Saturday, 6 February 2021

அத்தாவின் எழுத்துக்கள் வள்ளுவரும் கம்பரும்

 

வள்ளுவன் உலகப்புலவன்
.அவனது பொன்மொழிகள் வழுக்கலில் சிக்கி விடாமல் மக்களுக்கு உதவும் கோல் போல் உள்ளன.
எப்படி எல்லாம் அவை காக்கின்றன என்பதைக் கற்றோரும் மற்றோரும் அறிய உணர ,அதன் வழி நடக்க அந்த ஊன்றுகோலை பயன்படுத்தச் செய்வது தலையாய கடமையாகக் கொண்டு நம் பணியாற்றி வருவது அறிவுடைமை
இங்கு ஓன்று குறிப்பிட விரும்புகிறேன் . வள்ளுவன் எழுதிய குறள்தான், போற்றுதற்குறியே அன்றி அவனது உருவம் அல்ல. அழகிய பெண் அவளது உடலழகால் போற்றப்படுகிறாள். சிலையாக சித்திரமாக வடித்து ரசிக்கிறோம். அது போல இலக்கிய அழகு படைத்த குறளைப் படித்துப் படித்து ரசிக்க வேண்டும். அதை விட்டு நாம் கண்டறியாத வள்ளுவனுக்கு ஏதோ ஒரு உருவத்தை கற்பித்து ஆயிரம் ஆயிரம் படங்கள் அளவற்ற சிலைகளாக வடித்து கலைஞர்களை ஊக்குவிக்கிறோம் . அதே சமயத்தில் கருத்தை படிக்க மறந்துவிடுகிறோம். விழா எடுக்கிறோம். படங்களைச் சிலைகளை இரதத்தின் மீதோ யானை மீதோ ஏற்றி வானவேடிக்கைகளுடன் ஊர்வலம் வருகிறோம். ஏதோ ஆண்டுதோரும் தெய்வங்களை வணங்குவது போல அதுவும் ஒரு திருவிழா என்று மக்கள் கருதுகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்
வேறு என்ன செய்ய வேண்டும் . குறளை குறள் நெறியைப் பரப்ப நாம் முனைய வேண்டும். பரப்பினால் பயன் மகத்தானது; வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குறிமை வருந்ததக்கது என்று வருந்துகிறார்களே இவ்வருத்தம் நீங்கும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்னும் தமிழ் நெறிக்கு இம்முறை ஒவ்வாது என்று சிறுபான்மையான உய்ர்ந்தோர் கூறுகிறார்களே அதற்கு இடமில்லாமல் போகும் ,வள்ளுவர் நெறியை முறைப்படி பரப்பினால் எல்லோரும் சான்றோராய்த் திகழ்வர்
எப்படி பரப்புவது
பைபிள் சங்கத்தார் தங்கள் கருத்துகளைப் பரப்பும் முறையைப் பார்க்கின்றோம் .சிறு புத்தகங்களை அழகிய அட்டை முரட்டு எழுத்துகள் என இலவசமாக எங்கும் பரப்புகிறார்கள் .நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு சில வரிகளையேனும் படிக்காமல் இருக்க முடியாது .குறளை அதே முறையில் ஓரிரண்டு பாக்களை மட்டும் பொது மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் நயமான விரிவுரையோடு சிறு சிறு புத்தகங்களாக்கி இலவச விநியோகம் செய்தால் அது நிச்சயமாக பலனைத் தரும் ஒரு பெரியார் குறளை விரித்துரைக்கும்போது கேட்ட ஒன்றிரண்டு கூறுகிறேன்
வள்ளுவரிடம் சென்று சிலர் கேட்டார்கள் ஐயா பெரியவரே எல்லோருக்கும் ஏதேதோ சொல்லுகிறீர்களே ,குடிகாரனுக்கு ஏதாவது கூறுங்களேன் என்றார்கள் ..வள்ளுவர் கூறமாட்டேன் என்றார் ,ஏனையா . என்றார்கள் அதற்கு வள்ளுவர் கேட்டார் ஏனையா .குடிப்பவன் ஒரு நாளாவது குடிக்காமல் இருப்பானல்லவா ?ஆம் இருப்பான் .அப்போது குடித்தவனைப் பார்ப்பானில்லையா ? ஆம் பார்ப்பான் . அப்போது அவன் உளருவதையும் ,,எச்சில் வடிவதையும் கிராஸ் நடை போட்டுத் தெருவை அளப்பதையும் , தெருவில் உருளுவதையும் பத்துப் பேர் காரித் துப்புவதையும் பெண்கள் பயந்து ஓடுவதையும் பார்ப்பானல்லவா! ஆம் பார்ப்பான்; இத்தனை அலங்கோலத்தையும் அவமானத்தையும் இழிவையும் பார்த்த பின்னும் திருந்தாமல் குடிக்கிறானே. அவனுக்கு நான் புத்தி சொல்லுவது எப்படி ஏறும் என்று மடக்குகிறார் வள்ளுவர். இவ்வளவும் ஒரு குறட்பாவிலே இரண்டு அடிகளிலே ஏழு சீர்களிலே கூறியிருக்கிறார் வள்ளுவர். பாவைப் பாருங்கள்.
கள்ளுன்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (930)
திருக்குறளுக்கு விரிவுரை செய்யும் கம்பன் இக்கருத்தை எப்படிக் காட்டுகிறான் என்று பாருங்கள்.
அரக்கர்கள் குலத்திலும் கள் வெறுக்கபடுகிறது என்று கூறி வள்ளுவர் நெறியை வலியுறுத்துகிறான்,
இந்திரசித்து வீடனனைத் திட்டுகிறான். நையாண்டி செய்கிறான்.
'பணிமலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு தனி முதல்தலைவன் ஆனாய்; உன்னை வந்து அமரர் தாழ்வார்; மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆழ்வாய்; இனி உனக்கு என்னோ மானம்? எங்களோடு அடங்கிற்று அன்றே?
என்று
. கூறிவிட்டு இராவணன் இறந்தபின் என்ன செய்யப்போகிறாய் சித்தப்பா! இராவணனுக்காக அழுவாய அல்லது ராமனுடன் சேர்ந்து களிக்கூத்தாடுவாயோ! உன் அண்ணனைக் கொன்றதற்காக அவனை வணங்குவாயா! என்ன செய்யப்போகிறாய். வெற்றி பொருந்திய தோள்களை உடையவனே என்று பரிகாசம் செய்கிறான்.
“எழுதியேர் அணிந்த திணதோழ் இராவணன் இரமான் அம்பால் புழுதியே பாயலாகப் புரண்ட நான் புரண்டுமேல் வீழ்ந்து அழுதியோ நீயும்கூட ஆர்த்தியோ! அவனை வாழ்த்தித் தொழுதியோ எதுவோ செய்யத்துணிந்தனை விசயத் தோளாய்
என்றதும் வீடணன் என்ன கூறுகிறான். பொறுமையாகக் கூறுகிறான். “தம்பி , நான் எப்பொழுதாவது கள் குடித்திருக்கிறேனா. இல்லையே பொய் சொன்னதில்லையே! பிறர் சொத்தை அபகரித்தேனா, யாருக்காவது வஞ்சம் கொண்டு இன்னல் விழைத்தேனா. வேறு யாரும் என் மீது குற்றம் கூறியிருக்கிறார்களா அல்லது நீயேனும் ஏதாவது குறைகள் கண்டிருக்கிறாயா! பிறன்மனை நயந்த உன் தந்தையைப் பிரிந்தது குற்றமா கூறு? என்று நய மாகவும் நிதானமாகவும் கேட்கிறான்.
'உண்டிலேன் நறவம்; பொய்ம்மை உரைத்திலேன்; வலியால் ஒன்றும் கொண்டிலேன்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம் காண்டிலர் என்பால்; உண்டோ? நீயிரும் காண்டிர் அன்றே! பெண்டிரின் திறம் பினாரைத் துறந்தது பிழையிற்றாமோ?’’ என்றும் “மூவகை உலகம் ஏத்தும் முதல்வன் எவர்க்கும் மூத்த தேவர் தம்தேவன், தேவி, கற்பினில் சிறந்து ளாளை நோவன செய்தல்தீது என்று உரைப்ப, நுன் தாதை சீறிப் போ, வென உரைக்கப் போந்தேன்; நரகதில் பொருந்து வேனோ?” என்றும் சரிக்கு சரியாக வீடணன் இந்திரசித்தனுக்கு பதில் கூறினான்.
அரக்கர்கள் கூட கள் குடியாமை பெருங்குணம் என்று கருதுகின்றனர் என்று கம்பர் விரிவுரை கூறி
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காவியநன்றது அறம் என்ற குறளையும் வலியுறுத்துகிறான்
ஒருவர் வள்ளுவரிடம் வந்து ஐயா நான் பல சிறப்பான காரியங்கள் செய்திருக்கிறேன் எல்லாரும் போற்றுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு ஆசை இருக்கிறது. அது தப்பான ஆசையாக இருக்கிறதே இத்தனை சிறப்பான காரியத்தில் ஒன்றைக் கழித்து கொண்டு அதைச் செய்யலாமா என்று கேட்டார். அது என்ன ஆசையாயிருக்கும். அடுத்த வீட்டில் பூத்த மலரைத் தெரியாமல் அபகரிப்பதாக இருக்கும். வள்ளுவர் அதற்கு என்ன சொன்னார். தெரியும் தம்பி, நீ எத்தனை ஆயிரம் சிறப்பான காரியம் செய்துவிட்டு ஒரு இழிவான காரியம் செய்தாலும் அந்தச் சிறப்பு அத்தனையும் வேரற்று வீழ்ந்து அடிமட்டமாகும், அதுமட்டும் அல்ல. நீ செய்த ஒரு குற்றத்தை வைத்து நீ செய்யாத குற்றத்துக்கெல்லாம் பழியாக்குவார்கள். ஒரு சிறப்பு செய்யாத பல சிறப்பைத் தராது ஆனால் இழிவு செய்த சிறப்பையும் அழித்து செய்யாத குற்றங்களுக்கும் உன்னைப் பலியாக்கும். ஒரு தரம் திருடிவிட்டால் நடக்கும் திருட்டுகளுக்கெல்லாம் உன்னைப் போலீஸ் கரம் பிடிப்பான். பெரிய மனிதனான நீ ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டால் கன்னிகர்பங்களுக்கும், கைம்பெண் கருவுக்கும் நீ பலியாக்கப்படுவாய் ஒருமுறை லஞ்சம் வாங்கினால் வரும் மொட்டை மனுக்கள் அத்தனையும் உண்மை என்று பழி சுமத்தபடுவாய் ஒழுக்கத்தில் மேன்மை எதுவாய் உண்மை ஆனால், இழுக்கத்தில் அதாவது இழிவில் நீ எய்வது அந்த இழுவினால் எய்தும் பழி மட்டும் அல்ல. “எய்தாப்பழி” நீ நீ அடைய வேண்டாத பழி எய்துவாய்.
“ஒழுக்கத்தில் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்பழி” என்று கூறி
மேலும் நீ எவ்வளவுக்கெவ்வளவு சிறப்பெய்தினாயோ அவ்வளவுக்கவ்வளவு உனது சிறிய குற்றமும் பெரிதாகத் தோன்றும் மேலே சந்திரனைப் பார் அதன் களங்கம் உலகம் எல்லாம் தெரிகிறதே! ஆனால் தரைகளிலே வீட்டிலே காட்டிலே காணும் அழகு உலகமெல்லாமா தெரிகிறது.? எனவே நீ புகழடைய உன்னுடைய சிறு குறையும் மதிக்கண் மருப்போல் உயர்ந்து உலகம் முற்றும் தெரியும் என்று கூறி,
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல்
என்றார்.
“கம்பன் இக்கருத்தை எப்படிக் கூறுகிறான். இராமன் உயர்ந்தவன் வாலியை மறைத்து கொன்றான். அதைக் குற்றமாகக் கண்ட வாலி கூறுகிறான்.
“ஏ ராமா சந்திரனுக்குதான் களங்கம் உண்டு. சூரியனுக்கு இல்லை. ஆனால் சூரிய குலத்தில் பிறந்த நீ இக்குற்றத்தை செய்ய அது மதிக்கன் மருப்போல் உயர்ந்திட சூரியன் குலத்துக்கே களங்கம் விழைவித்து விட்டாயே” என்று கூறுகிறான்.
'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ! 95
மேலும் எல்லா வகையாலும் சிறந்த இராவணன் பிறன்மனை விழைத்தல் என்னும் ஒரே குற்றத்திற்காக பெரும் பழிகாரனாக ஆக்கப்படுகிறான்.
தன் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டு வந்துநின்ற காலத்தும், இவ்வாறு நடப்பதற்கு நீ இழைத்த குற்றம் என்ன என்று தங்கையைப் பார்த்து
நீயிடை இழைத்த குற்றம் என்னை கொல்! நின்னைஇன்னே வாயிடை இதழும் மூக்கும் வலிந்தவர் கொய்ய” என்று கேட்ட நேர்மை உள்ளம் படைத்தவன் இராவணன்; பிறன்மனை நயத்தல் என்ற குற்றத்தை ஒரே முறை செய்ததால் அவன் எத்தனை எய்தாப்பழிகளை எய்துகிறான்.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல் (142)
இந்திர சித்து இறந்து கிடக்கும்போது; இராவணன் கூறுகிறான் நான் எப்படியெல்லாம் அரசாண்டேன். பெண்ணால் வந்த பெரும் பிழையால் எனக்கு செய்ய வேண்டிய கிரியைகளை நான் உனக்குச் செய்ய வேண்டிய காலம் வந்ததே.
சினத்தோடு கொற்றம் முற்றி இந்திரன் செல்வம்மேவ நினைத்தது முடித்து நின்றேன் நேரிழை ஒருத்தி நீரால் எனக்கு நீ செய்யத் தக்க கடனேல்லாம் எங்கி ஏங்கி உனக்கு யான் செய்வதாளேன் உலகில் யார் என்னின் உள்ளார்
இம்மாதிரி குறள் விளக்கங்களை ஒன்றிரண்டாக எடுத்து சிறு சிறு புத்தகங்களாக பெரிய எழுத்துக்களில் அச்சீட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கினால் குறள் நெறி பரவும் எல்லோரும் சான்றோராகத் திகழ்வர். “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்னும் தமிழ் நெறிக்கும்” வயது வந்தோர் வாக்குரிமை என்னும் இன்றைய முறைக்கும் ஏற்றக் தாழ்வு அதிகம் இராது.
எழுத்தாக்கம்
எங்கள் தந்தை
ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்சி
நகராட்சி ஆணையர் ஒய்வு
06022021sat
Sherfuddin P
May be an image of text
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment