Tuesday, 27 February 2024

சொந்த ஊர் 15 சகோ ஷர்மதா பார்வையில் 28022024





 சொந்த ஊர் 15

சகோ ஷர்மதா பார்வையில்
28022024
நான் அறிந்த திருப்பத்தூர் 2ம்பாகம்.
திருப்பத்தூரில் பிறந்து வளர்ந்து திருப்பத்தூரில்
வாழ்ந்தவர்களுக்கு சீதேவியும் அவர்களுடன் ஒன்றிப்போன ஒரு விஷயமாகத்தான் இருந்தது.
அது மாதிரியான சீதேவியில் என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே நினைவு கூர்கிறேன்.
சீதேவியில் அதிகாலை நான்கு மணிக்கே குமரிப்பெண்கள்
குளிக்கத்துவங்கி விடுவார்கள்.துணியை அடித்து துவைக்கும் சத்தம் கேட்டு ஆழ்ந்த உறக்கம் கொண்டிருப்பவர்களும் விழித்து விடுவார்கள்.
இந்த மாதிரி அதிகாலை நேரத்திலஎங்கள் அக்காவும் அதற்குப்பிறகு நான்
குளித்துவிட்டு வருவோம்.
ஒருமுறை நான் குளிக்கும் பொழுது என் காதில் போட்டிருந்த சிமிக்கி கழன்று தண்ணீரில் காணாமல் போய்விட்டது.
அதை எங்கள் அம்மா கோட்டையான் வீட்டு அம்பர் சச்சா மகன் ஜாபர் அண்ணனிடம் சொல்லி தேடிப்பார்க்க
சொன்னது.அப்போது கொஞ்சம் தண்ணீர் வற்றியிருந்த காலம்.
அவரும் நீரில் மூழ்கி கீழேயுள்ள மண்ணை சல்லடையில் அள்ளி சலித்து சலித்துப்பார்த்து
காணாமல் போன சிமிக்கியை கண்டெடுத்துக்கொடுத்தார்.கடலில் மூழ்கி முத்தெடுப்பதைபோன்று இதுவும் ஒரு அதிசயநிகழ்வாகத்தான் இருந்தது.
சீதேவி முழுவதுமாகவற்றி சிறிதளவே தண்ணீர் கிடக்கும்
காலங்களில் பலரும்இது போன்று மண்ணை சலித்து ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்ப்பார்கள்.
கிடைக்கிறவர்கள் எடுத்துச்செல்வார்கள்.
ஒரு வாரம் பத்து நாள்கள் துவைக்காமல் துணிகளை சேர்த்து வைத்து சீதேவியில் உறவுகளையும் நண்பர்களையும் சந்தித்து பேசிவிட்டு
மிக இலகுவாகத் துவைத்து காயவைத்தும் எடுத்துக்கொண்டு போவதுண்டு.
இவ்வாறாக பகல் முழுவதும் கூட்டமாக இருந்து கொண்டிருக்கும் சீதேவி
மாலை நேரமானால்அமைதியாகிவிடும்.
அந்த நேரங்களில் பாம்புகள் தண்ணீருக்கு மேலே வந்து தலையை நீட்டிக்கொண்டுமிதந்து கொண்டிருக்கும்.
இவ்வாறு சீதேவியில்பாம்பு ஒருமுறை விரலில் கடித்துக்கொண்டு தொங்கிய அனுபவத்தை எங்கள்அம்மா சொல்லியிருந்தது.
தண்ணிக்குள்ளேயே சேலை உடுத்திக்கொண்டு வருபவர்கள் உடன் பாம்பையும் சேர்த்து சுற்றி ஏதோநெளிவதை உணர்ந்து படித்துறையில் உதறிவிட்ட சம்பவங்களும்நிகழ்ந்தன.
நாங்கள் மகாராஷ்டிராவில் இருந்து வருடம் ஒருமுறை விடுமுறை காலங்களில் திரு வந்துதங்கியிருப்போம்.
அப்போது எங்கள் மகள்நிலோ சிறு பிள்ளையாகஇருந்தது.நாங்கள் குளிக்கப்போவதைப்போல் நாங்கள் பார்க்காத நேரத்தில்
ஹிந்தியில் கப்டா(துணி) ,பாத்லி (வாலி),சாபுன் (சோப்பு)
கப்டா ,பாத்லி,சாபுன் என்று சொல்லிக்கொண்டு தண்ணீருக்கு மேலே உள்ள படித்துறையில் துவைத்துக்கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ந்துபோய் வீட்டிற்கு கூட்டிப்போய் அச்சுறுத்திவைத்தோம்.
சீதேவின் இக்கறை(வ லகாரப்படித்துறை)யின் எதிரில் எங்கள் வீடு, வீட்டின் வாசற் படியில் நின்றே எங்கள் பெரியஅண்ணன் ஊரிலிருந்து வருவதைப் பார்த்து விடுவோம்
.இதேபோல்எங்கள் அத்தா சனிக்கிழமை இரவு நேரத்தில் அக்கறையில் வந்து கொண்டிருக்கும் போது எங்கள் வீட்டில் கட்டிக்கிடக்கும் ஆடு அத்தா நடந்து வரும் செருப்புச்சத்தத்தை கேட்டு கத்தி அத்தா வருவதை எங்களுக்கு தன் பாசத்தால் உணர்த்தும்.இவ்வாறு
சீதேவியில் குளித்தகாலங்கள் மகிழ்ச்சியானவை.
ஒரு முறை சிராவயல்மஞ்சு விரட்டு பார்ப்பதற்காக பீர் அண்ணனும நானும்
சைக்கிளில் சென்றோம்.
அப்படி போய்க்கொண்டிருக்கும்போது யாருமே நடமாடாத அமைதியாக இருந்த அந்த ரோட்டில் நானும் அண்ணனும்வேகமாக சென்று கொண்டிருக்கும் போது மஞ்சுவிரட்டில் பிடிபடாத காலை ஒன்று வேகமாக வந்து கொண்டிருக்க அதைக் கண்டு பயந்த நான் அண்ணனிடம் திருப்பிப்போக வேண்டும் என்று அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் வீட்டிற்கு கூட்டிச் சென்றது. இவ்வாறு அன்று காணமுடியாத மஞ்சுவிரட்டு இன்றுவரைநேரில் காணமுடியாததாகி விட்டது.
SI&Co வில் எங்கள் அத்தா மேனேஜராக இருந்த காலத்தில் புதுக்கணக்கு போடும்நாளில் நானும் சிராஜ் அண்ணனும் காரைக்குடிக்குச் செல்வோம்.அப்போதுநாங்கள் நின்று கொண்டிருக்க எங்களை சாமான் வாங்க வந்திருப்பவர்கள் என்று எண்ணி கடையில் வேலை செய்த முஸ்தபா அண்ணன் இன்று வியாபாரம் இல்லை என்று சொல்ல பிறகு அத்தா எங்களைப்பார்த்தவுடன்அட நம்ம பிள்ளைகள்! என்றவுடன் அவரும் தெரிந்து கொள்ள பிறகு உள்ளே அழைத்துச்சென்று உபசரித்தார்.
அதன் பிறகு காரைக்குடியில் உள்ள எங்கள் வீட்டில் சென்றமாதம் தங்கியிருந்த பொழுது அத்தாவை நினைத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த இனிய நினைவுகளுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.எல்லாம்வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நீண்ட ஆயுளையும்,நிறைந்த பரக்கத்தையும் முழுஉடல்நலத்தையும்
தந்தருள்வானாக....ஆமீன்...🤲
###############
இறைவன் நாடினால் நாளை திருமறையில் சிந்திப்போம்
28022024 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment