Thursday, 11 October 2018

தமிழ் (மொழி) அறிவோம் 16 என்ன(ண்ண) வேணும்





என்ன(ண்ண) வேணும்


வடிவேல் சிங்கமுத்துவிடம் எண்ணெய் வாங்கும் காட்சியை எல்லோரும் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்
இது  சிலேடை என்ற வரம்பிற்குள் வராது  
ஆனால் அந்த சொல் விளையாட்டை சுவைத்து நகைக்க முடிந்தது இது கடலென்னதான என்று வடிவேல் கேட்டவுடன் சிங்கமுத்து கடையே வேண்டாம் என்று ஓடுவது இதன் உச்ச கட்டம்

இரண்டு பொருள் வரும்படி பேசுவது , எழுதுவதுதான் சிலேடை . அது ஒரு சொல்லாக இருக்கலாம் ,சொற்றொடராக இருக்கலாம்,; வாக்கியமாக இருக்கலாம் அல்லது முழு பாட்டாகவும் இருக்கலாம்

தமிழ் இலக்கியங்களில் சிலேடை புகுந்து விளையாடுகிறது கவி காளமேகம் என்ற புலவர் சிலேடை வெண்பா எழுதுவதில் வல்லவர்
(வெண்பா- இரண்டு முதல் பனிரெண்டு வரி வரை கொண்ட பாடல்கள் என இப்போதைக்குத் தெளிந்து கொள்வோம், .இரண்டு வரி கொண்ட திருக்குறள், நான்கு வரி கொண்ட நாலடியார் இவையெல்லாம் வெண்பாக்களே .அதன் விரிவாக்கம் இப்போது வேண்டாம் )
தமிழ் மொழியில் ஒரு சுவை கண்டு இலக்கியங்களைப் படிக்கத் துவங்கினால் அறுசுவை விருந்து சாப்பிட்டது போல் மன நிறைவு,மகிழ்ச்சி வரும்

அதெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் இப்போது சிலேடைக்கு சில எளிய நடை முறை எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்

தமிழ் அறிஞர் ஒருவர் அன்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்து உண்ணப் போயிருந்தார் . விருந்துக்கு முன் பேசிக்கொண்டு இருக்கையில்
ஆடு கோழி ஆகாது , மீன் கருவாடு ஆகும்
என்று அந்த அறிஞர் சொன்னார்
ஆனால் ஆடு, கோழி, மீன் கருவாடு என என்னென்ன உண்டோ அனைத்தையும் சுவைத்து மகிழ்ந்தார்
வீட்டுகாரர் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டார்
ஐயா உங்களுக்கு ஆடு கோழி இதெல்லாம் ஒத்து வராது என்று சொன்னிர்களே
நீங்கள் எல்லாவற்றையும் சுவைத்தது மகிழ்ச்சிதான் இருந்தாலும் உங்கள் உடல் நலத்துக்கு ஊறு ஏற்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையில் கேட்கிறேன் என்றார்
அதற்கு தமிழறிஞர்
எனக்கு ஒத்துக்கொள்ளாது என்று நான் எப்போது சொன்னேன்
மீன் காய்ந்தால் கருவாடாக மாறும்  . ஆனால் ஆடு கோழியாக மாற முடியாது இதைத்தான் நான் சொன்னேன் என்றாராம்

குன்றக்குடி மடத் தலைவராய் இருந்த குன்றக்குடி அடிகளார் நல்ல தமிழறிஞர் ,நகைச் சுவையாகப் பேசக்கூடியவர் .
வேறு ஒரு மடத் தலைவர் தன சீடர்களுடன் குன்றக்குடி அடிகளாரைப் பார்க்க வருகிறார்
என்ன சீசாக்களுடன் வந்திருக்கிறீர்கள் என்று குன்றகுடியார் நகைக் சுவையாக வினவ 
எல்லாம் குன்றாக் குடியரைப் பார்க்கத்தான் என்று அதே நகைச்சுவையுடன் சொன்னார்
சீசாக்கள் – சீடர்கள், பாட்டில்கள்

இந்த இடத்தில் குன்றக்குடி அடிகளார் பற்றி ஒரு சிறு குறிப்பு
குன்றக்குடிக்குள் குடியைக் கெடுக்கும் குடி  வரக்கூடது என்று நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்றவர் . இப்போது என்ன நிலை என்பது எனக்குத் தெரியவில்லை
குன்றக்குடியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டையும் ஒரு சிறு , தொழிற்சாலையாக மாற்ற முயற்சிதது பொருளாதார. வளர்ச்சிக்கு வித்திட்டவர்

புலவர் ஒருவர்  உயிர் பிரியும் நிலையில் படுத்திருக்கிறார் .அவர் மகள் பாலில் ஒரு துணியை நனைத்து அப்பாவின் வாயில் பிழிகிறார் .புலவர் தூ தூ என்று துப்ப
பாலும் கசந்த்ததா அப்பா என்று மகள் கேட்க
பாலும் கசக்கவில்லை பிழிந்த துணியும் கசக்கவில்லை என துணி அழுக்காக , துவைக்காமல் இருப்பதை அந்த நிலையிலும் நகைச்சுவையாகச் சொல்கிறார்

தமிழறிஞர் கி வா ஜகந்நாதன் இயல்பாக இரட்டுற மொழிதலில் வல்லவர் .நண்பா ஒருவர் வீட்டு வாசலில் புடவையை உலர்த்திகொண்டிருந்தார் .இதுதான் உண்மையில் வாயில் புடவை என்று சிலேடையாக மொழிந்தார்
.
திரைப்பாடல்களில் சிலேடையை புகுத்தியவர் கவிஞர் கண்ணதாசன்
பலே பாண்டியா படத்தில் அத்திக்காய் காய் காய்
வீர அபிமன்யு படத்தில் பார்த்தேன் சிரித்தேன்
ரகசிய போலீஸ் 115 படத்தில் பால் தமிழ் பால்
பாடல்களில் முறையே காய், தேன் பால் என்ற சொற்களைக்கொண்டு  சொல் சிலம்பம் ஆடி மகிழ வைக்கிறார் கவிஞர்

ஒவ்வொன்றும் படித்துச் சுவைக்க வேண்டிய பாட்டு .இவை பற்றி பின்பு எப்போதாவது விரிவாகப்பார்ப்போம்

நிறைவாக காளமேகப்புலவரின் சிலேடைப்பாடல் ஓன்று

பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம் 
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!  


பாம்பு 
படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். 
படமெடுத்துஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். 
பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக்காட்டும். 
 அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக்  கொள்ளும். 
அது கடித்துவிட்டாலோ நஞ்சு மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். 
அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்

எள் செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணெய்குடத்தில் சேமிக்கப்படும். 
அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்றஓசை ஏற்படும். 
எண்ணெய் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின்  
திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின்முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை   மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் 
குளிர்ச்சி உண்டாக்கும்.அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி 
மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். 
எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.



மீண்டும் அடுத்த வாரம்

Blog Address
sherfuddinp.blogspot.com
B/F/த 11102018


No comments:

Post a Comment