ஆழக் கடலும் சோலையாகும் 2
நேற்றைய பதிவிக்கு வந்த கருத்துக்கள் பலவும் திரைப்பாடல் அளவுக்கு இலக்கியங்களை புரிந்து கொளவோ சுவைக்கவோ முடியவில்லை என இருந்தது
அதற்காக இலக்கியங்களை ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது
இந்தப்பதிவுக்கு நான் “ இலக்கியங்களில் உளவியல் “ என்று தலைப்புக் கொடுத்திருந்தேன் .
அப்படி இருந்தால் படிப்பவர்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்று பெயரை மாற்றி விட்டேன்
எனவே தலைப்பை விட்டு விலகாமல் எளிதான சிலவற்றை ,இங்கே தருகிறேன்
அகப்பொருள் என்றாலே அகம், நெஞ்சம் உள்ளம் சார்ந்ததுதானே . எனவே அகப்பொருள் பாடல்களில் உளவியல் கருத்துக்களை நிறைய காணலாம்
அறம், பொருளோடு நிற்காமல் இன்பம் பற்றியும் ஒரு தனிப்பகுதியே பாடியிருக்கிறார் வள்ளுவர் .
இவை அனைத்துமே உளவியல் அடிப்படையில் அமைந்தவை
அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பாப்போம் .
புலவி நுணுக்கம் என்ற அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களிலும் ஆழமான ,, மென்மையான நகைச்சுவையும் கலந்திருக்கிறது
‘யாரிடமும் செலுத்தும் அன்பை விட உன்னிடம் மிகுதியாக அன்பு செலுத்துகிறேன் ‘ என்று துணைவன் இயல்பாக பேச்சில் சொல்ல அதில் குற்றம் கண்டு பிடித்து “ யாரை விட அதிகம் ? ‘” என்று கேட்டு சினம் கொள்கிறார் துணைவி
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
“உன்னைத்தான் நினைக்கிறேன் “ என்று அவன் சொல்ல “ அப்படிஎன்றால் என்னை இவ்வளவு நேரம் என்னை மறந்திருந்தீர்களா “ என்று எதிர் வினா
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
தலைவன் தும்மியதும் வழக்கம் போல் “ வாழ்க பல்லாண்டு “ என்று வாழ்த்திய தலைவி உடனே “ என்னைத்தவிர யாரோ உங்களை நினைக்கிறார்கள் அதனால்தான் தும்மல் வருகிறது . யார் அது “ என்று கேட்டு சினம் கொள்கிறாள்
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
எதற்கு வம்பு என்று அடுத்த முறை தும்மலை அடக்க அவன் முயல அதிலும் குற்றம் கண்டு “ யாரோ உங்களை நினைக்கிறார்கள் . அதனை மறைக்க தும்மலை அடக்குகிறீர்கள் “ என்று கடிந்து கொள்கிறாள் அவள்
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
தலைவியின் அழகில் மயங்கி அவளையே கண் இமைக்காமல் தலைவன் பார்த்து இன்புறுகிறான் . அதற்கும் ஒரு சினம் . “ யாருடனோ என்னை , என் அழகை ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்கள்” என்கிறாள்
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று
சினம் என்றால் அது சினம் அல்ல வேடிக்கையான விளையாட்டுக் கோபம் . இதைத்தான் இலக்கியங்களில் ஊடல் என்கிறார்கள்
அகம் புறம் இரண்டுக்கும் வேறு பாடு இல்லாமல் போன இன்றைய திரைப்படங்ள் தொலைகாட்சித் தொடர்கள் எதிலும் ஊடல் போன்ற மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை
கொஞ்ச நேரம் இலக்கியத்தில் நுழைந்தால் இந்த மென்மைகளை சுவைத்து மகிழலாம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
04082021 wed
Sherfuddin P
No comments:
Post a Comment