கூலக்கடைத்தெரு
காலப் பொறியில் ஏறி அமர்ந்துகொண்டு
கடந்த காலத்திற்கு ஒரு பின்னோக்கிய பயணமாக நெல்லையில் ஒரே நாளில் பத்து
இடங்களைப் பார்த்து வந்தேன்
Memoirs of
Nellai என்ற தலைப்பில் நாலு இடங்கள் பற்றி சில நாட்களாக எழுதி வருகிறேன்
இதுவரை எழுதியது நான் பணிபுரிந்த கனரா வங்கிக்கிளைகள் படித்த பள்ளி,
அத்தா பணியாற்றிய நகராட்சி அலுவலகம் பற்றி
ஆங்கிலத்தில் எழுதும்போது எண்ண ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து எழுத
முடியவில்லை . இப்போது வாழ்ந்த வீடு பற்றி எழுதுகிறேன் எனவே தமிழுக்கு மாறுகிறேன்
55 ஆண்டுகளுக்கு முன் வசித்த வீடு
, கூலக்கடைத் தெருவில்
கோவையிலிருந்து
அத்தாவுக்கு நெல்லைக்கு மாறுதல் வந்ததும் முதலில் சுல்தான் மாமா வீட்டில் போய்
இறங்கியதாக நினைவு. நகராட்சி ஆணையரான மைத்துனர் வருகிறார் என்று மாமா காலுறைகள், கழுத்துச்சுருக்கு(சாக்ஸ், டை ) எல்லாம் வாங்கி வைத்திருந்தது .அங்கிருந்து நகராட்சி
தங்கும்விடுதியில் சில நாட்கள் தங்கி விட்டு, கூலக்கடை
பஜாரில் உள்ள திரு நைனார் மூப்பனார் என்பவரின் வீட்டுக்குபோனோம்
.
அதென்ன
கூலக்கடை? கூலம்என்பது
தானியம் என பொருள்படும். தானிய வணிகத்திற்கான இடம். என்று கேள்விப்பட்டேன் .
ரத
வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்து (நெல்லை மொழியில் முடுக்கு) .
வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு பெரிய வாய்க்கால் –
குளிக்க,பாத்திரம் பண்டம் கழுவ என பல
பயன்பாடுகள்
வீட்டை ஒட்டி ஒரு கோயில் . அதன் அருகில் வீட்டு
உரிமையாளர் வீடு..அவர் மளிகைக்.கடை வைத்திருந்தார்.
வீடு பார்க்க சிறியதாகத் தெரிந்தாலும் மேலும் கீழுமாக வசதியான வீடு ..
இவ்வளவு மூச்சு முட்டும் அளவுக்கு நெருக்கமான பகுதியில் நாங்கள்
இதுவரை இருந்ததில்லை .எனவே இந்த வீடு எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது . தெருவும் மிகக்
குறுகலாக இருக்கும்
சாப்டர் பள்ளிக்குப் போக வர நெல்லையப்பர் கோயில்
உள்ளே நுழைந்து போனால் தூரம் குறையும். செருப்பைக் கழட்டி புத்தகப்பையில் மறைத்து
விட்டு நடப்பேன்.
அக்கா
தங்கை கல்லணை நகராட்சிப்பள்ளியிலும் தம்பி சகா சீ எஸ் ஐ பள்ளியிலும் படித்த நினைவு
சற்று தொலைவில் உள்ள பள்ளிவாசலுக்கு போய் குரான் ஓதி வந்ததாய் நினைவு
அந்தப்பள்ளி ஒரு வாய்க்கால் கரையில் இருக்கும்
நெல்லை நகர்ப்பகுதியில் உள்ள வாய்க்கால்களை ஒழுங்காகப் பராமரித்து
அழகு படுத்தியிருந்தால் ஒரு சிறிய வெனிஸ் நகர் போல் ஆக்கியிருக்கலாம் .குறிப்பாக
கரிக்காதோப்பு பகுதி நிறைய வாய்க்கால்களுடன் பார்க்க அழகாக இருக்கும்
தம்பி சகாவுடன் ஒளிந்து விளையாடும்போது அவன் ஒரு பெரிய
மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்டான் . நான் விளையாட்டாக பெட்டியை மூடிவிட மிகவும்
பயந்து வேர்த்து விறுத்துப் போய்விட்டான்
நெல்லையிலிருந்து நாற்பது கிலோமீட்டரில்
குற்றாலம். அடிக்கடி போய் வருவோம்..அருவியில் குளிக்கும் சுகமும் குளித்தபின்
ஏற்படும் பசியும் உணர்ந்து உள்வாங்கி அனுபவிக்க வேண்டியவை
மும்தாஜ்
அக்கா ரகீம் அண்ணனுடன் குற்றாலம் போனது நன்றாக நினைவிருக்கிறது
பெரும்பாலும் வீட்டில் இருந்து சாப்பாடு
(புளிச்சோறு , கறிப்பொரியல்) கொண்டு போவோம்.
பெரிய அருவியில் எப்போதும் கூட்டம் அதிகமாக
இருக்கும். ஐந்தருவி பல பிரிவுகளாக இருப்பதால் நெருக்கடி குறையும். பழைய
அருவி கூட்டம் குறைவாக விசாலமாக் இருக்கும்.
ஜென்னத் அக்கா முத்தலிப் அண்ணன் , ஆயிஷா அக்கா , மம்மூ
எல்லோரும் கூலக்கடை தெரு வீட்டில் வந்து சில நாட்கள் தங்கியதாய் நினைவு .
பீரண்ணன் உடன்
பிறப்புகள் வந்து குற்றாலம் போய் வந்தார்கள்
பாபநாசம், மணிமுத்தார்
அணைகள் மனதுக்கு இதமான சுற்றுலா இடங்கள். பாபநாசம் ஆற்றில் தண்ணீர் கண்ணாடிபோல்
தெளிவாக இருக்கும். நிறைய மீன்கள் துள்ளி விளையாடும். பொறி கடலை போட்டால் கூட்டமாக
மீன்கள் வந்து சாப்பிடுவது கண்கொள்ளாக்காட்சி
நாங்கள் நெல்லையில் இருந்த நாட்களில் துணிக்கடை, நகைக்கடை பாத்திரக்கடை திரை அரங்குகள் எல்லாம்
டவுன் எனப்படும் நகர்ப்பகுதியில்தான்
வெந்நீர்ப் பழையது நெல்லை
வீட்டு சமையலின் தனிச்சிறப்பு. . சமைத்த சோறை மதியமும் இரவும் உண்டபின்
மீதமிருப்பதில் நீர் ஊற்றி வைத்து அதை அடுத்த நாள் பழைய சோறு (கஞ்சி) ஆக உண்பது
பொதுவான வழக்கம்.
ஆனால் மதியம் சோறு சூடாக இருக்கும்போதே அதில்
நீர் ஊற்றி மதியம்
இரவு அடுத்த நாள் காலை என்று உண்டால் அது வெந்நீர்ப் பழையது பெரும்பாலான
நடுத்தரக் குடும்பங்களில் இப்படி ஒரு நாளைக்கு ஒரு வேலை சமையல் என்ற வழக்கம்
இருந்தது .
இசுலாமிய விருந்துகளில் பரிமாறும் நெய்ச்சோறு
குருமா, தாளிச்சா ஒரு தனிச்சுவை
நெல்லைத்தமிழ் புதிதாக வருபவர்களுக்குப் புரிய சில
காலம் பிடிக்கும் .ஆண்களை விளிக்க ஏலே,மரியாதையாக
விளிக்க. சார்வாள் பெண்களுக்கு ஏட்டி உம் கொட்டுவதற்குப் பதில் உச்( நம்மீது ஏதும்
சினமோ எனத்தோன்றும் அந்த உச் ஒலி கேட்கும்போது )
வட்டார வழக்கான சில சொற்கள் – வாரியல் (விளக்குமாறு) மேடை (மாடி) கட்டியும் தூளும்
(கருப்புக்கட்டியும் காப்பிபொடியும்)இன்னும் பலப்பல
“தூரமா ?” என்றால்
எங்கே போகிறாய் எனப்பொருள்..நெல்லை போன புதிதில் நான் பல முறை “ தூராமா ? என்பவர்களுடம் இல்லை பக்கம்தான் என்று
பதில் சொன்னது உண்டு.
அருகிலுள்ள பேட்டைக்குப் போய்வந்ததை “ஊருக்குப் போய்வந்தேன்” என்பார்கள். (பொள்ளாச்சியில்
வேறு ஊரான கோவைக்குப் போய் வந்ததை “டவுனுக்குப் போய்வந்தேன் “
என்று சொல்வார்கள்)
இதற்கெல்லாம் மேல் நெல்லைச் சீமைக்கென்று ஒரு
சிறப்பான உச்சரிப்பு.. ஒரு சில சொற்கள் பேசினாலே அவர்கள் நெல்லைத்தமிழர்கள் என்று
எளிதில் இனம் கண்டு கொள்ளலாம்
கோவையில் கூலி வேலை செய்பவரகள கூட கால் சராய்
(பேண்ட்) அணிவதைப் பார்த்த எனக்கு நெல்லையில் அலுவலகப்பணியாளர்கள்
வங்கிப்பணியாளர்கள் கல்லூரி மாணவர்கள் வேட்டி கட்டுவது வியப்பாக இருந்தது
நெல்லை நாயகம்,
நெல்லைப்பன், குத்தாலிங்கம் ,குளத்துமணி வள்ளி நாயகம் பூதத்தான், ஆழ்வான் இவை நெல்லை
வட்டாரத்துக்கான சிறப்புப்பெயர்கள்.
அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து போய்விட்டது இந்த கூலக்கடை தெரு வீட்டில் இருந்து .
இப்போதும்
பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை .போக்குவரத்து அதிகமாகி தெரு மேலும் குறுகலானது
போல் தோன்றுகிறது
ஒரு மிகப்பெரிய மாற்றம் சலசலவென்று தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த
வாய்க்கால் இப்போது (ஆகாயத்) தாமரை பூத்த தடாகமாகி விட்டது
நெல்லையில் இன்னும் பல இடங்கள் போக வேண்டும், வீடும் பூட்டியிருந்தது
எதோ விழா போல் அலங்காரம் பண்ணியிருந்தது
எனவே வீட்டுக்குள் போக முயற்சிக்கவில்லை ஒரு படம் மட்டும்
எடுத்துக்கொண்டு பேட்டையை நோக்கிப் பயணித்தேன்
நெல்லை நினைவலைகள் 6 விரைவில்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B F W 15082019 Thu
No comments:
Post a Comment