6. சீதையும் பேதையும்
எண்ணங்களைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தாது வழி தப்பியவர்கள் பேதைகள்
மெய்யறிவற்றவர்கள் .
இவர்கள் அறம் என்னும் நல்வழியைக் கடைப்பிடிக்காமல் அறன் கடை
நின்றவர்கள் .
பெரும்பாலும் காமத்தால் வழி தவறியவர்கள்தான் அதிகம்
இவ்வாறு வழி தவறியவர்களில் கூட போயும் போயும் மற்றவன் மனைவியை
இச்சித்து அவன் வீட்டில் கொல்லைப்புறத்தில் ஒளிந்துகொண்டிருக்கிறானே, அவன்
அவர்களில் பெரும்பேதை . அவனை விட முட்டாள் இருக்க முடியாது
அவனை
“பிறன் கடை நின்றான் “ என்றார்
வள்ளுவர் . இவன் ஒளிந்திருக்கும்போதே எவனாவது வந்து கண்டு பிடித்து உதைப்பானோ
என்று அஞ்சி அஞ்சிச் சாவான் .இவனது கூடா ஒழுக்கத்துக்கு அந்தப் பிறன் மனையாளும்
இசைந்தாலும் இவர்கள் கூட்டில் இன்பம் இராது . ஏன் ?
கணவனோ வேறு யாருமோ வந்து
விடுவார்களோ , தங்கள் மானங்கெட்ட செயல் வெளியாகி விடுமோ என அஞ்சிக்கொண்டுதான்
இருப்பார்கள் அன்றி முழு இன்பம் காணார்கள்
வழி கெடுவதிலும் நிம்மதியாகக் கெடக்கூடாதா ! இதைக்கூட சிந்திக்காது
வேறு ஒருவனுடைய மனைவியை இச்சிக்கிறானே , அவன் வழி கெட்ட பெதைகளில் எல்லாம் பெரும்
பேதையல்லவா
“அறன் கடை நின்றாரில் எல்லாம் பிறன் கடை நின்றாரில் பேதையர் இல்”
என்றார் வள்ளுவர்.
கம்பன்
இக்கருத்தை ஒட்டி சீதை பால் காதல் கொண்ட இராவணனை பேதை என்றே கூறுகிறான்
“சீதையும் அவனை உன்னிச் சிந்தையில் துயரம் தீராப்பேதையும் “
என்று சீதையையும் இராவணனையும் குறிக்கின்றான் .இவர்கள் இருவரும்தான்
இலங்கையில் தூங்கவில்லையாம்
பெரும் தவசிகளும் தூங்க மாட்டார்கள் பசித்திரு, தனித்திரு, விழித்திரு
என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள் .
திருடர்களும் தூங்கமாட்டார்கள். எப்பொழுது பிறன் அமர்ந்திருப்பான்
திருடலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள் . . அது போல
“ இராமனை எண்ணி ஏங்கும் சீதையும் அவளை உன்னிச் சிந்தையிற் துயரம் தீராப்
பேதையும் அன்றி யார் உளார் துயில் கொளாதார்” “
என்றான் கம்பன்
எப்படிப்பட்ட இராமனை சீதை எண்ணி ஏங்குகிறாள் ? தந்தை சொல் மிக்க
மந்திரம் இல்லை என்று காடு வந்தடைந்த உத்தமனும் தரும மூர்த்தியுமான இராமன் .மேலும் அவனது நாமமே துன்பங்களைத்
தொலைக்க வல்லது. .அப்படிப்பட்ட இராமனை எண்ணிச் சீதை
அக்குலமகள் மேல் காதல் கொண்டான் பேதை இராவணன். இவனினும் பெரும்பேதையர்
இல்லை
“தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி
ஏங்கும் சீதையும் அவளை
உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும் அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார் ?”
என்று கம்பன் கூறுகிறான்
(யுத்த காண்டம் நாகபாசப்படலம் )
எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது
நகராட்சி ஆணையர் பணி ஒய்வு
என் குறிப்பு
அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை இது. இப்போது ஊடகங்களில்
வரும் நிகழ்வுகளைப் படிக்கும்போது அச்சம் , நீதி எல்லாம் சற்று இடம் மாறி, தடம்
மாறி இடறி இருப்பது தெளிவாகிறது அதற்காக இலக்கியம், இலக்கணத்தை
மாற்ற முடியுமா என்ன?
தலைப்பைப்பார்த்து சீதைதான் பேதை என்று எண்ணினேன்
உள் நுழைந்து படிக்குபோதுதான் பேதை என்பது ஆண் பெண் இருவரையும்
குறிக்கும் என்பது தெளிவாகியது
இலக்கிய உலகில் நுழைய எனக்கு வாய்ப்பளித்த எங்கள் அத்தாவுக்கு
மீண்டும் நன்றி
அடுத்த பகுதியில் சந்திப்போம்
sherfuddinp.blogspot.com
B F FT W 20092019 fri
No comments:
Post a Comment