புத்தகம் பையிலே
பள்ளிப்பருவம் – எப்படி இருந்ததோ தெரியாது
பள்ளி கல்லூரி நினைவுகள் என்றும் பசுமை , இனிமைதான் .
இன்றும் கூட கல்வி வளாகங்களில் நுழைந்தால் பெரிய வகுப்பறைகள் , நீண்ட தாழ்வாரங்கள் பரந்த திடல்கள் எல்லாம் நம் இளமை நினைவகளை திரும்பக் கொண்டுவந்து மனம் உற்சாகத்தில் சிறகடித்துப் பறக்கும்
என் பள்ளிக் கல்வி துவங்கியது ஆம்பூரில் – ஆம் – பிரியாணி புகழ் ஆம்பூர்தான்
பள்ளியின் பெயரோ ,கட்டிடமோ நினைவில் இல்லை .ஆசிரியை பெயரும் நினைவில் இல்லை .ஆனால் மூக்குத்தி அணிந்த அவர் முகம் ஓரளவு தெளிவாகவே நினைவில் நிற்கிறது
கைகூப்பி வணக்கம் பிள்ளைகள் என்று அவர் சொன்னதும் நாங்கள் எல்லோரும் ஒரே குரலில் வணக்கம் டீச்சர் என்று சொல்லுவோம்
பள்ளிக்குப் போவது வருவது எல்லாம் நடந்துதான் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து போவோம்
மேட்டுர் – கிறித்தவக் கன்னிமார் நடத்தும் கான்வென்ட் பள்ளி ..ஆரோக்கியசாமி என்ற வகுப்புத் தோழர் பள்ளி செல்லும் வழியில் என்னோடு சேர்ந்து வருவார் .தவறாமல் கைகூப்பி வணக்கம் சொல்லுவார் பெரும்பாலும் ஊதாநிறச் சட்டை அணிந்திருப்பார்
கருமலைக் கூடல் என்ற ஊருக்கு பள்ளியில் சிற்றுலா கூட்டிச் சென்றார்கள் .கொண்டு போன வாழைப்பழம் நசுங்கி பை கசகசவென்று ஆகிவிட ஆரோக்கியசாமி அழகாகத் துவைத்துக் கொடுத்தார்
பருத்திப்பஞ்சில் விதை நீக்கம் செய்வது, பஞ்சை வில்லால் அடித்து மிருதுவாக்குவது , பஞ்சை திரியாக்குவது . திரியில் இருந்து இராட்டை தக்ளியால் நூல் நூற்பது இதெல்லாம் மேட்டூர் பள்ளியில் கற்றது..தமிழ் ஆசிரியர் சற்று கரடு முரடாக ஜிப்பா வேட்டியில் இருப்பார் .
பள்ளி வளாகத்தில் உள்ள தேவாலயத்துக்கு போய் வருவோம்
மக்குப்பள்ளிக்கூடம் – சிதம்பரத்தில் படித்த பள்ளிக்கு நாங்கள் வைத்த செல்லப்பெயர் .எங்கள் வீட்டுக்கு மிக அருகில் தலைமை ஆசிரியை வீட்டோடு இணைந்த பள்ளி .வகுப்பின் இடையே ஆசிரியை சமையலையும் கவனித்துக் கொள்வார் . எ சனியன்களா என்று மாணவர்களை அன்பாக அழைப்பார் . நல்ல வாட்ட சாட்டமாக இருக்கும் அவரது துணைவர் மிக மெலிதாக இருப்பார் .அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்
விழுப்புரத்தில் நகராட்சிப்பள்ளி – மிகப்பெரிய வளாகம் .இருப்புப் பாதையைக் கடந்து போக வேண்டும் ..திருக்குறள் முனுசாமியின் மகன் பாலு என்பவர் என்னோடு படித்ததாய் நினைவு .
அத்தாவுக்கு மதுரையில் ஆறு மாத சிறப்புப் பணி . எனவே நானும் உடன் பிறப்புகளும் திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கிப் படித்தோம் .இது ஒரு புது அனுபவம் .பெரியத்தா மகன் அஜுமலும் நானும் ஒரே வகுப்பு ஒரே பிரிவு . மாமா மகன் சக்ரவர்த்தியும் வாச்சா பெரியத்தா மகன் ராசாவும் அதே வகுப்பில் வேறு பிரிவு ,
இவர்களோடு உறவைத்தாண்டி ஒரு நட்பின் நெருக்கம் உண்டானது .குறிப்பாக அஜ்மல்
நாகப்பா மருதப்பா உயர்நிலைப்பள்ளி என்று பெயர்.பெரிய பள்ளி .
டோன்டாக் (Don’t Talk) என்பது ஒரு ஆசிரியரின் பட்டபபெயர் . யாரவது வகுப்பில் பேசினால் அருகில் இருக்கும் மாணவனிடம் ஓங்கி ஒன்றைக் கொட்டு வை என்பார்
நாச்சியப்பன் –தமிழாசிரியர் -இரு விரல்களுக்கு இடையில் பேனவை வைத்து விரல்களைப் பிடித்துக்கொண்டு பேனாவை சுற்றுவார் .வலி உயிர்போகும் பிரின்ஸ் என்று ஒரு ஆசிரியர் .அவர் துணைவி பெயர் பிரின்சஸ் .பிரின்ஸ் என்பதை இ(ழ)ளவரசு என்று மொழிபெயர்த்து மாணவர்கள் கிண்ட்சலடிப்பர்கள்
ஆங்கில ஆசிரியர் அஜ்மலையும் என்னையும் ஆறு மாதப்பயிற்சியில் ஆங்கிலத்தில் பள்ளி இறுதி தேர்வு அளவுக்கு கொண்டு வரலாம் என்று சொல்வார்.அப்போது நாங்கள் ஏழாவது வகுப்பில் இருந்தோம் .
அடுத்து காரைக்குடி நகராட்சிப்பள்ளி . புதிய கட்டடிடம் , பழைய கட்டிடம் விளையாட்டுத் திடல் என்று பல இடங்களில் இருக்கும். தலைமை ஆசிரியர் திரு வி சொக்கலிங்கம் அமைதியான மனிதர் .வேட்டி, ஜிப்பாவில் இருப்பார் .ஆத்ம ராமன் என்றொரு ஆசிரியர் – நீதி போதனை வகுப்பு எடுப்பார் .மாணவர்கள் அவரைப் பாடாய்ப் படுத்துவார்கள். ராமசாமி என்ற ஆசிரியர் சில நாட்களில் கோட் ,டையடன் வருவார் . கணக்கு . ஆசிரியர் எஸ் எஸ் என நினைவு .நிறையப் பேசுவார் ஆனால் ஒன்றும் புரியாது
காரைக்குடி மாணவர்கள் நிறையப்பேர் நினைவில் நிற்கிறார்கள் . இப்போது கம்பன் மணிமண்டபம் இருக்குமிடத்துக்கு எதிரே சரளைக்கல் செம்மண் பூமி இருக்கும் .அதில் நடந்து சற்று இறக்கமான பகுதியில் போனால் சிவகாமி இல்லம் என்று ஒரு பெரிய வீடு இருக்கும் ,அங்கிருந்து முருகன் என்பவர் என்னோடு பள்ளிக்கு வருவார் .இன்னும் சற்று தள்ளி ஒரு இறக்கத்தில் சில வீடுகள் வரிசையாக இருக்கும் ,அங்கிருந்து ஜான் என்பவர் எங்களோடு சேர்ந்து கொள்வார் . அவர் அம்மா அப்பா இருவரும் ஆசிரியர்கள் ..ஜான் மிகவும் பொடியான தோற்றத்தில் இருப்பார்
மூன்று பேர் வகுப்புக்கு மீறிய வளர்சசி – ஒருவர் .குணசேகரன் – இவர் நன்றாக ஓவியம் வரைவார் . கண் இமைகளை சொருகி யாராவது காண்பித்தால் மிகவும் பயப்படுவார் அடுத்து .செல்லதுரை திருநெல்வேலிக்காரர் பேனாவை பவுண்டன் என்பார் இன்னொருவர் மிகவும் பெரியவராக வேட்டியில் வருவார் .அவரைப்பார்த்தால் எல்லோரும் சற்று ஒதுங்கிப் போய் விடுவார்கள்
சாமிநாதன்., கிருஷ்ணமூர்த்தி -– இவர் அண்ணன் அமெரிக்காவில் பணியாற்றினார், சுரேந்தர் ,, கண்ணன் – எப்போதும் வாயில் சூயிங்கம் ,–சிராஜுதீன் – பட்டப்பெயர் அத்தா . சிதம்பரம் என்றொரு மாணவர் .ஒரு தேர்வில் கணக்குத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்தார் . அடுத்த தேர்வில் முன்னாலிருக்கும் ஓன்று காணாமல் போய்விட்டது
பள்ளிக் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்ததால் அங்கங்கே நிறைய மணல் கொட்டிக் கிடக்கும் . அதில் கபடி விளையாடுவோம்
கோவை – ஆர் எஸ் புரத்தில் திடல் அருகில் வீடு வீட்டின் பின்புறம் நகராட்சி பெண்கள் உயர் நிலைப்பள்ளி .திடல் தாண்டி உள்ள தெருவில் ஆண்கள் உயர் நிலைப்பள்ளி . நல்ல பெரிய வளாகம் .தலைமை ஆசிரியர் தலைப்பாகை அணிந்து டாக்டர் ராதாக் கிருஷ்ணன் போல் இருப்பார் .அங்கு பணிபுரிந்த ஆசிரியர் ஆதம் என்பவர் அத்தாவுக்கு நெருங்கிய நண்பரானார்
தேர்வில் காப்பி அடிப்பதை அங்குதான் பார்த்தேன் ..பக்திப்பழமாக இருந்த ஒரு பையன் காப்பி அடிக்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான் .கண்ணீர் விட்டு அழுததால் விட்டு விட்டர்கள் . அடுத்த நாளும் அதே போல் மாட்டிக்கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது
கோவையில் பள்ளியில் சேரும்போது காலாண்டுத் தேர்வு நெருங்கி விட்டது .தேர்வில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தேன் .வழக்கமாக ஆங்கிலத்தில் முதலில் வரும் மாணவர் என்னை எதிரி போல் நினைத்தார்
சாப்டர் உயர் நிலைப்பள்ளி நெல்லை . உடன் நினைவுக்கு வருவது தலைமை ஆசிரியர் ஆர்தர் ஆசீர்வாதம் நல்ல உயரம் .கையில் பிரம்பு
விளையாட்டு ஆசிரியர்கள் மூன்று பேர் – அவர்களும் கையில் பிரம்புடன் – கட்டையன் , நெட்டையன் லப்பை என்று செல்லப் பெயர்கள்
மற்ற ஆசிரியர்கள் – கிறிஸ்து தாஸ் , ஜெசுமணி அருள் தேவதாஸ் , முத்துராஜ் , தமிழ் ஆசிரியர் அருணா .ஜோயல் மாமா தம்பான் ,,சந்த்ரா
சீருடை நான் அணிந்தது இங்குதான் ..வகுப்பு நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு படிப்பு நேரம் ,தினமும் கடவுள் வணக்கம், வகுப்புக்குள் காலணி அணியக்கூடாது , விளையாட்டு வகுப்புக்கு சட்டையைக் கழற்றி விட்டு உள்ளாடை (பனியன்) யுடன் செல்ல வேண்டும் என பல கட்டுப்பாடுகள் .
மாணவர்கள் தங்கள் நோட்டு, புத்தகங்களை அடிக்கடி எண்ணி சரிபார்ததுக்கொள்வார்கள்
சுடலை, ராஜ்குமார், சமுத்ரம்,, குத்தாலிங்கம் – உடன் படித்த மாணவர்களில் சிலர்
பொள்ளாச்சி – பள்ளி , கல்லூரி இரண்டிலும் நான் படித்த இடம்
சமத்தூர் இராம ஐயங்கார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி -பொள்ளாச்சி ஆசிரியர்கள் பற்றி நான் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன் .பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி ஆசிரியர் தொழிலின் புனிதத்தை உணர்ந்து ஒரு ஈடுபாடோடு(dedication) பணிபுரிவார்கள் .தலைமை ஆசிரியர் சீதாராமன் மிக நல்ல மனிதர், மிக நல்ல ஆசிரியர் .பள்ளி இறுதி வகுப்பு மாணவர்களுக்கு தினமும் சிறப்பு வகுப்புகள் – எந்த விதக் கட்டணமும் இல்லாமல்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் ,அதையொட்டி மாணவர்கள் பள்ளிக்கு வராமை, எங்கள் பள்ளிக்கட்டிடம் முழுமையாக எரிப்பு , துப்பாக்கிச் சூடு என பல நிகழ்வுகள் கட்டிடப்பணி நடந்து கொண்டிருந்த புதிய பள்ளியில் வகுப்புகள் , தேர்வுகள் நடந்தன
ஆங்கில ஆசிரியர் பஞ்ச கச்சம், குடுமியுடன் வருவார் .ஆங்கிலம் அவர் நாவில் புகுந்து விளையாடும் ,மிகத் தெளிவான உச்சரிப்பு ,சரளமான நடை .
பள்ளியில் ஆய்வுக்கு வந்த மாவட்டக் கல்வி அதிகாரி ஆங்கிலப்பாடத்தில் கேட்ட ஒரு வினாவுக்கு நான் உடனே சரியான விடை சொல்ல ,மகிழ்ந்து பாராட்டினார்
பள்ளித் தமிழ்த் தேர்வில் “உனக்குப் பிடித்த கவிஞர் “ பற்றி எழுதும்படி வினா .நான் கவிஞர் கண்ணதாசன் பற்றி எழுதினேன் ,இதெல்லாம் எழுதக்கூடாது என்று தமிழாசிரியர் சொன்னார்
பள்ளி வாழ்வில் மிக சிரமப்பட்டுப் படித்த நினைவு இல்லை .வீட்டுக்கணக்கு ஒரு கால் அல்லது அரை மணி நேரம் போடுவோம் ,தேர்வு நேரங்களில் அதிகாலையில் ஒரு மணி நேரம் படிப்ப்போம் ,மற்றபடி இரவு பகல் பாராமல் படித்ததில்லை.
இப்போது உள்ளது போல் எழுது பொருட்களில் பல வகை கிடையாது
பேனா என்றால் ரைட்டர் பேனா பேனா மை என்றால் பிரில் நோட்டுப் புத்தகம் என்றால் விஸ்டம் என்று ஒரு வரையறை .மிக அரிதாக சிலர் பைலட் பேனா வைத்திருப்பார்கள் .வெளி நாடு வாழ் குடும்பப் பிள்ளைகள் வெளி நாட்டுப் பேனா பயன்படுத்துவார்கள் .
புத்தகப்பை என்பது துணியால் தைக்கப்பட்டதுதான் . ஐந்தாம் வகுப்பு வரை சிலேட்டு ,பல்பம் எனப்படும் சிலேட்டுக்குச்சி பயன்படுத்தினோம்
கல்லூரிப் படிப்பு பற்றி அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்
13022021sat
Sherfuddin P
No comments:
Post a Comment