Saturday, 28 April 2018

மண்ணில் மனம்






திருப்பத்தூர் சீதளி வடகரை தெரு

வண்ணச்சிதறல் 17

மண்ணில் மனம்


இரண்டாண்டு இடைவெளிக்குப்பின் திருப்பத்தூர் பயணம் .சரிவு மாமா பேத்தி  திருமணம்
சென்ற வாரம்தான் ஒரு நீண்ட பயணம் இந்த வாரமும் பயணிக்க வேண்டுமா அதுவும் இந்தக் கோடை  வெயிலில் என்ற எதிர்மறை எண்ணத்தை விரட்டியடித்தது சொந்த ஊருக்குப் போகிறோம் என்ற உற்சாகம்
திருவில் நான் பிறக்கவுமில்லை நீண்ட நாள் வசிக்கவும் இல்லை . சொந்த வீடு இல்லை . மிகச்சில உறவினர் மட்டுமே அங்கு இருக்கிறார்கள்
இதெல்லாம் தாண்டி என்னமோ அந்த ஊரின் மேல் ஒரு பற்று பாசம் மகன் பைசல் பிறந்த ஊர்,.பள்ளி நிறைவு  வகுப்பு படித்த ஊர் .அவருக்கும் மிகவும் பிடிக்கும்
வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நிரம்பிய தொடரியில் திருச்சி பயணம் .சன்னலோர இருக்கை கிடைத்து விட்டது ,பிறகென்ன கூட்டமும் ஒரு கலகலப்புத்தானே
தொடரியில் கண்ட ஒரு நிகழ்வு
இட்லி வடை விற்றார் ஒரு பெண் . ஒரு இட்லி மூன்றே ரூபாய் வடை ஐந்து ரூபாய். பேருந்து நிற்கும் பெரிய உணவகங்களில் இருபது ரூபாய்க்கு வைக்கும் வடையை விட இது பெரிதாகவே இருந்தது
பயணித்த பெண் ஒருவர் மூன்று வடை கேட்டு இருபது ரூபாய் கொடுத்தார்..
வடை விற்றவரிடம்   .சில்லறை இல்லை , அவர் இறங்கும் இடம் நெருங்கி விட்டது எனவே நான்கு வடைகளைக் கொடுத்தார்
பயணி குரல் எழுப்பினரே பார்க்க (கேட்க) வேண்டும்.. விற்காத வடையைத் தள்ளி விட இப்படி ஒரு தந்திரமா ,? ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு மறு வேலையைப்பார்  என்று அவர் குரல் கொடுத்தது இந்த ஐந்து ரூபாயில்தான் அவர் வாழ்க்கை, சொத்து சுகம் எல்லாம் அடங்கியிருக்கிறதோ என எண்ண வைத்தது
பல பெரிய உணவு விடுதிகளில் நான் பார்த்திருக்கிறேன்,  வெறும் இட்லி கேட்பவர்களுக்கு எதோ இலவச இணைப்பு போல வடையையும் தட்டில்  வைத்துக்கொண்டு வருவார்கள் இட்லியை விட வடை விலை கூடுதலாக இருக்கும்
 கூச்சமா இல்லை இழுக்கும் வடை மணமா தெரியவில்லை பெரும்பாலானவர்கள் வடை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்
அது போக பத்து ரூபாய்குக் குறையாமல் டிப்ஸ் வேறு
நாலு வடையைக் கொடுத்துத்தானே இருபது ரூபாய் கேட்டார். அதற்குஇவ்வளவு கடுமை தேவையா!
புதுக்கோட்டையை நெருங்கிய உடனே சொந்த ஊர் வந்தது போல்  மூச்சில் ஒரு சக்தி பிறநது களைப்பெல்லாம் காணாமல் போய்விடுகிறது
திரு வந்து விடுதியில் கைகால் முகம் கழுவிவிட்டு திருமணக்கூடம் சென்றோம்
சென்ற வாரம் சந்திக்காத , சந்தித்த பல உறவுகளின் சந்திப்பு இங்கே
குறிப்பாக மைத்துனர் சிராஜுதீன்
திருமண விருந்தில் கூடவே இருந்து அவர்தான்( அவர் மட்டும்தான் ) உபசரித்து கவனித்து சாப்பிடச் சொன்னார்  

துணைவியின் உடன்பிறப்புகள் ஒரு இடத்தில் கூடினால் சொத்துப்பங்கீடு பற்றி பேசவேண்டும் என்பது ஒரு மரபு .. அது இங்கேயும் நடந்தது
ஜூன் மாதம் நடக்கும் மண விழாவில் இது பற்றி அடுத்துப்பேச தீர்மானிக்கபட்டது (ஆண்டு குறிப்பிடப்படவில்லை )
திருமணத்தில் விருந்து உண்டபின் விடுதியில் போய் ஓய்வு எடுத்தோம் மாலைமைத்துனர் சிராஜுதீன் அறைக்கு வர வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.பிறகு இரவு உணவுக்கு கிளம்பினோம்
திருவில் புகழ்பெற்ற அசைவ உணவகத்தில் புரோட்டா குருமா மிகவும் சுவையாக இருந்தது கடந்த காலமாகிவிட்டது. முன்பு இருமுறை போய் சுவையில் ஏமாந்தோம்
அண்மையில் துவங்கபட்ட மற்றொரு உணவகம் போனோம் சிறிய உணவகம்தான் இருந்தாலும் .ஓரளவு பழைய சுவையை உணர முடிந்தது
காலை பத்து மணிக்கு திருச்சியில் தொடரியைப் பிடிக்கவேண்டும் எனவே ஆறு மணிக்கெல்லாம் விடுதியிலிருந்து புறப்பட்டோம்
திருப்பத்தூரில் இருந்தது மொத்தத்தில் அரை நாள்தான் .அதிலும் பாதி தூக்கத்தில் கழிந்தது .பெரிதாக சுற்றம் நட்புகளை சந்திக்கவும் இல்லை .இன்னும் சொல்லப்போனால் அங்கு இருந்த நேரத்தை விட பயண நேரம் அதிகம் . .இருந்தாலும் பிறந்த மண்ணின்   இனிமையும்  மனதுக்கும் உடலுக்கும்  தரும் உற்சாகமும் மறக்க முடியாததுதான்
எனவே தொடரியில் கண்ட பல சுவையான நிகழ்வுகளை வேறு பகுதிக்கு ஒதுக்கி வைத்து விட்டு மண்ணில் மனம் ஒன்றிய சுவையோடு இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
மூளைக்கு வேலை
1459+1= 1500
எப்படி ?
இதுதான் சென்ற வாரப்புதிர்
நேரக்கணக்கு இது 14மணி  59நிமிடம்(2  59) +1  நிமிடம் = 15 மணி  (3 மணி)
 சரியான விடை  எழுதிய ஒரே ஒருவரான (அதுவும் உடனே)
பேரன் பர்வேசுக்கு
பெருமிதம் நிரம்பிய பாராட்டுக்கள்
இனி
இந்த வாரப்புதிர்
 வரும் ஆனால் வந்து சேராது
அது என்ன ?
இ(க)டைச்செருகல்
திருப்பத்தூரில் நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்) யாரும் இல்லை ,இருக்கவும் முடியாது என்கிறார்கள் .இவ்வளவுக்கும் நகரத்தார் நிறைய இருக்கும் ஊர்கள் பலவும் திருப்பத்தூரின் அண்மையில் இருக்கின்றன

இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்


வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com

No comments:

Post a Comment