Sunday, 8 September 2019

வண்ணச் சிதறல் கருடா சௌக்கியமா !!






கருடா சௌக்கியமா !!




பரபரவென்று நிலைகொள்ளாமல் தவித்து நின்றது ஒரு கழுகு.
 இன்று அதற்கு தேர்வு நாள் அதுவும் காதல் தேர்வு
கழுகுக்கு என்ன காதல் என்ன தேர்வு ?
பின்னால் பாப்போம்
அதற்கு முன்
கழுகு பற்றி ஏற்கனவே கேள்விப்பட்ட ஒரு தகவல்
நாற்பது வயதில் கழுகின் உடல் எடை கூடி இறக்கைகள் வலுவிழந்து  தன் இரையைத் தேட முடியாத நிலை வரும்
அப்போது கழுகு ஒரு உயரமான இடத்தில் போய் தன் அலகினால் இறக்கைகளை பிய்த்து விட்டு புது இறக்கைகள் வளரும் வரை காத்திருந்து புத்துயிர் பெற்று வரும்
இது உண்மயா இல்லையா என்று ஆராய்வதை விட நல்ல செய்தியாக, நாற்பது வயதில் முதுமை என்பதை மறக்க வைக்கும் ஒரு வாழ்க்கை நடை முறையாக எடுத்துக்கொள்ளலாம். (முப்பது வயதிலேயே எலும்புகள் வலு இழந்து விடும் என்று அச்சுறுத்துகிறது ஒரு தொலைகாட்சி விளம்பரம் அதை அப்படியே எத்தனை பேர் நமபுகிறோம்!~!)
இது போல் கழுகு பற்றிய  இன்னும் சில சுவையான வியப்பான  தகவல்களை வலைதளத்திலும் ஊடகத்திலும் கிடைத்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
கன்னியரைக் கைப்பிடிக்க முரட்டுக்காளைகளை அடக்கும் வீரக் காளைகள் பற்றி அறிந்திருக்கிறோம்
அதையும் மிஞ்சிய ஒரு அழகான செயலை கழுகு இணை செய்கிறது
ஆணும் பெண்ணுமாக தரைக்கு வந்து , பெண் கழுகு ஒரு குச்சியை தேர்வு செய்து எடுத்துக்கொண்டு வெகு உயரத்திற்குப் பறக்கும் . அங்கிருந்து குச்சியை கீழே போடும்
ஆண் கழுகு பறந்து போய் அந்தக் குச்சி தரையில் விழுந்து விடாமல் கொத்திக்கொண்டு மேலே கொண்டு வரவேண்டும் . ஒரு முறையல்ல பலமுறை பல மணி நேரம்  இந்தத் காதல் வீரத் தேர்வு  நடக்கும்
இந்தத் தேர்வில்  ஆண் முழுமையான வெற்றி பெற்றால்தான் பெண்ணோடு இணைய முடியும்
ஒரு ஆணுக்கு ஒரு பெண்தான் வாழ்நாள் முழுதும் துணை
களவு நெறி கற்பு நெறி என மனிதர்களை மிஞ்சும் கழுகை ஏறு என்னும் சொல்லால் அடையாளம் காண்கிறது சங்க இலக்கியம் . மிகப்பொருத்தமான சொல்
(பருந்தின் ஏறுகுறித் தொரீஇ புறநானூறு 43,5)
குஞ்சுகளை பறக்க வைப்பது இன்னொரு வீரச் செறிவு மிக்க செய்தி ,
ஆணும் பெண்ணும் சேர்ந்து கூட்டின் உட்புறத்தை மிக மென்மையாக உருவாக்கும் .குஞ்சுகள் ஒரு அளவுக்கு வளர்ந்ததும் அந்த மென்மையான படுக்கை முள் படுககையாக மாறும்
முள் குத்துவது பொறுக்காமல் குஞ்சு கூட்டின் ஓரத்திற்கு வரும் . அப்போது தாய்ப்பறவை குஞ்சைக் கீழே தள்ளி விடும் ,
வேறு வழியில்லாமல் குஞ்சு இறகை விரித்துப் பறக்கத் துவங்கும்
அப்படிப பறக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது தந்தைபபறவை .
 சர் என்று வானூர்தி போல்  பறந்து போய் குஞ்சைத் தன் இறகில் தாங்கி கூட்டுக்கு கொண்டு சேர்த்து விடும்
புறந்தள்ளுதல் தாய்க்குக்கடன்
தாங்கி வருதல் தந்தைக்குக்கடன்
இரை எடுத்து முடித்தவுடன் கழுகு குளித்து விடும் என்பது இன்னொரு சிறப்புச் செய்தி
மதங்கொண்ட யானை ஒரு மனிதனைக் கொன்று விட்டால் உடனே போய் குளித்து விடுமாம்
மலரும் நினைவு ஓன்று
காரைக்குடியில் நிறைய  கோழிக்குஞ்சுகள் வளர்த்தோம். வானில் கழுகு வட்டமிட்டால் தாய்க்கோழி குஞ்சுகளை பாதுகாப்பாக  அரவணைத்துக்கொள்ளும்  
ஆனால் எங்கள் வீட்டில் இருந்த குஞ்சுகள் தாய் இல்லாமல் பொறியில் பொறித்த குஞ்சுகள்
எனவே நாங்கள் யாரவது கூ என்று ஒலி எழுப்புவோம் .உடனே குஞ்சுகள் பாதுகாப்பாக கூட்டுக்குள் போய் விடும்
இப்போதெல்லாம் கழுகுகள் கண்ணில் படுவதேயில்லை. திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு தினமும் வரும் இரண்டு கழுகுகளும் இப்போது வ்ருவதில்லையாம்
கொன்றுண்ணிப் பறவை என்று கழுகைச் சொல்கிறார்கள் . கழுகு இனத்தையே அழித்த மனித இனத்தை என்ன சொல்லி அழைப்பது !
இ(க)டைச்செருகல்
மீண்டும் ஒரு இளமை நினைவு
எங்கள் ஊரில் இருந்த மிகப்பெரிய குளம்((சீதளி) வற்றி கொஞ்சம் தண்ணீர் இருந்தது அதில் கழுகு வேட்டை நடக்கும்
ஒரு குச்சியின் நடுவில் மீன் துண்டைச் சொருகி குச்சியின் இரு ஓரங்களிலும் வச்சிரப் பசை தடவி குளத்தில் விடுவார்கள் . மீனைக் கொத்த வரும் கழுகு பறக்க இறகை விரிக்கும்போது பசையில் ஒட்டிக்கொண்டு பறக்க முடியாமல் தவிக்கும். அப்போது பிடித்து விடுவார்கள்
பிடித்து என்ன செய்வார்கள் ? கோழிக்குத்தான் தெரியும்
இந்த வேட்டையில் ஒரு காக்கை கூட சிக்குவதில்லை  மனிதர்களோடு கலந்து கூட்டமாக வசிக்கும் காக்கை மனித இனம் பற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கிறது
உயரத்தில் வாழும் கழுகுக்கு மானிடம் புரியவில்லை

மீண்டும் சந்திப்போம்
sherfuddinp.blogspot.com  

B F FT W 08092019 sun

No comments:

Post a Comment