Wednesday, 15 December 2021

தமிழ் -நாணம்

 

 


 

 

 

தொட்டால் சிணுங்கி எனும் ஒரு செடி .

 

 அதைத்தொடுவதும்  தொட்டால் இலைகள் மூடிக்கொள்வதும்  எனக்கு மிகவும்பிடிக்கும்  . எங்கே அந்தச் செடியைப் பார்த்தாலும் தொட்டுப்பார்த்து விடுவேன்

 

முணுக் என்று சினம் கொள்பவர்களை இந்தச் செடியோடு ஒப்பிடுவது உண்டு

 

ஆனால் கவிஞர் பார்வையில்  இது  வேறுவிதமாகத் தெரிகிறது

“தொட்டரல் சிணுங்கி பார்த்தல்

 உந்தன் வெட்கம் ஞசபகமே “ என்று அழகாகக் கவிதை பாடுகிறார்

 

வெட்கம், நாணம் , மிக மென்மையான அழகிய உணர்வுகள் . இவை பெண்ணுக்கு மட்டுமே உரியவை அல்ல ,ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை என்கிறன சங்க இலக்கியங்களும் குறளும்

 

அதைபற்றிஎல்லாம் இப்போது பார்க்கப் போவதில்லை ,

 

தமிழ்திரைப்பாடல்களில் இந்த மென்மையான உணர்வுகள் எப்படிக் கையாளப்படுகின்றன என்பதற்கு ஒரு சிலவற்றை எடுதுக்காட்டவே இந்தப் பதிவு

 

: சின்னக் குழந்தையில்

சேலை கட்டும் ஞாபகம்

வெட்கம் வந்ததும்

முகத்தை மூடும் ஞாபகம்

 

 தன் குழந்தை பேத்தி  முகத்தை மூடுவதை நேரில் பார்த்து மகிழ்ந்தவர்களுக்கு  இந்த வரிகளின் அழகு நன்றாக விளங்கும் .

 

ஒரு குறிப்பிட்ட பருவத்தில் அதுவும் பெண் குழந்தைகள் மட்டுமே இப்படி வெட்கப்பட்டு முகத்தை மூடும்

 

சரி ,குழந்தைக்கு இந்த நாணம் எங்கிருந்து வருகிறது ?

அதற்கும் கவிதையிலேயே விடை வருகிறது

“இது தலை முறையாக எங்கள் தாய் தந்த சீதனம் ராஜா”

 

“முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமோ “

இது இன்னும் சற்று விரிவான விளக்கம்

 

“முதல் நாள் காணும் திருமணப் பெண்போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமோ

முறையுடன் மணந்த கணவர் முன்னாலே

பரம்பரை நாணம் தோன்றுமோ”

ஒரு நாலு வரியில் காதல் காவியமே படைக்கிறார் கவிஞர்

 

 

ஆண் பெண்ணைப்பார்த்து

“நாணமோ இன்னும் நாணமோ “

என்று பாடுவதும் அதற்குப் பெண்

“நாணுமோ இன்னும் நாணுமோ “

என்பதும் சற்று மாறுபாடாக . கொஞ்சம் மென்மை, பெண்மை குறைந்த வரிகளாக எனக்குப் படுகின்றன .

 

இதையே 

“என்னென்னவோ நினைவிருந்தும்

நாணம்  விடவில்ளையே “,

என்று பெண் பாடுவது  சற்று மென்மையாக ஒலிக்கிறது

 

“காதல் பாட்டுப்பாட காலம் இன்னும் இல்லை “

என்று பாடிவிட்டு

:தாலாட்டுப் பாட தாயாகவில்ளை

என்று பாடும்போது குரலிலும் முகத்திலும் தோன்றும் ஏற்ற இறக்கங்கள் மாறுதல்கள் நாணம் என்ற சொல் இல்லாமலே அந்த உணர்வை முழுமையாக அழகாக வெளிப்படுத்துகின்றன

 

இலக்கியம் எனும் கடலில் இறங்கி விட்டால் மீண்டு வரூவது சிரமம் என்று நினைப்பேன்

 

கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் இருப்பதால் திரைப்பாடலும் அப்படித்தான் நம்மை ஆழத்துக்கு இழுத்துச் செல்கிறது

 

“ நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன

நடத்தும் நாடகம் என்ன

காதலாலே கால்கள் பின்னப் பின்ன

கனியும் காவியம் என்ன “

 

“மங்கையர்கள் நாடகம் நாணமே

என்று சொல்லிச் சிரித்தாள்”

 

இது போல் எத்தனை இனிமையான பாடல்கள்

 

திரைப்படத்துக்கு  ஒரு சிறிய இடை வேளை.

இந்த இடைவெளியில் கொஞ்சம் மிகக் கொஞ்சம்  இலக்கியம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“நாற்குணமும் -----“

 

(நேற்றைய “தொட்டால் சிணுங்கி “ யின் தொடர்ச்சி –

நிறைவுப்பகுதி )

 

திரைப்படத்துக்கு  ஒரு சிறிய இடை வேளை.

இந்த இடைவெளியில் கொஞ்சம் மிகக் கொஞ்சம்  இலக்கியம்

 

 

நாணம் போன்ற குணங்களை ஒரு பாதுகாப்பு படையாக

உருவகப்படுத்தி பாடல் ஓன்று இருக்கிறது

அது என்ன ?

 

மிக எளிமையான வினா

 

 

மிக எளிய வினா., விடை  பலரும் பள்ளியில் படித்த பாடல்

தமயந்தியின்  அழகையும் சிறப்பையும் வர்ணிக்கும் புலவர் புகழேந்தி 

 

“நாற்குணமும் நாற்படையா” என்று

நளவெண்பாவில் தமயந்தியின் அழகைச் சொல்கிறார்

அச்சம் , நாணம் , மடம்  பயிர்ப்பு  எனும் நாற்குணங்கள் நான்கு தரைப்படை, குதிரைப்படை , யானைப்படை, தேர்ப்படை என நான்கு படைகளாக தமயந்திக்கு பாதுகாப்புத் தருகின்றதாம் பாடல் இதோ

 

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா

ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா –வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைகீழ்

ஆளுமே பெண்மை அரசு

 

விளக்கம் தேவை இல்லாத , பொருள் எளிதாக விளங்கும் இனிய பாடல்

 

சகோ கணேசன் சுப்ரமணியன் ஒரு அருமையான குரளை விடையாக அனுப்பியிருக்கிறார்

 

அவருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்

 

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்

பேணலர் மேலா யவர். --குறள் 1016:

 

பொருள்

நாணம் என்னும் வேலியை தமக்குக் காவலாகக் கொள்ளாமல்  மேலோர் இந்தப் பரந்த உலகில் வாழும் வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ள மாட்டார்கள்

 

விடை அனுப்ப முயற்சித்த

சகோ சர்மதாவுக்கு நன்றி

 

எப்படியோ திரைப்ப்படல்கள் நடுவே ஊடு பயிராக இலக்கியம் வந்ததில்  ஒரு மன நிறைவு

 

இனி மீண்டும் சில திரைப்பாடல்கள்

“இரவும் நிலவும் வளரட்டுமே “

மிக அழகான இனிமையான ஒரு பாடல் . அதில் ஒரு சில வரிகளில் மட்டும் எனக்கு ஒரு சிறிய உறுத்தல்

“நாடகம் முழுதும் நடக்கட்டுமே “ என்று தலைவி பாட

:அதில் நாணமும் கொஞ்சம் இருக்கட்டுமே “ என்கிறான் தலைவன்

.இது கொஞ்சம் இடம் மாறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ என்பது என் சொந்தக் கருத்து

 

 

எந்த நாட்டுக்கு வந்தால் என்ன  சொந்த மண்ணின் நாணம் போய்விடுமா

“நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை

நாணம் இன்றிப் போய்விடுமோ “ என்கிறார் தலைவி

 

தலைவியை

“நாணம் தவறாத பெண்ணோவியம் “

என்று வருணித்து மகிழ்கிறான் தலைவன்

 

 

“உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது “

ஒரு மிக மிக மென்மையாக காதலைக் சொல்லும் பாடல்

காற்றும் மழைத்துளியும் கடல் அலைகளும் காதலர்களைச்

சேர்த்து வைக்க முயற்சிக்கையில்

 “இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலம் இட்.டது “

 

 

“விழியால் காதல் கடிதம் வரைந்தால் வாழ்வில் அமுதம் “

மற்றொரு இனிமையான பாடல்

“முதலில் நாணம் தடுக்கும்

முடிவில் வாரிக்கொடுக்கும்

வெட்கம் மறையும் “ என ஒரு இன்பக்காவியம் வரைகிறார் கவிஞர்

 

 

பொது வாக நாணம் என வரும் பாடல்களில் இன்பச் சுவை சற்று அதிகமாகவே இருக்கும்

எனவே விரிவான விளக்கம் சொல்ல ஒரு தயக்கம்

நாணம் .

ஆணுக்கும் நாணம் பொதுவானது என்று அன்றே சொல்லிவிட்டார்களே

 

 

அதனால் இன்னும் சில பாடல் வரிகள் மட்டும் தருகிறேன்

 

“இனியவளே என்று பாடி வந்தேன்

இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்

----------

துணை தேடி வரும்போது

கண்ணில் என்ன நாணமோ

குணம் நான்கில் உருவான பெண்மை

இன்று போகுமோ “

 

 

 

முத்துக்களோ பெண்கள்

தித்திப்பதே கன்னம்

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம்

பின்னிப் பார்ப்பதென்ன “

 

 

“ வா என்றது உருவம்

நீ போ என்றது நாணம் “

 

 

“முறைப்படி பெண் கேட்க உங்கள் வீட்டுக்கு வருகிறேன்” என்று தலைவன் சொன்னதைக் கேட்ட தலைவிக்கு ஒரு நாணம் கலந்த மயக்கம்

“நான் என்ன சொல்லி விட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய் 

நெஞ்சில் அன்றில்லாத நாணம்

இன்று ஏன் வந்ததடி “

 

 

வரப்போகும் காதல் மனைவியை கற்பனை செய்து பார்க்கிறார்

“அம்மன் கோயில் பெண்ணழகு

நாணமுள்ள கண் அழகு “

 

 

“பாலாடை போன்ற முகம் மாறியதேனோ

பனிபோல நாணமதை மூடியதேனோ “

 

பாடல் வசிசையின் நிறைவாக

எனக்குப் பிடிக்காத வரிகள் கொண்ட நாணப் பாடல்கள்

 

“நான் நாணம் இல்லாதவள் அல்ல “

“என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன் “

 

இன்த இரண்டிலும் சொல் பொருள் தவறு எதுவும் இல்லை

ஆனால் இவற்றை எல்லாம் மீறி கவிதை நயம் சரியாக இல்லை என மனதில் உறுத்தல்

 

நாணம் ,வெட்கம் ,மானம் , போன்ற மெல்லிய உணர்வுகளை ஒரு திடப் பொருளாக எண்ணிப் பாடியது போன்ற ஒரு தோற்றம்

 

இதையே

“காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்”

என்பது எவ்வளவு மென்மையாக ஒலிக்கிறது

(மானம் என்ற பொருள் காக்க மனக் கதவை மூடி வைத்தேன் – என்பதும் இதில் சேரும் )

 

 

பதிவை நிறைவு செய்யுமுன்

அண்மையில் பார்த்த தொலைக்காட்சி விளம்பரம் ஓன்று

உடற்பயிற்சி வகுப்ப-ஆசிரியர் வரவில்லை . ஒரு அழகிய இளம்பெண் வகுப்பு நடதத முன் வருகிறார்

உடற்பயிற்சிக்கு தோதாக அவர் கைஇல்லாத மேலுடை (sleeveless baniyan ) அணிந்திருக்கிறார் . உடற்பயிசிக்காக கைகளை மேலே தூக்கும் போது armpit தெளிவாகத் தெரிகிறது

இது இயல்பானது ,இதில் தவறு ஒன்றும் இல்லை

 

 

ஆனால் வழுவழுப்பாக இருக்கும் அது வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்படுகிறது – ஒரு முடி நீக்கும் பூச்சு விளம்பரம்

 

அதற்கெல்லாம் மேல் வகுப்பு முடிந்த பின் ஒரு இளைஞன் அந்த

இளைஞியிடம் “நாளையும் ஆசிரியர் வராவிட்டால் நன்றாக இருக்கும் என்கிறான் “

 

இப்போதெல்லாம் எதையாவது தவறு என்று சுட்டிக்காண்பித்தால்

“இதில் என்ன தவறு ? உங்கள் பார்வையில் ,எண்ணத்தில் தவறு “

என்று வாதிடும் மனப்பாங்கு பரவி வருகிறது 

 

இருந்தாலும் பெண்மையை இழிவு படுத்துவது போல் தோன்றுவதை சொல்லாமல் இருக்க முடியவில்லை

 

(தமிழர்களின் பரம்பரைக் கலைகளான கோலாட்டம், கும்மியில் கைகளை மேலே தூக்குவதே ஆரம்பத்தில் இல்லை . போகப் போக மற்ற கலைகளின் தாக்கத்தால் தான் இந்தப்பழக்கம் வந்தது என எங்கோ எப்போதோ படித்த நினைவு

அவர்கள் முழுமையாக ஆடை அணிந்து ஆடுவார்கள்} 

 

இறைவன் நடினால் மீண்டும் சிந்திப்போம்

 

௧௫௧௨௨௨௧ புதன்  

15122021

சர்புதீன் பீ

 

 

 

 

 

 

 

 

 


/

 

 

 

 

 

 

 

 

 

 

 

.










,





 

No comments:

Post a Comment