இளமை இனிமை
மின்னும் பச்சை நிறத்தில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய்ப் பறக்கும் பொன் வண்டு – பாத்திருக்கிறீர்களா >
தீப்பெட்டியில் அடைத்து வைத்து உணவாக இலைகளை வெட்டிப்போட்டு விட்டு பள்ளிக்கூடம் போவோம்.
மாலையில் வந்து பார்த்தால் பெரும்பாலும் உயிர் போயிருக்கும்
மிக மிக அரிதாக மஞ்சள் நிறத்தில் முட்டை இட்டிருக்கும் . அதைப்பார்த்தால் அப்படி ஒரு உற்சாகம் ,மகிழ்ச்சி
முட்டையை எடுத்து வேறொரு தீப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கோல், பஞ்ச எல்லாம் போட்டு வைப்போம் எனக்குத் தெரிந்து ஒரு தடவை கூட குஞ்சு வந்ததில்லை
இருந்தாலும் குஞ்சு வரும் என நம்புவது ஒரு இனிமை –
இப்படி இளமைக்கே உரிய இனிமைகள சின்னச் சின்னதாய் எத்தனை எத்தனை !
வெல்வெட்டுப் பூச்சி – நல்ல சிவப்பு நிறத்தில் தொட்டுப்பார்த்தால் வெல்வெட் துணி மாதிரியே இருக்கும் தொட்டால் தோல் நோய் வரும் என்று எச்ச்ரிப்பார்கள் பெரியவர்கள் . அதை மீறுவதும் ஒரு சிறிய சுகம்தான்
மயிலிறகை பத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்பது இன்னொரு இளமையின் இனிமை . என் மயிலறகு குட்டி போட்டு விட்டது என்று சாதித்து மகிழ்பவர்களும் உண்டு
இப்படி இளமை ,இனிமை நினைவுகளில் மூழ்கினால் மீண்டு வருவது சிரமம்
இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லில்லை
சொடக்குத் தக்காளி , எருக்கம் பூவை அமுக்கி அது வெடிக்கும் டப் ஒலியைக் கேட்பது , காய்ந்த கனகாம்பரம் விதையை தண்ணீரில் போட்டால் வெடிக்கும் ஒலி எல்லாம் காதுக்கு இனிமை .
காலியான பேப்பர் பையை ஊதி அருகில் உள்ளவர்கள் திடுக்கிடும் படி ஒலியுடன் உடைப்பது இன்றும் தொடரும் இனிமை
உருப்பெருக்கிக் கண்ணாடியை வைத்து பேப்பரை எரிப்பது, தீக்குச்சி பற்ற வைப்பது – அறிவியல் சார்ந்த இனிமைகள் . மொச்சை விதையை பஞ்சில் வைத்து முளைக்க வைப்பது, காந்தம் வைத்து இரும்புத் துகள்களை ,மணலில் இருந்து பிரித்து எடுத்து ஆட வைப்பது எல்லாம் அறிவியல் விளையாட்டுகள்
இன்னொரு அறிவியல் விளையாட்டு உப்புப் படிகம் வளர்ப்பது – ஒரு குவளை தண்ணீரில் நிறைய உப்புப் போட்டு சூடாக்கிக் கரைத்து அதில் ஒரு உப்புக் கல்லை நூலில் கட்டித் தொங்க விட்டால் உப்புக்கள் அழகான முழுமையான வடிவத்தில் படிகமாக வளரும் . பலநாட்கள் பொறுமை காக்க வேண்டும் குவளை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
அப்போதெல்லாம் உப்புக்கல்தான் . உப்புத் தூள் (டேபிள் சால்ட் ) கிடையாது.
சுவையில்தான் எத்தனை இனிமைகள் . காலணாவுக்குக் கிடைக்கும் சோத்து முறுக்கு வெள்ளை வெளேர் நிறத்தில் நல்ல சுவை
கொட்டைப்பாக்கு வடிவத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் பாக்கு மிட்டாய் –வாயில் போட்டால் ஒரு சுகமான் ருசி பரவும் .
இன்றும் அந்த பாக்கு மிட்டாய் , ஆரஞ்சு மிட்டாய் வாயில் கரையும் தேன் மிட்டாய் எல்லாம் கிடைக்கிறது . ஆனால் அந்த இனிமையான சுவை மட்டும் காணாமல் போய்விட்டது
பாரி மிட்டாய்களில் பச்சை காகிதத்தில் சுற்றி வரும் நெய் மிட்டாய் , சற்று பெரிய அளவில் வரும் தேங்காய் மிட்டாய் (பெயர்கள் நாங்களாய்
வைத்தது )எல்லாம் இப்போது காணாம் . அது போல் சுவையும் காணமுடியவில்லை ஏன் நல்லது எல்லாம் காணாமல் போகிறது என்று புரியவில்லை
காரைக்குடி பாம்பே ஆனந்த பவன் கீரை பக்கோடா , சோன்பாப்டியின் சுவை இன்னும் மனதில் நாவில் நிற்கிறது .அந்த ஊரில் மாமா கடையில் வாங்கிக் கொடுக்கும் குளிர் பால் (ரோஸ் மில்க்) இன்னொரு
அருமையான
சுவை சுவையின் இன்னொரு இனிமைதான் நேற்று படம் போட்டு இது என்ன என்று கேட்டிருந்தது
பம்பாய் மிட்டாய் என்பது சரியான விடை
பம்பாய் மிட்டாய் , சவ்வு மிட்டாய் , கயிறு மிட்டாய் , கம் (gum) மிட்டாய் லாலா மிட்டாய் என பல்வேறு உற்சாகமான விடைகள் . அதில் செய்யும் கடிகாரம் பலருக்கும் நினைவில்
இனிமையாக
நிலைத்து நிற்கிறது ஆம் ஒரு உயரமான தடித்த கம்பத்தின் மேல் பகுதியில் சிவப்பும் வெள்ளையும் கலந்த அழகிய வண்ணத்தில் அடர்த்தியாக பரவி இருக்கும் , அதில் கடிகாரம் , மோதிரம் செய்து மாட்டி விடுவார் விற்பவர் , மிச்சம் இருப்பதை கன்னத்தில், நெற்றியில் ஒட்டி விடுவார் . சின்னச் சின்ன பொம்மைகள் செய்து கொடுப்பார் .இதெல்லாம் சுவையை தாண்டி ஒரு உற்சாகம் மகிழ்ச்சி பொங்க வைக்கும்
நாவுக்கு அடுத்து செவிக்கு
அதிகாலை குளிரில் மார்கழித் திங்கள் மதி நிறை – என்று திருப்பாவை திருவெம்பாவை ஒலிப்பது காதுக்கு இனிமை . .(இப்போது அதெல்லாம் கூட காணாம்)
அது அரையாண்டுத் தேர்வுக்காக நாங்கள் சற்று சீக்கிரம் எழுந்து படிக்கும் நேரமாக இருக்கும்
அந்த வயதில் தொழுகை அழைப்பு (பாங்கு) ஒலித்த, கேட்ட, ரசித்த நினவு இல்லை அதெல்லாம் பிற்காலத்தில் வந்த ரசனைகள்
புனித ஹஜ் பயணத்தில் அதிகாலையில் தஹஜ்ஜத் தொழுகைக்கு பாங்கு சொல்வது மிக
இனிமையாக
இருக்கும் (மக்கா மதீனா தவிர வேறெங்கும் தஹஜ்ஜத்துக்கு பாங்கு சொல்வதில்லை )மதினாவில் காலை பஜர் தொழுகைக்கு ஒலிக்கும் பாங்கும் அந்த நேரத்தில் பறக்கும் பறவைகள ஒலியும் கண்ணுக்கும் காதுக்கும் கருத்துக்கும் விருந்தாய் இருக்கும்
நீச்சல் தெரியாவிட்டாலும் திருப்பத்தூர் சீதேவி குளத்தில் ஒட்டுப்படி வரை இறங்கிப்பார்ப்பது , குறுக்குத்துறை தாமிர பரணி ஆற்றில் குளிப்ப்து எல்லாம் சுகம் .
குற்றாலத்தில் குளித்ததும் வரும் பசிக்கு வீட்டில் அம்மா செய்து கொடுத்த புளிச்சோறு. கறிப் பொறியல் அப்படி ஒரு சுவை
மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து நிலவை, மேகங்களை , மின்னும் விண்மீன்களை பார்த்துக்கொண்டு கை வானொலியில் மெல்லிய குரலில் பாட்டுக்கேட்பது , கடல் அலைகளைப் பார்த்து ரசிப்பது இதெல்லாம் நேரம் போவது தெரியாமல் கிறங்க வைக்கும் காட்சிகள் .
வானும் கடலும் ஓராயிரம் கதைகள் சொல்வது போல் இருக்கும்
பழைய நினைவுகளில் நீந்தினால் மீண்டு வருவது சிரமம் என்று முதலிலேயே சொன்னேன்
எனவே இந்த அளவில் இதை நிறைவு செய்கிறேன் .
இன்றும் பறவைகள ஒலி , காலைக் கதிரவன் , மாலை செவ்வானம் ,பூப்பூக்கும் வாசம் மழையில் குளித்த வானம் இதெல்லாம் மனம் ஒன்றி ரசிக்க முடிவது வாழ்க்கைக்கு ஒரு உயிரோட்டம் கொடுக்கிறது
கொடுத்த இறைவனுக்கு நன்றி
நிறைவு செய்யுமுன்
பம்பாய் மிட்டாய் என்பதுதான் சரியான விடை, அடுத்து சவ்வு மிட்டாய் .
இருந்தாலும் மிட்டாய், கடிகார மிட்டாய் , மிட்டாய் பற்றி விவரித்தவை அனைத்தையும் சரியான விடையாக எடுத்துக்கொண்டேன் .
(பஞ்சு மிட்டாய் , மாப்பர் ,candy தவிர )
பாராட்டுப் பெறுவோர்
சகோ மெய்யப்பன் ,,சர்மதா ,ஜோதி .,சோம சேகர், அசனலி சேகர் ,ரவிராஜ் தல்லத்,விசுவநாதன் ,,வேலவன் ரபீக் ,சாகுல் ,ராஜாத்தி ,இதயத் ,அயுப்கான் ,சுராஜ் .பீர் ராஜா ,மெஹராஜ் ,நடராஜன் (பெயர் இல்லாமல் CBROA குழுவில் ஓறு நண்பர் )
வாழ்த்துகள்
உடனடியாக சரியான விடை அனுப்பிய சகோ மெகராஜூக்கு இரட்டிப்புப் பாராட்டுகள் ,
வாழ்த்துக்கள்
முயற்சித்த சகோ சிராஜுதீன் , முனைவர் பாஷா , கதீஜாவுக்கு நன்றி
விடுதல்கள் இருந்தால் please excuse me
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
01092021wed
Sherfuddin P