கதை சொல்லும் குரான்
கதை 30
நிறைவுப் பகுதி
இன்று உங்களுக்கு மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்
எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமையாக அருளி விட்டேன்
இஸ்லாமை உங்கள் மார்க்கமாக ஆக்கி மன நிறைவடைந்தேன்
நம்பிக்கை அற்றோர் உங்கள் மார்க்கத்தை விட்டு ஏமாற்றத்தில் விலகி ஓடி விட்டர்கள்
நீங்கள் அவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள்
எனக்கே அஞ்சுங்கள் (5:3)
20 ஆண்டுகளுக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்ட குரானில் இறுதியாக , நிறைவாக இறக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வசனத்தின் ஒரு பகுதி இது
நபி பெருமானின் நிறைவுப் பேருரையை ஒட்டி இந்த வசனம் அருளப்பட்டதாக சொல்லப்படுகிறது
நபி பெருமான்
ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு தன் நிறைவு ஹஜ் புனிதப்பயனத்தின் போது
மக்களிடையே ஆற்றிய உரை நபியின் நிறைவுப்பேருரையாகும்
“மக்களே நான் சொல்வதை செவி மடுங்கள்
அடுத்த ஆண்டு உரையாற்ற நான் இருப்பேனா தெரியவில்லை
எனவே என் பேச்சைக் கவனமாகக் கேட்டு , இங்கு வராதவர்களுக்கும் என் செய்தியைப் பரப்புங்கள்
என் மக்களே இந்த நாளை , இந்த மாதத்தை , இந்த நகரை புனிதமானதாகப் போற்றுகிறீர்கள் .
அதே போல் ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் உடமைகளையும் புனிதமாகப் போற்றுங்கள்
உங்களிடம் பாதுகாப்புக்காக (அமானிதமாக) ஒப்படைக்கப்பட்ட பொருட்களை உடையவரிடம் திருப்பிக் கொடுங்கள்
யாரையும் துன்புறுத்தாதீர்கள் ; உங்களை யாரும் துன்புறுத்த மாட்டார்கள்
நீங்கள் இறைவனை சந்திக்கும் நாளில் உங்கள் செயல்கள் கணக்குப் பார்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
வட்டியை இறைவன் தடை செய்துள்ளான்
எனவே வட்டி நிலுவைகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்
இப்னு அப்பாஸ்(நபி பெருமானின் மாமா ) அவர்களுக்கு வர வேண்டிய வட்டி உட்பட
உங்கள் முதல்(capital) உங்களுடையதே ஆகும்
அநீதியை பிறருக்கும் உங்களுக்கும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
சைத்தானிடம் எச்சரிகையாக இருந்து உங்கள் மதத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
உங்களுக்குப் பெண்கள் மேல் சில உரிமைகள் உள்ளது போல்
பெண்களுக்கும் உங்கள் மேல் உரிமைகள் உண்டு
இறை நம்பிக்கையுடன் , இறைவன் அனுமதி பெற்று அவர்களை உங்கள் துணைவிகளாக அடைந்தீர்கள்
அவர்கள் உங்களுக்கு உறுதியாக ஒரு கடமை உணர்வோடு உதவும் வாழ்க்கைத் துணைவிகள்
அவர்களை அன்புடன் நல்ல முறையில் நடத்துங்கள்
கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் இருப்பது அவர்கள் கடமை
என் மக்களே ஐ வேளை தொழுகையை பேணுங்கள்
ரமலான் மாதத்தில் நோன்பு வையுங்கள் , ஜக்காத் எனும் தருமம் செய்யுங்கள்
வசதி வாய்ப்பு உள்ளவர்கள் புனித ஹஜ் பயணம் செய்யுங்கள்
மனித குலம் தோன்றியது ஆதம் , ஹவ்வா விடமிருந்துதான்
அரபியர் , அரபியர் அல்லாதோர்
வெள்ளையர் கறுப்பர்
இவர்களில் யாரும் யாரை விட உயர்ந்தவரும் இல்லை
தாழ்ந்தவரும் இல்லை
நன்னடத்தை, இறை அச்சம் இவையே உயர்வுக்கு வழி
முஸ்லிம்கள் அனைவரும் ஒருவொருக்கொருவர் சகோதரர் ஆவர்
உங்கள் சகோதரனின் சொத்துக்களை கவர்ந்து உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக்கொள்ளதீர்கள்
இறைவனை சந்திக்கும் நாளை நினைவு கொண்டு நல்வழியில் செல்லுங்கள்
என் காலத்துக்குப் பின்னால் வழி தவறி விடாதீர்கள்
எனக்குப்பின் எந்த நபியும் , எந்த புது மார்க்கமும் புது வழியும் கிடையாது
குரானையும் ,என் வழி (சுன்னத்)யையும் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்
இவை இரண்டையும் பின் பற்றினால் நீங்கள் வழி தவறிப் போகமாட்டீர்கள்
என்னுரையைக் கேட்டவர்கள் மற்றவர்களுக்கு , மற்றவர்கள் பிறருக்கென கடைசி மனிதனுக்கு தெளிவாகப் புரியும்படி பரப்புங்கள்
உங்களுக்குரிய செய்தியை உங்களிடம் சேர்ப்பித்து விட்டேன் என்று இறைவனிடம் எனக்கு சான்று கூறுங்கள் “
நபி பெருமான் எண்ணியபடி , சொல்லியபடி இன்றும் அந்த உரை படிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது
சற்று நீளமாக இருந்தாலும்
இஸ்லாம் என்பதன் சுருக்கமான இந்த உரையை
குறைக்காமல் அப்படியே மொழி மாற்றம் செய்து கணினியில் தட்டி விட்டேன்
நபிபெருமானின் இந்த நிறைவுப் பேருரையுடன்
திருமறையின் நிறைவு வசனத்துடன்
கதை சொல்லும் குரான் தொடரை நிறைவு செய்கிறேன்
என்னுரை தனியாக பின்னால்
இனிய ஈகை திரு நாள் வாழ்த்துக்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
30 ரமலான் 1443
02052022திங்கள்
.
)
No comments:
Post a Comment