Monday, 7 June 2021

சச்சா

 சச்சா

தம்பீஈஈஈஈ--------------
என்ற குரல் – பாசத்தையும் பரிவையும் சேர்த்துக் குழைத்த நீண்ட குரல் ஒலிக்கிறதா !
பார்க்காமலே உறுதியாகச் சொல்லலாம் வந்திருப்பது எங்கள் சச்சாதான் என்று
இரண்டு அண்ணன்கள் மூன்று அக்காக்களுடன் கடைகுட்டியாகப் பிறந்தவர் சச்சா. அறியா வயதில் தந்தை மறைவு , தாய் ஞான வழியில் . உடன் பிறப்புகள் குறிப்பாக அக்காமார் பாசத்தைக் கொட்டி அதிகச் செல்லமாக வளர்க்க அதுவே அவரது படிப்புத் தடை பட்டு முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாகி விட்டதோ ?
அதற்காக ஒன்றும் சோடை போய் விட்வில்லை . யாருக்கும் தலை வணங்காத வாழ்க்கை , கையில் போதுமான அளவு காசு ,அதற்கெல்லாம் மேல் சிறப்பான மறைவு
பேச்சு எழுத்து நடை உடை பாவனை எல்லாவற்றிலும் ஒரு தனி முத்திரை .சைய்யது அம்பலம் ஏன்று தன் பெயரிலும் கையொப்பத்திலும் வாழ்நாள் முழுதும் அம்பலம் என்று குலப் பெருமையை நிலை நாட்டியவர்
“நாமிக்கூஊஊ “ (நாமிக்)
“ஜொதிப் புள்ள “ (ஜோதி)
இவர் அழைக்கும் பாணிகளில் சில . பெரும்பாலும் யாரையும் – சிறுவர்களைகூட – அவன் இவன் என்று சொல்ல மாட்டார்
பேரோடு புள்ள (பிள்ளை) என்று சேர்த்துத்தான் அழைப்பார்
சாப்பாட்டின் சுவை அறிந்து உண்பவர்
சாம்பார் ருசியாக இருக்கும் என்று மூணு கி மி நடந்து போய் அச்சுக்கட்டில் இட்லி வாங்கி வந்து மணக்க மணக்க செக்கு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடுவார்,
முட்டை , அப்பளம் மிகவும் பிடிக்கும்
படிப்பு அதிகம் இல்லாவிட்டாலும் பல் குரான் சூராக்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தார்
பல பணிகள் , தொழில்கள் செய்தார் . எனக்குத் தெரிந்தவரை ஈனா கடையில் நீண்டகாலப் பணி அவ்வப்போது இடை வெளிகளுடன் – மதுரை காரைக்குடி , திருவனந்தபுரம்- என பல கிளைகளில் பணி புரிந்தார் . தொடர்ந்து பணியில் இருந்திருந்தால் கிளை மேலாளராக ஆகி இருக்கலாம் . என்ன செய்வது அவ்வப்போது கொள்கை முரண்பாட்டில் வேலையை விட்டுப் போய்விடுவார்
இது போக, பள்ளிவாசலில் மோதினாக ( கோழி அறுக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன் ) ,பயிற்சி மகிழுந்து ஒட்டுனர், பயிற்சி சினிமா ஆப்பரேட்டர் , பெட்டிகடை , தள்ளு வண்டி , மிதி வண்டியில் எனாமல் சாமான்கள் விற்பனை என பலப்பல
சென்னை ஸ்டானலி மருத்துவ மனையில் எங்கள் அத்தா அறுவை சிகிச்சைக்காக சேர்ந்திருந்தபோது அத்தாவுக்கு துணையாக இருந்தது சச்காவின் வாழ்வில் ஒரு பொற்காலம் .
மருத்துவ மனையில் கொடுக்கும் அசைவ உணவை அது ஆட்டுக்கறி என்று சொல்லி ஒதுக்கி விடுவார் ( கிடாய்க் கறிதான் சாப்பிடுவேன் என்ற கொள்கைப் பிடிப்பு )
அலுக்காமல் அசராமல் பயணம் செய்வார் . நீண்ட தூரம் நடப்பார்
சிறு வயதில் இவருக்கு மூல நோய் இருந்ததாம் .அப்போது தெருவில் வைத்தியம் செய்யும் ஒருவர் இவருக்கு வைத்தியம் செய்தாராம்
“மாட்டை அறுப்பது போல் அறுத்துப்போட்டான்” என்று அந்த தெரு வைத்தியரைத் திட்டுவார் . ஆனால் அதற்கப்புறம் அவருக்கு
மூல நோய் என்பதே இல்லாமல் போய்விட்டது என்பது உண்மை
நாம் எங்காவது புறப்படும்போது “நானும் வர்றேன் “ என்பார். நாம் வேண்டாம் என்று விட்டுவிட்டுப் போய்விட்டால் நமக்கு முன் அங்கு போய் நக்கலாக சிரித்தபடி நம்மை வரவேற்பார் .
முகவரியே தெரியாமல் சென்னையில் இருக்கும் எங்கள் அக்கா வீட்டுக்குப் போய் , அங்கே மைத்துனர் பணிபுரியும் மின் வாரிய அலுவலகம் ஒன்றைத் தொடர்பு கொண்டு , அங்கிருந்து மின் துறை wireless வழியே எங்கள் மைத்துனரைத் தொடர்பு கொண்டு மின் வாரிய வண்டியிலேயே அக்கா வீட்டுக்குப் போனது அவர் வாழ்நாள் சாதனைகளில் ஓன்று
சச்சாவின் இன்னும் பல முகங்களை நாளை பார்ப்போம் இறைவன் நாடினால்
இ(க)டைச் செருகல்
இன்று வேறொரு தலைப்பில் எழுத ஆயத்கமயிருந்தேன். அதை மாற்றி சச்சா பற்றி எழுத வைத்தவை இரண்டு நிகழ்வுகள்
ஓன்று மூன்று தலை முறையாக எங்கள் வீட்டில் புழங்கும் பூனை .
அதிகாலையில் வாசலில் நின்ற அந்தப்பூனை என்னைப்பார்த்து பாசத்துடன் கத்தியது . நான் கவனிக்காமல் போனதும் மிக உரத்த குரலில் அது கத்தியது என்னை சச்சா அழைப்பதை நினைவு படுத்தியது
அடுத்து தெருவில் நுங்கு விற்றது – நுங்குக்கும் சச்சாவுக்கும் என்ன தொடர்பு ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
08062021tue
SheruddinP
May be an image of rose
Like
Comment
Share

No comments:

Post a Comment