Saturday, 7 April 2018

வண்ணச் சிதறல் 14




சட்டம் குற்றம் நீதி ,


நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா என்று பாடினார் புரட்சித்தலைவர் .
சட்டம் என்பது ஒரு புதிராகவும் இருட்டு அறையுமாகவே பலருக்கும் இன்றும் தெரிகிறது .நீதியும்  சட்டமும் வேறு வேறு என்ற எண்ணமும் வலுக்கிறது

எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு வழக்கு அண்மையில் முன்னால் முதல்வருக்கும் அவர் தோழிக்கும் நீதிமன்றம் வழங்கிய தண்டனை

..முன்னாள் முதல்வர் காலமாகிவிட்டார் அதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறைவேற்ற முடியாது என்பது புரிகிறது . ஆனால் அதனாலேயே அவர் குற்றமற்றவர் என்று ஆகிவிடுமா என்பது புரியவில்லை. 
சிறை தண்டனையை நிறைவேற்ற முடியாதுதான் .அனால் அவருக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் தண்டத தொகையை வசூலிப்பதற்கு என்ன தடை ?
அதற்கும் மேல் சிறையில் இருக்கும் தோழியிடமிருந்தும் தண்டத்தொகையை வசூலிக்கவில்லை.

இவையெல்லாம் சட்டமா நீதியா என்று புரியவில்லை

உலகையே உலுக்கிய நிர்பயா வழக்கில் குற்றம் புரிந்த ஒருவருக்கு பதினெட்டு வயது நிறைவடையவில்லை என்பதால் மிகக்குறைந்த தண்டனை 
.ஒரு சிறுவன் செய்யும் செயலா அவன் புரிந்த குற்றம் ?

திட்டமிட்டு பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்தவர்கள் மிக எளிதாக வெளி நாடு போக முடிகிறது .போய் அங்கிருந்து உன்னால் முடிந்ததைச் செய் என்று அறைகூவுகிறார்கள் 

நாட்டில் அவசர நிலை அமலில் இருந்தபோது நடந்த ராஜன் கொலை வழக்கு மிகப்பரபரப்பாகப் பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது .
கேரளத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன்.
.நாக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்ற ஐயத்தின் அடிப்படையில் காவல் துறை அவரை விசாரணைக்கு ஒரு முகாமுக்கு அழைத்துச் செல்கிறது
அங்கு அவருக்கு விசாரணையின் போது நேர்ந்த வன்முறை தாங்காமல் அவர் உயிர் பிரிகிறது .
அவர் உடல் என்னவாயிற்று என்பது யாருக்கும் இன்று வரை தெரியவில்லை
மகனுக்கு என்னவாயிற்றோ என்ற வருத்தத்தில் தாய் மனநிலை சிதைந்து போகிறார்
தந்தை ஒரு இந்திப் பேராசிரியர் . மகனைத் தேடும் முயற்சியில் தன் பொருள் அனைத்தையும் செலவழிக்கிறார் . காவல் துறை, மாநில முதல்வர், மாநில உள்துறை அமைச்சர், சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ,தலைமை அமைச்சர், நடுவன் உள்துறை அமைச்சர் , குடியரசுத் தலைவர் என எல்லோரிடமும் தன் வழக்கை எடுத்துரைத்தும் தன் மகன் எதற்காக கைது செய்யப்பட்டார் என்னவானார் என்பதை அறிய முடியவில்லை

இறுதியாக கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஆள்கொணர்வு மனுவுக்கு காவல் துறை கொடுத்த பதிலில் ராஜன் காவலர் சிறைக்காப்பில் (போலீஸ் கஸ்டடி) இறந்துவிட்டார்  என்று ஒத்துக்கொள்கிறார்கள் .

இருந்தாலும் இன்று வரை இதற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை .அதற்கு சொல்லப்பட்ட காரணம்  Corpus delicti- உடலம் கிடைக்கவில்லை

Corpus delicti என்ற சொல்லுக்கு உடலம் என்பது மட்டும் பொருளல்ல .வலுவான ஆதாரங்கள் என்று கொள்ளவேண்டும் என பல வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன .இந்தச் சொற்றொடர் (Corpus delicti) மிகப்பரவலாக பொதுமக்களாலும் அச்சு ஊடகங்களாலும் விவாதிக்கப்பட்டதால் என் மனதில் பதிந்து இன்றும் நினைவில் நிற்கிறது

இருந்தாலும் ஒரு இளம் உயிர் இழப்புக்காக
காவலர் காப்பில் அவர் இறந்தது காவல் துறையாலே நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட போதும்

ஒரு குடும்பம் சிதைந்து போனதற்காக  இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது ஒரு கசப்பான, சுடும் உண்மை

அண்மையில் பல உயர் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள். சட்ட மன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி துறையும், பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடத்திய தொடர் சோதனைகள் மிகப்பரபரப்பாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன .ஐயமற குற்றங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது போல் ஒரு காட்சி உருவாக்கப்பட்டது
ஆனால் இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை , பதவி நீக்கம் செயப்படவில்லை என்பது இவற்றின் உள்நோக்கம் வேறோ என எண்ண வைக்கிறது
ஒரு அரசியல்வாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய்களை அவர் மேல் குற்றம் எதுவும் சாட்ட முடியாததால் வேறு வழியின்றி அவரிடம்  திரும்பக் கொடுக்கின்றனர் .ஆனால் அரசியல்வாதியோ நான் பணமாக வாங்க மாட்டேன். அரசு காசோலை மூலம்தான் திருப்பித் தர வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இன்னும் ஒரு இடத்தில் பெருமளவில் செல்லாத  ரூபாய் தாள்கள் கைப்பற்றபட்டன. .இப்போது அவர்மேல் எந்தப்பிரிவில் வழக்குத்தொடர்வது என்பது தெரியாமல், புரியாமல் முழித்துக்கொண்டதிருக்கிறதாம் அரசு

அந்நியச்செலாவணி பரிமாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாய் வந்த தகவல்கள் அடிப்படையில் ஒரு அதிகாரிகள்  குழு ஒரு வணிகத்தலத்தில் சோதனை போடச் செல்கிறது
அந்நியச்செலாவணி தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை .ஆனால் நிறைய தங்கம் கிடைகிறது
.தங்ககட்டுப்பாடு அமலில் இருந்த காலம் அது .எனவே தங்கத்தைக் கைப்பற்றி வழக்கும் தொடுக்கிறார்கள்
வணிக உரிமையாளருக்காக வாதிட வந்த வழக்கறிஞர் தடாலடியாக ஒரு வாதத்தை முன் வைத்தார்.
அந்நியச்செலாவணி தொடர்பாக சோதனையிட வந்த அதிகாரிக்கு தங்கத்தை கைப்பற்றும் அதிகாரம் கிடையாது .எனவே அவர் தங்கத்தை களவாடியது போல் ஆகிறது அதனால் அவர் மேல் குற்றவியல் வழக்குத் தொடரவேண்டும் என்றார்.
அதிகாரிகள் நடுநடுங்கிப்போய் தங்கத்தை ஒப்படைத்துவிட்டு வழக்கை முடித்துக்கொண்டனர்

பள்ளிப்பேருந்தில் இருந்த ஓட்டையில் சிறுமி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி இறந்தது ஒரு கொடுமையான நிகழ்வு .
வாகனத்தகுதிச் சான்றிதழ் வழங்கும்போது வாகனத்தின் தளமேடையை சரிபார்க்க வேண்டியதில்லை என்ற சட்டத்தின் ஓட்டையை வைத்து போக்குவரத்து துறை சார்பில் வாதிடப்பட்டது.

அதை சரி பார்க்கும் பொறுப்பு யாருடையது என்பது தெரியவில்லை

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் குற்றமற்ற ஒருவர் தண்டிக்கப்படக்கூடது என்பதுதான் நம் சட்டம்.நீதியின் அடிப்படை என்பார்கள்

இது சரியா என்பது எனக்குப் புரியவில்லை .எதற்காக ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கவேண்டும்?

இப்போது ஆயிரம் கோடிகள் தப்பித்துப்போகின்றன

குற்ற்ம் புரியாதவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது, இருக்கக்கூடாது

ஆனால் அண்மையில் நான் கேள்விப்பட்ட ஒரு நிகழ்வு –
இந்தப்பகுதியை எழுத என்னைத் தூண்டிய நிகழ்வு
இதுவும் நடைமுறையில் மாறிப்போனதைத் தெளிவாக்குகிறது

போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரச்சாலை.
நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் திடீரென அந்தச் சாலையை கடக்க முயல்கிறார்  சாலையின் எதிர் வரிசையில் இருக்கும் மதுக்கூடத்துக்குப் போக வேண்டிய அவசரம், அவசியம். 
முறையாகக்கடக்க நினைத்தால் அவர் இரண்டு கி,மீ தொலைவு நடந்து போய் சாலையைக் கடந்து மீண்டும் இரண்டு கி மீ நடக்க வேண்டும்

சற்றும் சிந்திக்காமல் சாலையில் இறங்கிய அவர் ஒரு மகிழுந்தின் மேல்  மோதி, தூக்கி வீசப்பட்டு அந்த மகிழுந்தின் மேலே விழுந்து படுத்து விடுகிறார். மகிழுந்தின் கண்ணாடி உடைந்து குத்தி நிறைய காயம் அவருக்கு. 
மகிழுந்து ஓட்டுனருக்கு சிறிய காயம் பெரிய அதிர்ச்சி
 .
போக்குவரத்து காவல்துறையினர் மிகவும் கண்ணியமாகவும் மனித நேயத்துடனும் நடந்து கொண்டது பாராட்டுக்குரியது . அடிபட்டவரை மருத்துவ மனையில் சேர்க்க உடனே ஏற்பாடு செய்கிறார்கள் .வண்டியை காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் பிறகு பட்டறைக்கும் எடுத்துச் செல்லவும் உதவுகிறார்கள்

மகிழுந்து ஓட்டுனர் எந்தத்தவறும் செய்யவில்லை., தவறான இடத்தில் சாலையைக் கடக்க முயன்றவர்தான் தவறு செய்தார் என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது .

இருந்தாலும் காவல்துறை மகிழுந்து ஓட்டுனர் மேலேயே குற்றம் சாற்றுகிறது .அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அப்படிச்செய்தால்தான் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து காயம் பட்டவருக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் மேலும் வழக்கு விரைவில் முடிவடையும்

இதற்கு எதிராக மகிழுந்து ஓட்டுனர் வழக்குத் தொடர்ந்தால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்றும் சொல்ல முடியாது

சொல்லும் காரணங்கள் நடைமுறைக்கு சரியாக இருக்கலாம் .ஆனால் சட்டம் நீதி இவற்றின் அடிப்படையான குற்றமற்றவர் தண்டிக்கபடக்கூடாது என்ற கொள்கை இங்கே தகர்க்கப்படுகிறதே

இன்னும் பல சொல்லலாம். ஆனால் இது ஒரு கனத்த பொருள் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்

மூளைக்கு வேலை

மும்பை புறநகர் பகுதியில் நிகழ்ந்த ஒரு கொலையின் காவல் துறை பதிவு
கொலையுண்டவர் ஒரு ஆண் 09 11 .2016 புதன்கிழமை 1235 மணியளவில் அவர் வீட்டில் கொலை செய்யப்படுகிறார் .மாலை 3,22 க்கு கொலையுண்டவரின் மனைவி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து எல்லோரிடமும் விசாரணை செய்கிறார்கள் .விசாரணையில் கிடைத்த தகவல்கள்

மனைவி- : நான் தூங்கிக்கொண்டிருந்தேன்

மகன் : தோழியுடன் திரைப்படம் சென்றிருந்தேன்

அண்டை அயலார்:: ஒரு திருமணத்திற்குப் போய்விட்டோம்

வண்டி ஓட்டுனர் : பணம் எடுக்க பணப்பொறிக்குப்  போனேன்

சமையல்காரர் : மதுக்கடைக்குப் போயிருந்தேன்

தோட்டக்காரர் அந்த நேரம் முழுதும் நான் தோட்டத்தில்தான் 
இருந்தேன்.எனக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை.

காவலாளி : உறவினர் திருமணத்துக்குப் போனேன்

காவல்துறை உடனே குற்றவாளியை இனம் கண்டு கைது செய்கின்றனர்
யார் குற்றவாளி ? எப்படிக்கண்டு பிடித்தார்கள் ?

இ(க)டைச்செருகல் (சற்று தலை சுற்றுவது போல் இருக்கும்)
அமெரிக்காவின் தடய அறிவியல் மருத்துவர்  சொன்ன உண்மை நிகழ்வு

ரொனால்ட் என்பவரின் உடலம் மருத்துவ ஆய்வுக்காக கொண்டு வரப்படுகிறது . தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு காயத்தால் அவர் இறந்ததாக மருத்துவர் முடிவு செய்கிறார்

பத்து மாடிக்கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் ரொனால்ட்,,.
மிகுந்த கவலை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாய் ஒரு கடிதமும் எழுதி வைத்திருக்கிறார்
அவர் குதிக்கையில் ஒன்பதாவது மாடியின் சன்னல் வழியே பாய்ந்த ஒரு குண்டால் உடன் உயிர் பிரிந்தது
- எட்டாவது மாடியில்  தற்செயலாக விழுபவர்களைக் காப்பாற்ற ஒரு  பாதுகாப்பு வலை கட்டப்படிருப்பது இறந்தவருக்கும் தெரியாது சுட்டவருக்கும் தெரியாது 
 ரொனால்ட், தற்கொலை முயற்சியில் வெற்றி அடைத்திருக்க முடியாது .,எனவே இது ஒரு கொலைதான் என்று மருத்துவர் முடிவு செய்தார்

ஒன்பதாவது  மாடியில் ஒரு மூத்த குடிமகனும் அவர் துணைவியும் குடியிருந்தார்கள் . .அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவியை துப்பாககியைக்காட்டி மிரட்டியிருக்கிறார் .பதற்றத்தில் அவர் சுட்டடபோது குறி தவறி சன்னல் வழியே ரொனால்ட் தலையில்குண்டு  பாய்ந்து அவர் உயிர் பிரிந்தது+

எனவே முதியவர் மேல் கொலைக்குற்றம் விழுகிறது .அவரும் அவர் துணைவியும் இதை வன்மையாக மறுக்கிறார்கள் .குண்டு இல்லாத துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது எங்களுக்குள் வழக்கமான ஓன்று .என் மனைவியை கொலை செய்யும் எண்ணம் எனக்குக் கிடையாது. எனக்குத் தெரியாமல் எப்படியோ துப்ப்பாகியில் குண்டு வந்துள்ளதால் இது ஒரு விபத்து என்று வாதிட்டார்..

புலனாய்வு தொடர்கிறது ..அந்த வயதான  தமபதியின் மகன்தான்  துப்பாக்கியில் நாற்பது நாட்கள் முன்பு குண்டு வைத்தார் என்பது  சாட்சி மூலம் தெரிய வருகிறது 
.தனக்கு பணம் கொடுப்பதை தாய் நிறுத்தி விட்டதால் தாயை பழி வாங்க தந்தையின் துப்பாக்கியால் மிரட்டும் பழக்கத்தை அறிந்த மகன் துப்பாக்கியில் அப்பாவுக்குத் தெரியாமல் குண்டு வைத்து விட்டார் .

எனவே இப்போது கொலைப்பழி அந்த மகன் மேல் விழுகிறது

இப்ப்போது இன்னொரு குழப்பமான திருப்பம்

அந்த மகன் யாரென்றால் அவர்தான் ரொனால்ட். .
தன் தாயைக் கொல்ல அவர் எடுத்த முயற்சி பலன் அளிக்காததால் மனம் உடைந்து போய் தற்கொலைக்கு முயற்சிக்கிறார் .தான் வைத்த குண்டினாலேயே  அவர் உயிர் பிரிந்ததால் இது தற்கொலை என முடிவு செய்யப்பட்டு வழக்கும் முடிக்கப்படுகிறது

(அதென்னமோ தெரியவில்லை மூளைக்கு வேலை, இ(க)டைச்செருகல் எல்லாம் கொலை பற்றியதாகவே அமைந்து விட்டன Just a coincidence)

இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்

வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com






1 comment:

  1. சட்டம் ஒரு கழுதை.அதற்குப் பின்னாலும் போகமுடியாது, முன்னாலும் போகமுடியாது. அதன் மேல் சவாரி செய்பவர்களே பாக்கியசாலிகள்.

    ReplyDelete