Saturday, 31 March 2018

வண்ணச்சிதறல் 13





ஒன்று-----பத்து-----நூறு

.

முதலில் ஒரு சிறு கதை (எப்போதோ படித்தது )
தன் அம்மாவின் மறைவு அறிவிப்பை படத்துடன் வெளியிட எண்ணி ஒருவர் செய்தித்தாள் அலுவலகத்துக்கு பேருந்தில் பயணிக்கிறார்
.பேருந்தில் சிலர் பேசுவது காதில் விழுகிறது .செய்தித்தாளில் வெளியான மறைவு அறிவிப்பில் உள்ள ஒரு பெண்ணின் படம் பற்றி தரம் தாழ்ந்த, எழுத முடியாத சொற்களில் வர்ணனை கேலி கிண்டல்
இதைகேட்ட அவர், தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, படம் இல்லாமல் அறிவிப்பு மட்டும் வெளியிடச் செய்கிறார்

அடுத்து ஒரு சுவரொட்டி .பல ஆண்டுகள் முன் கண்டது
:
எங்கள் அண்ணன்
டாக்டர் ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;அவர்களின்
அன்பு மகள் ‘..................
பூப்படைந்ததற்கு  வாழ்த்துக்கள்
ஆட்டோ ஓட்டுனர் சங்கம்
(பெண்ணின் படம் இருந்ததா என்பது நினைவில்லை )

மூன்றாவது அண்மையில் நான் பேருந்தில் பயணித்தபோது கண்டது
ஒரு ஊரைக்கடக்கும்போது ஒரு சில கிலோமீட்டர் பயணத்துக்குள் சாலையின் இரு மருங்கிலும் கண்ட பதாகைகள் சுவரொட்டிகள் . எல்லாம் ஒரே திருமணம் பற்றி –பெரிய அளவில்  மணமகன், மகள் படத்துடன்   .
ஓன்று இரண்டு பத்து இருபது என எண்ணி மாளவில்லை . என் கண்ணில் பட்ட பதாகைகளே நூறுக்கு மேல் இருக்கும். அதில் பன்மடங்காக சுவரொட்டிகள்
மேலே சொன்ன மூன்றுக்கும் என்ன தொடர்பு என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் முதல் இரண்டையும் எழுதத்தூண்டியது மூன்றாம் நிகழ்வுதான்
அரசியலுக்கும் வணிக விளம்பரத்துக்கும் பொது அறிவிப்புகளுக்கும் சுவரொட்டிகளும் பதாகைகளும் தேவை எனலாம் .. இது எப்படி குடும்பத்திலும் தனி வாழ்விலும் நுழைந்தது , இது தேவைதான என்பது புரியவில்லை
அரசியல் பதாகைகள் பலவற்றின் சொல் பயன்பாடு வேடிக்கையாக இருக்கும். .ஒரு தலைவரின் படத்தைப்போட்டு கடவுளரே என்பார் ஒருவர். அதை மிஞ்சும் வகையில் இன்னொருவர் கடவுளரின் கடவுளரே என்பார்.
ஒருவர் எங்கள் பலமே என்பார். மற்றவர் பலத்தின் பலமே என்பார்.
எங்கள் எதிர்காலமே என்பார்கள். அந்த எதிர்காலம் கடந்த காலமாகிவிட்டால் இவர்களின்  எதிர்காலம் என்னாகுமோ  
பள்ளி மாணவர்கள் போல் அறுபதைக்கடந்த  தங்கள் தலைவர்களை சித்தரித்து பள்ளிப்பை, தண்ணீர் புட்டி எல்லாம் வரைபவர்களும் உண்டு
அரசியலுக்கு இது போன்ற செயல்கள் தேவைதான் . அவர்கள் செல்வாக்கை, காண்பிக்க
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு துணை வேந்தர், அந்தப்பணி நீக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியதை ஒரு விழாபோல ஊரெங்கும் பதாகைகள அமைத்துக் கொண்டாடிய கூத்தையும் பார்த்தோம் .
சில இடங்களில் எந்த ஊர், எந்த இடம்  என்பதை அறிய முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக பதாகைகள் இருப்பதையும் பார்க்கிறோம்

மனசாட்சியே இல்லாமல் ஊர்ப்பெயர், தெருப்பெயர்ப் பலகைகள் சுவரொட்டியினால் மறைக்கப்படுவது ஒரு இயல்பான நிகழ்வு   
குடும்ப வாழ்வில் இது ஏன் எப்படி நுழைந்தது ?

திருமணம் , வளைகாப்பு , பிறப்பு, பிறந்த நாள், பள்ளியில் சேர்க்கை , இறப்பு என ஒவ்வொரு நிகழ்வுக்கும் பதாகை, சுவரொட்டி .இப்போது புனிதப் பயணத்திலும் நுழைந்ததாகக்கேள்வி

வங்கியில் உடன்பணியாற்றிய அலுவலர் மகள் திருமணத்துக்காக ஒரு சிற்றூருக்குப்போகும்போது பல இடங்களில் மணவிழா பற்றிய சுவரொட்டி பார்த்தேன்

உறவினர் வீட்டுத் திருமணம் .மணமகனைப்பார்த்து ஒருவர் கிண்டலாக
“ என்னப்பா போஸ்டர் எல்லாம் அடிக்கவில்லையா ?” என்று கேட்க  மணமகன்
“யாரும் அடிக்கக் காணாமே” என்று மிக வருத்தப்பட்டார்

திருமணம் போன்றவை குடும்ப நிகழ்வுகள். நம் உற்றார் உறவினர், நட்பு வட்டம், எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருப்போம். நேரில் தொலைபேசி, கட்செவி மூலமும் தெரிவித்திருப்போம்
பின் யாருக்காக இந்தப் பதாகைகளும் சுவரொட்டிகளும்.? 

.பதாகை வைத்தே ஆகவேண்டும் என்றால் திருமணக்கூடத்தின் அருகில் ஓன்று இரண்டு அழகாய் வைத்துக்கொள்ளலாமே . ஊரெங்கும் அதுவும் நூற்றுக்கணக்கில் எதற்கு

 திரைப்படக் காட்சி ஓன்று – ஒரு பெண் ஒரு கடையில் அணையாடை (நாப்கின்)வாங்குவார். படத்தின் நாயகன் கடைக்காரரிடம் ஒரு பையில் போட்டுக் கொடுக்கச் சொல்லுவார். அந்தப்பெண்ணோ அதெல்லாம் வேண்டாம் என்று கையில் எடுத்துச்செல்ல ஒரு சொற்போர் உண்டாகி அது கைகலப்பில்  முடியும்

பருவம் அடைவது நாசுக்கான மென்மையான அழகான இயற்கையின் நிகழ்வு .அதற்கு ஏன் ஊரெங்கும் விளம்பரம் ?
மென்மை, நாசுக்கு இதெல்லாம் தேவையற்ற, பொருள் இல்லாதா சொற்களாகிப்போனதா இல்லை நான்தான் கால ஓட்டத்தில் பின் தங்கி இருக்கிறேனா என்று புரியவில்லை

அண்டை  மாநிலமான கேரளத்தில் மகிழுந்துகளில் கட்சிக்கொடியே பார்க்க முடியாது . ஆனால் இங்கோ சில வகை பெரிய மகிழுந்துகளில் கட்சிக்கொடி இல்லாத வண்டியே பார்க்கமுடியாது (சில வண்டிகளில் எல்லாக் கட்சிகொடியும் வைத்திருப்பது உண்டாம் .தேவைகேற்ப எடுத்து செருகிக்கொள்வார்கலாம்)

கொடி போலவே பதாகைகளும் சுவரொட்டிகளும் தமிழரின் அடையாளம் போலும்

மூளைக்கு வேலை
ஒரு கூடையில் இருக்கும் பூக்களில்
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் ரோசா
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் மல்லிகை
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் முல்லை
மொத்தம் எத்தனை , எது எது எத்தனை ?
இதுதான் சென்ற வாரப்புதிர்
மிக எளிய புதிர்
ரோசா ஓன்று,  மல்லிகை ஓன்று முல்லை ஓன்று மொத்தம் மூன்று பூக்கள என்பது சரியான விடை
சரியான விடை எழுதிய சிரின் பாருக்குக்கு பாராட்டுகள்
அடுத்த புதிர் அடுத்த வாரம்

இ(க)டைச்செருகல்
அண்மையில் தொடர்பு வகுப்புக்காக சென்னை உத்தண்டிக்குப் போனேன்.. தொடர்பு வகுப்பு நடத்தும் திரு ரகுராமன் மனநலக்காப்பகம் நடத்தி வருகிறார். பத்துப் பேருக்கு தங்க இடம், உணவு மருத்துவம் மன நல மருத்துவம் எல்லாம் தன் வருமானத்தில் இருந்தே பார்த்துக்கொள்கிறார். இது போக தொடர்பு வகுப்புக்கு வருபவர்கள் அங்கு தங்க இடம் கொடுத்து உணவும் மூலிகை தேநீரும் கொடுக்கிறார். இதற்கும் கட்டணம்எதுவும் கிடையாது .விருப்பப்பட்டு யாரவது நன்கொடை கொடுத்தால் வாங்கிக்கொள்கிறார் .யாரிடமும் கேட்பது கிடையாது
விளம்பரம், ஆர்பாட்டம் எதுவில்லாமல் நடக்கும் இந்த மனித நேய  சேவை ஆர்ப்பாட்டமான பதாகைகள், சுவரொட்டிகளுக்கு எதிரான ஒரு அமைதிப்போராட்டம் போல் எனக்குத் தோன்றுகிறது
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்



வலைநூல்  முகவரி
கூகிள் தேடலில்
sherfuddin.blogspot.com




No comments:

Post a Comment