• மருத்துவம் –சட்டம் x அற நெறிமுறை
(மரு.கண்ணன் முருகேசன் அவர்களுக்கு நன்றி )
மூளைச் சாவு (Brain Death) நிலையை அடைந்தவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை –
இது மருத்துவ அறிவியல்
இறைவன் நாடினால் மீண்டும் உயிர் பெற்று வரலாம் –
இது ஆன்மீகம் , நம்பிக்கை
தொடர்ந்து பார்ப்போம்
இளைஞர் ஒருவர் மருத்துவ மனையில் கூராய்வுப் பிரிவில் (I C U) அனுமதிக்கப்படுகிறார்
கண்மணியில் அசைவு எதுவும் இல்லை , கோமா நிலை ,
சுவாசம் மெதுவாக இருக்கிறது
இதயம் மட்டும் தன் கடமையில் கண்ணாக சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது
தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்
தூக்கில் தொங்கினால் ஒரு சில நிமிடங்களில் மூளைக்கு குருதி , ,உயிர் காற்று செல்வது தடைப்பட்டு மூளை செயல் இழந்து சுவாசம் முழுதும் நின்றுவிட வாய்ப்பு அதிகம்
‘Hypoxic encephalopathy’ என்று மருத்துவர்கள் குறிப்பிடும் இந்த நிலைக்குப் போய் விட்டால் மூளை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவது மிகவும் சிரமம்
நோயாளிக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு மருந்துகளும் வைத்தியமும் துவங்கப்பட்டன
செயற்கை சுவாசம் அளிக்கும் வரை, இதயம் துடிக்கும் வரை உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும்
மூன்று நான்கு நாட்களுக்குள் மூளை சரியாக இயங்காவிட்டால் நிரந்தர மூளைச் சாவு ஏற்படும்
உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு
உறவினரிடம் நிலையை விளக்குகிறார் மருத்துவர் . செயற்கை சுவாசத்துடன் ஒரு நாளைக்கு 4000 ரூபாய் வரை செலவாகும்
இருந்தாலும் உயிர் பிழைப்பது சிரமம் என்று அவர் சொல்ல , செலவைபற்றிக் கவலை இல்லை . மருத்துவத்தைத் தொடருங்கள் என்கிறார்கள் உறவினர்கள
இப்படியே 15 நாட்கள் ஓடி விட்டன .
மாற்றம், முன்னேற்றம் ,அசைவு எதுவும் இல்லை நோயாளியிடம்
உதவி மருத்துவர் மருத்துவரிடம்
“இனிமேல் தொடர்ந்து மருத்துவம் பார்ப்பது வீண் என்று தோன்றுகிறது , உறவினர்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி செயற்கை சுவாசத்தை நிறுத்த அனுமதி கேட்கவா ?”என்கிறார்
“மருத்துவ உண்மைகளை எடுத்துச் சொல்
முடிவை அவர்களிடம் விட்டு விடு “ என்று மருத்துவர் சொல்கிறார்
நோயாளியின் துணைவியின் சகோதரர்கள் இழப்பை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்து விட்டார்கள்
ஆனால் துணைவி சீறிப் பாய்கிறார் . “ அவருக்கு நாள் குறிக்கக நீங்கள் யார் ? நாங்கள் சொல்லும் வரை, பணம் செலுத்தும் வரை மருத்துவம் பார்ப்பது உங்கள் கடமை “ என்று கடிந்து சொல்கிறார்
அதை அடுத்து மூன்று நாட்களுக்கு எதோ தவம் போல், இறை தியானம் போல் உட்கார்ந்த நிலையில் வெறித்த பார்வையுடன் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தார் அந்தப் பெண்
பார்க்கவே சங்கடமாக இருந்தது
இப்படியே மூன்று வாரங்கள் ஓடிவிட்டன
இது போன்ற நிலையில் உறவினர்கள் சம்மதித்தால் செயற்கை சுவாசத்தை நிறுத்தி விட(pulling the plug ) சட்டம் அனுமதிக்கிறது
மூளைச் சாவு உறுதி செய்யப்பட்ட நிலையில் இது ஒன்றே வழி என மருத்துவர்களுக்குத் தோன்ற , அந்தப பெண்ணுக்கு அவர் அண்ணன் வழியாக தெரிவிக்கப்பட்டது
மீண்டும் அந்தப்பெண்மருத்துவரிடம் கோபமாக
இதயம் ,நாடி துடிக்கிறது பின் எப்படி அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் சொல்கிறீர்கள்
என்று கேட்கிறார்
மருத்துவர் பொறுமையாக மூளைச் சாவுபற்றி விளக்கி
இதயம் மட்டும்தான் இயங்குகிறது
செயற்கை சுவாசத்தை நிறுத்தி விட்டால் இதயமும் ஒரு சில நிமடங்களில் நின்று விடும்
என்று தெளிவு படுத்துகிறார்
அந்தபெண் அதைவிடத் தெளிவாக, உறுதியாக, தீர்க்கமாக சொல்கிறார்
“அப்ப நிறுத்தாதீங்க “
இருபத்தி எட்டாவது நாள்
அந்த நோயாளியின் கண்களில் – கண்மணியில் அசைவு
மருத்துவர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் நோயாளியியை கண்காணித்து வந்தார்கள்
மூன்று நாட்களில் அவர் உடல் நிலை படியாடியாக முன்னேறியது
செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது . இயல்பான சுவாசம் சீராகியது
அந்தப் பெண்ணுக்கு மட்டற்ற மகிழ்ச்சி
மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியுடன் இணைந்த ஒரு குற்ற உணர்வு
பத்து நாட்கள் தீவிர மருத்துவத்தில் முழுமையாக குணமாகி நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார்
வீட்டுக்கு அனுப்பும் தினம்
அந்தப்பெண் அந்தப்பகுதியில் (வார்டில்) உள்ள எல்லோரையும் நிற்க வைத்து தரையில் விழுந்து அனைவரையும் வணங்கினார்
அந்தப்பெண்ணும் அவர் துணைவரும் மருத்துவரின் கையை இறுகப் பிடிதுக்கொண்டு சற்று நேரம் கண்ணீர் வீட்டு அழுதார்கள்
பின அந்தப்பெண்
ரொம்ப நன்றி ஐயா
என் புருஷனை என்கிட்ட மீட்டுக் கொடுத்திட்டீங்க
நான் உங்களிடம் கோபமாகப் பேசியதை மன்னிசசிடுங்கள்”
என்று கை கூப்பி விட்டு
எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார்
மருத்துவர்
“ புராண சாவித்திரி கதை நீ கேள்விப்பட்டிருக்கிறாயா என்பது தெரியாது
ஆனால் நீ நிச்சயம் நவீன சாவித்திரிதான்
உன் வலிமையான நம்பிக்கைதான் சாவின் விளிம்பில் நின்ற உன் புருஷனை மீட்டுக் கொண்டு வந்தது
இது ஒரு அதிசயம், அற்புதம் “
என்றார்
“இது போல ஒரு மனைவி அமைய நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்
இனிமேலாவது ஒழுங்காய் இரு “
என்று கணவனிடம் சொன்னார்
இது கதை அல்ல
உண்மை நிகழ்வு
மரு. கண்ணன் முருகேசன் முகநூலில் ஒன்னரைப்பக்க நாளேடு என்ற குழுவில் தன மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்
எளிய நடையில், பதிவுகள் .
படிக்கும்போது பல மருத்துவ உண்மைகள், சொற்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது
தன்மையில் (First person) அவர் எழுதியதை படர்க்கையில் (third person)
எழுத முயற்சி செய்திருக்கிறேன்
சென்னை புறநகர்ப் பகுதியில் புதிதாகத் துவங்கபட்ட மருதுவக் கல்லூரியில் துணை முதல்வராகவும் ,தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவராகவும் மரு கண்ணன் முருகேசன் பணியாற்றியபோது நிகழ்ந்தது மேலே சொன்ன அற்புதம்
அதை மருத்துவரின் தடுமாற்றம் ( Doctor’s Dilemma) என்ற தலைப்பில் பதிவு செய்கிறார்
சில நேரங்களில் நோயாளியின் நிலையைப் பொருத்து மருத்துவர்கள் தங்கள் அறிவ, அனுபவத்தோடு ஆத்மாவையும் பயன் படுத்தி முடிவெடுக்கும் கட்டாயம்
மிகக் குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவ கவனிப்பு என்ற பெயர் இருந்ததால் பலரும் பயனடைந்தனர் என்று குறிப்பிடுகிறார்
பதிவின் நிறைவுப்பகுதியில் அவர் சொல்வது
“ இது ஒரு மருத்துவ அற்புதம் .-Medical miracle
என் அனுபவத்தில் இதுவே முதலும் கடைசியுமான நிகழ்வு .
அமெரிக்காவில் 2018 ஆம் ஆண்டில் இது போல் ஒரு சில நிகழ்வுகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்
உலக அளவில் மூளைச் சாவுக்குப்பின் ஒரு மாதம் கழித்து மீண்டும் உயிர் பெற்றது மிக மிக மிக அரிதான் நிகழவே “
என்ன , படித்து விட்டீர்களா ?
இந்த நிகழ்வு நமக்குக் கற்றுத்தரும் படிப்பினை (Moral of the story ) என்ன ?
எனக்குப் புரியாதது போலும் , புரிந்தது போலும் இருகிறது
உங்களுக்க் தெளிவாகத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
நிறைவு செய்யுமுன்
மரு.கண்ணன் அவர்களுக்கு நன்றி
ஒரு வேண்டுகோள்
நீங்கள் குறிப்பிட்ட மிகக் குறைந்த கட்டணத்தில் சிறப்பான மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையின் பெயர , விவரங்களைத் தெரிவித்தால் எல்லோருக்கும் பயன்படும்
அடுத்து என் மனதில் பலகாலமாக ஓடிகொண்டிருக்கும், , பலரிடமு கேட்டு தெளிவான விடை கிடைக்காத வினா
“ மூளைச் சாவு அடைந்து விட்ட நோயாளியின் உறுப்புகளை எடுத்து பிறருக்கு பயன் படுத்துவது-சட்டம் அனுமதிக்கும் ஓன்று
ஆனால் அறநெறி(Ethics) ப்படி சரியா ?
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
21052022 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment