ரெண்டே நிமிடம்
03122022 சனிக்கிழமை
நோன்பு திறக்கும் நேரம் இரு வேறு அறிவுப்புகளில் இரண்டு விதமாகக் குறிப்பிட்டிருந்தது
பள்ளி நிர்வாகி ஒருவரிடம் இதைச் சொன்னேன்
“இரண்டு நிமிடம்தானே , இதில் என்ன பெரிதாக வந்து விடப்போகிறது “
என்று அவர் சொன்னதைக் கேட்டதும் எப்போதோ படித்த ஒரு துணுக்கு என் நினைவில் வந்தது
“தொடர் வண்டிகள் அறிமுகமான காலம் .
புகை வண்டி என்ற பேரில் நீராவியில் இயங்குபவை
குப் குப் என்று புகை , கூவும் , ஒலி எல்லாம் வரும்
இங்கிலாந்து நாட்டில் ஒரு சிறிய ஊரில் உள்ள புகை வண்டி நிலையம் அருகே ஒரு வீடு
வண்டி விடும் புகையில் உள்ள நெருப்புப் பொறி பறந்து பட்டு வீடு முற்றிலும் எரிந்து சாமபலானது
வீட்டுக்காரர் புகார் அளித்து , வழக்கு நீதி மன்றத்துக்கு வந்து விட்டது
புகை வண்டி நிறுவனதுக்கான வழக்கறிஞர் மிக அலட்சியமாக வாதாடுகிறார்
“அது ஒரு சிற்றூரில் உள்ள சிறிய புகை வண்டி நிலையம்
அங்கு வண்டி நின்றது இரண்டு நிமிடங்கள் மட்டுமே
இவ்வளவு குறுகிய நேரத்தில் ஒரு பெரிய விபத்து நடக்க வாய்ப்பே இல்லை
எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் “ என்று சொல்லி வெற்றிக்களிப்போடு உட்காருகிறார்
அடுத்து எரிந்து போன வீட்டுக்காரரின் வழக்கறிஞர் :
அதிகம் பேசவில்லை
தன் சட்டைப்பையிலிருந்து ஒரு நிறுத்தக் கடிகாரத்தை (ஸ்டாப் வாட்ச் ) எடுத்து நீதி அரசரிடம் கொடுக்கிறார்
“ஐயா,, இரண்டு நிமிடம் ஆனவுடன் சொல்லுங்கள் “ என்று சொல்லி அமருகிறார்
நீதி அரசர் கடிகார முள்ளை உற்று நோக்குகிறார்
அங்கிருக்கும் மற்ற அனைவரும் சுவர்க் காடிகாரத்தையும் நீதி அரசர் முகத்தையும் மாறி மாறிப் பார்க்கிறார்கள்
ஒரு அழுத்தமான அமைதி
எல்லோர் நெஞ்சிலும் ஒரு இனம் புரியாத படபடப்பு
ஒரு திகில் படம் பார்ப்பது போன்ற உணர்வு
நீதி அரசர் நெற்றியில் முத்து முத்தாக வியர்வை
ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல் நகர்கிறது
ஒரு வழியாக நூற்றி இருபது நொடிகள் கடந்து விட , ஒரு நிம்மதிப் பெருமூச்சு
கைகுட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்ட நீதி அரசர் – அவரும் அதிகம் பேசவில்லை
தொடர் வண்டி நிறுவனம் தகுந்த இழப்பீடும் , செலவுத் தொகையும் வீட்டுக் காரருக்கு வழங்க ஆணை பிறப்பிக்கிறார்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
0312022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment