Tuesday, 2 January 2024

சொந்த ஊர் 7 மணம், சுவைகள்








சொந்த ஊர் 7
மணம், சுவைகள்
0301 2024 புதன்
ஒரு மாத இடைவெளிக்குப்பின் சொந்த ஊரில் சிந்திக்கிறோம்
நினைவுகளைப்புதுப்பிக்க இதுவரை பார்த்த தலைப்புகள் மட்டும்
25102023 சொந்த ஊர் 1 முகவுரை ஆசையே அலை போலே
01112023 சொந்த ஊர் 2 நுழைவுரை
081123 புதன்சொந்த ஊர் 3 டோன்டாக்கு .
151123 புதன்சொந்த ஊர்4 சீதேவிக் குளம்
221123புதன்சொந்த ஊர்4 சீதேவி வடகரை
241123 வெள்ளிசொந்த ஊர் 6உங்கள் பார்வையில் சகோ ஷர்மதா
இனி
சொந்த ஊரின் மணமும் சுவைகளும்
அல்வா என்றால் திருநெல்வேலி
முறுக்கு என்றால் மணப்பாறை
பிரியாணி என்றால் ஆம்பூர்
இது போல் சொந்த ஊரில் என்ன இருக்கிறது ?
இருக்கிறது நிறையவே இருக்கிறது
எடுத்து பரப்ப யாரும் முயசிக்காததால் வெளியே தெரியாமல் இருக்கிறது
தாளிச்சோறு, பொடிக்கறிக் குழம்பு , kaey க் குழம்பு , - இதுதான் விருந்துகளின் பொதுவான உணவுப்பட்டியல் – மதியத்துக்கு
காய்க்குழம்பு என்று சொன்னால் சரியான பொருள் வராது
எழுத முடியாத ஒரு சொல்
அதுபோல்தான் தாளிச்சோறு, பொடிக்கறிக் குழம்பு— சொல்லில் அடங்காத சுவை
நெய்சோறு என்றும் சொல்ல முடியாது புலவு சோறும் இல்லை தேங்காய்ச் சோறும் இல்லை
இவையெல்லாம் கலந்த , இவற்றை மிஞ்சும் சுவைதான் தாளிச்சோறு
வயிறு கனமாகாது . எளிதில் செரித்து விடும் செலவு குறைவு
பொடிக்கறிக் குழம்பு
நிறைய கறி – (மட்டன் )
அவ்வப்போது புதிதாக அரைக்கப்படும் ஒரு சிறப்பு மசாலாப்பொடி
இரண்டும்தான் பொ க கு வின் சுவைக்கு சிறப்பு சேர்ப்பது
இதை திருப்பத்தூரின் சிறப்பு உணவாக அறிவித்து
கோவில் பட்டி கடலை மிட்டாய் போல புவி சார் குறிஈடு வாங்க முயற்சிக்கலாம்
அப்படி ஒரு சுவை
பந்தியில் இலை நிறைய தாளிச்சோறு போட்டு சோறை குன்று போல் குவித்து அதன் மேல் நிறையக் கறியுடன் பொ க கு
குழம்பு அப்படியே மெதுவாக கீழே பரவும்
பார்க்கும் நமக்கு வயிறு நிறைந்து விடும் அளவுக்கு சாப்பிடுவார்கள்
மிக முக்கிய விருந்தாளிகளுக்கு மட்டுமே அடுத்தடுத்த சோரறுக்கும்
கறிக்குழம்பு
மற்றவர்களுக்கு ? காய்குழம்புதான் அதை சாம்பார் என்று சொல்லுவதில்லை
சரி வெஞ்சனம் எனும் பக்க உணவு என்ன ?
ஒன்றும் தனியாகக் கிடையாது
குழம்புகளில் உள்ள கறி, காய் மட்டுமே
இரண்டும் ஓரளவு நிறையவே வைப்பார்கள்
அருகம்புல் சாப்பிட்டு வளர்ந்த செம்மறி ஆட்டுக்கிடாயின் கறி சிறப்பான சுவை உள்ளது என்று சங்க இலக்கியங்கல் சொல்கின்றன
அது போல் எங்கள் ஊர் செம்மறி கிடாய்க்கும் ஒரு தனிச் சிறப்பு இருப்பதாய் அறிந்தவர்கள ,தெரிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்
அது அந்த மண்ணின் மணம் என்பார்கள்
அதையே சிலர் மிகைப்படுத்தி எங்கள் ஊரில்தான் ஒரிஜினல் கறி கிடைக்கும் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுவத உண்டு
மற்ற இடங்களில்கிடைப்பது என்ன ? இவர்கள் மற்ற ஊருக்குப் பெயர்ந்து போகும்போது என்ன செய்கிறார்கள் ?
மிஞ்சிய தாளிச் சோறில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் ஐஸ் பிரியாணி என்று சுவைப்பவர்களும் உண்டு
காலை சிற்றுண்டி வழக்கமான இட்லி, வடை, கேசரி, சட்னி, சாம்பார்தான்
ஆனல் அதை சிலர் சாப்பிடும் அழகு சொல்லவேண்டிய, பார்க்க வேண்டிய ஓன்று
ஐந்தாறு இட்லிகளை உடைத்துப் போட்டு இலையில் பாத்தி கட்டி அதற்குள் சாம்பார் சட்னியை ஊற்றி அதில்இட்லி வடையை ஊறவைத்து பொறுமையாக ரசித்துச் சாப்பிடுவார்கள்
துணியில் அவித்த இட்லி இப்போது உள்ள அழுத்தக் கலன் (குக்கர்) இடலியை விட பன்மடங்கு பெரிதாக ஆனால் மெதுவாக இருக்கும்
சொந்த ஊர் விருந்தை ஓரளவு விரிவாகவே சுவைத்தோம்
இனி உணவு விடுதிகளுக்குப் போவோம்
பெரிய நட்சத் திர விடுதிகள் எதுவும் கிடயாது
ஆனால் அங்கு இல்லாத சில உணவுகள் இங்கு கிடைக்கும்
காலை சிற்றுண்டிக்கே ரொட்டி (புரோட்டா) குழம்பு கிடைப்பது எங்கள் ஊரின் சிறப்புகளில் ஓன்று
ரொட்டிகளை பிய்த்துப் போட்டு குழம்பில் ஊற வைத்து சாப்பிடுவது அப்படி ஒரு தனிச் சுவை
விடுதியில் போய் சாப்பிட்டால் அவர்களே பிய்த்துப் போட்டு அதன் மேல் நிறைய குழம்பை ஊற்றிக் கொடுப்பார்கள்
இந்த பிய்த்து போட்ட ரொட்டி பற்றி ஒரு இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்பு
புனிதப் பயணமாக காபாவுக்கு வருபவ்ர்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் இது போல் பிச்சுப்போட்டு ஊறவைத்த ரொட்டியை கொடுப்பார்களாம் . பயணிகள் அதை மிகவும் விரும்பி சுவைப்பார்களாம்
த கு என்பது விலை இல்லாக் குழம்பு
வெள்ளைக் குருமா , சிவப்புக் குழம்பு இவை கட்டணக் குழம்புகள்
காலையிலேயே இட்லி, தோசைக்கும் கறிக்குழம்பு கிடைக்கும்
நெய் புரோட்டாவும் கிடைக்கும்
அப்போதைக்கு அப்போது (as and when required) நெய் வாங்க ஆள் அனுப்புவார்கள்
சைவத்துக்கு மதகு பட்டியார் கடை
அசைவத்துக்கு ராசாக்கிலி கடை , மாதவன் கடை
இவை மூன்றும் எனக்குத் தெரிந்து அரை நூற்றாண்டுகள் கடந்தவை
மாதவன் இப்போது இருக்கிறதா என்பது தெரியவில்லை
மற்ற இரண்டும் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சுவை இல்லை என்பது என் கருத்து
ஆனால் கூட்டம் குறையவில்லை
வெளியூரிலிருந்து வாங்குவோரும் இருக்கிறார்கள்
ஆடை போட்ட தேநீர் -- எங்கள் ஊரின் சிறப்பு தேநீர்
இதெல்லாம் சொல்லி விட்டு கையேந்தி பவன் எனப்படும் சாலை ஓர உணவகங்கள் பற்றிச் சொல்லாவிட்டால் இந்தப் பதிவு நிறைவு பெறாது
இட்லி, இடியாப்பம், ஆப்பம், கருப்பட்டி ஆப்பம் , பணியாரம், கருப்பட்டிப் பணியாரம்
இவை எல்லாம் கை ஏந்தி சாப்பிடக் கிடைக்கும் உணவு வகைகள்
இதில் ஆப்பம் வகைகள் காலை கண் விழித்ததும் குடிக்கும் படுக்கைக் காபி (பெட் காபி) போன்றவை
விலை மலிவு, பெரும்பாலும் பெண்களே (பெண்ணே) நடத்துவார்கள் .
மேசை, நாற்காலி எதுவும் இருக்காது
அங்கு கிடைக்கும் ஒரு தண்ணியான சட்னி இப்போது
“திருப்பத்தூர் சட்னி, “
என்று வலைஒளி(யூட்யூப் ) யில் பரவி வருகிறது
சாலை ஓரக் கடைகளில் “ மீனா இட்லி” கடை சிறப்பானது என்று சொல்வார்கள்
ஒரு இடத்தில் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் நாலைந்து கி மீ நடந்து போய் இட்லி வாங்கி வருவார் எங்கள் சச்சா
அவர் வீட்டில் செக்கு நல்லெண்ணெய் இருக்கும் .
இட்லி மேல் நல்லெண்ணெய் , சாம்பாரை ஊற்றி மணக்க மணக்க சாபிடுவார்
பருத்திப்பால் , சூடான சேமியாப் பாயாசம் , ஈச்சம் பழம், கொட்டிக்கிழங்கு இவை தெருவில் விற்கப்படும் சுவைகள்
பருத்திப்பால் என் துணைவிக்கும் என் மகளுக்கும் மிகப் பிடித்த சுவை
மகளோடு ஊருக்கு எப்போதாவது போனால் பருத்திப்பால் வாங்கிக் கொடுத்து விடுவேன்
ஈச்சம் பழம், கொட்டிக்கிழங்கு –பெண்கள் கூடையில் வைத்து விற்பார்கள்
பண்ட மாற்று முறையில் அரிசி, நெல்லுக்குக் கொடுப்பார்கள்
ஈச்சம் பழம் - அளவில் சிறியது , சுவையில் பெரியது
சுவையான கொட்டிக்கிழங்கு பற்றி இலக்கியச் சுவையான கதை ஓன்று இருக்கிறது
சோழ மன்னன் கொடுத்த விருந்தில் கம்பன், கம்பன் மகன் அம்பிகாபதி , ஒட்டக்கூத்தர் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள்
விருந்தினர்களை கண்ணியப்படுத்தும் வகையில் இளவரசி அமராவதி உணவு பரிமாற வருகிறார்
அம்பிகாபதி அமராவதி காதல் கதை மன்னனின் விருப்ப்துக்கு எதிராக வளர்ந்து வருகிறது
காதலி உணவுடன் வருவதைப் பார்த்த்தும் அமபிகாபதிக்கு கவிதை பொங்கி வருகிறது
“இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய “
என்று பாட மன்னன் முகத்தில் சினம் வெறுப்பு
நிலைமையை சமாளிக்க , மகனைக் காப்பாற்ற கம்பர் தொடர்கிறார்
“கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்”
கம்பனின் வேண்டுகோளுக்காக கலைவாணியே ஒரு மூதாட்டி உருவில் வந்து தெருவில் கொட்டிகிழங்கு கூவி விற்று அம்பிகாபதியையும் கம்பனையும் காப்பாற்றினார் என்று ஒரு கதை
சற்று நீளமாகிவிட்ட பதிவை நிறைவு செய்யுமுன்
20 கி மி தொலைவில் உள்ள பிரான்மலை தர்காவுக்குப் போகும்போது செய்யப்படும் காலை சிற்றுண்டி –
வடித்த சோறு சூடாக இருக்கும்போதே தண்ணீர் ஊற்றி விடுவார்களாம் .
அடுத்த நாள் காலையில் அது தயிர் சோறு போல நல்ல சுவையாக இருக்குமாம்
அதற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வெஞ்சனம் (பக்க உணவு ) –
மொச்சை ,கருவாடு , வாழைக்காய் இன்னும் பல சேர்த்து கமகமவென மணக்கும் சுண்ட வைத்த புளிக்குழம்பு
இது பற்றி உறவினர்-குப்பி மகன் ஒருவருடன் தொலை பேசியில் பேசிக் கொண்டிருந்தேன்
சொல்லச் சொல்ல அதன் மணம் என்னுள் புகுந்து மனம் பரவசமாகிறது என்றார் அவர்
அவர் நாவில் நீர் ஊறியது நன்றாகத் தெரிந்தது
(அவர் சினம் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்
எதற்கும் அவரிடம் முன் அனுமதி பெறுவது நல்லது என்று எண்ணி அவரை மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டேன்
அவரோ மகிழ்ச்சியுடன்
நன்றாக எழுதுங்கள் , நிறைய எழுதுங்கள் , திருப்பித் திருப்பி எழுதுங்கள்
என்று சொல்லி ஊக்கமளித்தார் - நன்றிகள் பல அவருக்கு--
-சகோ அஜ்மீர் அலி ) )
திகட்டுமுன் சுவைப்பதிவை நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை திருமறையிலும்
அடுத்த புதன் சொந்த ஊரிலும் சிந்திப்போம்
03012024 புதன்
சர்புதீன் பீ
PS
வழக்கமான பல்லவிதான்
நான் சொந்த ஊரில் வாழ்ந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்காது
என்னை விட நெடுங்காலம் அங்கு வாழ்ந்தவர்கள்,வாழ்பவர்களால் இருக்கிறார்கள்
இது வரை பல முறை கேட்டும்
சகோ ஷர்மதா , ஜோதி இருவர் மட்டுமே எழுதி அனுப்பினார்கள்
என்னைத்தவிர எல்லோருமே toooo busy போலும்

No comments:

Post a Comment