தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 17
இலக்கணம்
குற்றிய லுகரம்
04102022 செவ்வாய்
சென்ற பதிவில்
அடுக்குத் தொடர்
இரட்டைக் கிளவி
பற்றி பார்த்தோம்
நிறைவாக
"குற்றிய லுகரம் என்றால் என்ன ?"
என்று கேட்டு
(எளிய வினா என்று சொல்ல மாட்டேன்
தெளிவாக எளிமையாக விளக்கும் அளவுக்கு புரிந்து கொள்ள எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது
எனவேதான் சகோ நெய்வேலி ராஜா நான் கேட்டவுடனே விளக்கமான விடை அனுப்பி விட்டார் என்றாலும் ஒரு வார இடைவெளி இருக்கும்படி இன்று வினாவைப் போட்டிருக்கிறேன் )
விடை அனுப்பும் அறிஞர் பெருமக்கள் எளிய விளக்கமும் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்
என்று குறிப்பிட்டிருந்தேன்
நான் கேட்டுக்கொண்டபடி
குற்றியலுகரம்
முற்றியலுகரம்
பற்றி விளக்கமாக எழுதி அனுப்பிய
சகோ நெய்வேலி ராஜாவுக்கு நன்றி
இவர் தமிழ் இலக்கியம் இலக்கணம் எல்லாம் தெளிவாக அறிந்தவர்
அரபு மொழி ,குரானை ஆழமாகப் படித்தவர்
அக்குபஞ்சர் நிபுணர்
எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத ஆழ்கடல் அமைதி
அதனால்தான் அவரைப்பற்றி சற்று விரிவாக சொல்கிறேன்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி புரிந்து பொது மேளாலராக ஓய்வு பெற்றவர்
எனவே நெய்வேலி ராஜா என்று குறிப்பிடுகிறேன்
சரியான விடை விளக்கம் எழுதி வாழ்த்துகள் பாராட்டு பெறுவோர்
சகோ
தல்லத். முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஷர்மதா
.
முதலில் சகோ நெ ராஜா
குற்றியலுகரம்
குறுகிய ஓசையுடைய உகரம் !
கு, சு, டு , து , பு , று என்ற ஆறு உ ஓசையுடன் வரும் வல்லின எழுத்துக்கள் ( க ச ட த ப ற வல்லினமாம்..காதல் மன்னன் சொல்லிக் கொடுப்பார் ) குற்றியலுகரம் என்று கூறப்படும்.
சாதாரணமாக இந்த குறில் எழுத்துக்களை உச்சரிக்க ஆகும் நேரம் ஒரு மாத்திரை அளவாகும்.( குறில் - 1 மாத்திரை ; நெடில் - 2 ; மெய்யெழுத்து - 1/2 )
ஆனால் இவை ஒரு சொல்லின் இறுதி எழுத்தாக வரும்போது பெரும்பாலும் 1/2 மாத்திரை அளவில்தான் உச்சரிக்கப்படும் !
இவ்வாறு தன் ஓசையில் குறுகி உச்சரிக்கப்படும் போது
அது குற்றியலுகரமாகும் . ( குன்றிய இயல் உகரம் )
இரண்டை விட அதிகமான எழுத்துக்களைக் கொண்ட சொற்களின் இறுதி எழுத்து இந்த ஆறில் ஒன்றாக அமைந்து விட்டால் அது கண்டிப்பாக குறுகிய ஓசையுடைய குற்றியலுகரமாகத்தான் உச்சரிக்கப்படும்!
எ.கா.
நுங்கு , முரசு , நண்டு , இஃது , வம்பு , காற்று .
ஈரெழுத்துச் சொல்லாக இருந்தால் அதன் முதல் எழுத்து நெடிலாக இருந்தால் மட்டுமே இறுதி எழுத்தாக வரும் இந்த ஆறில் ஒன்று குற்றியலுகரமாகும் !
எ.கா .
ஆடு, காடு, தூது, ஆறு .
ஆடு, மாடு , பசு, விசு என்ற ஈரெழுத்துச் சொற்களில்...
ஆடு , மாடு இவற்றிலுள்ள டு , ..ஆ , கா என்ற நெடில் எழுத்துகளை அடுத்து இருப்பதால் தன் இயல்பான ஒரு மாத்திரை அளவை விட குறைந்த ஓசை கொண்ட குற்றியலுகரம் ஆகும் .
ஆனால் பசு , விசு இவற்றிலுள்ள சு ,..ப , வி என்ற குறில் எழுத்துகளை அடுத்து வருவதால் தன் இயல்பான ஒரு மாத்திரை அளவில்தான் ஒலிக்கும். இங்கு சு குற்றியலுகரம் ஆகாது !
ஆறு வகையான குற்றியலுகரம் ;
ஒரு சொல்லின் இறுதி எழுத்தாக
கு, சு , டு, து , பு , று என்ற ஆறு எழுத்துக்களில் ஒன்று அமைந்து ,
அதற்கு முன்னால் உள்ள எழுத்து ...
1 . நெடில் எழுத்தாகவும் அச்சொல் ஈரெழுத்துச் சொல்லாகவும் இருந்தால் அது நெடில் தொடர் குற்றியலுகரம் எனப்படும் .
எ.கா. - ஆடு, காடு, தூது, ஆறு .
இந்த இரெண்டெழுத்துச் சொற்களில் இறுதி எழுத்தான
டு, து, று ஆகியவை ஆ, கா, தூ ஆகிய நெடில் எழுத்துகளைத் தொடர்ந்து வருவதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயின !
2 . ஆய்த எழுத்தாக இருந்தால் அது ஆய்தத் தொடர் குற்றியலுகரம் .
எ.கா. - அஃது , இஃது , எஃகு.
3 . உயிர்மெய் எழுத்தாகவும் அச்சொல் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டதாகவும் இருந்தால் அது உயிர்த் தொடர் குற்றியலுகரம்.
எ.கா. - மிளகு , தராசு , பண்பாடு , மனது , கிணறு .
இங்கு.. கு, சு , டு, து, று என்ற எழுத்துக்கள் ள, ரா , பா , ன, ண என்ற உயிர்மெய் எழுத்துக்களைத் தொடர்ந்து வருவதால் உயிர்த் தொடர் குற்றியலுகரம் ஆயின!
4 . க் , ச், ட் , த் , ப் , ற் என்ற வல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வந்தால் அது வன் தொடர் குற்றியலுகரம் ஆகும்.
எ.கா. - தேக்கு , பேச்சு , தட்டு , சித்து , கோப்பு , நேற்று .
5 . ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெல்லின எழுத்துக்களைத் தொடர்ந்து வந்தால் அது
மென் தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா. - பங்கு, பிஞ்சு , வண்டு , பந்து , வம்பு , நன்று
6 . ய், ர், ல், வ், ழ், ள் என்ற இடையின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வந்தால் அது இடைத் தொடர் குற்றியலுகரம் எனப்படும்.
எ.கா. - கொய்து, சார்பு , மூழ்கு, நல்கு .
சரி.. இதெல்லாம் படிக்கும் போது இயல்பாகவே ஒரு நக்கலான சந்தேகம் எழுகிறது !
ஆடு, இஃது , பண்பாடு, வண்டு, நல்கு... இவற்றின் இறுதியில் உள்ள டு, து, கு போன்ற எழுத்துக்களை அப்படியேதானே உச்சரிக்கிறோம் ..
ஆட், இஃத், பண்பாட், வண்ட், நல்க் என்று சொல்வதில்லையே ..பிறகு ஏன் உகரம் குறைந்து 1/2 மாத்திரை ஆகிறது..அதனால் குற்றியலுகரம் ஆனது என்று சொல்கிறார்கள் ?
உண்மைதான்! தனிச் சொற்களாகப் படிக்கும் போது அப்படியேதான் உச்சரிக்கிறோம் .
ஆனால் இச்சொற்களுடன் ஏதாவது ஒரு உயிரெழுத்தை முதலெழுத்தாக் கொண்ட ஒரு சொல்லை இணைத்துப் பார்க்கலாம் .
உதாரணமாக 'இல்லை , ஆகும்' என்ற சொற்களை இணைப்போம் .
'ஆடு இல்லை அது மாடு ஆகும் ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம் .
ஆடு+ இல்லை = ஆடில்லை.
மாடு + ஆகும் = மாடாகும்
என்றுதான் கூறுவோம் !
இங்கு ஆடு, மாடு என்ற சொற்களின் இறுதி எழுத்தான 'டு' குற்றியலுகரமாகும் (நெடில் தொடர்) . இச் சொற்களுடன் இ, ஆ, என்ற உயிரெழுத்துகளை முதலாகக் கொண்ட 'இல்லை, ஆகும்' என்ற சொற்கள் இணையும் போது 'டு' விலுள்ள உகரம் குன்றி 'ட்' என்று அரை மாத்திரை அளவு பெற்று அதனுடன் 'இ' அல்லது 'ஆ' சேர்ந்து 'டி' என்றும் 'டா' என்றும் ஆனது .
டு (ட்+உ ) + இ = (ட்+இ) டி
டு (ட்+உ) + ஆ = ( ட் + ஆ ) டா
( உகரம் குன்றி ஒலிக்கிறது )
ஆனால் பசு , விசு என்ற சொற்களின் இறுதி எழுத்தான 'சு' வல்லின உகர எழுத்தாக இருந்தாலும் இங்கு இது குற்றியலுகரம் இல்லை ! ( ஏன் என்ற கேள்வி எழுந்தால் முதலிலிருந்து சற்று ஊன்றிப் படிக்கவும் !)
இச்சொற்களுடன் 'இல்லை, ஆகும் ' என்ற சொற்கள் இணையும் போது , 'பசு இல்லை' , 'விசு வாகும்' என்று சு வின் உகரம் குன்றாமல் அதன் இயல்பான ஒரு மாத்திரை அளவுடன் தான் ஒலிக்கும்.
'பசில்லை' , 'விசாகும்' என்று கூறப்படுவதில்லை !
எனவே ,
"ஒரு சொல்லின் இறுதி எழுத்து ..கு ,சு, டு, து, பு, று என்ற வல்லின உகரமாக அமைந்து அதனுடன் ஓர் உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல் இணையும் போது அந்த வல்லின உகர எழுத்தின் 'உ' ஓசை குன்றி அரை மாத்திரை அளவுடன் ஒலித்தால் அந்த வல்லின உகர எழுத்து ( கு, சு, டு, து, பு, று என்ற ஆறில் ஒன்று ) குற்றியலுகரம் எனப்படும்!" , என்றும் கூறலாம் !
குற்றாதலுகரம் என்று சொல்வதில்லை .
அதை முற்றியலுகரம் என்பர் .
முற்றியலுகரம்
ஒரு சொல்லின் இறுதி எழுத்து வல்லின உகரமாக ( கு, சு, டு, து, பு, று) அமைந்து , அதன் உகரம் குறைந்து ( உ ஓசை மறைதல்) ஒலித்தால் அந்த வல்லின உகர எழுத்து குற்றியலுகரம் எனப்படும்.
இன்னும் பொதுவாகச் சொன்னால் .. ஓர் உகர எழுத்து ( கு , ஙு, சு, ஞு ,டு, .....று, னு என்ற 18 எழுத்துக்கள்) , ஏதோ ஒரு காரணத்தால் தன் உகர ஓசையை இழந்து தன் இயல்பான ஒலி அளவை விட ( ஒரு மாத்திரை அளவை விட ) குறைந்து ஒலித்தால் அது குற்றியலுகரம் ஆகும்.
அவ்வாறில்லாமல் எந்நிலையிலும் தன் உகரத்தை இழக்காமல் தன் இயல்பான ஒலி அளவுடனேயே( ஒரு மாத்திரை அளவிலேயே) ஒலித்தால் அந்த உகர எழுத்து முற்றியலுகரம் எனப்படும்!
ஓர் உகர எழுத்து முற்றியலுகரமாக வரும் நிலைகள் .
1 . இரண்டு எழுத்துக்கள் கொண்ட ஒரு சொல்லின் இறுதி எழுத்து கு, சு, டு, து, பு, று என்ற வல்லின உகர எழுத்தாக அமைந்து , அதன் முதலெழுத்து குறில் எழுத்தாக இருந்தால் அந்த வல்லின உகர எழுத்தின் உகரம் குன்றாமல் ( உ மறைந்து விடாமல்) அப்படியே வரும்.
எ.கா. - மிகு, பசு , மடு , பொது, திபு , பெறு .
இந்த ஈரெழுத்துச் சொற்களில் இறுதி எழுத்து வல்லின உகரமாக இருந்தாலும் , முதலெழுத்து குறிலாக இருப்பதால் எந்நிலையிலும் இதன் உகரம் குன்றாமல் தன் இயல்பான ஒலியளவுடன் இருக்கும். எனவே முற்றியலுகரம் ஆனது !
மேற்கூறிய எ.கா. வில் இரண்டு எழுத்துக்களுக்கிடையே வேறு ஏதாவது எழுத்து வந்து விட்டால் இறுதியில் உள்ள வல்லின உகரம் குற்றியலுகரம் ஆகி விடும்!
உதாரணமாக.. மிளகு, பரிசு , மண்டு, பொழுது , திரிபு , பெற்று என்றிருந்தால் இவை குற்றியலுகரம் ஆகி விடும் !
2 . வல்லின உகரங்களான கு, சு, டு, து, பு, று என்ற ஆறு எழுத்துக்களைத் தவிர மற்ற ( 12 ) மெல்லின , இடையின உகர எழுத்துக்கள் அனைத்தும் எந்நிலையிலும் உகரம் குன்றாமல் தன் இயல்பான ஒலியளவுடன் இருக்கும்.
எ.கா. - பண்ணு , பரிவு , முழு தள்ளு , உருமு, ...
அடுத்து சகோ தல்லத்
குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம். தனி நெடில் உடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்
து வரும் உகரம் குறுகிய ஓசையுடன் ஒலிக்கும். குறுகிய ஓசை என்றால் என்ன ?அது மாத்திரை குறைந்து வரும். மாத்திரை என்றால் என்ன என்பதை தனியாக விளக்க வேண்டும். எளிதில் புரிந்துகொள்ள காடு மற்றும் காட்டுப்பகுதி என்பதில் இரண்டு 'டு' களை உச்சரிக்கும் தொணியில் தெரிந்துகொள்ளலாம்.
சகோ சிராஜுதீன்
விடை : குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
(குறுகிய ஓசையுடைய உகரம்)
எ.கா:
நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தாெடர்க் குற்றியலுகரம்
5. மென்தாெடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
சகோ ஷர்மதா
குற்றிய லுகரம் என்பது ஒரு தமிழ்ச்சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு,சு,டு,து,பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது மற்ற குறில் உயிர் மெய் எழுத்துக்கள்
( எ.கா: ற,சி ,பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிக்கும் வரையறு கொண்டது.
குற்றியலுகரம் =குறுமை+இயல்+ உகரம்
குறுகிய ஓசையுடைய உகரம்.
விடை விளக்கமாக பதிவு செய்கிறேன்.
உயிரெழுத்துக்குள்ளே
உகரமும் இகரமும் சில
இடங்களில் தம்
மாத்திரையின்(இலக்
கணத்தில் மாத்திரை
என்பது ஒரு
அளவுகோள் ஆகும்.
ஒரு மாத்திரை என்பது
கண் இமைக்கும் பொழுதோ அல்லது
கை நொடிக்கும்
பொழுதோ ஆகும்
நேரமே ஒரு மாத்திரை
ஆகும்)குறைவாக ஒலித்து நிற்கும்
அவ்விடத்திற்கு
குறுறியலுகரம் என்றும்
பெயர்.
தெளிவான விளக்கங்களுடன்
விடைகள் பார்த்தோம்
பதிவு சற்று நீளமாகி விட்டது
இறைவன் நாடினால் என் சிறிய விளக்கத்துடன் நாளை
தமிழில் சிந்தித்து வேப்பங்கனியை சுவைப்போம்
04102022 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment