சொந்த ஊர் 9
வட்டார வழக்கு
17 01 2024 புதன்
தொலைக் காட்சி அலை வரிசைகளும் சமூக வலைதளங்களும் போட்டிபோட்டுக்கொண்டு மொழியைச் சிதைத்து வரும் இந்த காலகட்டத்தில்
தூய தமிழில் பேச ,எழுதத் தூண்டும்
தனித் தமிழ் இயக்கம் பரவலாக இயங்கி வருகிறது
அப்படி ஒரு இயக்கமெல்லாம் எங்கள் ஊருக்கு தேவை இல்லை
இயல்பிலேயே எங்கள் ஊர் பேச்சு வழக்கில்தூயதமிழ் பயன் பாட்டில் இருக்கிறது
கவிஞர் கண்ணதாசனையும் சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனாரையும் (யாதும் ஊரே யாவரும் கேளிர் ) உலகுக்கு அளித்த பெருமை திருப்பத்தூர் வட்டாரத்துக்கு உண்டு.
பொதுவாக மக்கள் பேசும் பேச்சிலேயே உவமைகள் உவமானங்கள் பழமொழிகள் சொல்லடைகள் நக்கல் கேலி பகடி எல்லாம் துள்ளி விளையாடும்
ஜ ஷ ஸ ஹ போன்ற வடமொழி ஒலிகள் எங்கள் ஊர் பேச்சில் இடம் பெறாது
ரோசா (ரோஜா) ராசா (ராஜா) சரிவு (ஷரிப்)
மக்காவில் உள்ள புனித ஹரம் கூட அரம் ஆகி விடும்
.
நான் திரு.வில் வாழ்ந்த நாட்கள் மிகக்குறைவே. என் காதில் விழுந்து நினைவில் நிற்கும் திரு.வின் சிறப்புச் சொற்கள்,பழமொழிகள் போன்றவற்றைத தொகுத்துத் தருகிறேன். எனக்குத்தெரிந்த அளவுக்குப் பொருளையும் குறிப்பிடுகிறேன்
என்னை விட வயதில் மூத்தவர்கள், திரு,வில் அதிக நாட்கள் வாழ்ந்தவர்கள் ,வாழ்பவர்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பங்களித்தால் தொகுத்து ஒரு ஆவணமாக வலை நூலிலும் கூகிளிலும் பதிவு செய்யலாம் . விக்கிபீடியாவிலும் வெளியிட முயற்சிக்கலாம்
உள் நுழையுமுன் ஒரு சிறிய ஐயம் :
திரு.பேருந்து நிலையத்தில் முறுக்கு , பலாச்சுளை போன்ற தின்பண்டங்கள் கூடையில் வைத்துப் பேருந்தின் உள்ளேயும் வெளியிலும் கூவி விற்பார்கள் .யாராவது வேண்டாம் என்று சொன்னால் அவர்கள்“ டே இவரு நமமூருடா “.என்று நக்கலாகச் சொல்வார்கள் . இதன் உட்பொருள், கருத்து என்ன என்பதைத் தெரிந்தவர்கள் அறிவிக்கலாம் .
பழமொழிகளும் சொல்லடைகளும் –இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருப்பதால் இரண்டையும் கலந்தே தருகிறேன்
1..தாஞ்சமத்திக்குத் தாவாணாம்
கொளுத்த கறிக்கு நெய்வானாம்
(சாமர்த்தியமான பெண்ணுக்குத் தாய் துணை தேவையில்லை .நன்கு கொழுத்த ஆட்டுக்கறி சமைக்க நெய் தேவையில்லை).
( (குப்பி சொல்லக்கேட்டு , துணைவி சொன்னது)
2. .கடலலை ஓயாப்போரதுமில்ல
கருப்பாயிக்கெலவி குளிக்கப்போரதுமில்லை
(அலை ஓய்ந்து குளித்தாற்போல் என்பதன் திரு, வடிவம் ).
(மைத்துனர் பீர் சொன்னதாய் சிராஜுதீன் சொன்னது )
.3.சிறுவர் இட்ட வெள்ளாம வீடு வந்து சேராது
(அம்மா அடிக்கடி சொல்வது)
4. சமத்தி சந்தைக்குப்போனாலாம் வட்டி கிண்ணியாச்சாம்
(பேரம் பேசி விலை குறைக்கும் திறமையைக் குறிப்பது என எண்ணுகிறேன்)
5.தோட்டக்காரன் சும்மா இருந்தாலும் தொனதொனக்கி சும்மாயிருக்க மாட்டான் (மைத்துனர்கள் சொல்லக்கேட்டது)
6.பாம்பு திங்கிர ஊருக்கு போனா நடுத்துண்டம் எனக்குன்னு கேட்டு வாங்கணும் ( பீ.மு .மாமா அடிக்கடி சொல்வது) .
7.ஐங்கலமும் கொள்ளும் அவசரம் என்றால் பைங்கலமும் கொள்ளும்
(உணவு, பணம் பொருள் எல்லாவற்றிற்கும் அளவுக்கு மேல் ஆசை கொள்பவர்களைக் குறிப்பது ) (குப்பி துணைவி )
8. அறிவையும் மதியையும் அந்திக்கடையில் விற்றவன்.
வசைச்சொல் ( (குப்பி)
9, பாடாப்படுத்தி பலனகொரச்சு(குப்பி)
10.தாடிக்கு வேறே அரப்பு தலைக்கு வேறே சீயக்காய் (துணைவி )
11.யோக்கியரு வராரு சொம்பத்தூக்கி உள்ள வையுங்க (பேச்சு வழக்கில் எல்லோரும் பயன்படுத்துவது))
இதன் சுருக்கிய வடிவம்தான் சீ செம்பு என எண்ணுகிறேன்
12.மக வாள்ர வாள்வுக்கு மாதம் எட்டுகட்டு வெளக்குமாறு சீதனம் (துணைவி )
13.முகத்தில் தெரியாத சீதேவியா பின்னாலே தெரியப்போகுது ()துணைவி
14.அரசாளுவா, மன்னாளுவா மகளே (வசவு போல் தோன்றும் வாழ்த்துரைகள்)
15.. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே (இமை நிமையாக மாறியது )
16.. தலைப்பிள்ள ஆண் பெறுவே தகப்பனார் பேரிடுவே
மறுபிள்ள ஆண் பெறுவே மாமுமார் பேரிடுவே(தாலாட்டு)
17.. கண்ணுமான கண்ணோடி கவரிமான் பெண்ணாடி(தாலாட்டு)
18.. மன்னன் போல் வழங்க மகன் ஒருத்தன் போதுமுள்ளே
மகுந்த முறை செலுத்த மக்களுந்தாம் போதுமிள்ளே (மக்கள் செல்வம் பற்றி சலிப்புடன் கூடிய பெருமை )
19. சின்னிக்கி வாதம் சினிக்கிக்கி ஓதம்
பாக்க வந்தவனுக்குப் பப்பையில விப்ரிக்கட்டு ( வீட்டில் பலரும் நோயுற்றிருக்க பார்க்க வந்தவனும் நோயுற்றிருப்பது பற்றி-— பப்பையில விப்ரிக்கட்டு பொருள் தெரியவில்லை )
20.. எல்லாருஞ்சாமியாடினா யார் தீவட்டி பிடிப்பா .
21. பிள்ளைகளினால் நான் பெரிய குடி ஆவேன் என்றிருந்தேன்
மக்களால் நான் மகுந்த குடி ஆவேன் என்றிருந்தேன் (மக்கள் செல்வம் பற்றி சலிப்புடன் கூடிய பெருமை )
22. மனுசாமனுசருக்கு வாசமுள்ள மல்லிகை
பெரிய மனுசருக்கு பிரியமுள்ள மல்லிகை (பேரன் காதர் பற்றி)
23. பார்த்தாருக்கு பச்ச மரம்
பளுப்பளுவா இத்த மரம்
கண்டார்க்கு கட்ட மரம்
களுக்களுவாய் இத்த மரம் (சுய சரிதை)
24 நாம்பட்டதொரு பாட்டை படிப்படியாய்ச் சொன்னேனா
பட்டு நிலா விட்டெரியும் பாதி நிலா கொம்பெரியும் ( சுய புலம்பல்)
25. செட்டிச்சி வேல செய்யப்புரியாது
பாப்பனத்தி வேல பாக்கப்புரியாது ( சில சமுதாயதினரின் வேலை நேர்த்தி பற்றி)
26 சட்டி அடுக்கும் சட்டாத்தி ஒப்பனையும்
பானை அடுக்கும் பாப்பாத்தி ஒப்பனையும் (சில சமுதாயதினரின் வேலை நேர்த்தி பற்றி)
27 மன்னாதி மன்னனெல்லாம் மன்னைக்கவ்வும்போது ( சிலரின் வீண் முயற்சி பற்றி)
(வரிசை எண் 14 முதல் 27 வரை குப்பி சொல்லக்கேட்டு ஷர்மதா தொகுத்து ஜனாப் அயுப்கான் கட்செவியில் அனுப்பியது – நன்றி அயுப்கான், ஷர்மதா)
பொய்ய வீசுது – தெருவில் விற்கும் மோர் பற்றி எங்கள் அத்தம்மா சொல்வதாக தல்லத் சொன்னது
பொய்ய= பொய்கை= ‘குளம்
மோரில் கலந்துள்ள குளத்து நீரின் மணம் பற்றி
இனி திரு, வட்டாரத்தில் மட்டும் காதில் விழும் சில சொற்கள்/ மாறுபட்ட ஒலி வடிவங்களைப் பார்ப்போம்
கடகம் (ஓலைப்பொட்டி/ ஓலைக்கூடை)
கொட்டாப்புளி (சுத்தியல் )
வெஞ்சனம் (பக்க உணவு)
முட்டத்தட்டு (வெஞ்சனம் வைக்கும் சிறிய தட்டு)
ஆணம் (குழம்பு)
கவுறு (கயிறு)
பத்துக்கொரடு (கட்டிங் பிளையர்)
சீர் எனத்தி (சீர் வரிசை)
பைய (மெதுவாக)
செத்த நேரம் (சிறிது நேரம்)
வெள்ளனே (அதிகாலையில்)
உசுப்பு (எழுப்பு)
அங்குட்டு, இங்குட்டு எங்குட்டு (அங்கே இங்கே எங்கே)
சோறு திண்டாச்சா (சோறு சாப்பிட்டாச்சா )
பகுமானம் (பெருமை)
களவாணி (கள்வன், திருடன்)
ரவைக்கு (இரவில்)
கோக்கு மாக்கு ( கோணல்)
தடுமன் ( சளிப் பிடித்தல்)
தடுக்கு (ஒருவர் அமரும் அளவுக்கு சிறிய ஓலைப்பாய் )
அண்ணம்பொஞ்சாதி (அண்ணி)
இட்லிக்கட்டி (இட்லி வடிவில் உள்ள சவுக்காரம்- சலவை சோப்பு )
தட்டுவாணி (பெண்களை வசை பாடும் சொல்)
நெதோ (நிதமும் – தினமும்)
அறந்தாங்கி – (தேங்காய்த் தலையன் – அறந்தாங்கி தேங்காய் அளவில் பெரிதாய் இருக்கும்)
அடியாத்தி (வியப்புச் சொல்)
குத்தமில்ல (பரவாயில்லை)
சொளகு (முறத்தின் நீள் வடிவம் )
மூளி முக்காடு (பொருள் தெரியவிலலை )
வாவரிசிச் சோறு ( வாழ்வரசி – சுமங்கலிகளுக்கு உணவளிப்பது )
மானங்கானாப் பாத்தியா (பூரி பாத்தியா என்றும் சொல்வார்கள்)
ரோதை (மாவு அரைக்கும் பொறி – Flour Mill)
வைவாக (திட்டுவார்கள்)
ஏம்புட்டு , ஒம்புட்டு (என்னுடையது , உன்னுடையது )
காக்குளம்பு-சரியானா உச்சரிப்பை எழுத முடியாது KAAEYKKULAMBU
நீதி மன்றத்தில் சாட்சி சொல்கிறார் ஒரு திரு, வாசி
“வக்காக்ரையோரமா இருந்தே .
சரிவுண்டாக
ம் ண்டே
சாக்கிண்டாக
சரிண்டே. அல்லாவுக்குப் பொதுவா அதுக்கங்குட்டு ஒன்னுந்த்தெரியாது
(அத்தா சொன்னது)
பெயர்த்திரிபுகள் எங்கள் ஊரின் ,தனிச்சிறப்பு மைமூனாத் மைம்பொண்ணு. . கதிஜா –கத்துசா முகமது –மாமது முகமது மீரா – மைமிரா
திருவில் குடும்பங்களுக்கும் நபர்களுக்கும் வழங்கிய சில பட்டபெயர்கள்(யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை)
முனுசு அம்பலார் வீடு, ஒரு வண்டி பேத்தி, கொரங்கன் பேத்தி, ,
குட்டை அம்பலம், குதாம்பு, பொக்காகுருதை,
தவுட்டுப்பாத்து, தகரப்பாத்து, பூலாங்குறிச்சி அத்தம்மா
,கருப்புத்தொப்பி மொளகு தண்ணி, மொச,
பல்லுக்கடிச்சா , சூத்தக்கத்திரிக்கா, கொடிக்கா கிழவன்
கொன்னையூர்க்கிழவன் ,பட்டதட்டி, கெளுத்திமீசை
நீலப்பெட்டி , கருத்தக் கிளி ,ஸ்டாண்டுக் கார (பெரும்பாலும் காரணப்பெயர்கள்)
பதவி சார்ந்து கமிசனர், தாசில்தார், கணக்குப்பிள்ளை போன்ற பெயர்கள்.
இதில் முனுசு அம்பலார்,, கமிசனர், எங்கள் குடும்பத்துக்கான பெருமை மிகு பெயர்கள் .முனுசு என்பது கிராம முன்சீப் என்பதன் திரிபு என்பர். ஊர் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பொறுப்பு எங்கள் குடும்பத்துக்கு
இ(க)டைச்செருகல்
சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் திரு.வின் அருகில் உள்ள மகிபாலன்பட்டி என்ற ஊரைச்சேர்ந்தவர். மயிவாலம்பட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்த ஊரில்தான் பெரிய குப்பி (பாத்துக்குப்பி ) வாழ்ந்தது அவரின் துணைவர் ஆ இ ஆசி முகமது ராவுத்தர் பூங்குன்றனாருக்கு சிலை அமைக்க ஏற்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்தார் . இது பற்றிய குறிப்பு யுனிவர்சல் பதிப்பகம் வெளியிட்ட இசுலாமியக் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளது . ஆணையராக இருந்த பீர் முகமதின் (அத்தாவின்) மைத்துனர் என்று குறிப்பிட்டிருப்பதாய் நினைவு
பூங்குன்றனார் பாடல் சங்க காலத்திலேயே உலகளாவிய உறவு பற்றிப் பேசுவது ,நன்மை தீமைகளுக்கு அவரவரே பொறுப்பு எனபது – இவை இசுலாமியக் கருத்துகளோடு ஒத்துப்போவதாய் எனக்குத் தோன்றுகிறது
Jun 29, 2022 அ ன்றும் ,வேறு சில நாட்களிலும் வெ ளியிட்ட
பதிவுகளில் இருந்து –சில மாற்றங்களுடன்
இறைவன் நாடினால் நாளை திருமறையிலும்
அடுத்த வாரம் சொந்த ஊரிலும் சிந்திப்போம்
17012024
சர்புதீன் பீ
No comments:
Post a Comment