தமிழ் (மொழி) அறிவோம்
04082024 ஞாயிறு
இன்று ஒரு சுவைபதிப்பு `
ஊன் துவை அடிசில்'
அரண்மனை உணவாக இருந்து இன்று மக்கள் உணவாக மாறிவிட்டது
சாலையோர உணவகங்கள், சிறிய, நடுத்தர, பெரிய ,மிகப்பெரிய நட்சத்திர உணவு விடுதிகள் என எங்கும் பிரியாணி
திருமணம், குடும்ப கொண்டாட்டங்கள் என எதிலும் பிரியாணி
“பிரியாணி. பரோட்டா கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”
புது மொழி
கறி பிரியாணி கோழி பிரியாணி மீன் பிரியாணி என எத்தனை வகைகள்
அத்தா ஆம்பூரில் பணியாற்றியபோது அம்மா பிரியாணி செய்யக் கற்றுக்கொண்டு எங்கள் சுற்றத்தாருக்கு அறிமுகப் படுத்தியது வரலாலு
அரை நூற்றாண்டுக்கு முன் என் திருமணத்தை ஒட்டி வங்கிப்பணியாளர்கள் மற்றவர்கள் என ஐம்பது பேருக்கு மேல் ஒற்றை ஆளாக பிரியாணி சமைத்தது வரலாற்றுச் சாதனை
இன்றும் அந்த வங்கித் தோழர்களை சந்திக்க நேர்ந்தால் அந்த சிறப்பான சுவையை நினைவு கொள்வார்கள்
பிரியாணி என்னும் பெயர் 'பிரியன்' என்ற சொல் மூலம் பெர்ஷிய மொழியிலிருந்து வந்தது. அப்படி யென்றால் 'சமைப்பதற்கு முன் வறுப்பது' என்று பொருள். அரிசி என்ற பெர்ஷிய பொருள் கொண்ட 'பிரிஞ்' என்ற சொல்லிலிருந்து இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது
இன்றைய வினா
பிரியாணி
இந்தச் சொல்லுக்கு(ஓரளவு) இணையான சங்கத் தமிழ் சொல் எது ?
விடை
ஊன் துவை அடிசில்' இது என் தெரிவு
இன்னும் சில சொற்களும் சரியான விடையாக விளக்கங்களுடன் வந்துள்ளன
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி
(ஊன் துவை அடிசில்
விழுக்குடை மடை)
முதல் சரியான விடை
சிராஜுதீன்
(விடை:
பிரியாணி என்பதற்கு சங்கத் தமிழ் சொல் :
1 ) ஊன்சோறு
2 ) வாடூன் புழுக்கல் .
விளக்கம் :
ஊன்சோறு என்னும் சொல்லைச் சங்ககாலப் புலவர்கள் பல இலக்கியங்களில் எடுத்து ஆண்டிருக்கிருக்கின்றர்.
”ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்” என்பது புறநானூற்றுப் பாடல் 33, வரி 14. “
“அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும்” என்று இதே புறநானூறு பாடல் 113, வரி 02-ல் சொல்கிறது !
“ஆடுற்ற ஊன்சோறு”, என்கிறது மதுரைக் காஞ்சி (பாடல் வரி35). இதே மதுரைக் காஞ்சியில் இன்னொரு இடத்தில், “புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்’ (பாடல் வரி 533) என்னும் வரி வருகிறது !
ஊன் சோறு என்றால் என்ன ?
ஊன் என்றால் தசை என்று பொருள். இஃதன்றி நிணம், கொழுப்பு, புலால், இறைச்சி, உடல் என்றெல்லாம் பொருள் சொல்கிறது கழகத் தமிழ் அகராதி ! தசை என்பதை “சதை” என்று சொல்வது இக்கால வழக்கு !
ஊன்கலந்து செய்யப்படும் சோறு “ஊன்சோறு” ! இக்காலத்தில் “பிரியாணி” என்று சொல்கிறோமே அதைத் தான் அக்காலத்தில் ஊன்சோறு என்று வழங்கி இருக்கின்றனர் ! ஊன்சோற்றை ஆக்கும் முறையில் பண்டைக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். அதில் சேர்க்கும் நறுமணப் பொருள்களின் அளவில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். செய்ம்முறையில் வேறுபாடு இருந்திருக்கக் கூடும். ஆனால் அக்கால “ஊன் சோறு” தான் இக்கால “பிரியாணி” என்பதில் ஐயமிருக்க முடியாது !
வாடூன் புழுக்கல்:
பெரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
பாடல் :
..எயிற்றியர் அளிக்கும் உணவு (95-105)
பார்வை யாத்த பறை தாள் விளவின் . . . .[95]
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் . . . .[100]
வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் . . . .[95 - 105]
பொருள் :
.....அங்கே நிலப்பாறையில் அமைந்திருந்த உரல். அதில் நெல்லைப் போட்டு உலக்கையால் குற்றி அரிசி யாக்கினாள். அந்த மர நிழலின் ஒரு பக்கத்தில் பார்வை வலை விரிக்கப்பட்டிருந்தது. அந்த வலையில் விழுந்த பறவையையும் பக்குவம் செய்து சமைத்தாள். நீண்ட வானிக்கிணறு. அதனைத் தோண்டி முகந்த ஊற்றுநீரில் உலை வைத்தாள். முரமுரப்பான வாயையுடைய பழைய பானை. அதனை விறகடுப்பில் ஏற்றினாள். (அரிசி ஒன்று வெந்தும் ஒன்று வேகாமலும் இருந்தால் அது வாரம் பட்ட புழுக்கல். புலவு, அரிசி ஆகிய இரண்டில் ஒன்று வெந்தும் மற்றொன்று வேகாமலும் இருந்தால் அதுவும் வாரம்பட்ட புழுக்கல். எல்லாம் பக்குவமாக வெந்திருந்தால் அது வாராது அட்ட வாடூன் புழுக்கல்.) இப்படி வாராது அட்ட வாடூன் புழுக்கலை பிரியாணியை) எயிற்றி தேக்கு இலையில் படைத்து விருந்தூட்டினாள். அது தெய்வ மடை (அமிழ்தம்) போன்றது. அன்று அவள் எங்களுக்கு அதனை வழங்கினாள். இன்று உங்களுக்கும் அதனை வழங்குவாள்.....)
ரவி ராஜ் (ஊன் சோறு ,ஊன் புழுக்கு)
பாப்டி (ஊன் துவை அடிசில்)
ஷர்மதா (ஊன் சோறு)சி
சிவசுப்ரமணியன் ((ஊன் சோறு)
ராஜாத்தி (ஊன் துவை அடிசில்)
முயற்சித்த சகோ சிவராமகிருஷ்ணனுக்கு நன்றி
`ஊன் துவை அடிசில்' விளக்கம்
ஊன் என்றால் இறைச்சி, துவை என்பது கலந்த தன்மை, அடிசில் என்பது சமைக்கப்பட்ட உணவு என்று பொருள். `ஊன் துவை அடிசில்' என்றால் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட உணவு என்று அர்த்தம்.
பதித்துப்பற்றில் புலவர் பாணர், `சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்து' என்று குறிப்பிட்டுள்ளார்
நிறைய கறி போட்டு மிகுந்த சுவையாக இருக்கும் பிரியாணியை
“ஒரு சோறு ஒரு கறியாக இருந்தது “ என்று பேச்சு வழக்கில் உயர்வாகச் சொல்வதுண்டு
அதைத்தான்
, `சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில்ஓடாப் பீடர் உள்வழி இறுத்து' என்று குறிப்பிட்டுள்ளார்புலவர் போரில் வெற்றி கண்ட பிறகு தன் வீரர்களுக்கு சேரன் செங்குட்டுவன் வழங்கிய `ஊன் துவை அடிசில்' விருந்தில் சோறு வேறாக, இறைச்சி வேறாகப் பிரிக்க முடியாதபடி ஒன்றி இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௪௦௮௨௦௨௪
04082024 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment