பிரெஞ்சுக் குடியிருப்பில்
“உங்களுக்கு எழுதப்படிக்கத் தெரியுமா ? “
பெயருக்குபின்னல் எட்டு பட்டங்கள் உள்ள நான் என் அறுபத்தி ஏழாவது
வயதில் இது போன்ற ஒரு வினாவை சிறிதும்
எதிர்பார்க்காவில்லை
இது பற்றி பின்னால் சொல்கிறேன்
இருபத்திஐந்து கிலோமீட்டர் இடைவெளிதான் கடலூருக்கும் பாண்டிக்கும்
ஆனால் மொழி. உடை, கலாச்சாரம், நகர அமைப்பு, மக்களுக்கு வசதிகள்
இவற்றில் எல்லாம் நம் நாட்டுக்கும் ஒரு வெளி நாட்டுக்கும் உள்ள அளவுக்கு வேறுபாடு,
மாறுபாடு
வங்கிப்பணி நிமித்தமாகவும், சுற்றிப்பார்க்கவும் ,
நண்பரைப்பார்க்கவும் ஓய்வுக்குப்பின்
ஒய்வு பெற்ற அலுவலர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் என பலமுறை பாண்டி சென்றது உண்டு.
அப்போதெல்லாம் கிட்டாத
வாய்ப்பு இப்போது கிடைத்தது
பேரன் பர்வேசுக்கு கண் பார்வை திறன் அதிகரிக்க அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த சிறப்புப்பள்ளி ஒன்றில் ஒரு
வாரப்பயிற்சி
.சென்ற ஆண்டிலேயே முயற்சி செய்தது .இந்த ஆண்டுதான் இடம் கிடைத்தது .
காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் பயிற்சி என்பதால் எட்டு நாள்
பாண்டியிலே தங்க வேண்டிய சூழ்நிலை
முதல் நாள் இரவே பாண்டி போய் இன்டர்நேஷனல் கெஸ்ட் ஹௌஸ் என்ற
விடுதியில் தங்கினோம் .பேரன் பர்வேஸ், என் துணைவி, நான் மூவரும் தங்கினோம்.
.மகனும் மகளும் எங்களை இறக்கி விட்டு விட்டு கடலூர் திரும்பி விட்டார்கள்
நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள விடுதியில் மூன்று படுக்கை உள்ள
அறைக்கு அவர்கள் சொன்ன எண்ணூறு ரூபாய் வாடகை மலிவு போல் தோன்றியது .போகப்போகத்தான்
தெரிந்தது இதை விட நல்ல வசதியான விடுதியிகள் மிக மலிவாக கிடைக்கின்றன என்ற உண்மை
மருத்துவ மனை போல பார்வையாளர்கள் நேரம் எல்லாம் போட்டிருந்தார்கள்
.குழாயில் வெந்நீர் வராது அறைச்சேவை கிடையாது ..குடிப்பதற்கு
வெந்நீர் வேண்டும் என்றால் ஒரு சிறிய குடுவை நீர் பதினைந்து ரூபாய்
இருந்தாலும் சுத்தமாக, பாதுகாப்பாக இருந்ததால் அங்கேயே எட்டு நாள்
பொழுதும் கழிந்தது
காலை எட்டரை மணிக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியிருந்தார்கள். காலை
உணவை முடித்துக்கொண்டு மூவரும் அந்தப்பள்ளிக்கு போனோம்.
. முதலில்
ஆங்கிலத்தில் ஒரு படிவத்தை கொடுத்து
எழுதச் சொன்னார்கள். அப்போதுதான் என்னைப்பார்த்து கேட்டார் ஒரு மூதாட்டி
உங்களுக்கு இந்த படிவத்தை நிரப்ப முடியுமா என்று
எனக்கு எழுதத்தெரியுமா என்று கேட்கிறீர்களா என்றேன்
.
ஆம் என்றார்.
பொங்கி வந்த சினத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு
நான் இரண்டு முது நிலைபட்டம் பெற்றவன் என்று சொல்லி என் பெயர் அட்டையை (visiting card ) கொடுத்தேன்
.ஒரு ஐயம் கலந்த வியப்புடன் அதைப்பார்த்தாலும் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை
ஒரு வழியாக படிவத்தை நிரப்பிக்கொடுத்து, , கண் பரிசோதனை முடித்து
பேரனைக்கூட்டிக்கொண்டு படியேறி பயிற்சிக்கூடத்துக்குப் போனேன்
.
அங்கு ஒரு மூதாட்டியின் குரல் கடுகடுத்தது .” ஏன் இந்தக்குழந்தையின்
பெற்றோர் வராமல் நீங்கள் வந்திருக்கிரீர்கள் “ என்று
அதே குரலில் நானும் அமைதியாகச் சொன்னேன் “ ஏன். நான் வந்தால் என்ன ,
அவன் என் பேரன் அவனோடுதான் நானும் இருக்கிறேன் “ என்றேன்.
பந்துப்பயிற்சி கடுமையாக இருக்கும் அதற்கு உங்களால் துணை நிற்க
முடியாது . முதலில் உங்களால் தரையில் உட்கார முடியுமா “ என்று அவர் வினவ , நான்
யோகம் படித்தவன் என்னால் எளிதாகத் தரையில் அமர்ந்து எழ முடியும் “ என்றேன் .
ஒரு வழியாக இந்தத் தடையைத் தாண்டி சூரியக்கதிர் நோக்குபயிற்ச்சியை செய்தவுடன் கண் புள்ளி அழுத்தம், தடவல்
பயற்சிக்கு (acupressure
and massage) பேரனுடன் போனேன் .
.
அங்கிருந்த பெண் “ உங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தால் புரிந்து
கொள்ள முடியாது “ என்றார்
எனக்கு சினம் வரம்பைத்தாண்ட உரத்த குரலில் “ தாடி வைத்தவர்கள் எல்லாம்
ஒன்றும் அறியாத முட்டாள்கள் என்று நினைககாதீர்கள் .எனக்கு உங்களை விட இதெல்லாம்
நன்றாகத் தெரியும் .நான் முறையாக அக்குபஞ்சர் , யோகா, வர்மக்கலை எல்லாம் படித்தவன்
“ என்று சொன்னவுடன் பல முறை வருததம்
தெரிவித்தார்
இந்தத் துவக்க நிலைத் தடங்கல்களைத் தாண்டி விடாமல் ஏழு நாளும்
பயிற்சிக்கு சென்று வெற்றிகரமாக முடித்தோம்.
இரண்டாவது நாளிலேயே மிகவும் நட்புடனும் மதிப்புடனும் பழகினார்கள்
சென்ன்னயிலிருந்து தன் பேரனைக்கூட்டிகொண்டு வந்த ஒரு மூதாட்டியை
பயிற்சிக்கூடத்துக்குள் நுழைய விடவே இல்லை. அவர் தன் மகனை வரவழைத்த பின்னரே பயிற்சிக்கு அனுமதித்தனர்
அரவிந்தர் ஆசிரமம் நடத்தும் இந்தப்பள்ளியில் ஒரு வாரப்பயிற்சி
முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது
சூரிய நோக்குபயிற்சி, -,கண்புள்ளி அழுத்தம், தடவல்,-உள்ளங்கைப்
பயிற்சி- , தொலை நோக்குப பயிற்சி,- பந்து எறிதல் -,விரல் நோக்கு, -சிறிய
எழுத்துக்களில் உள்ள நூலை படித்தல்,- பெரிய சிறிய எழுத்துக்களை தொலைவில் இருந்து
படித்தல், -கண்ணுக்கு மூலிகை ஆவி பிடித்தல்- கண்களை நீரில் நனைத்த துணியினால்
மூடுதல் என பத்துப்பயிற்சிகள் தினமும் இரு வேளை அளிக்கிறார்கள்
ஒவ்வொரு பயிற்சிக்கும் தனி
இடம், தனியாக ஒரு ஆசிரியர் என்று மிக நேர்த்தியாக வடிவமைத்து மிக மிக சுத்தமாக
வைத்திருக்கிறார்கள் .
கடற்கரைக்கு அருகில் போக்குவரத்து சந்தடியில்லாத அமைதியான, நிழலான இடத்தில்
இருக்கிறது இந்தப்பள்ளி
ஒரு சிறிய மரக்கதவு .அதைதிறந்தால் மிகப்பெரிய கட்டிடம் இதுதான்
பிரெஞ்சுக்கட்டிடங்களின் அடையாளம் அதே போல்தான் இந்தப்பள்ளியும்
இவ்வளவு சிறப்புகளையும் மீறி என் மனதிலும் நினைவிலும் நீங்காமல்
இருப்பது இப்பகுதியின் துவக்கமாக இருக்கும் கேள்விதான் .
பயிற்சி முடிவதற்குள் நறுக்கென்று நாலு சொல் அந்த மூதாட்டியிடம் கேட்க
வேண்டும் என்று எண்ணியிருந்தேன்
.அதற்குள் அவரே ஒரு நாள் வலிய வந்து உங்களுக்கு
எழுதத்தெரியுமா என்று கேட்கவில்லை .நீங்கள் கண்ணாடி போடவில்லை மேலும் மூத்த
குடிமக்கள் பலரும் எழுத சிரமப்படுவார்கள் அப்படித்தான் கேட்டேன் என்றார்.
இவ்வளவு படித்து, பெரிய பதவியில் இருந்த நீங்கள் மிக மிக எளிமையாகத்
தோன்றுகிறீர்கள் என்று தேவையற்ற பாராட்டு வேறு
அச்சத்தில் சப்பைக்கட்டு கட்டுகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தும் அப்போதைக்கு
விட்டு விட்டேன்
.
இருந்தாலும் மனசு இன்னும் ஆறவில்லை ..இப்படிக்கேட்க அவரைத் தூண்டியது
எது? என் மதமா, நிறமா இல்லை என் தாடியா ? தாடி வைத்திருப்பவர்கள் எல்லாம்
ஓமத்திராவகம் விற்கவும், சாணை பிடிக்கவும் செருப்புக்கடை வைக்கவும்தான்
தகுதியானவர்கள் என்ற பரவலான கருத்தா என்பது எனக்குப்புரியவில்லை
முன்பு கடலூர் வங்கியில் பணிபுரிந்தபோது அலுவலகப்பணியாக நீதிமன்றம் போயிருந்தேன்.
வங்கி வழக்குரைஞர் தன் உதவியாளரிடம் இவர்தான் வங்கி மேலாளர் என்று என்னை அறிமுகம்
செய்ய
இவரைப்பார்த்தால் பாய் மாதிரியில்ல இருக்கு என்று அந்த உதவியாளர்
சொன்னதும் எனக்கு இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது .தாடி வைத்த ஒரு இசுலாமியரை
வங்கி மேலாளராக நினைக்கக்கூட முடியாத மன
நிலை
சென்னையிலிருந்து தன் பேரனோடு வந்து விரட்டப்பட்ட மூதாட்டி சொன்னது
போல் நம் படிப்பு, பதவி எல்லாம் எழுதி கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டு போக வேண்டும்
போலிருக்கிறது
இந்த ஒரு நிகழ்வு தவிர மற்றதெல்லாம் நன்றாகவே இருந்தது .கடலூரில்
பள்ளிப்படிப்பு, வீட்டுப்பாடம், குரான் வகுப்பு, கராத்தே பயிற்சி என்று
இயங்கிகொண்டிருக்கும் பேரனை பார்ப்பது ,பேசுவதே அரிதாக இருக்கும்
இந்த ஒரு வாரமும் எங்களோடு ஒட்டிகொண்டிருந்தது ஒரு இனிய அனுபவம்.அவன்
அத்தம்மாவைத்தான் சற்றுப்படுத்தி விடுவான்
விடுதிக்கு அண்மையிலேயே இந்தியா காபி ஹவுஸ், சைவ அசைவ உணவு விடுதிகள்,
தேநீர்க்கடை எல்லாம்
.
நடக்கும் தொலைவில் பள்ளிவாசல் .ஒரு வாரமும் விடாமல் காலைத் தொழுகைக்கு
பள்ளி சென்று வந்தேன்..வெள்ளிகிழமை தொழுகைக்கு பேரனும் நானும் போனோம்.
பள்ளிவாசல் பகுதியில் தினசரி சந்தை இருக்கிறது . காலையில் பரபரப்பாக
இயங்கத் துவங்கிவிடும் காய்கறி, மீன், பழங்கள் எல்லாம் சுமந்து வரும்
சரக்குந்துகள், அவற்றை வாங்க வரும் வணிகர்கள் , காப்பி தேநீர் ,கூழ் விற்பவர்கள் ,
வாடிக்கையாளர்கள் அவர்களின் வண்டிகள் என தெருவே நிரம்பி நடக்க இடமில்லாமல் சல
சலவென்று இருக்கும்
மொத்த விற்பனைக்கடைகளில் பழங்கள் விலை மிக மலிவாக இருந்தது
காலையில் தொழுதுவிட்டுப்போகும்போது இந்தியா காபி கவுசில் மணக்கும்
காபியும் ,சூடான சிற்றுண்டியும் கிடைக்கும்
ஒரு நாள் பள்ளியில் சலாம் அலைக்கும் என்று குரல் கேட்டுத்
திரும்பிப்பார்த்தால் சாகுல்
உம்ரா போய்வந்து தலையில் அரைகுறை முடியுடன் இருந்த சாகுலை அங்கு
சற்றும் எதிர்பார்க்காததால் காலை இருட்டில் யாரென்று புரியசில நொடிகள் ஆனது
சாஜிதா முனைவர் பட்டம் பெற வாய்மொழித்தேர்வுக்காக பாண்டி வந்த சாகுலை
அடுத்த நாளும் பள்ளியில் சந்தித்தேன். சந்தையில் பழங்கள் வாங்ககிக்கொண்டு இந்தியா காபி கவுசில் காப்பி அருந்தி விட்டு
அவரவர் விடுதிக்குப் போவோம்.
வலைத்தளத்தில் ஒரு செட்டிநாட்டு உணவகத்தில் மீன் சாப்பாடு பற்றி மிகச்
சிறப்பாக எழுதியிருந்ததை நம்பி வாங்கிப்பார்த்து மிகப்பெரிய ஏமாற்றம் .தரம், சுவை
அளவு எதுவுமே சரியாக இல்லை .
நெத்திலி மீன் குழம்பு என்று நூற்றிஐம்பது ரூபாய்க்குக்,
கொடுத்தார்கள் .சுண்டுவிரல் அளவில் ஐந்தாறு மீன்கள் அவ்வளவுதான்.
.மீன்குழம்பு
என்றே சொல்ல முடியாத அளவுக்கு ஒரு சுவயற்ற இனிப்புச் சுவை
வழக்கமாகப்போகும் அசைவ உணவகத்தில் கறி, கோழி எல்லாம் நல்ல சுவையாக
இருக்கும் .ஒரு நாள் மீன் பொரியல் வாங்கிப்பர்த்தோம் ,நன்றாகவே இல்லை இதோடு
பாண்டியில் மீன் சாப்பிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டோம்
பாண்டியில் கிடைக்காத இன்னொன்று பச்சி
,.சமூசா, போண்டா , பக்கோடா, வெங்காய வடை. பருப்பு வடை, உளுந்த வடை
எல்லாம் சுடச்சுடக்கிடைக்கும் .பச்சி மட்டும் கண்ணில் படவில்லை
பாண்டியின் ஒரு சிறப்பு ரிச்சி ரிச் பனிக்கூழ் (ஐஸ் க்ரீம்).எங்கள்
விடுதிக்கு அருகில் ஒரு சிறிய சந்துக்குள் போனால் எப்போதும் கூட்டமாக இருக்கும்
ஒரு உணவகம் .நல்ல சுவை, நிறைவான அளவு .
விடுதி இருந்தது நேரு தெருவில் கனரா வங்கியை அடுத்து . நேரு தெரு, அதை
அடுத்துள்ள போஸ் தெரு ,காந்தி தெரு ,படேல் தெரு எல்லாம் வணிகத்தெருக்கள்.
வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும்
பெரும்பாலும் வாகனங்கள் தெருவை நடந்து கடப்பவர்களை அனுசரித்து
நிதானமாகப் போவது பாண்டியில் நான் கண்ட ஒரு சிறப்பு .
எல்லா இடங்களுக்கும் நடந்தே போகும் அளவுக்கு சிறிய நகரம்,,வசதியான
நகரம்
விடுதியிலிருந்து கண் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெரிய பூங்கா,
ஆளுனர் மாளிகை எல்லாம் வரும் . நிறைய பிரெஞ்சு பாணியில் அமைந்த வீடுகளும்
கட்டிடங்களும் கண்ணில் படும்.
பெரும்பாலனா கட்டிடங்களின் வெளிச்சுவர்கள் சாம்பல் /சிமிட்டி
நிறத்தில் இருக்கும் .
ஒரு சிறிய மர.க்கதவுக்குப்பின் பிரமாண்டமான மாளிகை
ஒளிந்திருப்பது பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் அடையாளம் போலும்
வீட்டு வாசல்களில் பூத்துக்குலுங்கும் மரம் செடி கொடிகள். தினமும்
தெருக்கள் சுத்தம் செய்யபடுவதால் செடிகளின் குப்பை சேர்வதில்லை
சில மாதங்கள் முன்பு புதுக்கோட்டையில் நாங்கள் தங்கியிருந்த
விடுதியிலிருந்து எட்டிப்பார்த்தால் மதுக்கூடங்கள்தான் பளீரென்று கண்ணில் படும்
.அதற்கு நேர்மாறாக குடிக்குப் புகழ்போன பாண்டியில் ஓன்று கூட கண்ணில் படவில்லை
அரைகுறை, முக்கால் குறை ஆடையில் பெண்கள் (எல்லாம் உள்ளூர்தான்)
நடமாட்டம் கண் பள்ளிக்கும் அது போல் ஒருவர் வந்திருந்தார் .இது பிரெஞ்சுக்கலாச்சாரமா
இல்லை அந்தப்போர்வையில் நம்மூர் கலாச்சார சீரழிவா தெரியவில்லை
மூளைக்கு வேலை
ஒரு கூடையில் இருக்கும் பூக்களில்
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் ரோசா
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் மல்லிகை
இரண்டைத்தவிர மற்றதெல்லாம் முல்லை
மொத்தம் எத்தனை , எது எது எத்தனை ?
மிக எளிய புதிர்
இ(க)டைச்செருகல்
ரு (rue) என்ற பிரெஞ்சுச் சொல்லுக்கு தெரு என்று பொருள் .இன்னும் பல
தெருப்பெயர் பலகைகளில் இந்தச் சொல்லை பாண்டியில் காணலாம்
ஆம்பூர் தெரு,என்ற பெயரை பாண்டியில் பார்க்க வியப்பாக இருந்தது
.புஸ்ஸி தெரு என்பது இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் தெரு என நினைக்கிறேன்.
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
Nice. People have to come out of wrong perception of others based on their appearance, dress or looks. It is foolish and atrocious to assume that one who does not look stylish cannot be an educated man.
ReplyDelete