூசை செய்து விட்டு வாழைப்பழம்
கொடுப்பார்கள் .அதுவும் அரையோ. காலோ தான்.
ரங்கன் வீட்டுக்கும் கடைக்கும் நகரப்பேருந்தில் போய் வந்தால் ஒரு
நாளைக்கு நாற்பது காசு, என்ற கணக்கில் மாதம் பனிரெண்டு ரூபாய் செலவாகிவிடும்
கடையில் ஒரு பழைய மிதிவண்டி பயன்படாமல், பயன்படுத்த முடியாத நிலையில்
கிடந்தது .முதலாளி கருணை கூர்ந்து அந்த வண்டியை ரங்கன் பயன்படுத்த அனுமதி
கொடுத்தார்
.
ஆனால் வண்டியை சரி செய்யும் செலவை ரங்கன் ஏற்றுக்கொள்ள வேண்டும் .அவ்வளவு பணம் தன்னிடம்
இல்லை என்று ரங்கன் சொல்ல அதற்கும் ஒரு வழி சொன்னார் முதலாளி .
தனக்குத் தெரிந்த கடையில் வண்டியை சரி செய்து கொள்ளச் சொன்னார். ஆனால்
செலவு நாற்பது ரூபாயைத் தாண்டகூடாது என்று ஒரு வரையறை அந்தத் தொகை மாதம் ஐந்து
ரூபாயாக ரங்கன் சம்பளத்தில் கழிக்கப்படும்
பேருந்துக்கு ஆகும் பனிரெண்டு ரூபாயை விட மிதி வண்டிக்கு ஐந்து ரூபாய்
என்றல் எழு ரூபாய் மிச்சமாகிறதே என்று ரங்கன் அதற்கு ஒத்துகொண்டான்
முப்பத்தைந்து ரூபாயில் வண்டி ஓரளவு ஓட்டும் அளவுக்கு சரியாகி விட்டது
காலையில் ஏதாவது வீட்டில் சாப்பிட்டுவிட்டு மதிய உணவைக் கையில்
எடுத்துகொண்டு கடைக்குப்போய் விடுவான். இன்ன வேலை என்று கணக்குக் கிடையாது .
கணக்கு எழுதுதல், அஞ்சலகம், வங்கி போய் வருதல் ,வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி
வருதல் எல்லாம் ரங்கன் தலையில்தான் ,ரங்கன் சிறிதும் சலிக்காமல், முகம்
சுளிக்காமல் உண்மையாக உழைப்பான் அந்த பழைய மிதி வண்டியும் அவனுக்கு ஈடு கொடுத்து
உழைத்தது .. எப்போதாவது வீட்டுக்கு காய் கரி வாங்குவது போன்ற வேலைகளும் வரும் .அப்போது
கூட தப்பித்தவறி ஒரு வாய் காப்பி கொடுக்கமாட்டார்கள்
இப்படியே இந்தா அந்தா என்று ஆறு மாதப்பொழுது ஒடி விட்டது .இந்த ஆறு
மாதத்தில் ரங்கன் ஒரு நாள் கூட விடுப்பில் போகவில்லை .ஒரு நாள் போனால் பத்து
ரூபாய் போய்விடுமே
முதலாளியே பாராட்டினார் இப்படி யாரும் தொடர்ந்து வேலைக்கு வந்ததில்லை
என்று
ஏழாவது மாதத்துவக்கத்தில் வேலை வாய்ய்பு அலுவலகம் போக ஒருநாள்
விடுப்பு கேட்டான் ரங்கன்,கிடைத்து விட்டது . ரங்கனுக்கு ஒரு நப்பாசை. முதலாளி
பாராட்டியிருக்கிறார் .விடுப்புக்கு சம்பளம் பிடிக்காமல் விடலாம் இல்லை ஐந்து
ரூபாய் மட்டும் பிடிக்கலாம் ,
அவனும் அதைப்பற்றி கேட்கவில்லை அவரும் பேசவில்லை
விடுப்பு முடிந்து அடுத்த நாள் வந்து வேலையைப் பார்த்தான். அன்று மாலை ரங்கனின் கல்லூரி வகுப்புத் தோழர் – பல வகையிலும்
ரங்கனுக்கு மூன்றாம் பேருக்கு தெரியாமல்
உதவியவர் . கடைக்கு வந்தார். இருவரும் மனம் விட்டு பேசியதில் அரை மணி நேரம் போனதே
தெரியவில்லை .சரி வா காபி சாப்பிட்டு வரலாம் என்று நண்பன் அழைக்க அனுமதி கேட்க
முதலாளி அறைக்குள் போன ரங்கனுக்கு ஒரு அதிர்ச்சி
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கடுகடுத்தார் முதலாளி .ஏற்கனவே
அரை மணி நேரம் வீண் அரட்டை இதில் வெளியே போக அனுமதி வேறா ? அப்படியே போய்விடு .
நான் வேறு ஆள் பார்த்துக்கொள்கிறேன்
இது எசசரிக்கையாக இல்லாமல் கட்டளையாக ஒலித்தது . மேலும் “ ஒரு நாள்
விடுப்புக்கு இரண்டு நாள் சம்பளம் சரியாகி கணக்கு நேராகி விட்டது நீ போகலாம் “
என்றார்
நண்பன் முன் அவமதிக்கப்பட்டு கூனிக்குறுகி நின்ற ரங்கன் கண்களில்
கண்ணீர் .
பார்த்து துடித்துப்போன நண்பர் “ ரங்கா என்னால் உனக்கு இப்படி ஒரு
நிலையா ! என்று மிக மனம் வருந்தினார்
“பிறகு எல்லாம் நன்மைக்கே . இப்படி ஒரு இடத்தில் நீ வேலைக்குப் போனதே
தவறு” .என்றார்
“இந்த நூற்றைம்பது ரூபாயில்தான் எட்டு பேர் உயிர் வாழ்கிறோம்” என்று ”
ரங்கன் விசும்ப
“கவலைப்படாதே என்னால் நடந்த தவறை நானே சரி செய்கிறேன் “ என்று சொல்லி
தன் வண்டியில் ரங்கனை ஒரு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்
“ இது என் உறவினரின் அலுவலகம் . ,நான் சொன்னால் உனக்கு வேலை
கிடைக்கும். இது தோல் பதனிடும் தொழிற்சாலையின் அலுவலகம் சம்பளம் பெரிதாகக்
கூடுதலாகக் கிடைக்காது .ஆனால் நிச்சயமாக ஒரு மனித நேயம் இருக்கும் . உனக்கு
சம்மதம் என்றால் உள்ளே போகலாம் “ என நண்பன் சொல்ல , “
வேலை போய்விட்டது என்று என்
குடும்பத்தாரிடம் சொல்லும் துணிச்சல் எனக்கில்லை .எந்த வேலையாக இருந்தாலும்
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதுதான் என் நிலை” என்று சொன்னவுடன் ரங்கனை உள்ளே
அழைத்துச்சென்று முதலாளியிடம் சுருக்கமக
நிலையை எடுத்துரைத்தார்
“ எனக்கும் ஒரு நல்ல ஆள் தேவை இருக்கிறது . ஆனால் சம்பளம் நூற்று அறுபதுதான் இப்போதைக்கு . உங்களுக்கு ஒத்துவரும் என்றால் நாளைக்கே
வேலைக்கு வரலாம் “ என்றார் முதலாளி
“நாளைக்கென்ன இன்றைக்கே வருகிறேன் “ என்று ரங்கன் சொல்ல , “உங்கள் நிலைமை , தேவை எனக்குப் புரிகிறது கவலைப்படாமல்
நாளைக்கே வந்து சேருங்கள் .இந்த மாதம் முதல் நாளிலிருந்தே கணக்கிட்டு சம்பளம்
தந்து விடுகிறேன் “என்று சொன்ன முதலாளி ,ரங்கன் கையில் ஒரு இருபது ரூபாயைக்
கொடுத்து “இது சம்பளத்தில் சேராது, என் அன்பளிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள் “
என்று சொன்னதோடு, அங்கு ஓரளவு நல்ல நிலையில் இருந்த மிதி வண்டியையும் கொடுத்து
அனுப்பினார்
வேலை போன அதிர்ச்சி, அவமானத்தில் இருந்த ரங்கனுக்கு இதெல்லாம் கனவா நனவா
என்று மயக்கமாக இருந்தது . முதலாளிக்கும், நண்பனுக்கும் நன்றி சொல்லிவிட்டு
வீட்டுக்குப்போன ரங்கன் “ நாளை முதல் வேறு வேலைக்குப்போகிறேன் சம்பளம் பத்து
ரூபாய் அதிகம்” என்று மட்டும்தான் சொன்னான்
காலையில் வேலைக்கு வந்த ரங்கனுக்கு பல அதிர்ச்சிகள் – இன்ப
அதிர்சிசிகள் காத்திருந்தான் எட்டு மணி
நேர வேலை, ஞாயிறு விடுமுறை, .மாதத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் விடுப்பில் போகலாம்
. தினமும் காபி, சிற்றுண்டி , உணவு என்று எதாவது ஓன்று வயிற்றிற்கும் மனதிற்கும்
நிறைவாக. .
அலுவல் முடிந்து போகையில் கையில் ஒரு ரூபாய் கொடுப்பது, சனிக்கிழமை ஐந்து
ரூபாய் கொடுப்பது என்று பல நெகிழ்ச்சிகள் மகிழ்ச்சிகள்
ரங்கனின் குடும்ப நிலையை அறிந்த முதலாளி அவனுக்கு தினமும் மதிய
உணவுக்கும் ஏற்பாடு செய்தார் ,சம்பள நாள்
அன்று ரங்கன் குடும்பம் முழுவதுக்கும் தேவையான உணவோ சிற்றுண்டியோ ,தின்பண்டமோ
கொடுத்து விடுவார்
செல்வத்தில் கொழிக்கா விட்டாலும் வறுமை நீங்கிய ஒரு நிறைவு ஏற்பட்டது
ரங்கனுக்கு , மிக உண்மையாக உழைத்து நல்ல பெயர் வாங்கினான்
இதற்கிடையில் ஒரு சகோதரிக்கு
திருமணம் கூடி வந்தது .. அவன் கேட்காமலேயே முதலாளி ஒரு நல்ல தொகையை
அன்பளிப்பாகவும் இன்னொரு தொகையை வட்டியில்லா நீண்ட காலக் கடனாகவும் கொடுத்து
உதவினார்.
மிக வேகமாக ஆறு மாதப் பொழுது ஓடிவிட்டது. ஒரு நாள் முதலாளி ரங்கனை
அழைத்து “ எங்கள் சென்னை அலுவலகத்துக்கு ஒரு பொறுப்பான ஆள் தேவைப்படுகிறது . நீ
போகிறாயா ? மாதம் முன்னூறு ரூபாய் சம்பளம் .சாப்பாடு , தங்குமிடம், போக்குவரத்து
எல்லாம் எங்கள் செலவு .ஆனால் வேலைப்பளுசற்று அதிகமாக இருக்கும், .மூன்று
மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து போக விடுப்பும்செலவுத் தொகையும் கொடுக்கப்படும்
. நீ சிந்தித்துப் பார்த்து மூன்று நாட்களுக்குள் சொல்” என்றார் . மூன்று நொடி கூட
சிந்திக்கவில்லை ரங்கன் . “எப்போது போக வேண்டும்?” என்று கேட்டான்
அவ்வளவு ஆர்வம். வெறி குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்து
தானும் வாழ்வில் ஒரு உயர் நிலை அடைய வேண்டும் என்பதில்
சென்னயில் பணியாற்றிய இரண்டு ஆண்டுகளில் ரங்கனின் சம்பளம் ஐநூறை
எட்டியது. ஒரு காசு கூட தனக்காக , பொழுதுபோக்குக்காக என்று செலவு செய்யாமல் தன்
மற்ற நான்கு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தான் .பெற்றோர் குடியிருக்கும்
வீட்டையும் ஓரளவு வசதியான வீடாக
மாற்றினான்
மீண்டும் ஒரு பதவி உயர்வு இடமாற்றம் . இப்போது தலை நகர் டில்லிக்கு
.சம்பளம் எண்ணூறு .+ சாப்பாடு+ தங்குமிடம் . வேலைப்பளு அதிகம் இல்லை ,ஆனால்
பொறுப்பு மிக அதிகம் .அரசுத்துறை அதிகாரிகளை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும்.
போக்கு வரத்துக்கு ஒரு இரு சக்கர வண்டியும் கொடுத்து விட்டார்கள்
கிடைத்த ஓய்வை வீணாக்காமல் முதலாளியின் அனுமதியுடன் அரசுத்
தேர்வுகளுக்குப் படிக்கத் துவங்கினான் , விடா முயற்சியின் பலனாக ஒரு நல்ல அரசுப்பணி கிட்டியது அதுவும்
தமிழ் நாட்டிலேயே
குடும்பப்பொறுப்புகள் அனைத்தையும் தனி ஒருவனாகத் தலையில் தாங்கி
சுமந்து நிறைவேற்றிய ரங்கனுக்கு கிடைக்க இருக்கும் பரிசுதான் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை
திருமண அழைப்பிதழில் தன் பெற்றோருக்கு இணையாக தன் வாழ்வில் ஒளியேற்றிய
முதலாளியின் பெயரை நன்றியுடன் குறிப்பிட்டிருந்தான்
முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்த பாத்திரக்கடை நினைவில் வர ,சரி
அவருக்கும் ஒரு அழைப்பிதல் கொடுத்து வைப்போம் என்று அங்கு போனான் .மலராதா அகம் முகத்துடன்
வரவேற்ற முதலாளி கையில் ஒரு அழைப்பைக் கொடுத்து விட்டு வரும்போது “
கணக்குப்பிள்ளையை பார்த்து விட்டுப்போ “ என்று ஒரு குரல்
சரி எதோ சம்பள பாக்கி இருக்கும் போல் இருக்கிறது உழைத்து சம்பாதித்த
அந்தக்காசை ஏன் விடவேண்டும் என்று கணக்குப்பிள்ளையிடம் போனான்
.”வாங்க தம்பி,
உட்காருங்க .நல்ல வேலையில் இருப்பதாய்க் கேள்விப்பட்டேன் ரொம்ப சந்தோசம் “ என்று
மனதார வாழ்த்தினார் .இதற்குள் முதலாளி அறையில் இருந்து ஒரு செருமல் “என்ன அங்கே
வெட்டிப்பேச்சு “ என்பது போல்
உடனே கணக்குப்பிள்ளை பரபரவென்று கணக்குப் புத்தகதைதைப் புரட்டி “
தம்பி ஒரு ஐந்து ரூபாய் உங்கள் கணக்கில் தொக்கி நிற்கிறது “ என்றார் தயங்கியபடி
“எப்படி என்று ரங்கன் கேட்க “ கடை சைக்கிள் ரிப்பேர் பண்ணிய செலவு
முப்பத்தி ஐந்து ரூபாய் .ஆறு மாதம்.சம்பளத்தில் ஐந்து ஐந்தாக முப்பது ரூபாய்
பிடித்தது போக பாக்கி ஐந்து ரூபாய் ----“ என்று இழுத்தார்
கதை இதோடு நிறைவு பெறுகிறது
கணக்குப்பிள்ளை கேட்டதற்கு
ரங்கன் என்ன சொன்னான் ?
பதிலை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
தோன்றுவதை எழுதி அனுப்புங்கள்
இ(க)டைச்செருகல்
வழக்கம்போல் இதுவும் உண்மையும் கற்பனையும் கலந்த கதை .கொஞ்சம் உண்மை
நிறைய கற்பனை .ரங்கன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவன் எனவே அவன் இவன் என்றே
குறிப்பிடுகிறேன் . .
இறைவன் அருளால் மீண்டும் சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F W 29092019
sun