இருந்த ஊரைச் சொல்லவா
நண்பர் ஒருவரிடம் பெசிக்கொண்டிருந்தேன்,. எந்த ஊரையும் நான்
சுற்றிப்பார்த்தது கிடையாது . வணிகப்பணி பொது வாழ்வுப்பணி என்று எந்த
ஊருக்குப்போனாலும் அந்தப்பணியை முடித்து விட்டு திரும்பி விடுவேன் .சுற்றுலா என்று
எங்கும் போனதில்லை என்றார்
முப்பதுக்கு மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்தது ,குமரி முதல் காசுமீர் வரை
சுற்றிப்பார்த்தது என்று என் வாழ்க்கை பற்றி அவரிடம் சொன்னேன்
முப்பது ஊரில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எந்த ஊர் என்று அவர்
கேட்க இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நான் சற்றுத் திணறிப்
போய்விட்டேன்
எல்லா ஊருமே எனக்குபிடித்துத்தான் இருந்தது என்று நான் சொன்னாலும்
அவர் விடாப்பிடியாக மிகவும் பிடித்த ஊர் எது என்றார்.
சற்று சிந்தித்து விட்டு ஏறுவாடி என்று சொன்னேன் .ஏறுவாடியா என்று
வியப்புடன் அவர் கேட்க, இது வேறு ஏறுவாடி என்று ஒரு சிறிய விளக்கம் கொடுத்தேன் .
இந்த உரையாடலின் தொடர்ச்சியாக என் எண்ணம் காலச்சக்கரத்தை பின்னோக்கிச்
செலுத்தியது இருந்த, இருக்கும் ஊர்களின் நினைவுகளை சுகமாக அசைபோடத்துவங்கினேன்.
அறுபத்திஏழாண்டு வாழ்வில் மிக அதிகமாக நான் வசித்த திருநெல்வேலியை
மிஞ்சி விட்டது கடலூர் வாழ்க்கை .
வங்கிப்பணியில் மூன்றாண்டுகள், பணி ஓய்வுக்குப்பின் ஏழாண்டுகள் என
பத்து ஆண்டுகள் கடலூரில் கடந்து விட்டன சுனாமி, வெள்ளம், தானே புயல் எல்லாம் இங்கே
பார்த்தாயிற்று
மிகவும் பிடித்த ஊர் என்று சொல்ல முடியாது . ஆனால் வாழ்வின் பல
முக்கிய நிகழ்வுகள் கடலூரில்தான்.
மகன் திருமணம், பேரன் பிறந்தது , புனித ஹஜ்ஜுப் பயணம் ,,ஓய்வு
வாழ்க்கையில் இரண்டு முதுநிலைப்பட்டம் பெற்றது , எழுத்துப்பணி துவங்கியது எல்லாம்
கடலூரில்தான்
மகன் வீடு இருக்கும் அமைதியான சுற்றுப்புறம், .
காலையில் கேட்கும் பலவிதப் பறவைகளின் குரல்கள்,
.மீன்கொத்தி, மரங்கொத்தி நீர்க்காக்காய் ,கிளி, செம்போத்து நாரை தேன்
சிட்டு ,குயில் மைனா என வண்ண வண்ணப்பறவைகள்
,ஐந்து வேளையும் காற்றில் மிதந்து வரும் தொழுகை அழைப்பு
தொலைவில் கேட்கும் தொடரியின் தடக் தடக் ஓசை
சுற்றிலும் பசுமை இவையெல்லாம்
எனக்கு மிகவும் பிடித்தவை
மிக மிகப்பிடிக்காதது காற்றை மாசு படுத்தி மூக்கைத் துளைக்கும்
வேதியல் கழிவுகள் நாற்றம் .முன்னை விட இப்போது குறைந்திருந்தாலும் அவ்வப்போது
எட்டிப்பார்க்கிறது
கனவுலக வாழ்க்கையோ எனத்தான் இன்றும் தோன்றுகிறது குட்டாவில் வாழ்ந்த
ஒன்னரை ஆண்டு
திரைப்படங்களில் வருவதுபோல் அடர்ந்த காடு, காப்பித்தோட்டங்கள்,
பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண மலர்கள் என இயற்கை அழகு மனதைக் கொள்ளை கொள்ளும் .
நன்கு படித்த நாகரீகமான கூர்கிகள் வசிக்கும் மிகப்பெரிய வீடுகள், அவற்றின் சுத்தம்
என அடுக்கிக்கொண்டே போகலாம் .பெரும்பாலும் எல்லோரும் நன்றாகத் தமிழ் பேசுவது
இன்னொரு சிறப்பு
நாற்பது ஆண்டு வங்கிப்பணி நிறைவுற்று ஓய்வு பெற்றதும் இங்குதான்
ஆண்டுக்கு இருநூறு நாட்கள் மழை கொட்டும் குட்டாவில் தண்ணீர்ப்பஞ்சம்
என்பது ஒரு கொடுமை. பஞ்சம் என்பதை விட சரியான நீர் மேலாண்மை இல்லை என்பதே உண்மை .
ஒன்னரை ஆண்டும் கறியே வாங்கவில்லை
தொடர்ந்து பத்து நாட்கள் மின் தடையை அங்கு அனுபவித்தது தானே புயலில்
கடலூரில் ஏற்பட்ட பத்து நாள் மின்தடையை எளிதாக்கியது
காரைக்கால் என்றால் நினைவுக்கு வருவது அக்குபஞ்சர் கற்றுக்கொடுத்த ஆசிரியர் காதர்,
அவர் மகன் குலாம், பாரூக் மரைகாயரின் உறவினர் பசிருதீன் ,கப்பப்பா, எளிமையாகப்
பழகும் மிகப்பெரிய செல்வந்தரான நசீம் என ஒரு இனிய நட்பு வட்டம் .மிக வசதியான சிறிய
நகரம்
சென்னையின் ஓராண்டு வாழ்க்கையின் சிறப்பு ஒரு அருமையானா தனி வீடு
.அங்குதான் மகனின் திருமணம் உறுதி செய்யப்பட்டது .
எதிர் பார்த்த,,, உயர் அதிகாரிகள் உறுதி செய்த பதவி உயர்வு
கிடைக்காதது ஒரு சிறிய ஏமாற்றம்
வாணியம்பாடியில் மூன்றாண்டு –மிக நல்ல பெயர், நல்லமதிப்பு மரியாதை
.இரண்டாவது பேத்தி பிறந்தது அருகில் உள்ள ஆம்பூரில் நடுக்கும் குளிர்காலமான
டிசம்பரில்
சிறிய ஊரான ஏறுவாடியில் ஏழு எட்டுப் பள்ளிவாசல்கள் நல்ல தட்பவெட்பம்.
பதவி உயர்வோடு அங்கு போன எனக்குப்போட்டியாக அங்குள்ள மற்றொரு அரசுடைமை வங்கியில்
இசுலாமியர் , அதுவும் அந்த ஊரைச் சேர்ந்தவரை மேலாளராக நியமித்தார்கள் என்பது
எனக்கு ஒரு பெருமை.. என்னோடு போட்டி போட முடியவில்லை என்று அவரே என்னிடம் சொன்னார்
–எல்லாப்புகழும் இறைவனுக்கே
மகளுக்குத் திருமணம் ஆனதும் முதல் பேத்தி பிறந்ததும் ஏறுவாடியில்
iஇருந்த போதுதான்.
கோவையில் ஒரு சிறிய அழகிய வீடு .அங்கு உதவி மேலாளராகப் பணிபுரிந்தேன்
.முதலில் இருந்த மேலாளருக்கும் எனக்கும் ஏனோ பல முரண்பாடுகள் .
அதற்கு அடுத்து வந்த
மிகக்கண்டிப்பானவர் என்று சொல்லப்பட்ட மேலாளருக்கும் எனக்கும் மிகவும் ஒத்துப்போக ஒரு குழுவாகப் பணியாற்றி
எனக்குப் பதவி உயர்வும் கிடைத்தது
.கோவையில், அத்தா பணியாற்றியபோது ஏழு எட்டாம் வகுப்புக்கள் படித்தேன்
எனக்கு அதிமாக ஒத்து வராத ஊர் ஈரோடு. வீடு பார்க்க அழகாக இருந்தாலும்
அருகிலிருந்த வாகனப்பட்டறையிலிருந்து வரும் புகையும் வர்ணங்களின் துகள்களும் மூச்சு
முட்ட வைக்கும்
சுமுகமில்லாத அக்கம்பக்கம்
நான்கு ஆண்டுகள் மேலாளராக இருந்த ஊர் மங்கலப்பட்டி – இன்றும் மனதில்
நிற்கும் பசுமையான வயல்கள், சோளக்கதிர்களின் இனிய மணம்.. சிக்கனத்தின் (கஞ்சத்தனத்தின்)
உருவமான நான் குடியிருந்த வீட்டு உரிமையாளர்
ஜலந்தர்- குடும்பத்துடன் வட இந்தியாவில் இரண்டு ஆண்டு மன மகிழ்வோடு
இருந்த நகரம்
.லவ்லி இனிப்பகம் மிகக்குறைந்த விலையில் சுவையான தரமான இனிப்புகள்,
இடைவெளி இல்லாமல் பிள்ளைகள் படித்த
நல்ல பள்ளிக்கூடம், வசதியான ,விசாலமான தனி வீடு
.குளிர்காலத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகள் சிறிது நேரத்தில் பனி
மூட்டத்தில் கலந்து கண்ணுக்குத் தெரியாமல் போவது இன்றும் மனதில் நிற்கிறது
நரைமுடியை கருப்பாக்கி இளமைய மீட்டுத்தந்தது சிவான் (பீகார்) – இங்கு
மறக்க முடியாமல் நினைவில் பதிந்து நிற்பது நான் வாங்காமல் விட்டுச்சென்ற ஐம்பது
காசைத் திருப்பித்தர தன் தொழிலை விட்டு விட்டு என்னை வெகு தொலைவுக்கு பின்
தொடர்ந்து வந்த எலுமிச்சை தேநீர் விற்பனையாளர்
துறையூர் சிறிய அழகான வசதியான ஊர் .பிள்ளைகளுக்கு விழா வைத்து
சுற்றத்தார் நிறைய கலந்து கொண்டு சிறப்பித்தனர் .மேலாளர்
பதவி உயர்வு பெற்றதும் இங்குதான்
திருச்சி – வீட்டு உரிமையாளர் தேவர், அவர் துணைவி ,பிள்ளைகள் எல்லோரும் குடும்பம் போல் மிக
நட்புடன் பழகுவார்கள்
மறக்க முடியாத சுவை மைக்கேல்
பனிக்கூழ் (Ice cream)
திரூர் கேரளா வங்கிப்பணியில் முதலில் தமிழ்நாட்டைதாண்டிபோன ஊர்
.கடவுளின் சொந்த நாடு என்று கேரள இயற்கை அழகை வர்ணிப்பார்கள் .ஆனால் குட்டா
(கூர்க்) அளவுக்கு இது ஒன்றும் அழகாய் இல்லை .அம்மாவின் நினைவு நாளுக்கு
சுற்றத்தார் கூடியது மனதில் நிற்கும் ஒரு நிகழ்வு
.மகன் பள்ளிப்படிப்பு துவக்கம் இங்குதான் .முதல் நாள் பள்ளியில் விட
அத்தா போனது .ஐயாவும் பேரனும் கண்ணீர் மல்க விடை பெற்றுக்கொண்டார்களாம்
திருநெல்வேலி பல வகையிலும் என் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஊர் –அத்தா
பணி ஓய்வு, எனது கல்லூரிப்படிப்பு நிறைவு, CECRI . பின் வங்கிப்பணியில்
சேர்ந்தது,, திருமணம் , பிள்ளைகள் பிறப்பு, பதவி உயர்வு , அம்மா மறைவு என பல
வண்ண நினைவுகளின் கலவை
ஒரு பெரிய இடைவெளிக்குப்பின் நான்
ஏறுவாடியில் பணியில் இருந்தபோது முதல் பேத்தி பிறந்ததும் இங்குதான்
உடன்குடி –திருநெல்வலியின் நீட்சி – ஓராண்டு அங்கு .நல்ல நண்பர்கள்
,சுவையான வீட்டு உணவு ( ஆச்சி வீட்டு உணவகம்)
வேலூர் சில மாதங்கள் அத்தா பணியாற்றிய ஊர். எனக்கு ஒரு கோடை விடுமுறை
அங்கு இனிதே கழிந்தது
பொள்ளாச்சி, - பள்ளிப்படிப்பு
நிறைவு, கல்லூரி வாழ்க்கை , இந்தி எதிர்ப்பு போராட்டம் , அரிசிப்பஞ்சம்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வசதியான பெரிய
வீடு
காரைக்குடி – பசுமை நிறைந்த நினைவுகள், துள்ளித்திரியும்
பள்ளிப்பருவம்.
.பட்டம் பெற்று பின் CECRI யில் மூன்று மாதம் பயிற்சிப்பணி...மிகவும்
பிடித்த வேதியல் ஆராய்ச்சி
.வங்கியில் பணி கிடைத்ததால் அதை விட வேண்டியதாகிவிட்டது
முதன் முதலாய் பெற்றோரை விட்டுப் பிரிந்து திருப்பத்தூரில் பெரியத்தா
வீட்டில் தங்கிப் படித்தோம் நானும் என் உடன்பிறப்புகளும்.
அத்தாவுக்கு மதுரையில் குறுகிய காலப்பணி என்பதால் படிப்பைத்
தடையில்லாமல் தொடர இந்த ஏற்பாடு ..
அடுத்து நான் சிவானில்
வங்கிப்பணியில் இருந்த ஓராண்டும் அங்கு சரியான படிப்பு வசதி இல்லாததால் துணைவியும்
பிள்ளைகளும் திருப்பத்தூரில்
.மீண்டும் ஜலந்தரில் இருந்து மங்கலப்பட்டி மாறுதலில் மகனுக்கு மங்கலப்பட்டிக்கு
அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கை முடிந்து விட்டதால் இடம் கிடைக்கவில்லை ஒரு ஆண்டு
திருப்பத்தூரில் மாமா வீட்டில் தங்கிப்படிப்பு,.
என்ன இருந்தாலும் சொந்த ஊரில் சுற்றங்களுடன் வாழ்ந்தது ஒரு இனிமையான
பொழுதாக இருந்தது
விழுப்புரம் என்றால் நினைவில் வருபவை
கூலா ஹூப் மிகப்பெரிய நகராட்சிப்பள்ளி, நிறைய ஆங்கிலோ இந்தியர்கள்
சிதம்பரத்தில் வீட்டுக்கு எதிரே ஒரு சிறிய பள்ளியில் படிப்பு
(மக்குப்பள்ளிக்கூடம் என்று செல்லப்பெயர் நாங்கள் சூட்டியது)
மிகபெரிய தோட்டத்துடன் பெரிய வீடு, பசு மாடு, நிறைய புறாக்கள் –
மேட்டூர்
ஆம்பூர் என்றால் பிரியாணி மணம். எதிர் வீட்டில் மனோரஞ்சிதப்பூ மணம்
இன்றும் நெஞ்சில் நிறைகிறது .என் பள்ளிப்பருவம் இங்குதான் துவக்கம். தம்பி
பிறந்தது இங்குதான்.
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் நான்
வாணியம்பாடியில் வங்கிப்பணியில் இருந்தபோது இரண்டாவது பேத்தி பிறந்தது
ஆம்பூர் மருத்துவ மனையில்தான்
பள்ளிக்கு முன் பருவத்தில் இருந்த மாயவரம் என்றால் வீட்டு முன் இருந்த
பெரிய வேப்ப மரம்,, மாக்கல் சட்டிகள்,
மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் நிரம்பிய தகர உருளையில் எட்டிப்பார்த்து
விழுந்து வயிற்றில் கீறலதான் உடன் நினைவுக்கு வருகிறது
நான் பிறந்தது பெரிய குளத்தில் .கனவு போல் நினைவில் வருவது பரந்து
விரிந்த மணற்பரப்புடன் கூடிய ஆற்றங்கரை . அங்கு தொங்கும் ஊஞ்சல்கள் , அவற்றின்
அடியில் பள்ளம் இவ்வளவுதான்
ஏற்கனவே
வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் என்ற தலைப்பில் இருந்த ஊர்கள் எல்லாம் பற்றி
விரிவாக முப்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் எழுதி விட்டேன்.
.
பிறகு
ஏன் இந்தப்பகுதி என்ற எண்ணம் உங்களைப்போல் எனக்கும் தோன்றாமல் இல்லை . இருந்தாலும்
நினைவுகளில் உடனடியாகத் தோன்றியதை மட்டும் அப்படியே பதிவு செய்துவிட்டேன் .
பழைய
நினைவுகளில் நீந்திச் செல்வது மனதுக்கு ஒரு சுகம்தானே
.மூளைக்கு வேளை
இது வரை சரியான விடை யாரும்
சொல்லாததால் நானே சொல்லி விடுகிறேன் .
அப்பா அம்மா மகன் மகள் நால்வரும் ஒரு
இருட்டான குகையைக் கடக்க வேண்டும் .. குகை மிகவும் குறுகலானது . இரண்டு
பேர் மட்டுமே ஒன்றாகப்ப்போக முடியும் .குகையைக் கடக்க .அப்பாவுக்கு ஒரு நிமிடம, அம்மாவுக்கு இரண்டு நிமிடம் மகனுக்கு நான்கு நிமிடம் மகளுக்கு ஐந்து நிமிடம்
பிடிக்கும்.
கையில் இருக்கும் விளக்கு பனிரெண்டு நிமிடங்கள் மட்டுமே எரியும் .
அதற்குள் நால்வரும் குகையைக் கடந்து செல்ல வேண்டும்
எப்படி முடியும் ? இதுதான் புதிர்
சரியான விடை
முதலில் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து குகயைக்ககடக்கிரார்கள் (இரண்டு
நி)
அப்பா விளக்குடன் திரும்பி வருகிறார் (ஒரு நி)
மகன் மகள் இருவரும் சேர்ந்து கடக்கிறார்கள் (ஐந்து நி)
அம்மா விளக்குடன் திரும்பி வருகிறார் (இரண்டு நி)
அப்பா அம்மா இருவரும் சேர்ந்து கடகிறார்கள் (இரண்டு நி)
மொத்தம் பன்னிரெண்டு நிமிடம்
அடுத்த புதிர் அடுத்த பகுதியில்
இ(க)டைச்செருகல்
என் உடன் பிறப்புகளும் உற்றார் உறவினர்களும் தங்கள் வாழ்க்கை
நிகழ்வுகளை , அனுபவங்களை வலைநூலில் பதிவு செய்தால் இளைய தலைமுறைக்கு ஒரு
நினைவூட்டுதலாக அமையும் .
காலம் கடக்கும்போது பல நினைவுகள் மறைந்து மறந்து போகின்றன அதற்கு
முன்பே பதிவு செய்யத்துவங்கலாமே
பல முறை நான் இதே வேண்டுகோளை முன் வைத்திருக்கிறேன் மீண்டும்
நினைவூட்டுகிறேன்
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
அருமையான பதிவு. சரளமான நடை. இத்தனை ஊர்களா? வாழ்த்துக்கள்.
ReplyDelete