வாலைக் குழைத்து வரும்--------
.
புதிய ஆத்திச் சூடியில்
நாய்
என்ன சொல்லால் குறிப்பிடப்படுகிறது ?
பாட்டுக்கு ஒரு புலவன் பாரதிக்கும் அவனுடைய புதிய ஆத்திச்சூடிக்கும்
அறிமுகம் தேவை இல்லை என நம்புகிறேன்
பக்கம் பக்கமாக அவனைப்பற்றி எழுதிக்கொண்டே
போகலாம் பாப்பா பாட்டு குயில் பாட்டு , கண்ணன் பாட்டு கண்ணம்மா பாட்டு பாஞ்சாலி
சபதம் தனிப்பாடல்கள் இன்னும் எத்தனையோ .
புதுமையான உவமைகள், சொற்றொடர்கள் பாரதியின் தனிச்சிறப்பு-
எடுத்துகாட்டாக சில – பிள்ளைக்கனியமுது , அக்கினிக் குஞ்சு, வேடிக்கை மனிதர்கள்
,நிலவூறித் ததும்பும் விழிகள்,
இறைவன் நாடினால் பாரதி பற்றி பிறகு தனியாக எழுதுகிறேன்
இப்போது விடைக்குப் போகுமுன் ஒரு சிறிய வேடிக்கை நிகழ்வு
பள்ளியில் வகுப்புத் தேர்வில் ஒரு கேள்வி
பாரதி பாடல் வரிகளில் நாய் பற்றி வருவதை எழுது
மாணவன் எழுதியது
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படித்த மொழியினாய் வா வா
இதைப் படித்த ஆசிரியர் சீத்தலை சாத்தனார் போல் தலையில்
அடித்துக்கொண்டாரா தெரியவில்லை
இனி வினா, விடை
ஞமலி போல் வாழேல்
என்று புதிய ஆத்திசூடியில் நாய் ஞமலி என்று குறிப்பிடப்படுகிறது
ஞ வரிசையில் துவங்கும் சொற்கள் மிகக் குறைவு . எனக்குத் தெரிந்தவை
ஞாயிறு , ஞாலம் ,ஞானம், ஞானி
ஆனால் புதிய ஆத்திச்சூடியில் ஞகர வரிசையில் துவங்கும் ஐந்து வரிகள்
வருகின்றன
ஞமலி போல் வாழேல், ஞாயிறு
போற்று
ஞிமறென இன்புறு (ஞிமிர்- தேனீ, மலர் வண்டு )
ஞெகிழ்வது அருளின் (ஞெகிழ்வது- நெகிழ்வது
ஞேயம் காத்தல் செய் (ஞேயம் – நேயம்).
- எனக்கு மிகவும் பிடித்த புதிய ஆத்திச்சூடி
பெரிதினும் பெரிது கேள்
ஞமலி போல் வாழாதே என்று சொன்ன பாரதி பாப்பா பாட்டில் வாலைக் குழைத்து
வரும் நாய்தான் அது மனிதருக்குத் தோழனடி பாப்பா என்று பாடம் சொல்கிறான்,
எனக்கு பாரதி மேல் ஒரு சிறிய வருத்தம், பாஞ்சாலி சபதத்தில்
அந்த நாய் மகனாம் துரியோதனன் என்று வருகிறது .
துரியோதனன் நல்லவனா கெட்டவனா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் , அவன்
தாயை நாய் என்று சொல்வது தவறல்லவா அதுவும் எப்படிப்பட்ட தாய் ! தன் கணவருக்கு கண்
தெரியாததால் கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்த உத்தமப் பெண் அல்லவா ?
நிறைவாக ஞ போல் இன்னொரு தமிழ் எழுத்து ங ,இதில் துவங்கும் சொல்
எதுவும் இருப்பது போல் தெரியவில்லை .
ங போல் வளை என்கிறது ஒளவையாரின் ஆத்திச்சூடி
முடிந்தால் வளைந்து பாருங்கள்
ஞமலி என்ற சரியான விடையை அனுப்பிய
திரு ரவிராஜ்
திரு கணேச சுப்ரமணியம்
இருவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துக்கள் நன்றி
இருவரும் கனரா வங்கி ஓய்வூதியர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
01072020wed
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment