சச்சா 2
சச்சா என்றால் அன்பு பாசம் பரிவு . இது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை
ஒரு வெள்ளந்தியான பாசம்
ஈனா (இனா என்பதுதான் சரி . இருந்தாலும் பேச்சு வழக்கில் ஈ என்று வருவதால் அப்படியே எழுதிகிறேன்) கடையில் பணியில் இருக்கும்போது சச்சாவின் சிறப்புப் பணிகள் இரண்டு
ஓன்று வணிகக் கடன்களை வசூல் செய்தல் . அடுத்து சிப்பம் கட்டுதல் . சையது கட்டிய பார்சல் என்றால் டி வீ எஸ் போன்ற பெரிய சுமை உந்துகளில் கூட உடனே எடுத்துக் கொள்வார்களாம்
கடைக் கடன் போலவே சொந்தக் கடனையும் கண்டிப்புடன் வசூல் செய்து விடுவார்
வீட்டு வரியை பஞ்சாயத் லுவலகத்தில் போய்க் காத்திருந்து கட்டும் ஒரு சிலரில் சச்சாவும் ஓன்று
நான் பூந்தமல்லியில் வீடு கட்டும் பணியை ஒரு பொறியரிடம் கொடுத்திருந்தேன். அவரோ பணம் பெறுவதில்தான் குறியாக இருந்தார். ஒரு வில்லங்கச் சான்றிதழ் வாங்க இவ்வளவு ஆகும் அவ்வளவு ஆகும் என்று பல நாட்கள் இழுத்தடித்துக் கொண்டிருந்தார் .
அந்த வேலையை சச்சா ஒரே நாளில் மிகக் குறைந்த செலவில் முடித்துக் கொடுத்தார்
எங்கள் வீட்டில் சச்சாவுக்கு அம்மாவின் கவனிப்பு சிறப்பாக இருக்கும் .ஒரு தாய்ப் பாசம் , தாயின் கண்டிப்பு எல்லாம் கலந்த ஒரு கவனிப்பு
மற்றவர்கள் பேசத் தயங்கும் உண்மையை போட்டு உடைக்கும் குணம் சச்சாவுக்கு உண்டு
காரைக்குடி கடைக்கு வந்த ஒருவர் செருப்பில் எதோ ஒட்டிக்கொண்டு அந்த வாடை கடையெங்கும் பரவியது . வந்தவர் வணிக வரி அதிகாரி என்பதால் எல்லோருக்கும் சொல்லத் தயக்கம்
சச்சா தயங்காமல் “சார் ,மூக்கெல்லாம் பொசுங்கிப் போகிறது .போய் செருப்பைக் கழுவுங்கள் “ என்று சொன்னார்
சச்சாவுக்கும் மாமாவுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுதான் அதை எல்லாம் தாண்டி ஒரு மைத்துனப் பாசம் அவர்களுக்குள் இருக்கும்
முட்டை சச்சாவுக்கு மிகப் பிடிக்கும் . ஒரு திருமண வீட்டில் இரவு உணவுக்கு பக்க உணவாக அவித்த முட்டை
, சச்சா தனக்கு வயிறு சரியில்லை சாப்பாட்டு வேண்டாம் என்று சொல்லி விட்டு
“மூனே மூணு முட்டை மட்டும்” வாங்கிச் சாப்பிட்டார்
நாங்கள் ஈரோடு போன புதிதில் எங்கள் முகவரி வாங்காமல் புறப்பட்டு வந்து விட்டார் . தொடரந்து மூன்று நாள் வங்கி விடுமுறை. எனவே தொடர்பு கொள்ள முடியாமல் திரும்பிப் போய்விட்டார் . இது அவரது பயணத்தில் ஒரு பின்னடைவு
கொஞ்சம் வெகுளித்தனமான அவர் பேச்சு நகைச் சுவைக்கு இடமாக இருக்கும்
சிறு வயதில் அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது எதிர் பாராமல் சில விருந்தினர்கள் வந்துவிட எங்கள் அம்மா சச்சாவிடம் மிளகாயைக் கொடுத்து இரண்டிரண்டாக கிள்ளிப் போடச் சொன்னார்
சிறிது நேரம் சென்று “ அக்கா ஒரு மொளகா மிஞ்சிபோச்சு “ என்று ஒரு ஒலி . என்னடா என்று பார்த்தால் மிளகாயை இரண்டு இரண்டாக வரிசையாக அடுக்கி வைத்திருந்தார் .மிஞ்சிய ஒரு மிளகாயை என்ன செய்வது என்று புரியவில்லை அவருக்கு
பாசத்தின் இருப்பிடமாக இருந்த அவருக்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை . அதற்கெல்லாம் ஈடு செய்வது போல் அமைந்தது அவர் மறைவு
சொந்த ஊரில் , சொந்த வீட்டில் உயிர் பிரிந்தது . வீட்டில் நிறைய புதுத் துணிகள் , நல்ல ஒரு தொகை எல்லாம் இருந்தது
நிறைய உறவினர் – பலபேர் வெளியூரிலிருந்து வந்து சேர்ந்து மிகச் சிறப்பாக அவரை நல்லடக்கம் செய்தனர்
வானம்பாடி போல் பறந்து திரிந்த அவர் மறைந்த தினம் எங்கள் மின் வாரிய மைத்துனர் பல ஆண்டுகள் முன்பு மறைந்த அதே நாள்
இ(க)டைச் செருகல்
நுங்கு விற்பதைப் பார்த்ததும் சச்சா நினைவு வந்தது என்று குறிப்பிட்டிருந்தேன்
பெரிதாக ஒன்றும் இல்லை .அவர் நுங்கு சாபிடும் முறை , அழகே தனி .
நுங்கை எடுத்து தோல் ஒரு துளி கூட இல்லாமல் உரித்து , அதே நேரம் நுங்கு உடைந்து நீர் வடிந்து விடாமல் பார்த்து மிகக் கவனமாக சாப்பிடுவார் . அவர் ஓன்று சாப்பிடுவதற்குள் நான் நாலைந்து சாப்பிட்டு விடுவேன்
சாப்பாடும் அப்படித்தான் – மிக நிதானமாக நன்கு மென்று சாப்பிடுவார்
இத்துடன் சச்சா பதிவை நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
09082021wed
Sherfuddni P
No comments:
Post a Comment