Monday, 10 February 2020

அத்தாவின் எழுத்துக்கள் 10 வாலி வதம் 2



வாலி வதம் 2 நிறைவுப்பகுதி

வாலியின் வாதமாகத் தொடர்கிறது


வாலி வாதம் செய்கிறான் – இறக்கும் தருவாயில்
இராமா ! என்ன நினைத்துக்கொண்டு இப்படிச் செய்து விட்டாய்?
வாய்மைக்காக உயிர் துறந்த மன்னன் மகனல்லவா நீ !
பரதன் போன்ற உத்தமனுக்கு நீ உடன்பிறந்து மூத்தோனாக வேறு ஆகிவிட்டாயே!
யாரோ ஒருவனைக்காப்பதற்காக எனக்கு அநியாயமாக தீங்கிழைக்கலாமா ?
குலம் , கல்வி, நலம் முதலியன பெற்று மூவுலகுக்கும் நாயகனாக விளங்கும் நீ அவற்றை மறந்து இத்தீங்கை இழைத்து விட்டாயே         ,கோ இயல்  தருமம் உங்கள் குலச் சொத்தல்லவா !              மனைவியைப் பிரிந்த துயரத்தால் உன் புத்தி திகைத்து விட்டதா?      அரக்கன் செய்த குற்றத்துக்கு நானா பிழை .
என்மேல் எக்குற்றம் கண்டாய்                                        உன் தந்தையின் அரசுரிமையை அங்கு உன் தம்பிக்குக் கொடுத்துவிட்டு வந்தாய்.                                                             இங்கு என் அரசைப் பறித்து என் தம்பிக்குக் கொடுக்கிறாய் .                அடடா ! என்ன பிரமாதமான செயல்.                                   நீயே இப்படிப் பிழை செய்து விட்டு இலங்கை வேந்தன் முறையற்ற செயல் செய்தான் என்று நீ எந்த வாயால் கூற முடியும்,                    உன்பால் அன்பு  பூண்ட இருவர் எதித்து சண்டையிடும்போது ஒருவன் மீது மட்டும் அம்பு எய்தாயே இது தருமம்தானோ!

எப்படிப்பார்த்தாலும் இது வீரச்செயலாகாது : மெய்மையாகாது .விதிவசம் என்று கூறவும் இயலாது .                                            நான் மண்ணுக்கு ஒரு பாரமா !                                    பண்பழிந்த இச்செயலை ஏன்தான் செய்தாயோ !                 துணை வேண்டுமென்று கருதினால் ,புயலைப்பற்றும் வரம் கொண்ட சிங்கம் போன்ற என்னை விட்டு கேவலம் ,முயல்போல ஒதுங்கிக் கிடக்கும் சுக்ரீவனைத்தானா துணையாகக் கொள்ள வேண்டும் .     சந்திரனுக்க்குத்தான் களங்கம் உண்டு .                        பாவியாகிய நீ பிறந்து களங்கமற்ற சூரிய குலத்துக்கும் களங்கம் உண்டாக்கிவிட்டாயே !
என்னை ஒளிந்து நின்று கொன்றதுமல்லாமல், பெரிய வீரன் போல் என் முன் வந்து நிற்கவும் துணிந்து விட்டாயே , உனக்கு வெட்கமில்லை !          உன் குலப்பெருமையாகிய நீதியையும் வீரத்தையும் விட்டு என்னைக் கொன்றதால், வாலி செத்தான் என்று மட்டும் எண்ணாதே           .அறத்தின் வேலியை அல்லவா அழித்து விட்டாய் !!                            மறைந்து நின்று என்னை வதைத்து வில் தொழிலுக்கே களங்கம் விளவித்துவிட்டாயே  
மனைவியை இழந்தால் இப்படியா புத்தி கெட்டுவிடும் என்று சரமாரியாக விவாதித்தான் .
ஊன்றிப்பார்த்தால் இதில் வாதம் எங்குமே இல்லை .அழகாகத் திட்டுகிறான் . எப்போதுமே ஒருவனைத் திட்டுவது அதிலும் பெரியவர்களையும் பொறுப்புள்ளவர்களையும் திட்டுவது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். அதற்குத்தான் பெருங்கூட்டமும் கூடும் 
இங்கு கம்பன் அழகிய அடுக்கு மொழிகளைக் கொடுத்து இராமனைத் திட்ட வைக்கிறான்
“என்னைக்கொன்றாயே நீ உன் அப்பன் மகன்தானா ! ஊரானிடம் மனைவியை விட்டு விட்டு என்னைத்தாக்கினாயே ! உனக்குபுத்தி இல்லையா “
என்றெல்லாம் கன்னாபின்னா என்று தெருச்சண்டைகளில் ஆ.த்திரத்தில் பேசிக்கொள்வார்களே அது போல் பேசுகிறான் வாலி . கம்பனும் வாலி ஏசுகிறான் என்றுதான் கூறுகிறான்
பொடிப்ப நோக்கி
“எண்ணுற்றாய்! என் செய்தாய் ? என்று ஏசுவான் இயம்பலுற்றான் (83)
என்றுதான் கம்பன் கூறுகிறான்
இவ்வளவு தூற்றுதலையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ராமன் நியாயாதிபதி என்ற முறையில் குற்றபத்திரிக்கை வாசிக்கிறான் . நீ செய்த குற்றங்கள் இதோ .......
நீ பிலத்தினுள் சென்று திரும்பாதது கண்டு                        ”புலம்புற்று உன் வழிப் போதலுற்ற * சுக்ரீவனை முதியோர்கள் தடுத்தனர் . ஆனால் சுக்ரீவனோ “யான் மாள்வேன் இருந்து அரசாள மாட்டேன் ‘ என்று பிடிவாதம் செய்தான் ,பின்னர் படைத்தலைவர்களும் முதியவர்களும் வற்புறுத்த “நன் முடி கொண்டது அக் கோதிலான் “ அதன் பின் நீ திரும்பியதும் வணங்கி “ உன் அரசு இதோ எடுத்துக்கொள்,” என்று தந்தவனை முனிந்தாய் .மேலும் அவனைக் கொல்லத் துணிந்தாய் .அவன் தவறு செய்யவில்லை என்பது உணர்ந்தும் இரங்கலை
அமரில் தோற்றேன் என்று தொழுத கையுடன் வந்தவனை கொன்று விடுவேன் என்று துரத்தினாய்
தம்பி என்று கூட சிறிதும் இரக்கம் கொள்ளவில்லை .நீ செல்ல முடியாத மலைக்கு அவன் சென்றதும் விட்டு வந்திருக்கிறாய்.. மற்றொருவன் புணர்தாரத்தின் கற்பைக்காப்பதே ஈரம் ,இற்பிறப்பு, வீரம் , கல்வி, அறநெறி .மங்கையரின் கற்பை அழித்தல்தான் அறம் திருப்பிய செயல் . இவற்றையெல்லாம் சிந்தித்தால் நீ அருமைத்தம்பியின் ஆருயிர் தேவியை பெருமை “நீங்கினை எய்தல் பெறுதியோ!
ஏதிலார் எளியவர் தீது தீர்ப்பதுதான் என் கருத்து. எனவே அபயம் என்று அடைக்கலம் புகுந்த ஏழையைக் கொல்லத் துணிந்து அவன் மனைவியையும் வௌவிய உன்னைக் கொன்றது முற்றிலும் நியாயம்”
என்று வாலியின் வாதத்திற்குதத்தக்க விடையளித்தான் ராமன்,.
வாலி குறுக்குக்கேள்வி போடுகிறான்
“ஐய! நீர் கூறிய இத்தனைப்பண்புகளும் எங்களுக்கு இயல்பு அல்லவே! எங்கள் விருப்பம் போலத்தான் நாங்கள் தொழில் புரிவோம்
மேலும் பெண்கள் கற்பு என்பதெல்லாம் எங்கள் விலங்கினத்துக்கேது?. எங்களை விலங்குகளாகத்தானே பிரம்மன் படைத்தான். எங்கள் வாழ்வு கண்டதே காட்சி கொண்டதே கோலம்தானே ! திருமணம் ஏது! தர்ம பத்தினி ஏது! உணர்வு சென்ற வழிதான் நாங்கள் செல்வோம் ஆகவே நீ கூறிய நீதிகள் எங்களுக்குப் பொருந்தாது . எனவே நான் குற்றவாளி அல்ல “ என்று வாதித்தான்
இனி இராமன் கூறுகிறான்
“கலங்கலாத நன்னெறிக் கண்டலின் நீ விலங்கு அலாமை விளங்கியது.. ஆதலால் வீரனாகிய  உனக்கு இது அடுக்காது. அறம் என்பது புலன் நோக்கிய அறிவு .ஐம்பொறிகட்கு இடமாகிய உடம்பைப்பற்றியதன்று என நீ நன்கறிவாய் அறிந்தும் பெரும்பிழைகளைச். செய்திருக்கிறாய் .கஜேந்திரன் தன அறிவுத்திறனால் மோட்சத்தை அடைந்தானே . அவனை மற்ற விலங்குகளுடன் ஒப்பிடலாமோ !.
என் சிற்றப்பனாகிய ஜடாயு ஒரு கழுகுதானே. அறிவால் முக்தி பெற்ற அவனையும் விலங்ககினதுடன் சேர்த்து விட முடியுமா ?
நன்று தீதென்று அறியும் அறிவின்றி வாழ்வதல்லவோ விலங்கின் வாழ்க்கை
  நீயோ சகல நெறிகளையும் அறிந்திருக்கிறாய் என்பது உன் பேச்சிலிருந்து நன்கு தெரிகிறதே .மனிதர்களாயினும் தக்கதின்னது தகாதது இன்னது என்று அறியாராயின் அவர்கள் விலங்குகள் அல்லவா . விலங்குகளாயினும் நீதி நெறியறிந்தால் அவை தேவர்களுக்கு ஒப்பாகுமே
இவ்வளவு அறிவு படைத்ததுமன்றி நல்ல வீரமும் பெற்றாய் .இத்தகைய சிறப்புப் பெற்ற நீ மனையின் மாட்சியை அழித்தது மன்னிக்க முடியாத் குற்றம் “
என்று அழகாக எடுத்துக் கூறுகிறான் ராமன்
இன்னும் வாலி விட்டானில்லை
அவ் உரை அமையக் கேட்ட அரி குலத்து அரசும், 'மாண்ட
செவ்வியோய்! அனையது ஆக! செருக் களத்து உருத்து எய்யாதே,
வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால்
எவ்வியது என்னை?' என்றான்; : 124 
“சரிதானையா உன்னுடைய அறவுறைகள் எல்லாம் சரியென்று வைத்துக்கொள்வோம் நீ என் மீது ஒளிந்து நின்று அம்பெய்தாயே அது எந்த நியாயத்தின் பால் பட்டது” என்று ஆணித்தரமான கேள்வியைப் போடுகிறான் ராமன்
இதற்கு என்ன பதில் சொல்வது!
வாலி விலங்காயின் வேட்டையாடிக் கொல்லத்தக்கவன் . நாட்டில் புகுந்து துன்புறுத்தும் பலமிகுந்த யானையையோ புலியையோ வேட்டையாடும்போது நேருக்கு நேர் சண்டை செய்வது எப்படி இயலும் . அது போல் வாலி மிருக பலம் படைத்தவன் .எதிரில் வருபவரின் பலத்தில் பாதி அவனுக்குப் போய் விடுமெனின் இதை விட மிருகபலந்தான் பெரிதா என்ன ? ஆதலின் அவனை மறைந்து நின்று கொன்றது முற்றும் நியாயமே . ஆனால் அவன் விலங்கல்லவென்று கருதி வாதித்து அவன் அறிவிற்சிறந்தவன் என்று முன் பேசி நியாயம் வழங்கப்பட்டதே ! அதன் அடிப்படையில் தண்டனையும் கொடுக்கப்பட்டதே! எனவே மிருகமாககருதாமல் மனுக்குலத்துக்கு உரியது போல்தானே தண்டனை நிறைவேடப்படவேண்டும் என்று பார்த்தாலும் நீதிபதி கொடிய குற்றவாளிகளை நேருக்கு நேர் சண்டை செய்து தண்டனை கொடுப்பது இயலுமா! உத்தரவிடுகிறார் எவனோ ஒருவன் குற்றவாளியின் கண்களை மறைத்து தூக்கிலிட்டு விடுகிறான் .அது போலத்தான் இங்கு கணையை ஏவினான் ராமன் .எனவே எவ்வழியில் பார்த்தாலும் இது முற்றும் நியாயம்தானே என்று இராமன் யோசித்துக்கொண்டு வாலி கேட்ட இந்தக்கேள்வி ஒரு பிரமாதக் கேள்வியா இதற்கும் பதில் சொல்ல வேண்டுமா எனச்சிந்தித்துக் கொண்டிருக்க இளவல் பதில் கூற ஆரம்பித்து விடுகிறான்
இளையவனின் சமாதானம் வாலிக்குப் பொருந்தியதோ இல்லையோ! ஆனால் ஆயுந்த்திரனுடைய நுண்ணறிவு வாய்ந்த வாலி, இராமன் சொன்னவற்றை எல்லாம் சிந்தித்து உணர்ந்து அறத்தின் மூர்த்தியாகிய இராகவன் அவியுறு மனத்தனாகி அறத்திறன் அழியச் செய்யான் . அவன் சொன்னது முற்றும் நியாயமே என உணர்ந்து சென்னியின் இறைஞ்சி மேலும் கூறுகிறான் ; என் குற்றத்தை உணர்ந்தேன்
தீவினை பொருத்தி என மன்னிப்பும் கேட்கிறான்
இதனால் வாலியை இராமன் வதம் செய்தது முற்றும் அறத்தின் பாற் பட்டதென்று தெள்ளென விளங்குகிறது
வாலியின் வசை புராணத்தை மட்டும் வைத்துக்கொண்டு இராமன் குற்றம் செய்து விட்டான் என்று கருதினால் அது நன்று தீதென்று இயல் தெரி நல்லறிவு ஆகாது

எழுத்தாக்கம்
எங்கள் தந்தை
ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்ஸி
ஒய்வு பெற்ற நகராட்சி ஆணையர்
sherfuddinp .blogspt.com
B FB W 10022020 Mon

என் சொந்தக்கருத்து
 வாதத்தில் வென்றது வாலிதான் என்பது

முக நூல் இந்தப்பதிவுக்குத் தடை போட்டுவிட்டது





=======+++++

   

1 comment:

  1. மிகவும் அருமை. எளிய நடையில் புரியும்படி எழுதி இருக்கிறார்.

    ReplyDelete