Wednesday, 24 April 2024

சுவையை சுவைப்போம் 17042024 புதன்







 சுவையை சுவைப்போம்

17042024 புதன்
நினைத்தாலும் சுவை
முகர்ந்தாலும் சுவை
சுவைத்தாலும் சுவை
பேசினாலும் சுவை
எழுதினாலும் சுவை
படித்தாலும் சுவை
பார்த்தாலும் சுவை
இதற்குப் பெரிதாக காரண காரியம், சான்றுகள் தேட வேண்டாம்
வலையொளி எனப்படும் (YouTube) யூடியூப் பைத் திறந்தால் போதும்
எத்தனை வகை உணவுகள் –சைவம் அசைவம் , சிற்றுண்டி ,சாப்பாடு
என பார்தாலே பசி தீரும் அளவுக்கு ,திகட்டும் அளவுக்கு காட்சிகள்
உணவு பற்றி வலையொளி பதிவு செய்பவர்கள் விரைவில் பெரும் அளவில் புகழும் பொருளும் ஈட்டுவதாகவும் சொல்கிறார்கள்
மாநில ஆளுநரே விருந்து வைக்கும் அளவுக்கு பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள்
நான் சுவைத்த, பார்த்த,கேள்விப்பட்ட சில சிறப்பு சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஏற்கனவே சொன்ன செய்திகள் திரும்ப வரலாம்
அதனால் சுவை குன்றாது
இன்று எல்லோர் வாயிலும் நாவிலும் பரவலாகப் புரளும் உணவு
பிரியாணி அதிலும் பாய் வீட்டு பிரியாணி
ஒரு உணவு பிடித்ததாக இருந்தால் சாப்பிட்டு விட வேண்டும்
இதில் கொழுப்பு எவ்வளவு ,சர்க்கரை எவ்வளவு என்ற ஆராய்ச்சி எல்லாம் கூடது –இதுவே என் எண்ணம்
என் அளவு எனக்குத் தெரியும் அது மிஞ்சி நஞ்சாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
ஒரு கிலோ அரிசிக்கு ஒரு கிலோ கறி என்பது பிரியாணிக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு அளவாகி விட்டது
கொஞ்சம் நயமாக , கூடுதல் சுவை வேண்டுவோர் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டு, மூன்று கிலோ வரை கறி சேர்ப்பதுண்டு
இதை எல்லாம் தாண்டி ஒரு கிலோ அரிசிக்கு பத்து , பனிரெண்டு கிலோ வரை கறி சேர்ப்பது உண்டாம் காயல் பட்டினத்தில்
10 கிலோ சேர்த்தால் அரசி பிரியாணி
12 கிலோ சேர்த்தால் அரசன் பிரியாணி
கேள்விப் பட்டிருக்கிறேன் ; அவ்வளவுதான்
பார்த்ததும் சுவைத்ததும் இல்லை
நடை முறையில் இது முடியுமா ?
முடிந்தாலும் அதை சாப்பிடும்படி இருக்குமா ?
சுவைத்தவர்கள் விளக்கலாம்
முடிந்தால் ஆக்கிப் பார்க்கலாம்
12 கிலோ என்று மலைக்க வேண்டாம்
100 கிராம் அரிசிக்கு 1 கிலோ அல்லது1200கிராம் கறி போட்டு முயற்சிக்கலாம்
கறிபொரியல் போலவாவது சுவை இருக்கும்
வலை ஒளியில் போட்டு பணமும் புகழும் பெறலாம்
அடுத்து புரோட்டா
உடல் நலத்துக்கு உகந்தது அல்ல புரோட்டா என்ற செய்தி பரவப் பரவ
அதை விட வேகமாக அடிக்கு ஒன்றாக புரோட்டா கடைகள் முளைக்கின்றன
இலை புரோட்டா, பொரிச்ச புரோட்டா , நூல் புரோட்டா பன் புரோட்டா எனப் பல பல புதுமைகல்
பொதுவாக புரோட்டா என்றால் தொட்டுக்கொள்ள கறி அல்லது கோழிதான்
ஆனால் கேரளத்தில் , நான் பணிபுரிந்த மலப்புரம் மாவட்டத்தில் பெரிதும் விரும்பப் படுவது மீன் குழம்பு , மீன் பொரியல் குறிப்பாக மத்தி மீன்
சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன் நன்றாகவே இருந்தது
கடற்கரை அருகில் என்பதால் மத்தி மீன் குறைந்த விலையில் புதிதாகக் கிடைக்கும் (ஒரு ரூபாய்க்கு பத்துக்கு மேல் கிடைக்கும் )
அவர்கள் மீனை அவித்து வறுப்பார்கள்
அதனால் எண்ணெய் அதிகம் தேவைப்படாது
எங்கள் வீட்டில் மீன் வறுப்பதைப்பார்த்து
“வலிய (பெரிய)பணக்காரர்கள்தான் இப்படிப் பொரிப்பார்கள் “
என்று சொல்வார்கள்
நெய்சோறுக்கு அப்பளம் தொட்டுக் கொள்வார்கள்
குழம்பை சோறில் ஊற்றிப் பிணையாமல் ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தொட்டுச் சாப்பிடுவார்கள்
பொதுவா கேரளா உணவு வகைகள் அதிக செலவில்லாமல் நல்ல சுவையாக இருக்கும்
அப்படி ஒன்றுதான் பத்ரி
ஒரு துளி எண்ணெய் இல்லாமல் பச்சரிசி மாவில் சின்னச் சின்ன ரொட்டி போல் இருக்கும்
மண் பானையின் வரைஓட்டில் செய்வார்கள்
தொட்டுக்கொள்ள கோழிச் சாறு
சூடாக இருந்தால் பத்துப் பன்னிரண்டு சாப்பிடலாம்
எட்டு முழ வேட்டிபோல் மெல்லியதாக இருக்கும்
ஜலந்தரில் மக்கி ரொட்டி .மக்கி சப்ஜி
பத்ரிக்கு எதிர் என்று சொல்லலாம்
மக்காச் சோள மாவில் தடியாக இருக்கும்
பக்க உணவான மக்கி சப்ஜியில் அரை அங்குலத்துக்கு நெய்/ வெண்ணை மிதக்கும்
குளிர் கால சிறப்பு உணவு
எனவே எளிதில் செரித்து விடும் நல்ல சுவை
நிறைய உணவுகள் பற்றி எழுத எண்ணினேன்
இப்போதே நேரம், நீளம் கடந்து விட்டது
எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை குர்ஆனில் சிந்திப்போம்
17042024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment