Monday, 17 February 2020

கதை நேரம் நதியே நதியே









நதியே நதியே

அழகே உருவான இளம்பெண்
 .அழகுக்கு அழகூட்டுவது போல் அந்தப்பெண்ணுக்கு ஒப்பனை . 

மணப்பெண் போல் சீவி முடித்து சிங்காரித்து விலை உயர்ந்த நகைகள் ஆடைகள்

இந்த அலங்காரம் ஒப்பனை அனைத்தையும்  மீறி அந்தப்பெண்ணின் முகத்தில் துயரத்தில் தோய்ந்திருந்தது .மனதுக்குப் பிடிக்காத திருமணமோ ?!

இல்லை அதைவிடக் கொடுமையான ஓன்று .அந்தப்பெண்ணை பலி கொடுக்கப்போகிறார்கள்

கேட்கவே நெஞ்சம் பதறும் இந்த நிகழ்வு பண்டைய எகிப்து நாட்டில் ஆண்டு தோறும் அரங்கேறும் ஒரு சடங்காக இருந்தது

வரலாறு, நாகரீகம் , கலாசாரம் , மதம் என்று எதிலுமே எகிப்து நாட்டுக்கு தனி ஒரு இடம் உண்டு

பிரமிடுகள். சிங்கமுகக்கோவில்களின் பிரமாண்டம் நினைத்தாலே ஒரு திகைப்பு ஏற்படும்

குலத்தின் அடிப்படையில் மக்களைப்பிரித்து கொடுமைப்படுத்தி அதற்கெல்லாம் உச்சகட்டமாய் நானே இறைவன் என்று சொல்லி ஆணவத்தால் அழிந்த கொடுங்கோல் அரசன் பீர் அவுன்

அவனுக்கு அறிவரை சொல்ல இறைவன் அனுப்பிய, இறைவனிடம் நேரடியாகப் பேசும் வரம் பெற்றிருந்த  நபி மூசா

காலத்தினால் அழியாத அழகினால் உலகை ஆட்டிப்படைத்த அரசி கிளியோபாட்ரா

இவர்களெல்லாம் வாழ்ந்தது எகிப்தில்தான்

அந்த எகிப்து நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம், விவசாயம் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது நைல் நதி

உலகின் மிக நீளமான நதியாக அறியப்படும் நைல் நதி பதினோரு  நாடுகளின்  வழியாகப்பாய்ந்து நடுநிலக்கடலில் கலக்கிறது
ஏழாயிரம் கிலோமீட்டர் நீளம் மூன்று கி மி அகலம் 
நைல் நதியால் மிக அதிகமாகப் பயன்பெறும் நாடு எகிப்து 
.
நதியின் நீர்மட்டம் குறைந்தால் மக்களும் ஆட்சியாளர்களும் கதி கலங்கிப்போய்விடுவார்கள்
அப்படி ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஆண்டு தோறும் ஒரு கொடுமையான சடங்கை நிறைவேற்றி வந்தார்கள்

சூன் பனிரெண்டாம் நாள் ஒரு கன்னிப்பென்னைத் தேர்ந்தெடுத்து மணப்பெண் போல் ஒப்பனை செய்து நைல் நதியில் தூக்கிப்போட்டு விடுவார்கள் 

எகிப்தில் இசுலாமிய அரசு நிறுவப்பட்டது .ஆளுநராக அம்ரு பின் அல் –ஆஸ் ரலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்
 மத குருமார்கள் ஆளுனரை சந்தித்து இந்த பலி சடங்கு பற்றி பேசினார்கள்

அவரோ எந்தத் தயக்கமும் இன்றி இது போன்ற மூடப் பழக்கங்களை , கொடுமையான சடங்குகளை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்
மனக்கலக்கத்துடன் குருமார்கள் திரும்பினார்கள் . நாட்கள் செல்லச் செல்ல சோதனையாக நதியின் நீர்மட்டம் மளமளவென்று இறங்கத் துவங்கியது
நதியை நம்பியிருந்த பலரும் வேறு ஊர்களுக்கு பிழைப்புத்தேடி கிளம்பும நிலை வந்தது
ஒரு நிலையில் ஆளுனருக்கே ஒரு சிறிய மனக்கலக்கம் உண்டாக அவர் நிலைமையை விவரித்து அன்றைய ஆட்சியாளராகிய கலிபா உமர் ரலி அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார்கள்

உமர் அவர்கள் ஆளுநரின் நடவடிக்கை மிகவும் சரியானாதே என்று மறுமொழி கொடுத்தார். அதோடு ஒரு குறிப்பு எழுதி அனுப்பி அதை நதியில் போட்டுவிடச் சொன்னார்

“ உமரிடமிருந்து எகிப்தின் நைல் நதிக்கு

நதியே நீ உன் சொந்த முயற்சியில் ஓடுவதாய் இருந்தால் இப்போதே உன் ஓட்டத்தை நிறுத்தி விடு

ஆனால் அது எல்லாம் வல்ல ஏக இறைவன் அருளால் என்றால் நாங்கள் அவனிடம் இறைஞ்சுவோம்

“இறைவனே நீ இந்த நதியை பெருக்கெடுத்தோடச் செய்வாயாக “

அந்த மடலை ஆளுநர் நைல் நதியில் போட்டார்.

இறைவன் அருளால் அடுத்த நாள் நதி நீர் பெருகி ஓடத்துவங்கியது . ஓடிக்கொண்டேயிருக்கிறது

மக்கள் கலங்கினார்கள் , ஆளுநர் மனம் தடுமாறினார் . ஆனால் உமரின் அசையாத உறுதியான இறைநம்பிக்கை அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியை பரப்பியது

கன்னிப்பெண்களும் அவர் பெற்றோர் உற்றார் உறவினர்களும் அச்சம் நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்

கற்பனைக் கதையல்ல இது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து வரலாற்று ஆசிரியர் இப்னு தக்பிரி பெர்தி பதிவு செய்த வரலாறு


(நபியே !) (இவர்களிடம் )கேளும் :உங்களின்(கிணறுகளின் ) தண்ணீர் பூமிக்குள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால் அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்கு கொண்டு வருபவன் யார் என்பதை நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா  ? -----------(அல் குரான் 67:30)


மீண்டும் வேறொரு பதிவுடன் இறைவன் நாடினால்

sherfuddinp.blogspt.com

BFW17022020mon


இந்தப்பதிவும்
முகநூலில்
தடை செய்யப்பட்டது




 







 



No comments:

Post a Comment