Tuesday, 1 September 2020

விஞ்ஞானக் கனவுகள்







மாணவப் பருவம் –பள்ளியா கல்லூரியா – நினைவில்லை
நீ பிற்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கரீம் அண்ணன் கேட்டது.
ஒரு விஞ்ஞானி ஆவது என் விருப்பம் என்று சொன்னேன்
தனக்கே உரிய நகைச்சுவை கலந்த கிண்டலுடன் கரீம் அண்ணன் பலரிடம் இதை சொல்லி மகிழ்ந்தது

புகுமுக வகுப்பில் நல்ல மதிப்பெண்கள்தான். இருந்தாலும் வயது மூன்று மாதம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க முடியவில்லை
புகுமுக வகுப்பு படித்த அதே பொள்ளாச்சி ந ம கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன்
அந்தக் கல்லூரியின் சிறப்பான ஆசிரியர் குழு பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் .நானும் நன்றாக ஒரு ஈடுபாடோடு படித்தேன்
முதலாம் ஆண்டு படிப்பு முடிவதற்குள் அத்தாவுக்கு வேலூர், சில மாதங்கள் பின் திருநெல்வேலி இடமாற்றம்

நெல்லை ம தி தா இ கல்லூரியில் இரண்டு மூன்றாம் ஆண்டுப் படிப்பு இந்த மாற்றம் என் படிப்பையும் உற்சாகத்தையும் நிறையவே  பாதிதது  ஒரு வழியாக நல்ல மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு நிறைவுற்றது

பிறகு வேலை தேடும் படலம் ஒரு ஆண்டு . நூறு வேலைகளுக்கு எழுதிப்போட்டிருப்பேன்

காரைக்குடி மைய மின் வேதியியல் ஆராய்சிக் கழகம் (Central Electro Chemical Research Institute  சுருக்கமாக  CECRI ) இங்கிருந்து எழுத்து, நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது . சில நாட்கள் முன்னதாகவே காரைக்குடியில்  மும்தாஜ் அக்கா வீட்டுக்குப்போய் விட்டேன் ரஹீம் அண்ணன் செக்ரியில் பணி புரியும் நண்பர் கமால் என்பவருக்கு என்னை அறிமுகப்படுத்தியது
ஜனாப் கமால் தேர்வு முறை, நேர்முகம் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார்
எழுத்துத் தேர்வு முடிந்து அதில் தகுதி பெற்றவர்களுக்கு அன்றே நேர்முகம்
நான்கு வேதியியல் அறிஞர்கள் முழுக்க முழுக்க வேதியியல் பற்றியே வினாக்கள் கேட்டார்கள்
சில நாட்களில் பட்டதாரி பயிற்சியாளர் வேலைக்கான பணி நியமன ஆணை வந்தது
அத்தா காரைக்குடியில் பணியாற்றியபோது நான் ஏழு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், . காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிவியல் கண்காட்சி நடக்கும்
மிகப்பல பிரிவுகளாக இருக்கும் அந்தக்கண்காட்சியை முழுமையாகப் பார்க்க பல நாட்கள் ஆகும். ஒரு முறை அனுமதி சீட்டு வாங்கி விட்டால் அதை வைத்தே மறுபடி போய் பார்க்காத பிரிவுகளைப் பார்த்து வரலாம் பொறிஇயல்  மாணவர்கள் நடத்தும் இந்தக் கண்காட்சி நல்ல பொழுதுபோக்காகவும் அறிவை வளர்ப்பதாகவும் இருக்கும
அந்தக் கண்காட்சிக்குப் போகும்போது செக்ரியைப் பார்த்து வியந்ததுண்டு
அதே செக்ரியில் பணி புரியும் வாய்ப்பு இறைவன் அருளால் கிடைத்தது
மும்தாஜ் அக்கா வீட்டில் தங்கி ரஹீம் அண்ணன்வாங்கிக் கொடுத்த  மிதி வண்டியில் போய் வருவேன்

மிகப் பரந்து விரிந்த வளாகம் (முன்னூறு ஏக்கர் )
பல்லாயிரக்கணக்கான நூல்கள் கொண்ட பெரிய நூலகம் கல்லூரி ஆய்வகம் போன்ற பணியிடம் இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
.மின்.கரிம வேதியியல் பிரிவில் எனக்குப் பணி திரு அனந்தராமன் எனக்கு மேலதிகாரி .தங்கவேல், சுப்பையா, திருநாவுக்கரசு, பூராசாமி( புதுச்சேரியை சேர்ந்த இவரது பெயர் பிரெஞ்சுமொழி எழுத்தமைப்பில் Pourasamy என்று வரும்) இவர்கள் அந்தத் துறையில் பணியாற்றியவர்கள் .
அணிலின் என்ற கரிம வேதியியல் பொருள் பற்றி ஆராய்ச்சி வேலைப்பளு பெரிதாக ஒன்றும் இருக்காது

கல்லூரியில் இயற்பியல் தராசு (Physical Balance) பார்த்த நான் அங்கு வேதியியல் தராசைப் பார்த்தேன் , பயன்படுத்தவும் கற்றுக்கொண்டேன்
கல்லூரி வாழ்க்கையின் நீட்சி போல்தான் இருந்தது இந்தப்பணி. மாதம் ஒரு முறை அங்குள்ள பெரிய அரங்கத்தில் ஆராய்ச்சிப் பணிகள் பற்றிய அறிக்கைகள் வாசிக்கப்படும் ( ஒன்றும் புரியாது )

மாதம் ஒரு தமிழ் திரைப்படம் போடுவார்கள் கட்டணம் இரண்டு அணா (பனிரெண்டுகாசு) என நினவு , அதையும் சம்பளத்தில் பிடித்துக்கொள்வர்கள்
மாதம் நூற்றி ஐமபது ரூபாய் ஊதியம் எனக்கு

பணியாளர் ஒருவர் நடத்திய  ஜெர்மன் மொழி வகுப்பிலும் சேர்ந்து படித்தேன்
செக்ரி போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் தங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக்கொள்ள Potters Exam  என்ற தேர்வு நடக்கும் இதில் தேறினால் முது நிலைப் பட்டம் பெற்றது போன்று என்று சொல்வார்கள்
அதற்கும் ஆயதம் செய்தேன்

ஆனால் இறைவன் நாட்டம் வேறு விதமாக இருந்தது 
மூன்றே மாதம்தான் கனரா வங்கி நெல்லைக்கிளையில் பணி கிடைக்க ,வங்கிப்பணி என்பது கிடைக்காத ஓன்று என்று பேசப்பட ஒரு  விஞ்ஞானக் கனவு நனவாகாமல் போனது
என்ன செய்வது கனவு மெய்ப்பட வாய்ப்பு கிடைத்தும் அதை விட்டு வந்தது இறைவன் நாட்டம் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும்

மூன்று மாத காரைக்குடி மறு வாழ்வு- சில நினைவலைகள்
மும்தாஜ் அக்கா வீட்டில் தங்கியிருந்தேன் .அக்காவின் அன்பும், அண்ணனின் முரட்டுத்தனமான பாசமும் அண்ணனின் அம்மாவின் உபசரிப்பும் எங்கள் வீட்டில் இருப்பது போலவே உணர வைத்தது ராஜாவும் சாலிகாவும் குழந்தைகள்.

மதிய உணவு எடுத்துக்கொண்டு மிதி வண்டியில் போவது எங்கள் வீட்டிலிருந்து கல்லூரிக்குப் போவது போலவே இருந்தது
அழகப்பா கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகப் பணியாற்றிய  ரஹீம் அண்ணனிடம் நான் கண்டு வியந்தவை-( ஆனால் கற்றுக்கொள்ளதவை)
 கலகலப்பான பேச்சு, ஆழ்ந்த அறிவு , நினைவுத்திறன்,, சிக்கனம், பண மேலாண்மை பிறருக்கு உதவும் மனம், எல்லாவற்றிற்கும் மேலாக உடல் உழைப்பு
அக்கா வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு செடியும் அண்ணனின் உழைப்புக்கு சான்று சொல்லும். கிணற்றில் நீர் இறைத்து  இரண்டு பெரிய வாளிகளில் கொண்டு போய் செடிகளுக்கு ஊற்றுவதைப் பார்க்கும்போது  இவ்வளவு சிரமம் தேவையா என்று தோன்றும்
வீட்டில் பால் மாடு இருந்ததாய் ஒரு நினவு
ஒரு துணிக்கடையும் வைத்திருந்தது

புயல்ராசன் என்று ஒரு பள்ளி மாணவன் – அவனுக்கு நான் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்க சிறிய கட்டணத்துடன் அண்ணன் ஏற்பாடு செய்திருந்தது . அவனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தொலை தூரத்தில் யாராவது பேசுவது காதில் விழுந்து , வாய்விட்டுச் சிரிப்பான். அந்த அளவுக்கு படிப்பில் கவனம் இருக்காது

ஒரு நாள் மாலை ஈனா கடைக்கு பீ மூ மாமாவைப் பார்க்கப் போயிருந்தேன் . இரவு ஒரு உணவு விடுதிக்குப் போனோம் .அங்கு மேலாளராக இருந்த தாவண்ணா பெரியத்தாவின்  அன்பான உபசரிப்பால் திக்குமுக்காடிப்போனேன் ஆனால் கூச்சத்தில் சங்கடமாக உணர்ந்தேன்

நிறைய திரைப்படங்களுக்கு அண்ணனுடன் போயிருக்கிறேன்
பெரியத்தா மகன்அஜ்மல்  நான் அக்கா வீட்டில் இருக்கும்போது ஒரு முறை வந்தார்

செக்ரியில்  பணி புரிபவகளுக்கு அங்கேயே குடியிருப்பு வசதி,, மையப் பள்ளி , கூட்டுறவுப் பண்டகசாலை என எல்லா வசதிகளும் உண்டு. அமைதியான வாழ்க்கை .

காரைக்குடி பற்றி ஏற்கனவே மிக விரிவாக எழுதியிருக்கிரேன் இது இரண்டாம் முறை எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


01092020tue
sherfuddinp.blogspot.com




.






No comments:

Post a Comment