Wednesday, 24 February 2021

சொல் விளயாட்டு - மரமது மரத்திலேறி

 சொல் விளையாட்டு

“மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்”
விடுகதை பாடல் வடிவில்
பொருள் என்ன ?
விடை
சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.
• மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.
• மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)
அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,
• மரமது - மீண்டும் அரசு
• மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.
• மரத்தினால் - மீண்டும் வேல் -
• மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை
அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,
• மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,
• மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,
• மரமுடன் - ஆல் மரம்
• மரமெடுத்தார் - அத்தி மரம்
அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.
இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:
அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்பு அளிக்கின்றார்கள்
சரியான விடை எழுதி பாராட்டும் வாழ்த்தும் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ கணேச சுப்பிரமணியன் , அசன் அலி , ஞாழல் மலர் , அஷ்ரப் ஹமீதா , வழிக்கரை வடிவேலன்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
24022021wed
Sherfuddin P
May be an image of text that says "தமிழ்"
Like
Comment
Share

No comments:

Post a Comment