கார் பயணங்களில்
மகிழுந்து வாங்கியது ஆம்பூரிலா மேட்டுரிலா என்பது நினைவில்லை . ஆனால் மேட்டூரில் இருக்கும்போது நிறைய கார் பயணங்கள் நினைவில்
மேட்டூர் வீடே (அரசு குடியிருப்பு) பெரிய தோட்டத்துடன்
மனதுக்கு இதமாக இருக்கும் . ஒரு பெரிய மகிழுந்து கொட்டகை (கார் ஷெட்).அதற்கு போகும் வழியில் ஒரு பூங்கா போல் பெரிய வட்ட வடிவப் பாத்தி நிறைய வண்ண வண்ணப் பூச்செடிகள் . வண்டி போக இடைஞ்சலாக இருந்த அந்தப் பாத்தி இடிக்கப்பட்டபோது மனதில் ஒரு சிறு வருத்தம்
MSZ7736- வண்டியின் பதிவு எண். ஹில்மான் (Hillman)என்ற இங்கிலாந்து நாட்டு வண்டி . நிறம் கருப்பு என நினைவு
மேட்டூரில் துவங்கி சிதம்பரம், விழுப்புரம், மதுரை, காரைக்குடி .கோவை, நெல்லை, பொள்ளாச்சி , வேலூர், மீண்டும் நெல்லை என்று அத்தா பணி ஒய்வு பெறும் வரை எங்களோடு பயணித்த அந்தக் கார் , கார் பயணங்கள் பற்றிய நினைவுகள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
வெளியூர்ப் பயணங்கள் எல்லாம் மகிழுந்தில்தான் . மகிழ்ச்சியான பயணங்கள் . வண்டி ஒட்டுவது பெரும்பாலும் அத்தாதான்
பெட்ரோல் விலை ஒரு காலன் (ஐந்து லி,க்குப்பக்ககம் ) ஐந்து ரூபாய்
மேட்டுரின் மேல் பகுதியை அக்கரை என்று சொல்வார்கள் .மலைச் சாலை போல் வளைந்து செல்லும் பாதையில் பயணித்து மேட்டூர் அணையைப் பார்க்கப்போவோம் . அணையை ஒட்டி உள்ள பூங்கா மிக அழகாக இருக்கும் .வரும் வழியில் சந்தன எண்ணெய் (மேட்டூர் சந்தன சோப்பு) ஆலையைபார்த்து விட்டு வருவோம்
சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொருட்காட்சி நடக்கும் .பெரும்பாலும் தவறாமல் போய் வருவோம். பொருட்காட்சியில் விற்கும் பழச் சாறு மணம்
இனிமையாக
மூக்கைத் துளைக்கும் .ஓட்டுனர் இல்லாமல் ஓடும் மகிழுந்து அங்கு பார்த்து மகிழ்ந்ததுண்டு ஒகேனக்கல்- இரவில் தங்கலாம் என்றுமாலையில் போனோம் .ஆனால் பாதுகாப்பான விடுதி வசதி இல்லாததால் இரவே திரும்பி விட்டோம்
கூட்டம் வந்து விட்டால் காரை எடுக்க சிரமமாக இருக்கும் என்று திரையரங்குகளில் இருந்து படம் முடிய பத்து நிமிடங்கள் இருக்கும்போதே கிளம்பி விடுவோம்,. படம் துவங்கி பத்து நிமிடம் கழித்துத்தான் அரங்குக்குப் போவோம்,. கூட்டிக் கழித்துப் பார்த்தல் முக்கால் வாசிப் படம் பார்த்திருப்போம்
வெளியூர் பயணங்களில் சாலை ஓரம் உள்ள புளிய மரங்களை எண்ணிக்கொண்டே போவோம் .தொடரி குறிக்கீட்டில்(லெவல் கிராசிங் ) கார் நின்றால் தவறாமல் தொடரியின் பெட்டிகளை எண்ணுவோம் . இதில் ஓட்டுனர் இருக்கும் முதல் பெட்டியையும் (எஞ்சின்) காவலர் இருக்கும் கடைசிப் பெட்டியையும் விட்டு விட்டு எண்ண வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதி வேறு
அதிகாலையில் காரில் பயணிக்கையில் எதிரில் மாடுகள் கூட்டம் கூட்டமாய் வரும், அவற்றின் கண்கள் கார் விளக்கு வெளிச்சத்தில் பளிங்கு போல் அழகாய் மின்னும் காட்சி பார்க்க வேண்டிய ஓன்று
மழை பெய்தால் மட்டுமே கார் கண்ணாடிகளை மூடுவோம் . ஆனால் இப்போதோ அந்த இயற்கை காற்று, காட்சிகளை ரசிக்க யாரும் இல்லை . கார் கண்ணாடிகளை யாரும் திறப்பது கிடையாது .
நன்றாககக் காற்று வருகிறது என்று திறந்து வைத்தால் “ கொசு வரும்,தூசி வரும் உடனே மூடுங்கள்” என்று குரல் வரும்
அதற்கு மேல் ஆளுக்கொரு கைப்பேசி .சாலையை யாரும் பார்ப்பதே கிடையாது
பயணத்தில் தனியார் விடுதியில் தங்கிய நினவு இல்லை . அரசு பயண மாளிகை அல்லது உறவினர் வீட்டில்தான் தங்குவோம்
அரசு பயண மாளிகைகளில் அறைகள் மிகப்பெரிதாக ஒரு வீடு அளவுக்கு இருக்கும் . திருவாரூர் பயண மாளிகை ஒரு வாய்க்காலை ஒட்டி பெரிய பூங்கா போல் இருந்ததாய் நினைவு
வெள்ளையர் ஆட்சிக் காலத்தை நினவு படுத்தும் பங்காவை சில மாளிகைகளில் பார்த்ததுண்டு
பங்கா என்பது அறையின் உச்சியில் கட்டப்பட்டு, கயிற்றால் அசைத்தால் காற்று வரும் வகையில் இருக்கும் விசிறி போன்ற அமைப்பு; இழுக்கும் கயிறு அறைக்கு வெளியே இருக்கும். பங்கா இழுப்பவர் என்று ஒருவர் அதை இழுத்துக் கொண்டிருப்பார்
ஒரு மாளிகை அறையில் விசிறி சீராக்கியில் (fan regulator) காசுபோடும் அமைப்பும் இருந்தது . நாங்கள் பார்க்கும்போது அது இயங்கவில்லை . காசு போடாமலே விசிறி ஓடியது
உணவு விடுதி என்று பார்த்தால் விழுப்புரம் வாசவி விகார் .அங்கு சாப்பிட்டஇலந்தைப் பழ ஊறுகாய் சுவை இன்றும் நாக்கில் ஒட்டிகொண்டிருக்கிறது . இப்போது அந்த விடுதி இருக்கிறதா அந்த ஊறுகாய் கிடைக்கிறதா என்று தெரியவில்லை
புதுக்கோட்டையில் பெரிய மதில் சுவர் அதற்குள் நிறைய திறந்த வெளியுடன் ஒரு உணவு விடுதி இருக்கும். அங்கு பல முறை சாப்பிட்ட நினைவு
ஏறுவாடி (கீழக்கரை) போகும்போது கார் சக்கரம் அங்கங்கே கடல் மணலில் சிக்கிக் கொள்ளும் . பெரிய கட்டைகளை வைத்து காரைத் தூக்கி விட ஆட்கள் வருவார்கள்
ஒரு பயணத்தின்போது கார் பழுதாகிவிட வண்டியை வேலூரில் ஒரு பட்டறையில் விட்டு விட்டு அத்தா மட்டும் பயணத்தைத் தொடர ஜமால் அண்ணனும் நானும் வேலூரில் தங்கினோம் . அங்கு சாப்பிட்ட பனிக்கூழ் (ஐஸ் கிரீம் ) மிகச் சுவையாக இருந்தது . பச்சை நிறத்தில் இருந்த பனிக்கூழை ஒரு பச்சை இலையில் வைத்துக் கொடுப்பார்கள் . நிறைய சாப்பிட்டோம் ஓன்று அரையணா
இன்னொரு நிகழ்வு – அத்தா சொன்னது – இரவில் கார் பயணம் – கடும் மழை காற்று . மேற்கொண்டு ஓட்ட முடியாமல் காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அத்தா வண்டிக்குள்ளேயே தூங்கி விட காலையில் விழித்தால் ஒரு அற்புதம் .
இரவில் அத்தா காரை நிறுத்தியிருந்த இடத்தில் ஒரு பெரிய மரம் விழுந்து கிடக்கிறது காரோ இரவில் நிறுத்தியிருந்த இடத்துக்கு எதிர் திசையில் திரும்பி சற்றுத் தள்ளி நிற்கிறது . இறை அற்புதம் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை
இது போல் ஒரு அற்புதம் எனக்கும் நடந்தது .ஜலந்தரில் இருந்து தமிழ்நாடு மங்கலப்பட்டிக்கு மாறுதல் வந்த நேரத்தில் நான் ஒரு கார் வாகினேன் PJQ 7777 பிரீமியர் பத்மினி
புதுக்கோட்டைக்கு அருகில் ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம் .வண்டியை நான்தான் ஓட்டுகிறேன் ,
அந்தி மயங்கும் நேரம் .சாலை ஓரம் முழுதும் மிக அகலமான ஆழமான பள்ளம் .
எப்படியோ வண்டி பள்ளத்தின் விளிம்புக்குப் போய் விட்டது சிறிது அசைந்தாலும் வண்டி பள்ளத்துக்குள் போய் விடும்.வண்டியின் ஓட்டத்தை நிறுத்தி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் அசையாமல் உட்கார்ந்து இறைவனை வேண்டினேன் .
எங்கிருந்தோ சிலர் – இரண்டு மூன்று பேர் – வந்தனர் , காரை அப்படியே தூக்கி பாதுகாப்பாக சாலையில் நிறுத்தி விட்டனர் . அவர்களுக்கு நன்றிசொல்லிவிட்டு பணம் ஏதும் கொடுக்கலாம் என்று வண்டியை விட்டு இறங்கினேன், யாரையும் காணோம்.
முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது .இப்போது நினைத்தாலும் உடலும் மனதும் சிலிர்த்துக் கொள்கிறது .இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கிறான் என்று படித்திருக்கிறேன் என் போன்றோருக்கு அது நேரிடையாக நடக்கையில் இது கனவோ என்றொரு எண்ணம் தோன்றுகிறது
அடுத்து எனக்கு கோவையிலிருந்து திருநெல்வேலி ஏறுவாடிக்கு இட மாறுதல்
குடும்பத்துடன் காரில் பயணம் .கடும் கோடை வெப்பம் .மிகவும் களைத்து விட்டோம் ..நானும் பைசலும்தான் ஓட்டுனர்கள் ,
மாலை மயங்கும் நேரம் .கயத்தாறு அருகில் வண்டிச் சக்கரம் பழுது .(பஞ்சர் )
அரைகுறை ஒளியில் சக்கரத்தைக் கழற்ற முயற்சி செய்கிறேன் . அப்போது பெரிய மீசையுடன் அச்சம் தரும் தோற்றமுடைய ஒருவர் வருகிறார் .கையில் நீளமான – மிக நீளமான அருவாள் வேறு . உள்ளுக்குள் நடுக்கம் .மிக அருகில் வந்த அவர் மிக எளிதாக சக்கரத்தை மாற்றிக் கொடுத்தார் பணம் ஏதும் கொடுத்தேனா என்பது நினைவில் இல்லை
பத்து ஆண்டுகளுக்குமேல் தமிழ் நாட்டில் அந்த வண்டியை –அத்தா அளவுக்கு இல்லாவிட்டாலும் – ஓரளவுக்கு ஓட்டியிருக்கிறேன் ஆனால் ஒருமுறை கூட காவல் துறையினர் வண்டியை நிறுத்தி பதிவு எண்பற்றி கேள்வி கேட்ட நினைவில்லை . எவ்வளவோ முயற்சித்தும் வண்டியைத் தமிழ் நாட்டுப் பதிவு எண்ணுக்கு மாற்ற முடியவில்லை எனவே வண்டியை விற்று விட்டேன்
கார்ப் பயணம் நான் எண்ணியதை விட சற்று நீண்ட தொலைவு பொய் விட்டது
எனவே இரு சிறிய வேடிக்கை நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பயணத்தை நிறைவு செய்கிறேன்
ஓன்று அக்காவை பேறுகாலத்துக்கு அழைத்து வர அம்மாவும் நானும் காரில் போனோம்.அமைச்சர் ஒருவர் வருகையை எதிர் நோக்கிக் காத்திருந்த ஊர் மக்கள் காரைபார்த்ததும் தாரை தப்பட்டை முழங்க எங்களுக்கு வரவேற்பு அளித்தார்கள்
அடுத்து ஒரு சென்னைப் பயணத்தின் போது கார் பழுதாகி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது . சென்னை நகருக்குள் மிதி வண்டியில் வந்த ஒரு உயரமான மனிதர் பல முறை எங்களைக் கடந்து முந்திக்கொண்டு சென்றார்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
12062021sat
SherfuddinP
No comments:
Post a Comment